வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

தினமணியின் தமிழ்ப் பணிகள்

 



 

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’

என்ற பாரதியாரின் வைரவரிகளுடன் நாள்தோறும் வெளிவருவது தினமணி நாளிதழ். மேற்கண்ட அடிகளுக்கு ஏற்றாற்போல நாளும் சமூகநோக்கோடு வெளிவந்து கொண்டிருக்கிறது தினமணி. ஒரு கோயிலில் மணி ஒலிப்பது தெய்வத்திற்குக் கேட்பதற்காகத்தான் அடிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்து உள்ளது. இதழ் கோயில் போன்றது; எனவே கோயிலில் ஒலிக்கும் மணியை அதன் பெயராக அமைத்திருக்கிறார்கள். நடமாடும் தெய்வங்களுக்குத் தொண்டுசெய்வதை முதன்மையாகக் கொண்டு தினமணி விளங்குகிறது.

நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈயின்

படமாடக் கோயில் பகவர்க்கது ஆமே (திருமந்திரம்)

என்ற திருமூலரின் கருத்தைக் கருவாகக்கொண்டு இயங்குவது தினமணி என்றால் மிகையில்லை.

சமூகத்தின் சிக்கல்களை உரியவர்கள் கண்டு தீர்க்கும்விதத்தில் மணியாக ஒலித்து அதனைச் சரிசெய்யும் நாளிதழ் தினமணி. இந்நாளிதழின் தமிழ்ப்பணிகள் குறித்து இக்கட்டுரை விரிகிறது. இது என்றும் தமிழ், தமிழ்மக்கள், தமிழ்நாடு என்ற கோட்பாட்டுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளமை பாராட்டிற்கும் சிறப்பிற்கும் உரியது.

தமிழ் – தமிழ்மக்கள் – தமிழ்நாடு

உலகத் தமிழ்மக்களின் உயிர்த்துடிப்பாகக் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய செய்திபரப்பும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழ் – தமிழ்மக்கள் – தமிழ்நாடு என்ற செயல்பாட்டில் விளங்கிக்கொண்டு வருகிறது தினமணி. இச்செய்தி நிறுவனம் உலகளாவிய அளவில் பல்வேறு செய்திகளையும் பகிர்ந்துகொண்டு நிலவிவந்தாலும் தன்னுடைய கொள்கையிலோ – கோட்பாட்டிலோ – எந்த மாறுதலையும் செய்யவில்லை என்றே கூறலாம்.

மொழித்தூய்மை என்பது உலகில் பலரும் விரும்புகின்ற ஒரு செயல்பாடு. அதற்கு உறுதுணையாக அமையவேண்டியது அரசின் கடமை. அவ்வாறு மொழித்தூய்மை பின்பற்றப்படாதபோது அல்லது அக்கொள்கையிலிருந்து தவறும்போது அரசினைக் கண்டிக்கும்விதமாகச் செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் தினமணிக்கு நிகர் அதுவேதான். ஒரு நாட்டில் அரசியலமைப்பு எவ்வாறு பாதுகாப்பட்டு வருகிறதோ அதேபோன்று ஊடகங்களும் பாதுகாப்பளிக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டின் நான்காவது தூண். இதுதான் மக்களை நேரிடையாகச் சென்றுசேர்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் தினமணி ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

ஒரு சொல்லைப் புதியதாகப் பயன்படுத்தும்போது அதற்கான விளக்கத்துடன் அந்தச்சொல் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற குறிப்பும் இடப்படுகிறது.

மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ்களில் தினமணி தன்னுடைய பங்காக 2014 – ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று (மொழிக்கென்று) ஒரு விழாவினை (தமிழ்த் திருவிழா) ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவினைத் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தவர் நினைவில்வாழும் மேதகு மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே ஒருமொழிக்குரிய விழாவினை ஒரு நாளேடு எடுப்பது இதுவே முதன்முறை என்பது நோக்கத்தக்கது.

புதிய சொற்களை அறிமுகம் செய்தல்

      ஊடகங்கள் மொழியை வளர்ப்பதில் பெரும்பங்காற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதனைப் பல்வேறு தளங்களில் பல்வேறு மாந்தர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆனால் தினமணி நாளிதழ் தானாகவே முன்வந்து இத்தமிழ்ப் பணியைச் செய்கிறது.

           எட்டுத்திக்கும் செல்வீர்

          கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்ற பாரதியாரின் அடிகளுக்கு ஏற்பத் தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களின் ஆலோசனைகளின்பேரில் பலரும் விரும்பும், பலரும் ஆமோதிக்கின்ற கருத்துகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பிறமொழியிலிருந்து தமிழுக்கு எடுத்துவருகிறது. அவற்றுள் பெரிதும் உழைத்தவர்கள் மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் மற்றும் தமிழிறஞர் தெ. ஞானசுந்தரம் போன்றோர் ஆவர். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று அவர்களின் சொல் தேடலும், சொல் புதிது என்னும் பகுதியும் சிறப்பாக அமையும். பிறரின் கருத்துகளையும் அவற்றுடன் சேர்த்து வெளியிட்டு இறுதியில் காரணத்துடன் கூடிய மொழிபெயர்ப்பாக அது அமைந்திருக்கும். அவற்றால் உருவான சொற்களைத் தன்னுடைய நாளேடுகளிலும் பயன்படுத்தி அதற்கான பின்னூட்டம் பெறுவது மொழிக்குச் செய்யும் நன்மை. அவற்றுள் தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள இணையம் சார்ந்த சொற்களை அறிமுகம்செய்து அதனைப் பயன்பாட்டிற்கும் கொண்டுவந்துள்ளது. அவற்றுள், முகநூல் (Facebook), சுட்டுரை (Twitter), கட்செவி அஞ்சல் (WhatsApp) போன்றவை குறிக்கத்தக்கன.

      ஒரு நாட்டின் தலைவர் அல்லது நாடுகளின் பெயர்கள் அல்லது முக்கிய நபர்களின் பெயர்கள் போன்றவற்றைக் குறிப்பிடும்போது இயன்றவரை தூயதமிழைப் பயன்படுத்தி விளக்கம் அளிக்க முற்படுகிறது தினமணி நாளிதழ்.

தலையங்கக் குரல் (குறள்)

      ஒரு இதழுக்குச் சிரசு போன்றது தலையங்கம். இதனை அந்தப் பெயரே உறுதிசெய்யும். மனிதனுக்குத் தலை எந்த அளவிற்கு முக்கியமானதோ அதேஅளவு இதழுக்குத் தலையங்கம் முக்கியமானது. ஒரு செய்தியின் முக்கியத்துவத்தை அறிந்து அதனையே தலையங்கமாக வெளியிடுவர். இதனை அந்த இதழின் ஆசிரியர்தான் எழுதவேண்டும். அவற்றின் அமைப்புமுறை போன்றவை இதழியலில் விரிவாக இடம்பெற்றிருக்கும்.

      தினமணியில் நாள்தோறும் (ஞாயிறு தவிர்த்து) நடுப்பக்கத்தில் தலையங்கம் இடம்பெற்றிருக்கும். அதன் தலையங்கங்கள் சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதற்குரிய காரணம் மற்றும் தீர்வுகளை இதில் குறிப்பிடுவார். இது முக்கிய இதழ்கள் செய்கின்ற ஒரு பணியாகவே அமைந்திருக்கிறது. ஆனால் தினமணியில் இதுவொரு சிறப்புப்பகுதியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருநாள் தலையங்கத்திற்கும் அதற்கேற்ப ஒரு திருக்குறளும் அதற்குரிய விளக்கமும் அமைத்திருப்பார் ஆசிரியர். தினமணியின் இதுபோன்ற பணி சமூகத்தோடு தமிழையும் வளப்படுத்தும் நிகழ்வாகவே அமைகிறது.

கட்டுரையின் பான்மை

      தினமணியில் வெளியாகும் நடுப்பக்கக் கட்டுரைகள் சமூக நிகழ்வுகளை மையப்படுத்தியிருக்கும். இது பல்வேறு தளங்களில் அமையும். இக்கட்டுரைகளைச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் எழுதுகிறார்கள். அதில் யாருடைய கட்டுரை சிறப்பாக இருக்கிறதோ அல்லது அந்நாளுக்குரிய முக்கியக் கட்டுரைகளை வெளியிடுவதில் தினமணிக்கு நிகர் வேறொன்றுமில்லை. அதன் தலைப்பும் முக்கியமான அடிகளை மையப்படுத்திக்காட்டியும் வெளியிடுவார்கள். அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் மூத்த பத்திரிக்கையாளர் எஸ். குருமூர்த்தி எழுதியிருப்பார். இக்கட்டுரைகள் அனைத்தும் நல்ல தமிழில் அமைவதோடு புரிந்துகொள்ளும் வகையிலும் தமிழின் மேன்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

தமிழ்மணி - தினமணி

      ஞாயிறுதோறும் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ்மணி என்ற பெயரில் வெளியாகும். இப்பகுதியில் தமிழர்களின் இலக்கியங்கள் மற்றும் அதன்மீதான விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. அதோடு ஆசிரியரின் பகுதியாகக் கலாரசிகன் என்ற பகுதி இடம்பெறுகிறது. இப்பகுதியில் அவர் தம்முடைய நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இறுதியாகத் தாம் படித்த ஒரு நூலினை அறிமுகம் செய்து அதிலிருந்து அவருக்கும் இல்லையானால் அனைவர்க்கும் விருப்பமான பகுதியைத் தருகிறார். இதன்மூலம் தினமணி என்றும் தமிழ்மணியே என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இணைப்பு இதழ்கள்

      தினமணியின் இணைப்பாகச் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாள்களில் முறையே இளைஞர் மணி, மகளிர் மணி, வெள்ளி மணி, சிறுவர் மணி, கொண்டாட்டம், கதிர் போன்றன வெளிவரும். இந்த இணைப்புகளில் பல்வேறு பொதுத் தகவல்களுடன் வெளிவரும். இளைஞர் மணியில் தமிழ்மொழி மூலமாக ஆங்கிலப் பயிற்சி மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராவது, வேலைவாய்ப்பு என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். மகளிர் மணியில் மகளிர் சாதனையாளர்கள் மற்றும் அதுபோன்ற அனைத்துச் செய்திகளும் வெளிவரும். வெள்ளி மணி இதழில் திருத்தலங்களின் வரலாற்றைத் தெளிவாகவும் மூன்று மதங்களின் (இந்து, இஸ்லாம், கிறித்தவம்) உலக ஒருமைப்பாட்டுச் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.

சிறுநூலாக வெளிவரும் சிறுவர் மணியும், கதிரும் படித்துவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிசெய்வதாகச் செய்திகள் அமைந்திருக்கும். கதிரில் தமிழைத் தவறில்லாமல் எவ்வாறு எழுதலாம் என்ற பகுதி இடம்பெற்றுவந்தது என்பது குறிக்கத்தக்கது. கொண்டாட்டம் பகுதி இப்போது வெளிவருவது இல்லை. அதனையே இளைஞர் மணி, மகளிர் மணி என்ற இரண்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்படுகிறன.

தொடர்க – வெல்க - வளர்க

                அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

                எஞ்சாமை வேந்தர்க் கியல்பு (குறள். 382)

என்ற குறளின் அடிப்படையில் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்குத் தயங்காமல் அதோடு மட்டுமல்லாமல் பிறருக்கு உதவி (பொருள், கல்வி) செய்வதிலும் தவறாமல் ஈடுபட்டு நாளும் மக்களுக்கு அறிவுச் செல்வத்தினையும் கேள்விச் செல்வத்தினையும் ஈந்து வளர்த்து ஊக்கம் கொடுப்பது தினமணியின் செயல்பாடாக இருப்பது போற்றுதற்குரியது. அதன் சுற்று குறைவாக இருப்பினும் அதன் வீரியம் பெரிது என்பதனைக் காட்டத் தவறவில்லை (மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது). தனது பதிப்பை இந்தியத் தலைநகர் புதுதில்லியிலும் தொடங்கி அங்கும் தமிழ்ப்பணியைச் செம்மையாக மேற்கொண்டு வருகிறது. இதனை நாம் நன்றியுணர்வோடு போற்ற வேண்டும். தினமணியின் தமிழ்ப்பணி என்றும் தொடரவும் தொடர் முயற்சியில் வெல்க என்று வாழ்த்தியும் அது மேலும் ஓங்கி வளரவும் நாளும் அதன் பணியை நாம் ஊக்கிஉயர்த்துவோம். ஆறானது குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களை வளப்படுத்திக் கடலினை நோக்கிச் செல்வதுபோல தினமணி இதழ் பலதுறைகளின் வளம்பெருக்கும் இதழாக விளங்கினும் அதன் இறுதிநோக்கு சமுதாயக் கருதுகோளாக விளங்குவது இதன் மணிமகுடம்.



 

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

 



சங்க இலக்கியத்தினை நாம் பல கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கலாம். அதில் முதலில் புலவர்கள் தனித்தனிப் பாடல்களாகப் படைத்த காலம், அதன்பிறகு படைத்த பாடல்களைத் தொகுத்த காலம், பிறகு உரை எழுதிய காலம், நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு சி.வை. தாமோதரம்பிள்ளையும், உ.வே.சா.வும் தேடித்தேடிப் பதிப்பித்த பதிப்புக்காலம் என வகைப்படுத்தலாம்.       இந்நூல்கள் பதிப்புகளாக வெளிவந்த பிறகுதான் உலகம் தமிழனைப் பற்றிய தமிழைப் பற்றிய மதிப்பீட்டை ஆயுதமாகப் பெற்றது. 

       ‘சங்க இலக்கியத் தொகுப்பு’ என்பது தமிழுக்கு இயல்பாகவே பரிணமித்ததா அல்லது வேறேதேனும் பின்னனியில் உண்டா என்று கூர்ந்து நோக்கினால், ஆங்கிலத்தில் Anthology என்ற சொல் உண்டு. இச்சொல்லின் அடிச்சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்றும், இதனைத் தொகை, தொகுப்பு, பூங்கொத்து என்று பொருள் கொள்ளலாம் என்பார் டாக்டர் க.ப. அறவாணன். அதேபோல் யவணர் என்ற சொல் தமிழிலக்கியங்களில் கிரேக்கர்களையே குறித்து வந்தது என்றும் இது சிதைந்த கிரேக்கச் சொல் என்றும் குறிப்பிடுவார்.

தொகுப்புக் காலம்

      சங்க இலக்கியத்தின் தொகுப்பு காலம் கி.பி. 2 அல்லது 3ஆக இருக்கலாம் என்றும் இவற்றின் மொத்தத் தொகை 2381 பாடல்கள். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் நினைவிற் கொள்வதற்காகவே பத்துபத்து பாடல்களாகத் தொகுத்துப் பாடப்பெற்றன. தொகுப்புப்பணியின் போதுதான் ஆய்வு தொடங்கியது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கும்போதுதான் அதில் பாடவேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். மிகுதியான பயன்பாடு கொண்ட நூலே பாடபேதம் கண்டது.

       சங்க இலக்கியத்தைப் பெரும்பாலும் திணை அடிப்படையிலேயே தொகுத்தனர். உ.வே.சா. மட்டும் குறுந்தொகையைக் கூற்று அடிப்படையில் பிரித்தார். இந்த இலக்கியத்தில் அகம் சார்ந்த பாடல்கள் 80 சதவீதமும் புறம் சார்ந்த பாடல்கள் 20 சதவீதமும் உள்ளது. சங்கப்பாடல்களைத் திணை அடிப்படையிலேயும், பொருள் அடிப்படையிலும், யாப்பு அடிப்படையிலும் பிரிக்கலாம் என்றும் இதனை அகமரபு, புற மரபு, இசை மரபு, அரச மரபு, நெடும்பாடல் மரபு, எண்பெருந்தொகை மரபு என்று விளங்கிக்கொள்ளலாம்.

தொகைநூல் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்

      தொகைநூல்களை ஆராயும் யாரும் அதனை ஏன் தொகுத்தார்கள், யார் தொகுத்தார்கள், எப்படித் தொகுத்தார்கள் என்பதை யாரும் ஆராயவில்லை.

       பதிற்றுப்பத்தினைத் தொகுப்பித்தவன் சேரனாக இருந்திருக்கலாம். அவை அனைத்தும் சிறுசிறு நூல்களாக இருந்து பின்னர் ஒன்றாகத் தொகுக்கப்பெற்றது. அதில் அந்தாதி அமைப்பும் உள்ளது நோக்கத்தக்கது. அந்தாதி பின்னர் வந்த ஒரு இலக்கிய வகை என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

       புறநானூற்றைத் தொகுத்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனாராக இருந்திருக்கலாம். 400 என்ற அமைப்பு முறை முன்னர் தொகுக்கப்பெற்ற இலக்கியங்களில் இருந்தபடியால் இதுவும் 400 எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்ற நோக்கில் கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்த்து இவர் தொகுத்திருக்கலாம்.

       கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் பேரரசை நிறுவுகின்றான். அவன்தான் தமிழ்ச்சங்கத்தையும் நிறுவினான் என்ற செய்தி கலித்தொகையும், பாண்டிக்கோவை என்ற நூலும் உறுதிசெய்கின்றன. பாண்டியரை மட்டுமே தமிழோடு தொடர்பு படுத்திப்பாடியுள்ளனர். இதனையும் நோக்கும்போது புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் பல பாண்டியர் காலத்தில் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆனால் சேரர்கள் தான் தொகுத்தார் என்று கா. சிவத்தம்பி, அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம் போன்றோர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் சேரர்களே செல்வச் செழிப்புடன் விளங்கினர் என்பதாகும். அதன் காரணமாகவே பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் செம்மையாக அமைந்துள்ளன.

மானுடவியல் நோக்கில் தொகுப்பு முறை

      களவேள்வி, பிள்ளையாட்டு, வாள் மங்கலம், சிலம்புகழி நோன்பு, திணைதுறைகள் போன்றவற்றை விளங்குவதற்கு மானிடவியல் அவசியம். ரொமிலா டாபர் அவர்களின் இந்திய வரலாறு என்னும் நூலில் இந்தியாவில் இருந்த மானிடவியல் கூறுகளைப் பற்றிய ஆழ்ந்த செய்திகளைத் தந்துள்ளார். வேலன் வெறியாடல் சடங்கு உட்பட அனைத்தும் மானிடவியல் துறை சார்ந்தது. இந்நிகழ்வு இன்றும் கேரள மாநிலம் வடக்கு மாவட்டத்தில் நடைபெறுகிறது.

ஏறு தழுவுதல் என்பதும் மானிடவியலில் ஒரு பகுதி. அதிலும் ஏறு தழுவி பெண்களை மணப்பது என்பது பழந்தமிழர்களின் முறைகளில் ஒன்று. இன்றும் ஏறு தழுவுதல் என்பது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்றைத் தழுவி பெண்ணை மணத்தல் என்பது அன்பின் ஐந்திணையில் வைக்க முடியாது. ஆனால் சங்கப் புலவர்கள், தம்முடைய பாடல்களில் தலைவியரின் காதலர்கள்தான் ஏற்றைத் தழுவி இவர்களை மணந்தார்கள் என்று செய்திகள் இருக்கின்றன. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்ற தொல்காப்பிய நூற்பா திருமணத்தின் முக்கியத்துவத்தையும் பின்னர் எழுந்த காதல் வாழ்க்கையைப் பற்றியும் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் குறிப்பிடுவார். இவ்வாறு மானுடவியல் சார்ந்தும் தொகுப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது கருத்தாகும்.

நற்றிணை

      தொகைநூல்களில் பண்டைய இலக்கிய வாழ்வு மரபினைக் குறிப்பிடும் நூல். தொகுக்கும்போது குறுந்தொகைக்கும் நெடுந்தொகைக்கும் இடையே தொகுக்கப்பட்டது. எனவே இதனை நற்றிணை என்று பெயரிட்டனர். இந்நூலும் அகநானூறு போன்று தொகுப்பதற்கு முயற்சி நடைபெற்றுள்ளது. இருப்பினும் அது நிறைவேறவில்லை. ஏட்டுப்பிரதியில் திணை அடிப்படையில் இந்நூல் அமையவில்லை. இந்நூலுக்குச் சிறப்பாக அகத்திணையின் துறை விளக்கமாகிய கொளு உள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் பிற்காலத்தவராக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

216-ஆம் பாடலில் ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்பது கண்ணகியின் எச்சமாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இது அக்காலத்திய பெண்கள் தங்கள் கணவனைப் பிரிந்தால் ஒரு மார்பினை அறுத்துக்கொள்ளும் எச்சமாக இருந்திருக்க வேண்டும்.

குறுந்தொகை

       அகநானூறைத் தொகுப்பித்த உக்கிரப் பெருவழுதியின் பாட்டு நற்றிணையில் உள்ளது. நற்றிணையைத் தொகுப்பித்த பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியின் பாட்டும் உண்டு. குறுந்தொகை 270ஆம் பாடலும் இவனுடைய பாட்டே. எனவே அகநானூறும் நற்றிணையும் ஓரே காலத்தில் தொகுக்கப்பட்டன என்றும், உக்கிரப் பெருவழுதி, மாரிவன்கோ, கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது ஔவையார் பாடியுள்ளார். அப்பாடல் புறநானூற்றில் உள்ளது. எனவே புறநானூறும், அகநானூறும், குறுந்தொகையும் ஒரே காலத்தில் தொகுக்கப்பெற்றிருக்கலாம் என்ற செய்தி பெறப்படுகிறது.

       முதன்முதலாகத் தொகைநூல்கள் திணை அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டன. அது ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற நூல்களைப் பின்பற்றியே அமைந்திருக்க வேண்டும். குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்த சவுரிபெருமாள் அரங்கன் அதனைத் திணைவழியில் பதிப்பிக்க, அதனை மீண்டும் பதிப்பிக்க முனைந்த உ.வே.சா. அதனைக் கூற்று அடிப்படையில் பகுத்தார். இவருக்கு முன்பு ராமரத்தின ஐயர் என்ற ஒருவரும் குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளார் அவரும் திணை அடிப்படையிலேயே பதிப்பித்துள்ளார்.

ஐங்குறுநூறு

      ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்களுள் கபிலர் மட்டுமே வேறுநாட்டைச் சார்ந்தவர். மற்ற நால்வரும் சேரநாட்டைச் சார்ந்தவர்கள். தொல்காப்பியர் குறிப்பிடும் திணை வரிசைமுறையில் இது அமையவில்லை. இதற்குக் காரணத்தை உ.வே.சா. தம்முடைய பதிப்பு நூலில் குறிப்பிடுகிறார். பத்து பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒருபொருள் பற்றிய பத்து பாடல்கள் அமைந்துள்ளது. சிலவற்றிற்கு அப்பாடலின் அடியே தலைப்பாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்துள்ளது (ஒப்பிடுக: பதிற்றுப்பத்து). 

       இதில் மருதத்திணை முதலில் வைக்கப்பட்டதற்கான காரணம், சேர மன்னனை வாழ்த்திப் பாடுவதாக அமைந்த பாடல் தொடங்குகிறது. தொகுத்தவன் சேரமன்னன். எனவே இதனை முதலில் வைத்து தொகுத்திருக்கலாம். அதிலும் தொகுப்பித்தவனின் தேவையை நிறைவேற்றும் பொருட்டும் இவ்வாறு அமைந்திருக்கலாம். அடுத்து நெய்தல் திணை வைப்பிற்கான காரணம், சேரநாட்டு துறைமுகப் பட்டினமான தொண்டியின் பெயரால் அமைந்த பத்து பாடல் மரபே காரணம் என்றும் பின்னால் கபிலர் பாடிய குறிஞ்சியை இடையில் வைத்து அதன்பின்னர் பாலையையும், முல்லையையும் வைத்தார்கள் என்று உ.வே.சா குறிப்பிடுகிறார்.

       ஐங்குறுநூறு வாய்மொழி மரபை அதிகமாகக் கொண்ட ஒரு பாடல் தொகுதி. வாய்மொழி மரபின் நோக்கம், எளிதாகப் புரிந்துகொள்வது, வந்தசொல்லே மீண்டும் மீண்டும் வருவது. நினைவில் வைத்துக்கொள்ள இதுவே உதவும். ஏற்கனவே இருந்த ஒரு மரபை நினைவில் வைத்துக்கொள்ள இசை முக்கியமானது. பிற தொகை நூல்களில் வரும் வரலாற்றுச் செய்திகள் இதில் குறைவாகவே உள்ளது. ஓசை நயமும் ஒழுங்கிற்குமே இப்படி மீண்டும் மீண்டும் வரிகள் வந்தன என்பார் ராஜ் கௌதமன்.

பதிற்றுப்பத்து

      பதிற்றுப்பத்தின் பதிகங்கள் உ.வே.சா. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் வைத்துள்ளார். பின்னர் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அதனை முன்னர் வைத்து பதிப்பு செய்தனர். பதிற்றுப்பத்தில் வரும் பதிகங்கள் பிற்காலத்தில் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேரர்களின் வரலாற்றை அறிந்தவர்தான் எழுதியிருக்கிறார் என்பதும் அவை பலவும் கற்பனை கலந்த செய்திகளாகவே அமைந்துள்ளமையும் அவற்றில் உண்மை இல்லை என்பதும் அறியலாம்.

       அதோடு இதில் வரும் செய்திகள் அனைத்தும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. இதிலும் பல செய்திகள் உண்மை உள்ளன. இதனை வெளிநாட்டார் குறிப்புகள் வழி உறுதி செய்ய முடியும் என்பார் பேராசிரியர் மருதநாயகம்.

பரிபாடல்

      நாடக வழக்கினும்….. என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கின் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதனாலேயே இதற்கு இப்பெயர் வைத்தனர். பரிபாட்டு என்னும் யாப்பு வடிவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று செய்யுளியலில் (117) குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

       மு. அருணாச்சலம் அவர்கள் தம்முடைய தமிழிசை இலக்கண வரலாறு, தமிழிசை இலக்கிய வரலாறு என்னும் நூலில் பரிபாடலின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கலாம் என்றும், அறிஞர் சிவத்தம்பி தம்முடைய காலமும் கருத்தும் என்னும் நூலில் இந்நூல் பக்தி இயக்கத்தின் தொடக்கமாகக் கொள்வார்கள். பேராசிரியர் கபில்சுவலபிள் என்போரும் இக்கருத்தை ஏற்பர்.

பரிபாடல் முழுக்க வைதீகச் சமயக் கருத்துகளை எடுத்துரைக்கிறது. கிடைத்துள்ள 27 பாடல்களைப் பாடிய புலவர்களில் பெயர்களின் அடைகள் நிறைய உள்ளன. இந்நூல் முழுவதும் முருகன், திருமால் என்று தெய்வங்களைப் பரவுவதாகவே அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதியில் இதனைப் பாடியவர், இசையமைத்தவர், இசைக்குறிப்பு, கூற்று, வாழ்த்து என்று குறிப்புகள் உள்ளன இதன்மூலமே இது பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது என்ற உண்மை புலப்படும். 

கலித்தொகை

      கலிப்பாடல்களில் உள்ள ஐந்து திணைகளையும் சேர்த்து 150 பாடல்களையும் தொகுத்தவர்கள் பாண்டியர்களாக இருத்தல் வேண்டும். அதில் பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்ற குறிப்பு உள்ளது. நெய்தல் திணையில் அதற்கான உரிப்பொருள் இல்லை.

       திணை என்றால் பால், பொருள், ஒழுக்கம் என்று நச்சினார்க்கினியர் பொருள் கொள்வார். ஒழுக்கத்தின் அடிப்படையில் கலித்தொகையில் நெய்தல் திணை அமைந்துள்ள விதத்தினை எடுத்துரைத்தார்கள்.            

அகநானூறு

       அகத்திணை இலக்கிய முக்கூறு (முதல், கரு, உரி) சிறப்புக்கூறு (உரி) என விரவி வருகிறது. அகநானூற்றின் முக்கூறுகள் பெரும்பாண்மையான பாடல்களில் விரவி வருகின்றன. மற்றொரு பகுப்பாக, செருக்குற்று செம்மாந்து செல்லும் யானைபோன்றது களிற்றுயானை நிரை, மணியும் பவழமும் கலந்தாற் போன்ற காட்சிக்கு அழகுமிக்க மணிமிடைப் பவழம், நல்முத்தின் ஒளியெனவே பொருட்சிறப்பும் பொலிவும் கொண்டது நித்திலக்கோவை என்று பொருள் கூறுகின்றனர் உரையாசிரியர்கள்.

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறை பற்றி டாக்டர் தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலில், குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை இவைமூன்றில் மூன்றடி முதல் முப்பத்தோரு அடிவரை உள்ள முறையை நோக்கினால் இவை ஒரே நேரத்தில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்டவை என்ற உண்மை விளங்கும் என்பார். பேரறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தம்முடைய தமிழ்க்காதல் என்னும் நூலில் பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப்பாடவில்லை என்பதும் அடியெல்லை வகுத்தோரின் திறம் தொகுத்தோருக்கு உரியது என்பது நம் நினைவிற்கு வேண்டும். அடி பலவாகிய அகநானூற்றில் உரிப்பொருளைக் காட்டிலும் இயற்கையைக் காட்டும் முதற்பொருள், கருப்பொருள் பலபட புனையப்பட்டுள்ளன.

புறநானூறு

      புறப்பாடல்கள் பல சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாலும் ஒரு வரன்முறையில் தொகுக்க முயற்சி செய்துள்ளனர். அது, சேரர், பாண்டியர், சோழர் என்ற வைப்பு முறையில் முதல் 16 பாடல்கள் வருகின்றன. அதன்பின் 16 முதல் 26ஆம் பாடல்வரை சேரர், பாண்டியர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 27 முதல் 47 வரை சோழ அரசர்கள் மட்டுமே வருகின்றனர். 48 முதல் 85 வரை மீண்டும் பழைய முறைப்படி மூவேந்தர்களும் வரும்படியாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. 86 முதல் 181 வரை குறுநில மன்னர்கள் மட்டுமே இடம்பெறுகின்றனர். 182 முதல் 247 வரை குறுநில மன்னர்கள், வேந்தர்கள் பாடிய வஞ்சினப் பாடல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 248 முதல் 365 வரையான மீகநீண்ட எண்ணிக்கையிலான பாடல்கள் பொதுப்பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இறுதியாக வரும் 366 முதல் 400 வரையிலான பாடல்கள் சேர, பாண்டிய, சோழ, குறுநில மன்னர்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.

புறநானூறு தொகுக்கப்பட்டமை திணை அடிப்படையிலும், மன்னர்கள் அடிப்படையிலும் என்ற இரண்டு முறையாகும். புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள துறைகளில் படி புறநானூறு தொகுப்பு அமைந்துள்ளது.

பத்துப்பாட்டு

      சங்க இலக்கிய அகப்பாடல்கள் மக்களைப் பாடுவது. அதில் சற்று முரண்பட்டு பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் மக்களுக்கான ஆற்றுப்படை நூல்களாக வந்துள்ளன. அவற்றின் முதன்முதலில் வைக்கப்பட்டது திருமுருகாற்றுப்படை. இது காலத்தினால் பிந்தியது.

       நெடுநல்வாடையில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிக்காக நச்சினார்க்கினியர் அதனைப் புறப்பாடல் என்றார். அதனை மறுத்து பேயை விரட்டவும் சங்க இலக்கியங்களில் வேம்பு பயன்படுத்தப்பட்டது. எனவே அதன்காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் வரும் 99 மலர்கள் ஆசிரியர் தன்னுடைய காலத்தில் இருந்த மலர்களைப் பதிவு செய்ய வேண்டியதற்காகவே தந்துள்ளார்.

       காலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது திருமுருகாற்றுப்படை காலத்தினால் மிகவும் பிற்பட்டது. இருப்பினும் பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்து இல்லையாகலான் அதனை முன்னர் வைத்துள்ளனர். இது ஒரு சமய அரசியல் என்று கூறலாம்.

சங்க இலக்கியம்: தொகுப்பு அரசியல்

சங்க இலக்கியத்தில் சங்கம் என்ற சொல்லே இடம்பெறவில்லை. இறையனார் களவியலுரை குறிப்பிடாத பத்துப்பாட்டை உள்ளடக்கியதும் பாட்டும்தொகையும் என உரைகளில் குறிப்பிடப்பெறுவதும் சங்ககாலத்தைத் தொடர்ந்து கலித்தொகை பரிபாடல் காலங்கள் வரையில் தொகையாக்கம் செய்யப்பட்டதும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுமான சங்கஇலக்கியத் தொகையாக்கம் என்பது ஒரு தெளிவான வரலாற்றையும் உரிய தொகையாக்க காலத்தையும் வெளிப்படுத்துவனவாக இல்லை. இப்படிப்பட்ட தொகையாக்கக் காலத்தின் அரசியல் சூழ்நிலையும், இறையனார் களவியல் உரையில் கடவுள்களைத் தொடர்புபடுத்திப் பேசப்பட்ட அரசியலும் உள்ளது.

தொகையாக்கத்தில் பெரும்பாலும் மத அரசியல் பின்னனிகள் இருந்துள்ளன. பதிப்புகள் இறைமையாக்கப்பட்டன. இதனைப் பல்வேறு சங்கப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன. இதனைத் தொகுத்தவன் ஒரு அந்தணனாக அடையாளப் படுத்தப்படுகிறான். இறைமையும் அரசும் களவியல் உருவாக்கத்தின் பின்னணிகளாக ஆக்கப்பட்டிருப்பதே அதன் அரசியலாக உள்ளது.

பாடல்கள் பாடப்பட்ட காலம் வேறு. தொகையாக்கம் செய்யப்பட்ட காலம் வேறு. இக்கருத்தை அறிஞர் சிவத்தம்பி, பாண்டுரங்கன் போன்றோரின் மேற்கோள் மூலம் அறிய முடிகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் மிகப்பெரிய அளவிற்குப் புறத்திணைகள் சேர்க்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் புறநானூறு தொகுக்கும்போது ஏற்பட்ட தொகையாக்க அரசியல் அவற்றின் வைப்புமுறை போன்றவற்றை மிகவும் விரிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. பெயர் சுட்டா மரபு என்பவை அகப்பாடல்களுக்கு மட்டுமல்லாது புறப்பாடலாகிய புறநானூற்றிலும் சில பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

சங்க அகப்பாடல்களில் அதிகம் வேந்தர்களின் மேலாண்மை ஓங்கியிருந்தது என்பதை அகப்பாடல்களில் உள்ள வேந்தர்களின் வரலாற்றுச் செய்தி அடிகளின் எண்ணிக்கை நமக்குப் புலப்படுத்துகிறது. 

 

குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கு

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

 

சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது, இது பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல் சமூக மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு எனலாம் என விக்கிபீடியா விளக்கம் அளிக்கிறது. எவ்வாறாயினும் தனிமனிதன்தான் சமூகத்தைக் கட்டமைக்கிறான். அவனுள் ஏற்படும் பல்வேறுவித மாற்றங்களால் இந்தச் சமுதாயத்தில் ஏதேனும் விளைவு ஏற்படுகிறது. அவ்விளைவுகளே சமூகத்தாக்கமாகப் பரிணமிக்கிறது.

தனிமனிதன் தான் சார்ந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொள்கின்ற அல்லது சமுதாயம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பதிவு செய்கிறான். அப்பதிவுகள் ஏதாவது ஒரு படைப்பாக வெளிப்பட்டு மிளிர்கிறது. அவனுள் ஏற்பட்ட தாக்கம் இச்சமூகத்திற்கு ஏற்படாமலும் புரிந்து கொள்ளப்படாமலும் போகலாம். அதனாலேயே தனிமனிதத் தாக்கம் என்று புரிந்துகொண்டும் இத்தொகுப்பை உணர்ந்து கொள்ளலாம். சமூகத்தில் ஏற்படும் பெரும்பான்மையான நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டே இது நிகழ்த்தப் பெறுகிறது என்பதாலேயே இது சமூகத்தின் ஒட்டுமொத்த தாக்கம் என்றும் பதிவு செய்யலாம்.

            மேற்கூறப்பட்டவாறு தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கத்தையும் தன்னுடைய சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்ட தாக்கத்தையும் ‘கூடுகள் சிதைந்தபோது’ என்னும் படைப்பாக வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் அகில். அவருடைய பின்புலம் இலங்கையைச் சார்ந்தது. எனவே அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் பிரிவு, துயரம், அழுகை போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளது. தற்போது ஆசிரியர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வருகிறார்.

            இலங்கையில் போரின்போது ஏற்பட்ட தாக்கம் தமிழகத்தை மட்டுமல்ல. தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அவ்வாறான தாக்கம் கவிதை, சிறுகதை, நாவல் என ஏதாவது ஒரு படைப்பாக வெளிவருகிறது. அது பிற்காலத்தில் வரவிருக்கும் சந்ததியினருக்கு ஒரு அழியா நினைவாக அமைந்து விடுகிறது.

            இதுபோன்ற படைப்புகள் தம் நாட்டைவிட்டு அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளத்தக்கதாய் அமைகிறது. அவர்களின் படைப்புகளில் நாம் உள்ளார்ந்து சென்று அவர்களுடன் இயைந்து வருவது போன்று உள்ளன. இத்தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. அவற்றைத் தனிமனிதத் தாக்கம், சமூகத் தாக்கம் என இருவகையாகப் பாகுபடுத்தி இக்கட்டுரை விரிகிறது.

தனிமனிதத் தாக்கம்

            தனிமனிதன் தான் சார்ந்த சூழலில் எவ்வாறு மற்றவர்களின் உணர்வோட்டங்களுக்குள் ஒத்து வாழ்கிறான் என்பதனை விளக்குவதே ஆகும். இத்தாக்கம் இவ்வாறான தனி மனிதத் தாக்கத்திற்கான சிறுகதைகளாக இத்தொகுப்பில், ‘அம்மா எங்கே போகிறாய்? உறுத்தல், ரேடியோ பெட்டி, கிறுக்கன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

            ‘அம்மா எங்கே போகிறாய்?, உறுத்தல்’ என்ற இரண்டு கதைகளும் வயதான தன்னுடைய தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

            ‘அம்மா எங்கே போகிறாய்’ என்ற சிறுகதையில் பெற்றெடுத்த மகனுக்கும் மகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகளினால் அலைக்கழிக்கப்படும் ஒரு தாயின் வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதனால் அவளாகவே யாரிடமும் சொல்லாமல் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தேடுகிறாள். தன் மகன் அல்லது மகள் தன்னைக் கண்டு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில்.

            ‘உறுத்தல்’ கதையில் இளங்கோவின் மனைவிக்கு ஆகாத மாமியார் பாத்திரமாக அவனுடைய அம்மா உள்ளாள். அவளை அழைத்துக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட முனையும்போது அவனது குழந்தை,

“அப்பம்மா! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உங்களை மாதிரி வயசான பிறகு நானும் அவயள இங்கதான் கொண்டுவந்து சேர்க்க வேணும் என்ன?”

என்ற கேள்வி இளங்கோவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தன் தவற்றை உணர்கிறான். மீண்டும் வீட்டிற்கே திரும்புகின்றனர். ஆனால் அவனுடைய தாயின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதாகக் கதை முடிகிறது.

            ‘ரேடியோ பெட்டி’ சிறுகதையில் கணவனை இழந்த மனைவியான பூரணம் மாமி என்ற கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது. அவளுடைய ரேடியோ பெட்டியைச் சரிசெய்தே ஆகவேண்டும் என்றும் அது அவளுடைய கணவனின் நினைவாக வைத்திருந்தாள் என்றும் கதை விரியும். அதைச் சரிசெய்ய இயலாது என்றும் அதற்குப் பதிலாக வேறு புதிய ரேடியோ பெட்டி வாங்கித் தருவதாகச் சொல்லியும் அவளின் மனம் அதற்கு உடம்படவில்லை. இறுதியில் சரிசெய்ய இயலாத ரேடியோ பெட்டியை நினைத்து உடைந்து இறந்தே போகிறாள் மாமி என்றவாறு கதை நிறைவு பெறும்.

            ‘கிறுக்கன்’ கதையில் வரும் வெள்ளையன் (நாய்), கண்மணி (பூனை) இறப்பிற்காகச் சிறுகுழந்தைகளின் கதறல் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். சமூகத்தில் உள்ளவர்கள் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அக்குழந்தைகள் மனநிலையில் அவைகளின் இழப்பு தாங்கமுடியாத சோகத்தை நிலைநிறுத்தியது என்பதாகக் கதை வளர்ந்து செல்லும். இறுதியில் இறப்பு என்பது நிச்சயம். இறப்பிற்குப்பின் பல பிறவிகள் உண்டு என்ற சிவபுராணப் பாடல் வரிகளோடு கதை நிறைவு பெறும்.

            மேற்கூறப்பட்ட கதைகளின் ஊடாக தனிமனிதனின் தாக்கம் உணரப்பட்டாலும் அவையனைத்தும் இச்சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இவையனைத்தையும் ஒரு குறியீடாகவே அகில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் உணரமுடிகிறது.

சமூகத் தாக்கம்

            சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் இறுதியில் தனிமனிதத் தாக்கத்தில்தான் நிறைவுபெறும். ஆனால் அது இச்சமூகத்திற்கு ஏற்படுத்தும் வலியால்தான் அதனை இவ்வாறு வகைப்படுத்த காரணமாகிறது.

            ‘வலி, இது இவர்களின் காலம், கூடுகள் சிதைந்தபோது, பதவி உயர்வு, கண்ணீர் அஞ்சலி’ போன்ற கதைகள் இவ்வகையில் சேர்க்கலாம்.

            ‘வலி’ என்ற சிறுகதையில் புலம்பெயர்ந்து வாழும் மயூரனின் மனம் தனக்கு முன்னால் செல்லும் ஒரு வண்டியில் அடைத்துச்செல்லும் பன்றிக்கூட்டங்களின் அவலநிலையில் நிலைகொள்கிறது. தான் எவ்வாறு கனடாவிற்குப் புலம்பெயர்ந்தோம்; என்று நினைத்து மனம் வெதும்புவதாக இக்கதை அமைகிறது. புலம்பெயர்ந்து வருவோரின் அவலநிலையையும் அவர்களின் வலியையும் இக்கதை உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் விலங்குகளை (உயிர்களை) அடைத்துத் துன்புறுத்தும் செயலினையும் பதிவு செய்துள்ளார்.

            ‘இது இவர்களின் காலம்’ சிறுகதையில் புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்ததும் தன்னுடைய நாட்டின் கலாச்சாரம் (தமிழ்க் கலாச்சாரம்), பண்பாடு போன்றவற்றைக் கட்டிக்காப்பாற்ற முயலும் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையேயான முரண் சுட்டிக்காட்டப்படுகிறது. புலம்பெயர்ந்த நாட்டின் சூழலுக்குத் தக்கவாறு தகவமைத்துக்கொண்ட இளைஞர்களிடம் வயதானவர்கள் கொள்ளும் அச்சம் எவ்வாறு உள்ளது. இளையோர்களின் பார்வையில் முதியவர்கள் (கலாச்சாரப் பண்பாட்டில் திளைத்தவர்கள்) எவ்வாறு பார்க்கப்படுகின்றனர். போன்றவை இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்மூலம் ஒரு சமூகம் எவ்வாறு தன்னுடைய அடையாளத்தைப் புலம்பெயர்தல் மூலம் மறந்து அல்லது மறைக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறார்.

            ‘கூடுகள் சிதைந்த போது’ என்ற தலைப்பு இத்தொகுப்பிற்கான தலைப்பாகவும் அமைகிறது. இதில் கூறியுள்ளபடி கூடுகள் சிதையவில்லை. அது சிதைக்கப்படுகிறது என்பது இங்கு நோக்கத்தக்கது. இங்குக் கூடு என்பது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. பூங்காவில் அவன் நடந்து கொண்டிருக்கும்போது கூட்டிலிருந்து பறந்துவந்த சிட்டுக்குருவியைக் காரில் வந்தவன் அடித்துவிட்டு சென்று விடுகிறான். அடிபட்டுக் கிடக்கும் தன்னுடைய இணையின் பிரிவினைத் தாங்கமுடியாமல் தன்னுடைய சிறகுகளை விரித்துக்காட்டி அதனையும் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கும் சிட்டுக்குருவின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டுச் சிந்தனையில் ஆழ்கிறான். கதை பின்னோக்கிச் செல்கிறது. அவனுடைய அக்கா, அக்கா மகன், வயிற்றில் குழந்தையுடன் இருந்த அவன் மனைவி ஆகியோருடன் போரின்போது தப்பிப்பிழைக்க ஓடும்போது குழந்தையுடன் அவனுடைய மனைவி துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிறாள். துணையைக் கண்ணுக்கு முன்பே பிரிந்த வருத்தம் எவ்வளவு கொடுமையானது அதன் நோக்கத்திலேயே அந்தச் சிட்டுக்குருவியின் நிலையையும் எண்ணிப்பார்க்கிறான். இவ்வாறு மனைவியை இழந்த இளங்கணவனின் வாழ்க்கையினை மீட்டுருவாக்கம் செய்து இக்கதையில் பதிவு செய்கிறார்.

            இக்கதை உண்மையிலேயே மனத்தை உருக்கும் காட்சியாக அமைகிறது. இக்கதையின் தலைப்பும் அதற்கேற்றாற்போல் வைத்துள்ளார். அதோடு இத்தொகுப்பிற்கும் இத்தலைப்பு கொடுத்தது மிகச்சிறப்பு. இத்தலைப்பு ஒரு குறியீட்டின் தாக்கம் என்பது இதனைப் படிக்கும் போது உணரலாம்.

            ‘பதவி உயர்வு’ கதையில் போர்ச்சூழலில் தமிழர்களை அழிக்கும் கடற்படைத் தளபதி தன்னுடைய மகன் ஒரு தமிழனுடன் நட்பு கொண்டுள்ளதை அறிந்து அதனைக் கண்டிக்கிறார். இறுதியில் தன்னுடைய மகன் போரில் அவனுடைய நண்பனுடன் இறந்துபடுகிறான் என்ற செய்தி கேள்விபடுகிறான். அதோடு அவனுக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. தான் செய்த மிகப்பெரிய தவறு இது என்பதை உணர்ந்து அதற்காக வருந்தி அழுது தன்னுடைய பதவியைத் துறக்கிறார். இத்தனிமனிதன் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை இச்சமூகத்தோடு பொருத்திப்பார்த்து முடிவு செய்கிறார் என்பதாக இக்கதை அமைந்துள்ளது.

            ‘கண்ணீர் அஞ்சலி’ கதையில் வன்னிப் போர்ச்சூழலில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுவந்த மருத்துவத் துறையினரின் பணியைப் போற்றுவதாக இக்கதை அமைகிறது. அவற்றுள்ளும் இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் போராளிகளுக்கு உதவிசெய்த ஒரு மருத்துவரைப் பற்றி இக்கதை பேசுகிறது. போரின்போது மருத்துவரின் சாதனையை நம் கண்முன்னே விரிவாகக் காட்டியிருப்பார். அவர்களுள் டாக்டர் பார்த்திபனின் மருத்துவப் பணியைப் பாராட்டியிருக்கிறார் அவர்.

‘இராணுவ வீரர்களாக இருந்தால் என்ன? போராளியாக இருந்தால் என்ன? டாக்டர்களுக்கு எந்த உயிர் என்றாலும் உயிர்தானே?’

என்று அடிக்கடி கூறுவார் என்பதனைப் பதிவு செய்யும்போதே அவருடைய பணி யாருக்குரியது என்பது தெளிவாகிறது. மருத்துவப் பணி என்பது நோயுற்றவர்க்கு மட்டுமே. அது யாராக இருக்க வேண்டும் என்பதனை முடிவு செய்ய வேண்டியது அல்ல என்பது கருத்தாகக் கொள்ளப்படுகிறது. இக்கதையின் இறுதியில் அவரும் அவருடைய ஒரே மகனும் இறந்துவிட்டனர் என்ற சுவரொட்டியைப் பார்த்து கண்ணீர் சிந்துவதாக இக்கதை அமைந்துள்ளது.

நிறைவாக

            ‘கூடுகள் சிதைந்தபோது’ தொகுப்பில் அமைந்த கதைகள் அனைத்தும் சமகால – கடந்தகால – ஈழப்போராட்டம் – போர் குறித்தவை. இவை சமூகப் பிரச்சினைகளைச் சார்ந்தும் தனிமனித உணர்வுகள் சார்ந்தும் உள்ளன. ஆசிரியர் அகிலனின் மறக்க முடியாத அவரின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக இக்கதைகள் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களின் நிலை குறித்துப் பெரிதும் கவலைபடுகிறார். இது ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களின் சமூகத் தாக்கத்தைக் குறிக்கிறது என்றால் மிகையில்லை.


சங்ககாலச் சோழ வரலாறு - மீளாய்வு

 

        சங்ககாலச் சோழர்களில் இரு மரபுகள் உள்ளது. ஒன்று கழுமல மரபு. மற்றொன்று உறையூர் மரபு. சோழர்கள் இருவேறு தலைநகரங்களைக் (கழுமலம், உறையூர்) கொண்டு ஆண்டுள்ளனர். எனவே அம்மரபினர் என அழைக்கப்பட்டனர். சங்க காலத்தில் இலக்கியங்கள் எழுதிய புலவர்களும், இலக்கணிகளும் அவர்களுக்கென்று ஒரு பொதுவான மரபைப் பின்பற்றினர். அம்மரபுகளில் ஒன்றான அகநூல்களில் தலைவன் தலைவி பெயரைச் சுட்டக்கூடாது. புறநூல்களில் பெயர்களைச் சுட்டலாம் என்பதே அம்மரபு. இதனைத் தொல்காப்பியர்,

                        புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது

                        அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (தொல். பொருள். அகம்., 1001)

என்பார்.

புறம் பாடிய புலவர் மரபு

            புறம் பாடிய புலவர்கள் தங்களுக்கென்று ஒரு மரபைப் பின்பற்றினர். என்னவெனில் பாடல்களில் மன்னரது பெயரைக் குறிப்பிடும்போது, மன்னனின் முழுப்பெயராகவோ, அல்லது பெயரின் பகுதியையோ அல்லது சிறப்புப்பெயர், பட்டப்பெயர்களையோ குறிப்பிடுவதே அவர்கள் பின்பற்றிய மரபு. வாய்ப்பு கிடைத்த இடத்தில் மன்னரின் முழுப்பெயரையும் பயன்படுத்தி உள்ளனர். இரும்பிடர்த்தலையார் எனும் புலவர்,

                        பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து

                        மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்

                        கருங்கை ஒள்வாட்பெரும்பெயர் வழுதி                 (புறம். 3)

என்று மன்னனின் முழுப்பெயரையும் பயன்படுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

புராணப் பழங்கதைகளும் வரலாறும்

            வரலாறு எழுதும்போது அதற்குத் தேவையான கல்வெட்டுச் சான்று, இலக்கியச் சான்று போன்ற பல சான்றுகளைக் காட்டி வரலாற்றை விளக்கலாம். ஆனால் புராணங்களையும் பழமரபுக் கதைகளையும் இவற்றோடு இணைத்து வரலாற்றை மழுங்கச் செய்யும் நிலை உள்ளது. அதனை நீக்க வேண்டும்.

            அவ்வாறு வரலாற்றில் உள்ள புராணக் கதைகள், பழமரபுக் கதைகள் போன்றவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் வரலாறு தெளிவாக விளங்கும். சங்ககாலச் சோழ வரலாற்றில் இது போன்றன பலவற்றையும் சேர்த்து அதனை மழுங்கச் செய்துள்ளனர். காட்டாக, கோப்பெருஞ்சோழனைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையார் புல்லின் புண்கண் தீர்த்தோன் உன் முன்னோன் என்று கூறுவதாக அமைந்த பாடலுக்கு கோப்பெருஞ்சோழனின் முன்னோன் சிபி’ எனும் மன்னன் இருந்துள்ளான் என்று வரலாற்றை மாற்றி விடுகின்றனர் பழமரபுவாதிகள்.

            ஆனால் புலவர் இவ்வாறு பாடுவது மன்னனின் உயர்வு நவிற்சிக்காகவே தவிர வேறொன்றுமில்லை. மேலும் உதாரணமாகக் கலிங்கத்துப்பரணியைக் கூறலாம். புறநானூறு, பரணி போன்றவற்றில் உள்ள இதுபோன்ற செய்திகள் மன்னனை உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கமே தவிர வேறு காரணம் இருக்கவியலாது என்பதே ஆய்வாளரின் கருத்து.

            இக்கருத்தை அரண் சேர்க்கும் வகையில் சோழர் சரித்திரம் எனும் நூலில், "உலகில் எல்லா வகுப்பினரும் சிறிது நாகரிகமுற்ற காலையில் தம்மை ஏனையவரினும் மேம்பட்டவர் என்று காட்டிக்கொள்வதற்காகச் சூரியன், சந்திரன், அக்கினி என்பவரில் ஒருவனிடத்திருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு தெய்வத்திடமிருந்தோ தமது மரபு தோன்றியதாகக் கற்பித்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தகைய எண்ணம் தமிழ் நாட்டாரையும் பற்றாமல் விடவில்லை" என்று சுட்டப்பெறுகிறது.1

            மேற்கூறப்பட்டவாறு புனைவுகளை வைத்துக் கலிங்கத்துப்பரணியில் சோழ வரலாறு குறிப்பிடப்படுகிறது. பரணியில் செயங்கொண்டார் காட்டும் அச்சோழ மரபினைக் காணலாம்.

பரணி காட்டும் சோழ மரபு

            கலிங்கத்துப் பரணியில் `இராசபாரம்பரியம்’ எனும் தலைப்பின் கீழ் நாரதர் இச்சோழ வரலாற்றைக் கூறுவதாகச் செயங்கொண்டார் அமைத்து உள்ளார். அவ்வரலாறு வருமாறு,

            எல்லா வரலாற்றுக்கும் முதன்மையானவர் திருமால், அவர் உந்தியில் பிறந்தவர் நான்முகன், என்று தொடங்கி மரீசி, காசிபன், சூரியன், மனு, இக்குவாகு, விகுட்சி, ககுத்தன், மாந்தாதா, முசுகுந்தன், பிருதுலாட்சன், சிபி, சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி, கிள்ளிவளவன், கவேரன், மிருத்யுசித், சித்திரன், வியாக்கிர கேது, சமுத்திரசித், பஞ்சபன், தூங்கையில் எறிந்த சோழ மன்னன், உபரிசரன், கிள்ளிவளவன், செங்கணான்2 என்று கூறப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு உரையெழுதிய புலியூர்க்கேசிகன், இதனைக் கூறி முடித்த பிறகு "இந்த வரலாறுகள் புராணக் கதைகள் போலப் புனையப் பெற்றுள்ளன."3 என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றாய்வாளர்கள் காட்டும் சோழ மரபு

            வரலாற்றாய்வாளர்கள் எவ்வாறு இலக்கியம் காட்டும் சோழமரபிலிருந்து மாறுட்டுச் செல்கின்றனர் என்பதனை விளக்கும் நோக்கமாக இங்குக் கூறப்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

            வரலாற்றைப் பற்றி நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடும்போது, "நம்நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு இடம் இருந்துகொண்டே தான் இருக்கும்"4 என்பார். கலிங்கத்துப்பரணி மட்டும் அல்லாது பல்வேறு வரலாற்றறிஞர்களும் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற மற்றும் அறிந்த சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு வரலாற்றைப் புனைகின்றனர். அவற்றிலும் ஒவ்வொரு வரலாற்றாய்வாளரும் தனித்தனி சோழமரபினரையே கூறுகின்றனர். இதில் எவரும் ஒன்றுபடவில்லை. இவர்கள் அனைவரும் பழமரபுக்கதைகளையும் இதில் சேர்த்துள்ளனர் என்பது தெளிவாக விளங்கும்.

            நீலகண்ட சாஸ்திரியார், ‘சோழ வமிசச் சரித்திரம்’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சோழ வமிசச் சரித்திரம், அண்மையில் எழுதப்பட்டதுடன் செவிவழிச் செய்திகளையும், அதிசய நிகழ்ச்சிகளையும் கொண்ட ஒரு தலபுராண வடிவைக் கொண்டதாகும். இந்நூலைக் கொண்டு பண்டைய சோழ மன்னரது வரலாற்றைப் பற்றி யாதும் அறிய இயலவில்லை என்பார்.5 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலைப் பற்றித் தி.சு. நடராசன் - திறனாய்வுக்கலை என்ற நூலில் விமரிசனம் எழுதியுள்ளார். இனி வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் சோழ மரபுகள் சிலவற்றைக் காணலாம்.

ந. மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடும் சோழ மரபு

            ந. மு. வே - கலிங்கத்துப்பரணியில் உள்ள சோழ வழிமுறையைப் பின்பற்றி எழுதுகின்றார். இவர், கூற்றுப்படி, சங்க காலத்திற்கு முன் திருமால் முதற்கொண்டு இம்மரபு தொடர்கின்றது. இவர்கள் சூரிய வமிசத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இவர் கருத்து.

            இம்மரபில் சிபி, முசுகுந்தன், சங்ககாலச் சோழனாகிய துடிதோட்செம்பியன் போன்றோரைக் குறிப்பிடும் ஆசிரியர் பின்வருமாறும் கூறுகின்றார். "இம்மரபு உண்மை காணும் நோக்கத்துடன் ஆராய்ந்து வெளிப்படுப்பன. பழங்கொள்கையுடன் ஒரோவழி மாறுபடின் இவையும் வெறுக்கத்தக்கன அல்ல"6 என்று கூறிச்செல்கிறார்.

 

இரத்தினசாமி குறிப்பிடும் மரபு

            இவர் சங்க கால அரசர்கள்என்ற நூலில் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் கரிகாலன், இவனின், மக்களே பெருநற்கிள்ளி, நலங்கிள்ளி போன்றோர் என்று கூறிச் செல்கின்றார். இவரின் கூற்றுப்படி இருமரபு இலக்கியத்தில் காணப்படவில்லை.

இராசமாணிக்கனார் குறிப்பிடும் மரபு

            இராசமாணிக்கனார் தமது சோழ வரலாறுஎனும் நூலில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மனுநீதிச்சோழனையும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டச் சோழர்களில் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும் குறிப்பார். சோழ மன்னர்கள் அனைவரையும் இதுபோன்று கால வரிசை கொடுத்து அமைத்துள்ளார். இவ்வாறாகப் பலரும் பலவிதமாகச் சோழ மரபினை அமைத்துச் செல்கின்றார். இனி இலக்கியங்கள் வழி அறியலாகும் சோழ மரபினைக் காணலாம்.

இலக்கியங்களில் சோழர் குடி வரிசை

கழுமல மரபு

கழுமல மரபில் சோழ வேந்தர்களாக உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், கரிகால் பெருவளத்தானும், அடங்குவர். காரிகால் பெருவளத்தானுடன் கழுமல ஆட்சி நிறைவு பெறுகிறது. ஏனெனில் இவனுக்கு ஆதிமந்தி என்ற பெண் பிறந்தாள். அவள் ஆட்டனத்தி என்ற சேர மன்னனை மணந்து கொண்டாள். அவன் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். இச்செய்தி அகநானூறில் (அகம். 222, 236, 376, 396) இடம்பெற்றுள்ளது.

உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் தலைநகரம் கழுமலம். அது இன்றைய சீர்காழி ஆகும். இவனின் மனைவி அழுந்தூரில் பிறந்தவள் இவனைப் பரணர் பாடியுள்ளார் (புறம். 4). இளஞ்சேட்சென்னி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி அனைவரும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள். இதனை அவர்களைப் பாடிய புலவர்கள் மூலம் அறிய முடிகிறது. மாமூலனார், பரணர், கழாத்தலையார் போன்றோர் இவர்களைப் பாடியுள்ளனர்.

            உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனே கரிகாற் பெருவளத்தான் என்பதனைப் புறநானூறு 4 - ஆவது பாடலின் உரை சுட்டுகின்றது.7 அதோடு மட்டும் இல்லாமல்,

                        "உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்" (பொருந. 130)

எனப் பொருநராற்றுப்படையும் இதனை உறுதிசெய்கிறது. கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும் போதே அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டான் என்பார் சண்முக சுந்தரம்.8

            நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே எனும் சிலரின் கருத்து தவறாகும். நெய்தலங்கானலைத் தலைநகராகக் கொண்ட இளஞ்சேட்சென்னி கோப்பெருஞ்சோழனின் மகன் என்பதனைப் புல்லாற்றூர் எயிற்றியனாரின் புறநானூற்றுப் பாடல் (புறம். 213) வழி அறியலாம்.

கரிகாற் பெருவளத்தான்

            இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன். இதனைப் பொருநராற்றுப்படை கூறுகிறது. இவன் தாய் வயிற்றில் இருந்தபோதே இவனின் தந்தை இறந்தான் என்று கூறப்பட்ட செய்தியை வலுசேர்க்கும் வகையில்,

                        "தாய் வயிற்று இருநது தாயம் எய்தி" (பொருந. 132)

என்ற அடிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

            இவனது கன்னிப்போர் (முதற்போர்) வெண்ணிப்பரந்தலைப் போரே ஆகும். இப்போரில் இவனை எதிர்த்து இரண்டு பேரரசர்களும் பதினொரு வேளிரும் சேர்ந்துகொண்டு படையெடுத்து வந்தனர். வெண்ணியில் போர் நடைபெற்றதற்கான சான்று பொருநராற்றுப்படையில் உள்ளது. இப்போரில் சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் மார்பில் பட்ட கரிகாலனது வேல், முதுகு புறத்திலும் புண் உண்டாக்கியதால் அதற்கு நாணி அவன் உயிர்த் துறந்தான். இதனைக் கழாத் தலையார் புறநானூற்றில் (புறம். 65) பாடியுள்ளார்.

            இவன் காலத்தில் வாழ்ந்தவன் பெருஞ்சேரலாதன் என்பது தெளிவு. இவர்களைப் பாடியோர், மாமுலனார், கல்லாடனார், வெண்ணிக் குயத்தியார் போன்றோர் ஆவர். அதோடு கரிகாலனின் வெண்ணிப் போர் வெற்றியையும் புகழ்ந்து பாடியவர் வெண்ணிக் குயத்தியார் (புறம். 66) ஆவார். இவன் வாகைப் பறந்தலை எனும் இடத்திலும் போரிட்டு வென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. கரிகாலன் இளமையிலேயே நரைமுடித்து முறைசெய்தான் என்பதனைப் பழமொழி நானூறு விளக்கும். இதனைப் பொருநராற்றுப்படையும்,

                        "இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்

அவைபுகு பொழுதில் தம்பகை முரண்சொலவும்" (பொருந. 187 - 188)

இவ்வாறு உறுதி செய்கிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் கூறிச்செல்கிறார். மாமூலனார், பரணர் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர். பரணர் இவனைப்பற்றிய நிறைய செய்திகளைத் தருகிறார். இவனுக்கு ஆண்வாரிசு இல்லை. இவனுடைய மகளே ஆதிமந்தி. ஆதிமந்தியின் கணவனான, சேர இளவரசன் ஆட்டனத்தி. இவனையே காவிரி கொண்டு சென்றது. எனவே கரிகாற் சோழனோடு கழுமலச் சோழமரபு நிறைவு பெறுகின்றது. இவனைப்பற்றிக் குறிப்பிடும் சிவத்தம்பி ஆரம்ப காலச் சோழர்களில் கரிகாலன்’ ஒருவனைத் தவிர மிகப்பெரிய சோழ அரசன் என்று எடுத்துக் கூறப்படத்தக்க சோழ அரசர்கள் எவரும் இல்லை என்றே கூறவேண்டும். அதன்பின் சோழர்களின் பெருவளர்ச்சி 9 - ஆம் நூற்றாண்டில் விஜயாலனுக்குப் பின்னரே வருகிறது9 என்பார்.

உறையூர்ச் சோழர்கள்

            உறையூரில் இருந்து இவர்கள் ஆட்சிபுரிந்து வந்ததால் இவர்கள் இம்மரபினர் எனப்பட்டனர். இம்மரபில் வந்த சோழர்களைப் பின்வருமாறு காணலாம்.

பெருவிறற் கிள்ளி

            உறையூர்ச் சோழர்களில் மிகப்பழையவன் இவனே ஆவான். கழுமலச் சோழரில் முதலில் வந்த உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் காலத்தவன். இவன் காலத்தில் வாழ்ந்த சேரன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். பாண்டியன், ஒல்லையூர்த் தந்த பூதப்பாண்டியன் ஆவர். இவர்களைப் பாடியோர் மாமூலனார், பரணர், கழாத்தலையார் போன்றோர் ஆவர்.

            பெருவிறற் கிள்ளியும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் போரிட்டனர். முடிவில் இருவரின் படைகளும் அழிந்துபட்டன. இவர்கள் போரிட்ட இடம் திருப்போர்ப்புறம் ஆகும். இப்போரினைப் புறப்பொருள் வெண்பாமலை தொகை நிலைஎன்று வகையில் அடக்கும். அதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியத்திலும், தொகைநிலைக்குக் காட்டாக இதனையே குறிப்பார்கள் உரையாசிரியர்கள்.

            இந்நிகழ்வினைப் பாடியோர் கழாத்தலையாரும் (புறம். 62) பரணரும் ஆவர்.

"எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி

                                    விளைக்கும் வினையின்றிப் படையழிந்தனவே" (புறம். 63; 1 - 2)

எனவாறு பரணர் பாடியுள்ளார்.

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

            பெருவிறற்கிள்ளியை அடுத்து அரியணை ஏறியவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆவான். இவனைச் சங்க காலத்திற்கு முற்பட்டவன். அதாவது கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையவன் என்பார் இராசமாணிக்கனார்.10 இவன் மீது இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் படையெடுத்து அகப்பா கோட்டையையும் கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அதனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவனிடம் இருந்து செம்பியன் கைப்பற்றிக் கொண்டான். இவன் அதனைக் கைப்பற்றி அகப்பா கோட்டையையும், அவ்வூரையும் அழித்தான்.

இதனை,

".........குட்டுவன்

அகப்பா அழிய நூறி, செம்பியன்" (நற்றிணை. 14; 3 - 5)

என்ற நற்றிணை பாடல் வழி அறிய முடிகிறது.

            இவனே மேற்கு மலைத்தொடரில் இருந்த தூங்கெயிலையும் அழித்தான். அதனால் ‘தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்’ எனப்பட்டான். இதற்குச் சில புராணக் கதைகளைக் கூறுவார் வேங்கடசாமி நாட்டார்.11 இவன் காலத்திய பாண்டிய மன்னன் ஒல்லையூர்த் தந்த பூதப்பாண்டியன் மகனாகிய நெடுஞ்செழியன் எனும் சிறுவன் ஆவான். பாண்டியன் சிறுவனாகையால் சேரமன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனும், தித்தன் என்ற குறுநில மன்னனும் மேலும் நான்கு குறுநில மன்னர்களும் சேர்ந்து நெடுஞ்செழியன் மீது போர் தொடுத்தனர்.

            அப்போரில் நெடுஞ்செழியன் அனைவரையும் வென்று அவர்களைத் தலையாலங்கானம் என்ற ஊரில் கொன்றான். அன்று முதல் அவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்’ என அழைக்கப்பட்டான். பாண்டிய மன்னன் போரில் வென்ற அவ்வெழுவரின் பெயர்களை நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சியின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகின்றார். அப்பெயர்கள் வருமாறு,

            "சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்" போன்றோர் ஆவர். இப்போர் பற்றி மதுரைக்காஞ்சி,

"இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்

                                    பொருதவரைச் செருவென்றும்" (மதுரைக். 128 - 129)

என்று குறிப்பிடுகிறது. மேலும் இச்செய்தி நெடுநல்வாடையிலும் (நெடுநல் - 188) புறநானூற்றிலும் (புறம். 371 - 372) குறிப்பிடப்பட்டுள்ளது. சோழன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனை மாறோக்கத்து நப்பசலையார் அதிகம் பாடியுள்ளார்.

போரவைக்கோ பெருநற்கிள்ளி

            செம்பியன் இறந்த பிறகு ஆட்சியில் ஏறியவன் சோழநாட்டு இளவரசனாகிய போரவைக்கோ பெருநற்கிள்ளி. ஆனால் செம்பியனைக் கொன்றதால் ஆட்சி அதிகாரத்தைக் தனதாக்கிக்கொண்டான் பாண்டியன் தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன். சோழ நாடு பாண்டியன்வசம் சென்றமையால், அந்நாட்டு இளவரசனாக இருந்த பெருநற்கிள்ளி நாட்டை விட்டு வடபகுதியில் இருந்த பெருங்கோழி எனும் ஊரில் வாழ்ந்து வந்தான். இச்செய்தியை நக்கண்ணையார் பாடல் மூலம் அறிய முடிகிறது. அப்பாடலில்

"என்னை புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

                                    யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே" (புறம். 84; 1 - 2)

என்று கூறுகின்றாள்.

            நக்கண்ணையார், பெருங்கோழியில் வாழ்ந்த நாய்கன் மகள் ஆவார். அவன் பெருங்கோழியில் இருந்தபோது, அவனுக்கென்று நாடு இல்லை என, நக்கண்ணையார் பாடல் மூலம் அறிய முடிகிறது.

"என்னைக் கூரிஃ தன்மை யானும்

என்னைக்கு நாடிஃ தன்மை யானும்" (புறம். 85; 1- 2)

என்ற அடிகள் மூலம் இதனை உறுதி செய்யலாம்.

            சோழனிடம் இருந்து கைப்பற்றிய நாட்டைப் பாண்டியன் தலையாலங்கானத்தான், தித்தன் என்பவனிடம் கொடுத்து ஆளும் படி உத்தரவு பிறப்பித்தான். தித்தன் உறையூரை ஆண்டான் (புறம். 352 (9 - 10), 395; (18 - 19). தித்தன் காலத்தில்தான் காரி ஓரியைக் கொன்று (நற். 320) கொல்லி மலையைப் பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொடுத்தான். இதனை அகநானூற்றுப் பாடல் (அகம். 209) வழி அறியலாம். கொல்லி மலையைப் பெற்ற சேரன் ஆன்பொருநை ஆற்றங்கரையில் கருவூர் எனும் ஊரை அமைத்துத் தன் தலைநகராக்கிக் கொண்டான். ஆன்பொருநை நதியே இன்றைய அமராவதி ஆறு என்பார் பே. க. வேலாயுதம்.12 கருவூரைத் தலைநகராக்கிக் கொண்டதனால் சேரனை, ‘கருவூர் ஏறிய ஒள்வாள் பெருஞ்சேரல் இரும்பொறை’ என அழைக்கப்பெற்றான்.

            தன் உறவினனாகிய ஓரியைக் கொன்றதனால் அதியமான், காரி மீது படையெடுத்துச் சென்று காரியினுடைய திருக்கோவிலூரை அழித்தான். காரி தப்பியோடிச் சென்று சேரனிடம் அடைக்கலம் புகுந்தான். இதனிடையே காலங்கருதி, பெருங்கோழியில் வாழ்ந்திருந்த கோப்பெருற்கிள்ளி உறையூரை ஆண்டு கொண்டிருந்த தித்தனை வீழ்த்தி முடிபுனைந்து கொண்டான். அன்றுமுதல் தன் பெயரை முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி என மாற்றிக்கொண்டான்.

            இந்நிலையில் கோப்பெருநற்கிள்ளி பெருங்கோழியில் இருந்தபோது அவனைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கணையார் விரும்பினாள். அவன் பிரிந்துசென்று தனக்குக் காதல் துன்பம் தருகின்றான் (புறம். 84) என்று பாடியுள்ளார். இப்பாடல் காதற்பாடலாக இருப்பினும் அகத்தில் வைக்காமல் புறத்தில் வைத்தற்குக் காரணம், ஒரு பெண் வெளிப்படையாகத் தன் காதல் உணர்வை வெளிப்படுத்தினாள் என்பதற்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.

            கோப்பெருநற்கிள்ளி சோழ நாட்டை ஆண்டபோது பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஆவான். இவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனின் மகன். இடைப்பட்ட காலத்தில் தலையாலங்கானத்தான் என்னவானான் என்பற்கான சான்றுகள் இலக்கியங்களில் இல்லை. சோழன், பாண்டியன், சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை இவர்களுக்கு நிகராக ஆட்சி புரிந்த வள்ளல் அதியமான் என்பதனை, அசோகனது இரண்டாம் பாறைக் கல்வெட்டு சேர, சோழ, பாண்டிய சதியபுதோ’ எனக் குறிப்பிடுகின்றது என்பார் பே.க. வேலாயுதம்.13 இதில் சதியபுதோ எனக் குறிப்பிடப்பெறுவது அதியமான் என்பவனையே என்று சான்றுகள் கூறுகின்றன.

காரி நாடு இழந்ததனைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானின் தகடூர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி அதியமானையும் கொன்றான் (புறம். 231). அதனால் "தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை" என அழைக்கப்பட்டான். அதன்பின் சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி சேரனின் கருவூர் மீது போர் தொடுத்தான். சேரனுக்கும் சோழனுக்கும் கருவூரின் புறத்தே போர் நடைபெற்றது. அப்போது சோழன் கோப்பெருநற் கிள்ளி ஏறியிருந்த யானை மதம் கொண்டு ஊருக்குள் புகுந்தது. இதனை அந்துவஞ்சேரல் அருகிருக்க உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடினார்.

                                    "களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்

                                    பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

                                    ................ ............... ................ .............

                                    நோயில னாகிப் பெயர்கதி லம்ம" (புறம். 13; 5 - 9)

என்று முடமோசியார் யானை மதம் கொண்டு நகருக்குள் புகுந்ததனைப் பற்றிப் பாடுகின்றார்.

            அப்போருக்கு அடுத்து வெட்டப்பட்ட அசோகனது 13 - ஆம் பாறைக் கல்வெட்டில் தமிழக அரசர்களில் சோழன், பாண்டியன் இருவரை மட்டுமே குறித்தான்’ என்பார் பே. க. வேலாயுதம்.14 சேரநாடும், தகடூரும் இல்லை. எனவே அக்கல்வெட்டில் குறிக்கப்பெறவில்லை என்பது தெளிவு.

            சேரனுடன் செய்த போருக்குப் பின்னர் சோழன் கோப்பெருநற்கிள்ளி இராசசூய வேள்வி செய்தான். அவ்வேள்விக்குச் சேர மரபில் வந்த மாரிவண்கோவும், பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் கலந்து கொண்டனர். மூவேந்தர்களையும் ஒருங்கு கண்ட ஒளவையார்,

                                    "முத்தீப் புரையக் காண்டக விருந்த

                                    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்

                                    .............. ............. ............... .....................

                                    உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நானே" (புறம். 367; 13 - 18)

என்று வாழ்த்திப் பாடுகிறார். அன்றுமுதல் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டான்.

கோப்பெருஞ்சோழன்

            இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குப் பின் அரியணை ஏறியவன் கோப்பெருஞ்சோழன் இவன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தவன் அறிவுடை நம்பி. சோழ நாட்டை இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி புரிந்துவந்தான். எவ்வாறெனின், கோப்பெருஞ்சோழன், தன் தந்தை பகைவர்களை வென்று கைக்கொண்ட பகுதிகளை இழந்தான். அதுவும் அறிவுடை நம்பியிடம் பாண்டிய நாட்டுப் பகுதிகளை இழந்தான். சேரனிடம் போரிட்டு கருவூரை இழந்தான்.

            இவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் முறையே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி ஆவர். இவர்கள் தங்கள் தந்தை கோப்பெருஞ்சோழனுக்கு எதிராகப் போரிட்டனர். கோப்பெருஞ்சோழனும் தன் மகன்கள் மீது போரிடத் தயாரானான். அப்போது புல்லூற்றூர் எயிற்றியனார் எனும் புலவர்,

"நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த

                                    .............. ............. ............... ..............

                                    அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்

                                    இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே" (புறம். 215; 14 - 18)

என்று கூறி தடுத்தார்.

கிள்ளிவளவன்

            கோப்பெருஞ்சோழனின் மகன்களில் ஒருவன் இவன். சோழனின் மகன்கள் இருவருமே சோழ நாட்டை ஆண்டனர்.  எவ்வாறெனின் நாட்டை இரண்டாகப் பிரித்துக்கொண்டு நெய்தலங்கானல் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். மற்றொருவன் (கிள்ளிவளவன்) உறையூரையே தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான் (புறம். 39, 34) என்பது குறிப்பிடத்தக்கது.

            கிள்ளிவளவனைப் பற்றி அதிகம் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார். இப்பெண்பாற் புலவர் இவனைப் பற்றிப்பாடும் இடங்களிலெல்லாம், உன்னுடைய முன்னோன் என்று புல்லுறு புண்கண் தீர்த்தோன்" (புறம். 37) என்றும் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனது (புறம். 39) வாழ்க்கையையும் குறிப்பார்.

            கலிங்க அரசன் காரவேலன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவனுக்குப் பயந்து கிள்ளிவளவன் மலையனுக்கு உரிய முள்ளூர் மலையின் மீது ஒளிந்துகொண்டான். இதனைக் கண்ட மலையனான் திருமுடிக் காரியின் மகன் திருக்கண்ணன், கார வேலனிடம் போரிட்டுச் சோழநாட்டை மீட்டுக்கொடுத்தான். கிள்ளி வளவனைச் சோழநாட்டு அரியணையில் ஏற்றினான் திருக்கண்ணன். இதனை நப்பசலையார்,

"அருவழியிருந்த பெருவிறல் வளவன்

                                    மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை

                                    புதமையி னிறுத்த புகழ்மேம் படுந" (புறம். 174; 14 - 16)

என வாழ்த்திப் பாடுகிறார்.

            தன்னை அரியணை ஏற்றிய திருக்கண்ணனைச் சோழன், படைத்தளபதி ஆக்கினான். அதுமுதல் திருக்கண்ணன், ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்’ என அழைக்கப்பட்டான். ஏனாதி’ என்ற பட்டம் பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் படைத்தலைவர்களுக்கு இட்டு வழங்கினர் என்பார் மு.வை. அரவிந்தன்.15 கோப்பெருஞ்சோழனின் ஆட்சிக்குப் பிறகு உறையூரை ஆட்சி செய்தவன் நெடுங்கிள்ளி ஆவான்.

இளஞ்சேட்சென்னி

            கோப்பெருஞ்சோழனின் மகன் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் கிள்ளிவளவனின் தம்பி. இவனை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என அழைத்தனர். இவன் வலிமை உடையவனாகத் திகழ்ந்தான். இவனே சேர மன்னர்களுடைய பாமூளூரை வென்றான் என்பார் ஒளவை துரைசாமிப்பிள்ளை (புறம். 10; 203). இவன் வம்ப வடுகர்என்றும் வட வடுகர்’ என்றும் அழைக்கப்பட்ட கலிங்கரிடம் இருந்து மீட்கப்படாத சோழநாட்டுப் பகுதியாக இருந்த பாழி என்னும் வலிமை வாய்ந்த கோட்டையைக் கலிங்கப் படையோடு அழித்தான். அதனால் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என அழைத்தனர். இதனை ஒளவை துரைசாமிப்பிள்ளை பதிவு செய்கிறார்.

            இவனுடைய மக்களே நலங்கிள்ளியும் மாவளத்தானும் ஆவர். இதனைப் புறநானூறு (புறம். 43) சுட்டுகின்றது.

நெடுங்கிள்ளி

            சோழன் நெடுங்கிள்ளி கோப்பெருஞ்சோழனின் மகன். இவன் கோப்பெருஞ்சோழனுக்குப்பின் உறையூரை ஆட்சி புரிந்தவன். நெடுங்கிள்ளிக்கும், நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் மகனான நலங்கிள்ளிக்கும் போர் மூண்டது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் உறையூரை முற்றுகையிட்டான். ஆனாலும் நெடுங்கிள்ளி வெளியே வரவில்லை. அப்போது, கோவூர் கிழார் நெடுங்கிள்ளியிடம் சென்று,

"திறவா தடைத்த திண்ணிலைக்கதவின்

                                    நீண்மணி லொருசிறை யடுங்குதல்

                                    நாணுத்தக வுடைத்திது காணுங் காலே" (புறம்: 44; 14 - 16)

என்று கூறி அவனைப் போர் செய்ய எழுக’ என்று அழைத்தார். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவரும் உறையூரிடத்தே போர் செய்ய முனைந்தபோது அப்போரைத் தடுத்து அவர்களைச் சந்து செய்வித்தவரும் கோவூர் கிழாரே ஆவார் (புறம். 45).

            நெடுங்கிள்ளி காரியாறு எனும் இடத்தில் இறந்தான். அதனால் இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று பெயர் பெற்றான் என்பார் ஒளவை துரைசாமிப்பிள்ளை. இவனது இறப்பிற்குப் பின் நலங்கிள்ளி, சோழநாட்டுத் தலைநகரை நெய்தலங்கானலில் இருந்து உறையூருக்கே மாற்றினான்.

நலங்கிள்ளி

            சோழன் நலங்கிள்ளி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியின் மகன். இவன் இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான். இதனைப் புறநானூறு,

                                    "கேட்ப லெந்தை சேட் சென்னி நலங்கிள்ளி" (புறம். 27: 10)

என்று உறுதி செய்கிறது. இவனுக்கு மாவளத்தான் என்ற தம்பி இருப்பதனைப் புறநானூறு 43 - ஆம் பாடலின் அடிக்குறிப்பில் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும்’ என்ற அடியின் மூலம் அறியலாம். நலங்கிள்ளி ஆற்றல் மிக்க அரசன். இவனுக்குத் துணையாகவே இவன் தம்பி மாவளத்தான் செயல்பட்டான். இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளி தம் வலிமையால் சேர, பாண்டியர்களோடு போரிட்டு அவர்களை வென்று அவர்களின் கொடிகளைக் கைப்பற்றினான் என்பதும் அதோடு பாண்டிய நாட்டில் உள்ள ஏழு அரண்களை வென்று கைப்பற்றி அவற்றில் தன் புலிக்கொடியை நாட்டினான் என்பதனைப் புறநானூறு (புறம். 33) விளக்குகின்றது.

நலங்கிள்ளி சேட்சென்னி

            இவன் இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளியின் மகன். இவனைப் பற்றிய பாடல் ஒரு பாடல்தான் உள்ளது. இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலின் மதுரைக் குமரனார். இவனது பெயர் தன் தந்தையின் பெயரை முன்வைத்து தாத்தாவின் பெயரைப் பின் வைத்துள்ளான். இவன் இளவந்திகை எனும் இடத்தில் இறந்துபட்டான் என்பார் ந.மு.வே.16

மாவளத்தான்

            நலங்கிள்ளி சேட்சென்னிக்கு அடுத்து அரியணை ஏறியவன். நலங்கிள்ளி சேட்சென்னி குறைந்த வயதிலே இறந்து பட்டதன் காரணமாக, இவனின் சிற்றப்பனாகிய மாவளத்தான் அரியணை ஏறினான். இதனையே பட்டினப்பாலை,

                                    "உருகெழு தாயம் ஊழி னெய்தி" (பட்டினப். 227)

என்கின்றது.

            இவன் தன் பெயரைத் திருமாவளவன் என மாற்றிக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தான். சேரர், பாண்டியர் மற்றும் பல குறுநில மன்னர்களைத் தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தான் (புறம். 58). இவன் ஆட்சிக் காலத்தில் கடல் வாணிபம் பெருகிற்று. அதனால் சோழ நாட்டின் தலைநகரை உறையூரில் இருந்து காவிரிபூம்பட்டினத்திற்கு (பூம்புகார்) மாற்றினான். சோழ நாடு பெரும் வாணிப நகரமாக மாறியது. இச்செய்தியைப் பட்டினப்பாலை உறுதி செய்கிறது.

கரிகாலன் வேறு; மாவளத்தான் வேறு

            வரலாற்றாய்வாளர்கள் சிலர் திருமாவளவனைப் பொருநராற்றுப்படைத் தலைவனாகிய கரிகாலன் இவனே என்று குறிப்பர். ஆனால் இருவரும் வேறு வேறு என்பதனைக் கீழ்காணும் செய்திகள் மூலம் நிறுவலாம்.

            கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன் பிறப்பதற்கு முன்பே இவனின் தந்தை இறந்துபட்டான். இவனுக்கு உடன் பிறப்புகள் யாரும் இல்லை. தாய் வயிற்றில் இருந்து பிறந்த உடனே அரசாட்சி அமைத்தான் என்பதனை, ‘தாய் வயிற்றிருந்து தாய மெய்தி’ என்ற பொருநராற்றுப்படை அடி உணர்த்தும். இதன் மூலம் இவன் சிறு வயதிலேயே ஆட்சிப்பொறுப்பேற்றவன் என்பது தெரியும். அதோடு இவன் கழுமல மரபைச் சார்ந்தவன்.

            ஆனால் திருமாவளவன் தந்தை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி. இவனுக்கு உடன் பிறப்பு உண்டு. அதனைப் புறநானூற்று அடிக்குறிப்பின் (புறம். 43) வழி அறியலாம். இவன் நேரடியாக ஆட்சிப்பொறுப்பேற்கவில்லை என்பதும் இலக்கியங்கள் மூலம் விளங்குகின்றன. இவன் மீது பாடப்பட்டதே பட்டினப்பாலை ஆகும். இவன் உறையூர்ச் சோழ மரபு. இவனே புகாருக்குத் தலைநகரை மாற்றியவன் ஆவான். திருமாவளவன் காலத்துப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (புறம். 58). அப்போது தொண்டை நாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். இவனே பெரும்பாணாற்றுப்படையின் தலைவன்.

சோழன் செங்கணான்

            செங்கணான் பற்றிய பாடல்கள் புறநானூற்றுப் பகுதியில் இல்லை. இருப்பினும் சேரமான் கணைக்கால் இரும்பொறையுடன் செய்த போர் பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது (புறம். 74). அப்பாடலில் சேரனை வென்று சிறைப்படுத்திய செய்தி இடம்பெற்றுள்ளது.

            இவன், திருமாவளவனுக்குப் பின் ஆட்சி அமைத்தவன். சிவனிடத்து மிகுந்த ஈடுபாடு கொண்டு கோயில் தொண்டு செய்து வந்தான். இவன் காவிரிக்கரையோரம் எண்டோள் ஈசனாகிய சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறுகின்றது. அப்பாடல் வருமாறு.

"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு

எழில்மாடல் எழுபது செய்து உலகமாண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே" (நா.திவ்ய பிரபந்தம்.1505; 3, 4)

இவனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நடைபெற்ற இடம் குணவாயிற்கோட்டம் எனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என நற்றிணை முன்னுரையும் திருப்போர்ப்புறமெனப் புறநானூற்றுக் குறிப்பும், உள்ளது (புறம். 74, உரை). இதில் திருப்போர்ப்புறமே ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பெறுகிறது. அவனை அடைத்த இடம் குடவாயிற் கோட்டம் ஆகும்.

சோழன் நல்லுருத்திரன்

            இவன் சங்க நூற்காலத்துச் சோழ வேந்தர்களுள் காலத்தால் பிற்பட்டவன் என்பதனை இவன் பெயரே நன்கு உணர்த்தும் என்பார் ஒளவை துரைசாமிப் பிள்ளை.17 இவன் சோழன் செங்கணானின் மகன். இவனுக்குச் சிவன் பெயராகிய நல்லுருத்திரன் என்ற பெயரை வைத்துள்ளான். நல்லுருத்திரனே கலித்தொகையில் முல்லைக்கலியைப் பாடியவன். இதனைப் பழம்பாடல் உணர்த்தும். இவனுக்கு முன்னர் முல்லைத் திணை பாடியவர்கள் அனைவரும் அதன் உரிப்பொருளான இருத்தல்’ என்பதனையே வைத்துப் பாடினார்கள். ஆனால் சோழனின் முல்லைக் கலியில் ஏறு அடக்குபவனைத் தலைவி மணப்பதாகப் புதுமையான ஒன்றைப் பாடுகின்றார். இது தமிழ் இலக்கியத்தில் புதுமைப்படைப்பு.

            இவனுக்கு இரு பிள்ளைகள். அவர்களில் ஒரு பெண். அவள் பெயர் நற்சோணை. நற்சோணையின் மக்களே சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் ஆவார். நற்சோணையின் உடன்பிறந்தோன் யார் என்பதற்கானச் சான்றுகள் இல்லை. இளங்கோவடிகள் தன் பாட்டனை அடியற்றியே சிலம்பு ஆய்ச்சியர்க்குரவையில்’ ஏறு தழுவுவாரே இடையர் குலப்பெண்களை மணப்பதாகக் காட்டுகின்றார். அதோடு இளங்கோவடிகள் தன் தாத்தாவின் பெயரான சோழன் நல்லுருத்திரன் என்பதனை ஞாயிற்றுச் சோழன்’ என்றுதான் சிலம்பில் அமைத்து உள்ளார்.

            சோழன் நல்லுருத்திரனைப் பற்றிய புறப்பாடல் எதுவுமில்லை. இவனே பாடிய பாடல் ஒன்று மட்டும் உள்ளது (புறம். 190). வேறு எந்தப் புலவரும் இவனைப் பாடியதற்கான சான்று இல்லை.

வரலாற்றில் மாறுபாடு ஏற்படக் காரணம்

            கால வரலாற்றிலோ அரசியல் வரலாற்றிலோ பிழை ஏற்பட முக்கியக் காரணம் சான்றாதாரம் இன்மையே பெருங்குறையாகும். அதே போலவே சோழ வரலாற்றை அறிவதற்கான போதுமான சான்றுகள் கிடைக்கப்பெறாத நிலையில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு வரலாற்றை எழுதியுள்ளனர். அதனாலேயே பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர். அதோடு பாடலைப் பாடிய புலவர்களோ, அல்லது சங்க இலக்கியங்களைத் தொகுத்த புலவர்களோ காலவரிசைப்படி தொகுக்க முயற்சி செய்யவில்லை. அது புறநானூற்றைப் பதித்தவர்களே இச்செய்யுட்கள் கால வரிசையில் அமைக்கப் படவில்லை என்று கூறுவது எண்ணத்தக்கது.

            அதனைப் பற்றிக் கைலாசபதி கூறும் போது, "பதிப்பித்தவர்கள் செய்யுள்களில் போற்றிப் புகழப்பெற்றுள்ள அரசர்கள், குறுநிலமன்னர்களின் அடிப்படையில் செய்யுட்களைப் பிரிக்க முயன்றுள்ளனர் என்பது தெரிகிறது. ஆனால் அவர்கள் இம்முயற்சியில் நிலையாக இல்லை. அதோடு குறித்த சில முக்கியமான மாந்தர்களை மையப்படுத்திய செய்யுள் தொகுதிகள் இருந்திருக்கின்றன. அல்லது தொகையில் அது இருக்க வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கும் என்பார்.18

            இதுபோன்ற காரணங்களால் வரலாற்றில் ஐயம் ஏற்பட்டு அது வரலாற்றறிஞர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடுகின்றது.

தொகுப்புரை

            சங்க காலச் சோழர்கள் பற்றிய வரலாற்றைக் கட்டமைக்கும் போது, புலவர்கள் பின்பற்றிய பெயர் மரபு, வரலாற்றாய்வாளர்களைப் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. அவற்றோடு புராணப் பழங்கதைகள் அதிகமாக உள்ள பரணி, உலா போன்ற நூல்கள் மூலமும் சோழ வரலாறு சிதைந்துவிட்டது. மன்னர்களை இறைவனின் குடியில் தோன்றியவன் என்பதும் சிபி, மனு போன்றோரின் வழிவந்தவன் என்பதும் அவர்களை பெருமைபடுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டது என்பதனை வரலாற்றாய்வாளர்கள் உணரவேண்டும்.

            பரணி போன்ற நூல்களில் உள்ள புராணக் கதைகளை நீக்கிவிட்டு மரபுகளைச் சரியாக ஆராய்ந்து சோழமரபு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இலக்கியச் சான்றைக் கொண்டு அறிய முடிகிறது.

 

சான்றெண் விளக்கம்

1.         வேங்கடசாமி, ந.மு. சோழர் சரித்திரம், ப. 11

2.         கலிங்கத்துப்பரணி. இராசபாரம்பரியம் - பக். 105 - 107

3.         மேநூல் - ப. 107

4.         நீலகண்ட சாஸ்திரி, சோழர் வரலாறு நூலின் முன்னுரை ப. கூஐ

5.         நீலகண்ட சாஸ்திரி - சோழர்கள், புத்தகம் - 2. ப. 1

6.         வேங்கடசாமி. ந.மு. சோழர் சரித்திரம். ப. 11

7.         துரைசாமிப் பிள்ளை, ஒளவை. சு. (புறம். 4. உரை), ப. 13

8.         சண்முக சுந்தரம். க. சங்ககாலச் சோழ வேந்தர்கள். ப. 32

9.         சிவத்தம்பி. கா, சங்க இலக்கியத்தில் கவிதையும் கருத்தும், சூழல் உறவுகள், உணர்ச்சிகள், புறத்திணைப் பாடல் மரபுகள் (கட்.) ப. 63

10.       இராசமாணிக்கனார். மா., சோழர் வரலாறு, ப. 32

11.       வேங்கடசாமி. ந.மு. சோழர் சரித்திரம், ப. 21

12.       வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப.10

13.       வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப. 35

14.       வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப. 35

15.       அரவிந்தன். மு. வை., உரையாசிரியர்கள், ப. 195

16.       வேங்கடசாமி, ந.மு., சோழர் சரித்திரம், ப. 41

17.       துரைசாமி, ஒளவை சு., புறம். 190. உரை.

18.       கைலாசபதி க., தமிழ் வீரநிலைக் கவிதை. ப. 29

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...