கனவு கண்டதைக் கனவாய் விடாமல்
நினைவு கொண்டு நித்தம் செய்க
என்றே உரைத்த எந்தன் தலைவா!
பிறந்த நாட்டிற்குப் பெருமை
சேர்த்திட
நித்தம் உழைத்தாய் நீயும்
விரைவாய்!
தீவில் பிறந்து தீபகற்பம்
ஆண்டவன்
பாரே போற்றும் பல்புகழ் எய்தவன்!
சின்னக் குழந்தையின் சிறப்புத் தோழனாய்
சீரிய நெஞ்சொடு சிறப்புற
வாழ
பல்வழி காட்டிச் சென்ற தலைவ!
கடின உழைப்பும் கற்ற கல்வியும்
என்றுமே உனக்கு ஏற்றம் தந்தது
இலட்சியக் கனவின் இலட்சிய
நாயகா!
பாராட்டு உன்னைத் தேடி வந்தது
பதவியும் உன்னைப் பார்த்து
வியந்தது
மனிதப் பண்பே மாண்புயர் பண்பென
விளக்கிக் காட்டிய விடியலின்
கீதமே!
அறிவியல் அறிஞராய் ஆக்கம்
செய்து
அகிலத்தை ஆண்ட அப்துல் கலாமே!
அனைவர் உள்ளமும் அதிர்ச்சியில்
ஆழ
அண்டி வந்தது அறிவிலி எமனே
விதைநெல் எடுத்து விதைக்கும்
போது
விடாமல் வந்து விழுந்த செய்தி
விடியலில் தானே விரிவு பெற்றது
விழிக்கும் போது விழிநீர்
சிந்தி
வியந்து பார்த்தேன் விளைவு
தனையே!
வியத்தகு மனிதர் விடைபெற்றுச் சென்றார்
விண்ணும் மண்ணும் வியப்பு
கொண்டது
விழிநீர் சிந்தி விடையும்
கொடுத்தோம்
விழுதுகள் அற்ற விருட்சம்
ஆனோம்
ஏவு கணையின் எழுச்சி நாயக
என்றுமே உம்மில் ஏற்றம் கொள்வோம்
மனிதனில் புனிதன் ஆனாய் நீயே!
தமிழினை உயிரெனத் தாங்கிட
நீயும்
தரணியில் உரைத்த தாரக மந்திரம்
திருத்திய மசோதா திருப்பி
அனுப்பித்
திருப்பம் செய்த திலகமே போற்றி!
கடமை கண்ணியம் கட்டுப் பாடெனும்
மூன்று முத்தை மூலமாய்க்
கொண்டு
உழைத்த உண்மை உத்தமன் நீயே!
உலகமே திரண்டு உமக்காய் அழுதது
உண்மை மனிதரை உலகம் உணர்ந்தது
ஊனமுற் றோர்மனம் உவந்து நோக்கி
ஊழியம் செய்தாய் உவகை பொங்கவே
மனித மனத்தை மதிக்கத் தெரிந்த
மனிதருள் நீயே மாணிக் கம்மே
காலம் உன்னைக் கடத்திச் சென்றாலும்
கற்றவர் நெஞ்சில் கலந்தவன்
நீயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன