செவ்வாய், 5 நவம்பர், 2019

சமூக மாற்றத்தின் குறியீடு: வருகிறார்கள் நாவல்


வருகின்றனர் யார்? எதற்கு? என்ற கேள்வி எழத்தான் செய்யும். நாவல் செல்லும் திசைநோக்கி நாம் பயணிக்கும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் அனுபவத்தைக் கரன்கார்க்கி உருவாக்கித் தந்துள்ளார். நான்கு நண்பர்கள், பெண் தோழிகள், அவர்களது பின்புலம், அவர்களின் வேலை, அவர்கள் வாழும் சூழ்நிலை அனைத்தையும் கண்முன் திரையிட்டுக் காட்டுகிறார் இயக்குநர்.
நாவல் இலக்கியம் ஒரு குறிப்பிட்ட பொருண்மை கொண்டு அதனை விளங்கிக்கொள்ளும் வாசக நோக்கிலேயே நகர்ந்து செல்லும். பல நாவல்கள் புரிதலை உண்டாக்கும். சில நாவல்கள் அதன் தன்மையிலிருந்து மாறுபட்டு பல்வேறு புரிதல்களை உண்டாக்கும். இவ்வாறான சூழலில் வருகிறார்கள் நாவல், ஒரு குறிப்பிட்ட பொருண்மையை மட்டும் கையாளாமல் பல்வேறு சமூகச் செயல்பாடுகளை முன்னிறுத்தி, அதனை வாசிப்பவனுக்கு எவ்வித சோர்வும் ஏற்படாமல் சரியான திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அந்நாவல் முன்னிறுத்தும் சமூகப் பிரச்சினைகள், இன்றைய சூழலுக்குத் தக்கதாக அமைத்திருப்பது நோக்கத்தக்கது. இந்நாவல் பன்முகத் தன்மையுடன் உள்ள விடயங்களை ஒரே பொதுப்புள்ளியில் வைத்து உணர்த்திச் செல்கிறது.
வாசிப்பு இயக்கம்
          தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு கிராமங்களில் முதியோர்க்குக் கல்வியும், கல்வி கற்க விரும்பும் பல்வேறு சூழலில் உள்ள குடும்பங்களுக்குக் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவதாக அமைந்திருந்தது. இளையோர் கல்வியை மேம்படுத்தும் இயக்கமாகவும் அது வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது அந்த இயக்கம் என்ன நிலையில் இருக்கிறது? இருக்கிறதா? என்ற கேள்விகள் மனத்தில் எழாமல் இல்லை. அந்த இயக்கம் கொண்டிருந்த கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் அதனை அறிந்தவர்களால் உணர்ந்து கொள்ள இயலும்.
          வாசிப்பு என்பது தற்காலத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது என்பது பல்வேறு தரப்பினர் கூறும் குற்றச்சாட்டு. மின்னனு சாதனங்களின் பயன்படுத்தமே வாசிப்புப் பழக்கம் குறைந்தமைக்கான காரணமாகச் சுட்டப்படுகிறது. இருப்பினும் அவற்றிலும் ஏராளமானவர்கள் வாசிக்கத்தான் செய்கிறார்கள். குறை என்னவெனில் நூல்களில் வாசிக்கும் போது ஏற்படும் ஒருவித உணர்வு மின்னனு சாதனம் மூலம் ஏற்படுமா? என்பதே. தற்கால சூழலில் வாசிப்புப் பற்றிய பல்வேறு கருத்தாடல்கள் மேலோங்கி வருகின்றது. வாசிப்பின் மூலம் உயர்ந்தவர்கள் என்ற நீண்ட பட்டியலே காணமுடிகிறது. இதனால் தனிநபர் நூலகங்களும், புத்தக் காட்சிச் சாலைகளும் பெருகிக்கொண்டே செல்கிறது. வாசிப்புக்கென்றே நாளும் கொண்டாடப்படுகிறது. இதனாலேயே நம் முன்னோர்கள் புத்தகங்களுக்குக் கடவுளாக சரசுவதியை உருவாக்கி, அவள் கையில் ஓலைச்சுவடியைக் கொடுத்துள்ளனர். வாசிப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் உணர்த்தப்பெறுகிறது.
