கதைசொல்லல்
மரபு அறிவினை விரிவு செய்வதற்கும், நற்பண்புகளை வளர்த்தெடுக்கவும், குழந்தைகளுக்கு
உறவுமுறைகளின் பெருமைகளைக் கூறுவதற்குமாக இருந்துவருகிறது. மனித மனத்தை உழுது ஒழுக்கம்
என்னும் விதைகளைத் தூவி, நன்னெறி என்னும் தானிய அறுவடையை வெற்றிகரமாக கண்டடைவதே இதன்
பயனாகும். நாட்டுப்புறக் கதைகள் வழக்கில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு கதைக்களங்களைக்
கொண்டு தொன்றுதொட்டு இயங்கிவருகிறது. பழங்காலத்தில் மக்கள் தங்கள் கருத்துகளைப் பிறர்
உளங்கொள உரைப்பதற்குக் கதைகளையே கருவியாகக் கொண்டிருந்தனர். எல்லா நாட்டிலும், எல்லா
இனத்திலும் இக்கதைசொல்லல் மரபு வழிவழி வந்துள்ளது என்பர் அறிஞர்கள். பெரியவர்கள் சிறுகுழந்தைகளுடன்
சேர்ந்து பொழுதுபோக்குவதற்கும், அவர்களுக்கு நல்வழிகளை உணர்த்துவதற்கும் இதுபோன்ற சிறுசிறு
கதைகளைக் கூறிவந்தனர்.
இம்மரபு இன்று
வளர்ந்து திரைத்துறையில் முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு (Flashback) என்ற முறையில் நிகழ்ந்து
வருகிறது. அதுமட்டுமல்லாமல் கதைசொல்லி என்ற
வழக்கம் இன்று நிலவிவருகிறது. மேலைநாட்டில் கதை சொல்வோர் என்ற ஒரு பிரிவினர் இருந்தனரென
ஆய்வாளர் கூறுகின்றனர் (ச.சு. இளங்கோ, பாரதிதாசன் கதைப்பாடல் ஓர் அறிமுகம், ப.3). இந்நாட்டிலும்
புராணக் கதைகளை எல்லாம் நைமிசாரணிய வனத்தில் முனிவர் கூட்டத்திடையே சூத முனிவர் உரைப்பதாகவே
சொல்லி வந்திருக்கின்றனர். இப்படி வாய்மொழியாக இயம்பப்பட்டு வந்த கதைகளே பிற்காலத்தில்
காப்பியங்களாக வளர்ந்தன. இன்றும் ‘கதாகாலேட்சபம்’ என்ற பெயரில் பல்வேறு கோயில்களில்
தொடர் சொற்பொழிவுகள் மூலம் நாயன்மார் வாழ்க்கையையும், ஆழ்வார்களைப் பற்றியும் மற்றும்
பல்வேறு சமய அடியார்களின் (அறிஞர்களின்) வாழ்க்கையினையும் கதையாகக் கூறும் போக்கு உள்ளது.
கதைகேட்டல் நிலை அனைவருக்கும் விருப்பமானதாக இருப்பினும், அவர்கள்தான் கதைசொல்லிகளை
ஊக்குவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கதைசொல்லிகளின் பணி என்பது எளிய செயல் அன்று.
விவிலியக் காலக்கட்டத்தில் அதிலும் குறிப்பாக
இயேசுகிறிஸ்து பிறப்பிற்குப் பின்னான புதிய ஏற்பாட்டினை வாசிக்கும்போது எப்போதுமே மக்கள்
கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளனர் என்பதனை வாசிக்கிறோம். அம்மக்கள்
எவ்வாறு இருந்தனர் என்பதை இயேசு அறிந்து ‘ஆயன் இல்லா ஆடுகள் போல் அவர்கள் இருந்து வருகிறார்கள்’
என்று உரைப்பதையும் விவிலியம் மூலம் அறியக்கிடைக்கிறது. அச்சூழலில், அவர்களுக்கான வழிகாட்டிகள்,
நெறிப்படுத்துநர்கள் இல்லாத நிலையில் இவரே அதனைக்கண்டு அவர்களுக்கான வழியைப் பல்வேறு
உவமைக் கதைகள் மூலம் (கதைசொல்லியாக) எடுத்துரைக்கிறார்.
விவிலியத்தின்
உவமைக் கதைகள் கதைசொல்லல் மரபில் எவ்வாறான தாக்கத்தைப் பெற்றுள்ளது என்பதை விளக்கும்
விதமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.
கதைசொல்லல் மரபின் அடிப்படை
ஒரு கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க
ஒரு கதையாக, ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகக் கூறும்போது அவர்களின் மனத்தில் அது பசுமரத்தாணி
போல பதிந்துவிடுகிறது.
கதையின் மூலம்
ஒருவரை ஒருமுகப்படுத்தவும், அவர்களை அந்தச் செய்தியில் ஒன்றிணைக்கவும் இயலும். கதைசொல்லியின்
திறத்தைப் பொறுத்து கதைக்கேட்பவரின் செயலும் அமையும். கதையானது நிலையை விளக்குவதாகவும்,
பொழுதுபோக்கிற்காகவும், அறிவுறுத்துவதற்காகவும், ஆற்றுப்படுத்துவதற்காகவும் அமைந்திருக்கும்.