          வருகிறார்கள் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான மகிழன் தன் நண்பர்களுடன் தங்கியிருக்கும் அறையில் பல்வேறு நூல்களைப் பற்றிய விவாதங்களை முன்னெடுக்கிறான். அவனுடைய தோழி இளவேனிலும் அவனுடன் சேர்ந்து கொள்கிறாள். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வாசிப்பு வட்டத்தையே உருவாக்குகிறார்கள். அவர்கள் மூலம், பழனி என்ற தக்காளி விற்பவனும், சித்தார்த் என்ற இளவேனிலின் காதலனும் புத்தகத்தின் மீது தீராக் காதல் கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் நூல்களை வாசிக்கிறார்கள். பிறருக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். இதில் எளியவர் உயர்ந்தவர் என்ற பாகுபாடே இல்லை.
          வாசிப்பின் வழியே இவ்வுலகையே காண இயலும் எனவும், புரியாத சில வாதங்களும், பண்பாடுகளும் நூல்களின் அகம் வழியே புரிந்து கொள்ள இயலும் எனவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்நாவலை வாசிக்கும் பலருக்கும், இந்நாவல் மட்டுமல்லாது பல்வேறு புதிய நூல்களின் பெயர்களும், அவைகளை வாசிக்க வேண்டிய ஆர்வமும் வெளிப்படும் என்பது உண்மை.
மனம் கொள்ளும் மணங்கள்     
          இன்றைய சமூகம் முன்னேற வேண்டுமானால் அனைருவம் கல்வி கற்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவன் கற்ற கல்வியின் அடிப்படையிலேயே உயர்வு தாழ்வு அன்றி வேறு எதனாலும் அமையக்கூடாது. கல்வி கற்கவில்லையே எனத் தாழ்வு மனப்பாண்மை கொள்ள வேண்டுமே தவிர, தான் பிறந்த மதத்தால், சாதியால் இன்னும் பிறவற்றால் உயர்வு தாழ்வு கொள்ளுதல் சமூகத்திற்கு நல்லதன்று. தான் பின்பற்றும் மதம், சாதியே உயர்ந்தது என்று வாழாமல் அனைவரும் சமமே என்றும், அனைவரும் மனிதர்கள் என்றும் உணர்த்திய பல்வேறு தலைவர்களையே இன்று மதம், இனம், சாதியப் பாகுபாட்டால் தலைவர்களாக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது சமூகத்தின் முரண்.
          கணவனை இழந்த பெண்களின் நிலைமை அனைத்து மதத்திலும், சாதியிலும் ஒரே நிலைதான். அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையைத் தான்மட்டும் தீர்மானிக்க முடியாத அவலநிலை அவர்களுடையது. அதன்பிறகு அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என இச்சமூகம் ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது. அதற்கு மாறாகவோ, அதனை மீறியோ அவர்கள் நடந்துகொள்ளும்போது, இச்சமூகம் அவர்களுக்குக் கொடுக்கும் வசைகளும், வதைகளும் ஏராளம். மறைமுக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதனை மீறி வாழ்பவர்களும் வாழ்ந்தவர்களும் உண்டு.
          வருகிறார்கள் நாவலில் இடம்பெறும் மல்லிகா, சந்திராம்பாள் என்ற இரு கைம்பெண்களின் வாழ்க்கையும் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் மல்லிகா, இளமையோடு இருக்கும் காலத்திலேயே தன் கணவனை இழந்துவிடுகிறாள். அவளுக்கு ஒரே ஆறுதல் பெண்மைத் தன்மை அதிகமுள்ள ஒரு ஆண்மகன். வயதானவளாகக் காட்டப்படும் சந்திராம்பாளின் கணவன் அவளைப்பிரிந்து சென்றுவிட்டான். அவன் வருவான் என்ற எதிர்பார்ப்புடன் உறுதியாக இருந்த அவளே, தனக்கான துணையாக அவ்வூரிலுள்ள பூசாரியைத் தேடிக்கொள்கிறாள். மகிழனுக்கும் மல்லிகாவிற்கும் இடையே உள்ள மெல்லிய அன்பு காதலாகிக் கசிந்து செல்கிறது. இவர்கள் இருவருமே வெளிப்படையாக வாழ இயலாமல் இச்சமூகத்தின் மீது அச்சம் கொள்கின்றனர். இருப்பினும் இறுதியில் வெளிப்படையாகவே வாழத் தொடங்குகின்றனர். இதன்மூலம் சமூகத்தைப் புறந்தள்ளும் இரு பெண்களின் மனநிலை காட்டப்படுகிறது.
          திருமணத்திற்கு மற்றொரு பெரிய தடைக்கற்களாக அமைவது மதமும், சாதியும். அவை இரு மனங்களின் உணர்வுகளை உதாசினம் செய்யும். இந்நாவலில் இந்த இரு பெரிய தடைக்கற்கள் உடைக்கப்பட்டு, இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது நகரமயமாதலின் மூலமே சாத்தியமாகிறது. கிராமப்புற மக்களின் மனநிலை அடியோடு மாறுபடுகிறது. தான் சாகும்வரை தன் சுயசாதி கௌரவத்தை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு அலையும் மனிதர்களையும் மனக்கண்முன் நிறுத்துகிறார். இதற்குக் காட்டாக இளவேனில் சித்தார்த் திருமணத்தைக் காட்டுகிறார். அதோடு தற்போது நிகழும் சாதியப் படுகொலைகள், இனவெறித் தாக்குதல்கள் போன்றவற்றையும் பதிவுசெய்துள்ளார். கல்வி, மருத்துவம், சாதிய இழிவு போன்றவற்றைத் துடைக்க மதம் மாறும் நிலையில், தன் சொந்த மதத்திலும், மதம் மாறிய சமூகத்திலும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையைச் சும்சுதீன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
          தான் பிறந்த சாதி அடையாளத்தைச் சுமந்துகொண்டு, அதனைத் தாழ்ந்தது என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டு, தன்னுடைய சாதியே மேம்பட்டது என என்றைக்குமே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு வாழும் சித்தார்த்தின் அண்ணன் வாழ்வையும் எடுத்துக்காட்டுகிறார். சாதியை மதத்தை வைத்து அரசியல் பேசும் அரசியலாளர்கள் அதனை ஒழிக்க வேண்டியதை விடுத்துவிட்டு, எரிகிறதீயில் எண்ணெய் இடுவதுபோல மேலும்மேலும் கிளர்ந்தெழச்செய்கின்றனரே அன்றி அதனை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணமில்லாமல் இருக்கின்றனர் என்பதையும் கடந்து செல்கிறது நாவல்.
விலையாகும் வளம்
          பருகும் நீரும், சுவாசிக்கும் காற்றும் அனைவருக்கும் பொது என்ற நிலைமாறி, குடிநீரை விற்பனைப் பொருளாக்கிய சமூக அவலம் இப்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது. காற்றினையும் மாசுபடுத்திவிட்டு, நாளை காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வளரப் போகிறோம். அதற்கும் வரி செலுத்தும் அவலநிலையை அடைய நாள்கள் வெகுதொலையில் இல்லை என்பதனைத் தண்ணீர் விற்பனை, பற்றாக்குறை மூலம் உணரமுடியும்.
          சுற்றுச்சூழல் இன்று அரசியலாக்கப்படுகிறது. எதிலும் அரசியல் என்ற நிலைக்கு இன்ற நாம் பழகிவிட்ட சூழலில் தண்ணீரும் அரசியலாகி வெகுநாள்களாக ஆகிவிட்டது. குடிநீர் வழங்குவதில் அரசியல் செய்யும் நிலையை இன்றும் காணஇயலுகிறது. இதனைப் பதிவு செய்துள்ளார் கரன்கார்க்கி.
          சாதாரண மக்கள் தங்கள் குடும்பங்களில் குடிப்பதற்கு நீரின்றித் தவிக்கும்போது, அரசு அதனை நிவர்த்திசெய்ய இயலாமல் காசுக்கு விற்கும் சூழலை முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கிவிட்டது. மாநகராட்சிகளால் வழங்கப்படும் இலவச குடிநீரானது நாற்றம் எடுத்து, சாக்கடை நீர் கலந்தே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் இயல்பாகவே தண்ணீர் கேன்களை வாங்குவதற்குப் பழகிவிட்டனர். இச்சூழலை உருவாக்கிய அரசினைப் பற்றி, மகிழன் தன் அறை நண்பர்களுடனும், ஊர் மக்களுடனும் கலந்துரையாடுகிறான். அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் தங்கள் தேவைகளைத் தாங்களாகவே கேட்டுப்பெற வேண்டும் என்றும் கூறுகிறான். இருப்பினும் மக்களின் நிலையை உணராத அரசு ஊழியர்கள், அலுவலர்களின் போக்கையும் சரியாகவே காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
          அன்றாடத் தேவைகளுள் முக்கியமானதாக உள்ள தண்ணீர் போன்ற பொருள்களை அரசு முறையாகக் கையாளுகிறதா? என்ற கேள்விக்கு விடையில்லாமலேயே இன்றும் தொடர்கின்றது. மாறாக, தனியார் குடிநீர் விற்பனையாளர்களுக்கு எதிராக, அரசே தண்ணீரை விற்கும் நிலைக்கு வந்துள்ளது. தன் மக்களிடம் தானே இவ்வாறு நடந்துகொள்ளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழும்போது, அதனைப் பயங்கரவாதம் என்ற பெயர் வைத்து அதனை ஒடுக்கி அடக்கவே முனைகிறது. அதற்கான தீர்வை என்றுமே முன்னிறுத்தாமல் கடந்துசெல்கிறார்கள் மக்களும் அரசாள்பவர்களும்.
தொழில் நிறுவனங்களின் போக்கு
          படித்துமுடித்து வெளிவரும் பல்லாயிரம் இளைஞர்களை, அவர்களின் இளம் செயல்பாட்டிற்காகவும், குறைவான ஊதியத்திற்காகவும், வெளிநாடுகளில் வேலை, பன்னாட்டுக் கலாச்சாரம் என்ற மோகத்தினாலும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு நியமிக்கிறார்கள். நிறுவனங்களில் பணியாற்றும் போது, அவர்களுக்கு தேவையானதைச் செய்துதரும் போக்கு நிலவினாலும், உண்மை நிலவரம் அவர்களிடம் அளவுக்கு அதிகமான வேலையையே பெற்றுக்கொள்கிறது. இதனால் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை மாறுபடுவதோடு அவர்களின் பெயர்களும் மாற்றப்படுகின்றன. இளைஞர்களின் குணநலன்களில் மாறுபாடு, புரிந்துகொள்ளும் திறன் போன்றன ஒரு தளர்வு நிலைக்கு வந்துவிடுகிறது.
          முதலாளித்துவத்தின் வளர்ச்சி நிலையாகவும் அடிமைத்தனத்தின் மாற்று முறையாகவுமே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனை உணராது குறிப்பிட்ட விளம்பரங்களினால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்வை நிறுவனங்களின் கைகளிலேயே ஒப்படைத்து, பலர் கரைந்தும், சிலர் கரையேறியும் விடுகின்றனர். இதுபோன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களின் செயல்பாடுகளை இந்த நாவல் பதிவு செய்கிறது.
          விஜயா என்ற பெண் தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் எவ்வாறு இருந்தாள். அதன்பிறகு அவளின் வாழ்க்கை என்னவானது என்பது பற்றி மிக ஆழமாகக் குறிப்பிடுகிறார். நிறுவனமானது தற்போது தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை ஒரு இயந்திரமாகக் கருதுகிறதே ஒழிய அவர்களை மனிதர்களாக மதித்து நடத்துவது இல்லை. இதுவும் ஒரு விதமான அடக்குமுறையின் வடிவாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர்களின் நிறுவன வளர்ச்சிக்குப் பல இளைஞர்களைப் பழிவாங்கும் போக்கு இன்றும் நினைவுகூரத்தக்கது.  
புரட்சி எது?
          புரட்சி என்ற சொல்லின் ஆழத்தை உணராமல் சொல்லாகவே அதனைப் பயன்படுத்திவருகிறோம். எதற்கெடுத்தாலும் புரட்சி என்று பெயர் வைக்கிறோம். தன் சுயதேவைக்குப் பாடுபடும் மனிதர்கள் கூட அதனைப் புரட்சி என்று கூறிக்கொள்ளும் நிலை.  பெயருக்கு முன்னால் அடைமொழியாகவும், இணைந்துகொள்கிறது. புரட்சி என்பது என்ன? ஒரு நாட்டையோ, ஒரு சமூகத்தையோ அடக்கியாள்பவர்களின் செயலுக்கு எதிராகப் போராடி, பல்வேறு உயிர்களைப் பலிகொடுத்துப் போராடுபவர்களே புரட்சியாளர்கள். ஆனால், அவர்களின் செயல்களைத் தீவிரவாதம், நக்சலைட்வாதம் என்ற பெயர்களைக் கொடுத்துவிடுகிறது. புரட்சியை வெற்றுச் செயல்களுக்கு அடையாகவும், வெற்றுச்சொல்லாகவும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டோம். இதனை வருகிறார்கள் நாவலில் மிக விரிவாகப் பேசிச்செல்கிறார்.
          இதுபோன்ற வெற்று வார்த்தைகளைக் குறைத்துப் புரட்சிக்குச் சரியான கருத்தாடல் இதுவென உணர்த்துகிறார் கரன்கார்க்கி. அதிலும் மகிழனின் உரையின் மூலம் இதற்குச் சரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். புரட்சி என்பது சாதாரண செயல் அல்ல; அது வீரத்தின் அடையாளம். செங்குருதியின் வடிவம். செம்மையின் இருமாந்த நிலை. இதனையே ஆசிரியரும் குறித்துக்காட்ட விழைகிறார். தேவையற்ற வெற்றுச்சொல்லான புரட்சியைப் புரட்டுவோம்.
ஏமாற்றத்தின் குறியீடு மூடநம்பிக்கை  
       நம்பிக்கையற்ற வாழ்க்கையில் யார் எதைச்சொன்னாலும் ஏற்றுக்கொண்டு நடப்பது மனிதரிடம் அதிகரித்து வருகிறது. தான் அடைந்த ஏமாற்றத்தைப் பழிவாங்க வேண்டியோ அல்லது அதனை மறைக்க (மறக்க) வேண்டியோ பிறரை நம்பவைத்து வாழ்வது மனிதனின் இயல்பான குணமாகிப்போனது.
இந்நாவலில் வரும் விஜயா என்ற பெண் அதற்கு விதிவிலக்கல்ல. வேலைபார்க்கும் நிறுவனத்தில் உடன் பணியாற்றும் நண்பனுடன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இருமுறை கருக்கலைப்பு செய்யும் அவலநிலைக்கு வந்த அவளின் ஏமாற்றம், வெறுப்பு, கோபம் அனைத்தும் மற்றவர்களின் நம்பிக்கையோடு விளையாட வைக்கிறது. அவளின் வாழ்க்கையில் அவளே ஒரு ஏமாற்றத்தின் குறியீடாகக் காட்டப்படுகிறாள்.
இறுதியாக சில….
          வருகிறார்கள் நாவல் மூலம் கரன்கார்க்கி வெளிப்படுத்தும் தாக்கமானது இச்சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக விளங்குவனவற்றையும், எவையெல்லாம் இச்சமூகத்திலிருந்து விலக்கப்பட வேண்டும், எவை தேவை என்பதனை உணர்த்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்புப் பழக்கம், இளையோரின் அரசியல் பங்களிப்பு, பொதுவுடைமைக் கோட்பாடு, அடக்குமுறையை மூட்டும் அரசு, அதனை எதிர்க்கும் தோழர்களின் நிலைமை, அரசின் சார்பில் நின்று இளையோரின் உழைப்பைச் சுரண்டும் தொழில் நிறுவனங்கள், தண்ணீர் பிரச்சினை, அயல்நாட்டு மோகம், சோதிட ஏமாற்று போன்றவற்றைக் காட்டுகிறார். இவையனைத்தும் இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் ஒரு கூறு என கோடிட்டுக் காட்டியுள்ளார். ஒரு நாவலுக்குள் இத்தனைக் கூறுகளையும் அடக்கிக் காட்டியிருப்பது ஆசிரியரின் கலை வடிவம். அவரின் எழுத்து மேலும் வளம், வலிமை பெறட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...