விதைப்பவர் உவமை
விவிலியத்தில்
மூன்று நற்செய்திளார்கள் (மத்தேயு: 13, மாற்கு: 4, லூக்கா: 8) இந்த உவமைக் கதையை எடுத்தாண்டுள்ளனர்.
இக்கதையில்,
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்த போது சில
விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
வேறுசில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப்போயின. மற்றும்
சில விதைகள் முட்செடிகள் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.
இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக்
கொடுத்தன
என்கிறார்.
உவமைக்
கதையில் வரும் விதைப்பவர் இறைமகன் என்றும், விதைகள் இறைவார்த்தைகள் என்றும், வழியோரம்,
பாறை, முட்செடி, நல்ல நிலம் போன்றன இறைவார்த்தையைக் கேட்கும் மனித குலம் என்றும் அவரவர்
எப்படி இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வார்களோ அதற்கேற்ப பலனைத் தருவார்கள் என்றும் விளக்கம்
அளிக்கிறார்.
பத்துத் தோழியர் உவமை
முன்மதி
உடையோரும், முன்மதி இல்லாதோருமாகிய பத்துத் தோழியர்கள் மணமகனை அழைக்கச் சென்றார்கள்.
அவர்களின் முன்மதி உடையோர் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் உடன் எடுத்துச் சென்றனர்.
முன்மதியற்றோர் அதனை எடுத்துக்கொள்ளத் தவறினர். மணமகன் வரும் நேரம் அறிவிக்கப்பட்டது.
முன்மதியுடையோர் தங்களின் அறிவினால் தங்களின் பொருள்களை ஆயத்தம் செய்தார்கள். முன்மதியற்றோர்
தாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அவர்கள் தங்களுடைய பொருள்களைச் சரிபடுத்த
சென்றநேரம் மணமகன் வந்து தயாராக இருந்த முன்மதியுடையோருடன் சென்று கதவை அடைத்துவிட்டார்.
தாமதமாக வந்த முன்மதியற்றோர் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.
மேற்கூறப்பட்ட
கதைச்சுருக்கமானது மத்தேயு (25), லூக்கா (19) என்ற நற்செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இதன்மூலம் மக்களிடம் எப்போதும் விழிப்பாயிருங்கள் என்ற பேருண்மையை விளக்கிச் செல்கிறார்.
விழிப்பாய் இருந்தால் மனுமகன் வரும் நேரம் அறிந்து அதற்கேற்றாற் போல் தகுந்த முன்தயாரிப்புடன்
இருக்கலாம் என்று உவமை வாயிலாக விளக்குகிறார்.
ஆட்டுக்கொட்டில் உவமை
யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடும் ஒரு
உவமைக் கதை (10). இதனை வேறு எந்த நற்செய்தியாளரும் இந்த உவமைக் கதையைக் கையாளவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு கிறித்துவுக்கு முன்னர் தானே இறைமகன் என்று பலரும்
தங்களைக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வந்தனர். இயேசு வந்தபிறகு மக்கள் யார் உண்மையான
இறைமைந்தன் என்று குழப்பமுற்று யாரை ஏற்பது? எவர் உண்மையான இறைமகன் என்று அறியாது திகைத்து
நின்ற வேளையில், ஆட்டுக்கொட்டில் உவமையை இயேசு கையாள்கிறார்.
மக்களின்
நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நல்ல ஆயனை மக்கள் உணர்ந்து கொள்ளவும், அவர்கள் ஏமாற்று
வேலைகளை நம்பி வேறு யார் பின்னும் சென்றுவிடாமலும் இருக்க அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
நல்ல ஆயன் என்பவன் எவ்வாறு தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மந்தையைக் காக்கிறானோ,
அதேபோல் தன் உயிரையும் ஈந்து தன்னை நம்பி வந்த மக்களைக் காத்தவர் இயேசு.
ஆட்டுக்கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக்குதிப்போர்
திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே
காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய
சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த
ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டிவந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும்
அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை
பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.
நல்ல ஆயன்
நானே என்று கூறித் தன்னை நம்பினோருக்கு நம்பிக்கையூட்டுகிறார். நல்ல ஆயன் தம்முடைய
ஆடுகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்றும் உரைக்கிறார்.
தொகுப்புரை
உவமைக்
கதைகள் வாயிலாகவே விவிலியத்தின் பல்வேறு இடங்களில் இயேசு போதனை செய்துள்ளார் என்று
நற்செய்தியாளர்களாகிய நால்வரின் மூலம் அறியக்கிடைக்கிறது. கதைசொல்லல் மரபின் ஒரு நீட்சியாகவே
இது அமைந்துள்ளது. மேற்கூறப்பட்ட விதைப்பவர் உவமை, பத்து தோழியர் உவமை, ஆட்டுக்கொட்டில்
உவமை போன்றன மக்கள் ஒரு நெறிமுறையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றும், வாழ்க்கையில்
விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்றும், வழிநடத்துபவர் யார் என்பதைத் தெரிந்து
அவரைப் பின்பற்றி வாழவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றன.
கதைகூறும்
மரபு விவிலியத்திற்கும் முன்பிருந்தே வாய்மொழியாக வழக்கில் இருந்துள்ளமை புலனாகிறது.
அறிவுரைகளைக் கதைகள் வாயிலாகவே தருகின்ற மரபே எக்காலத்திலும் சிறந்தது என்பதை இக்கட்டுரை
விளக்க முற்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன