செவ்வாய், 5 நவம்பர், 2019

கனவு – ஆறிலொரு பங்கு (பாரதியின் தன்வரலாற்றுப் பதிவு)


                       Image result for bharathi"


      மகாகவியின் படைப்புகள் தமிழகமெங்கும் புகழ்பெற்று விளங்குகின்றன. இன்று பலரும் பாரதியின் படைப்புகளை ஆய்ந்து வருகின்றனர். பாரதிபற்றிய புதிய அரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். பாரதி, கவிஞராக மட்டும் வலம்வராமல் இதழியலாளர், கட்டுரையாளர், கதையாளர் என்ற பன்முகப் பரிமாணத்தில் மிளிர்கிறார். சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைக் கண்டு உள்ளம்கொதித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். பிரிட்டிஷ் இந்தியாவில் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களைத் துணிந்து எழுதினார். அதனாலேயே அவருக்குப் பல்வேறு சிக்கல்களைக் கொடுத்தது ஆங்கிலேய அரசு. எழுதிக்கொண்டிருப்பதைப் பொழுதுபோக்கு என எண்ணாமல் அதனைச் சுதந்திரப் போருக்கு விதையாகவும், தமிழறிஞர்களுக்கு வாழ்த்தாகவும், இளையோருக்கு எழுச்சி ஊட்டும்படியாகவும் எழுதினார். எழுத்துலகில் என்றும் அழியாத நிலைப்பேறு கொண்டவராக இன்றும் மிளிர்ந்து வருகிறார்.

      சுதேசி இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைதாகியிருந்தனர். அப்போது சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் செல்லும் சென்னை மாகாணப் பிரதிநிதிகளுக்கு ஓர் அறிவிப்பாக சிறுகடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் பிரிட்டிஷ் பேரரசைப் பற்றிய கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தியக் கூலிகளுக்கு ஏற்படும் இன்னல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். இந்தியா நிராயுதபாணியாக்கப்பட்ட ஒரு தேசம் என்பதாலேயே இதுபோன்ற இழிநிலையை அடைந்துள்ளது என்ற கருத்தையும் முன்வைக்கிறார். அக்கடிதத்தில் இந்து பத்திரிக்கை ஆசிரியரையும் சாடுகிறார் (எழுக நீ புலவன், ஆ.இரா. வேங்கடாசலபதி, ப. 183). அவருடைய எழுத்துகள் ஆங்கிலேய அரசுக்கு அச்சமூட்டியது. பாரதியைச் சிறையில் அடைக்கும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டதை உணர்ந்த பாரதி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரிக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கனகசுப்புரத்தினத்தின் தொடர்பு ஏற்படுகிறது. கனகசுப்புரத்தினம் பாரதி மேல்கொண்ட அளவற்ற பற்றால் பின்னாளில் பாரதிதாசன் மாற்றிக்கொண்டார் என்பது செய்தி. பாரதி பிரிட்டிஷ் இந்தியாவில் இருக்கும்போதே இந்து ஆங்கில நாளிதழுக்குத் துணைஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி வந்தபிறகும் தொடர்ந்து இந்து ஆங்கில நாளேட்டிற்குக் கடிதங்கள், கட்டுரைகள் எழுதிவந்தார். அதில், ஆங்கிலேய அரசின் செயல்பாடுகள் பற்றியே அதிகம் எழுதப்பட்டது.

   1910ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிரிட்டிஷ் அரசின் புதிய சட்டவரைவு ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து விஜயாவில் 03 பிப்ரவரி 1910 அன்று புதிய பத்திரிக்கைச் சட்டம் என்றும் 23 பிப்ரவரி 1910 அன்று ஸ்வதேசப் பத்திரிகை மசோதா என்றும் இரு கட்டுரைகளை எழுதியுள்ளார். அக்கட்டுரையின் நோக்கம் என்னவெனில், 1908ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பத்திரிக்கைச் சட்டம் போல தற்போது புதிய தேசபாஷா பத்திரிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்றும் அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இரண்டாவதாக எழுதப்பட்ட கட்டுரையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கூறுகிறார். இதன்காரணமாகப் பின்னர் இவருடைய விஜயா, இந்தியா போன்ற பத்திரிக்கைகளும் தடைக்கு உள்ளாயின என்பது தனிச்செய்தி.
     
       புதுச்சேரியில் இருந்த பாரதியின் பத்திரிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டபிறகு இந்துவில் மட்டுமே பாரதியின் எழுத்துகள் வெளிவந்தன. அதிலும் குறிப்பாக, பிரம்மஞான சபையையும், அன்னிபெசன்ட் அம்மையாரையும் கண்டித்து எழுதியுள்ளார். அவை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகவே வெளிவந்தன என்பார் ஆ.இரா. வேங்கடாசலபதி. இச்சூழ்நிலையில்தான் தன்னுடைய வாழ்க்கையின் இளமைக்கால நிகழ்வுகளைச் சுருக்கித் தன்வரலாறு எழுத முயற்சி எடுத்துள்ளார். அதுவே கனவு என்ற படைப்பாகும். அதோடு ஆறிலொரு பங்கு என்ற சிறுகதையையும் எழுதியுள்ளார். பலரும் கனவு மட்டுமே அவருடைய வாழ்க்கையின் பகுதியாக உள்ளது என்று குறிப்பிட்டு எழுதியுள்ளனர். மற்றும்  சின்னசங்கரன் கதை என்ற முற்றுபெறாத நிலையில் உள்ள குறிப்பும் அவருடைய வாழ்க்கைப் பகுதி என்றும் உரைக்கின்றனர். ஆனால், ஆறிலொரு பங்கு எழுதப்பட்டதில் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட மறந்துள்ளனர். அதனைக் கூர்ந்து வாசித்தால் அது விளங்கும். அதனையும் பாரதி வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமாகக் கொள்வதில் தவறில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.

கனவு - சுருக்கம்
    பாரதியின் கனவு என்ற படைப்பின் சாரத்தைக் காண்பதற்குமுன்பு, சோவியத் எழுத்தாளர் கன்ஸ்தந்தீன் பௌஸ்தோவ்ஸ்கியின் எழுத்துகளில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். கனவு காண்கின்ற திறமையை ஒரு மனிதனிலிருந்து இழக்கச் செய்தால், கலாச்சாரம், கலை, விஞ்ஞானம் மற்றும் அழகிய எதிர்காலத்திற்கான போராட்டத்தின் ஆசை ஆகியவற்றிற்குரிய முன்னேற்றத்திற்கான சக்திமிக்க தூண்டுதல்களில் ஒன்று இழந்துவிடப்படுகிறது. எனினும் கனவுகளை எதார்த்தத்திலிருந்து தொடர்பறுமாறு செய்தல் கூடாது. அவை எதிர்காலத்தை வருவதுரைப்பதாக இருக்க வேண்டும். அந்த எதிர்காலத்தில் நாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாமும் மாறிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை அவை நமக்கு ஏற்படுத்த வேண்டும் என்பார்.

     பாரதியின் கனவு ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த காதல், அவர் வெறுத்த ஆங்கிலக் கல்வி முறை (அடிமைக் கல்வி), விரும்பாத இளமைத் திருமணம், பாரதி தந்தையின் வறுமை நிலை, முடிவுரை. இதில் 49 செய்யுள்கள் பயின்றுவந்துள்ளன. அவற்றுள் 49ஆம் பாடல் மட்டும் 1910 மார்ச் மாதம் கர்மயோகி மாதஇதழின் முதல்பக்கத்தில் மஹாசக்திக்கு விண்ணப்பம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது (சீனி. விசுவநாதன்). அதன்பிறகுதான் ஆகஸ்ட் மாதம் (ஆவணி) 1910ஆம் ஆண்டு கனவு என்ற சிறிய நூல் வெளிவந்துள்ளது. அதில் இறுதியாக மேற்குறிப்பிட்ட பாடலை இணைத்துள்ளார் பாரதி.
இந்நூல் தொடக்கத்தில்,
                   பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
                   மெல்லப் போனதுவே
என்ற பட்டினத்துப்பிள்ளையின் பாடலடிகளை மேற்கோள்காட்டித் தொடங்குகிறார். தன்னுடைய இளவயதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தான் எவ்வாறு நடந்தேன் என்பதைக் கூறும் பாரதி, கனவில் கண்ட பெண்ணோடு காதலில் மயங்குகிறார். பெண்ணின்மீது கொண்ட காதலால் அவர் பெற்ற இன்னல்களை,  
                   கன்னி மீதுறு காதலி னேழையேன்
                             கவலை யுற்றன கோடியென் சொல்லுகேன்?
                   பன்னி யாயிரங் கூறினும் பக்தியின்
                             பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
                   முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்     
                             முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
                   என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ
                             என்னி டத்தவ ளிங்கிதம் பூண்டதே          (14)
இவ்வாறு உரைக்கிறார்.

ஆங்கிலப் பயிற்சி
       தன்னுடைய சிறுவயதிலேயே தாயை இழந்த பாரதி, தந்தையின் சொற்படி விருப்பம் இல்லாமல் ஆங்கிலக் கல்வியைக் (அடிமைக் கல்வி) கற்கச்சென்றார். அதனை அவர் மிகவும் வெறுத்தார். அதற்கு அவர் பயன்படுத்தும் உவமைநயங்கள் மிகச்சிறப்பானவை. படித்து இன்புறத்தக்கவை. ஆங்கிலக் கல்வி கற்றோரின் அறியாமையைப் பற்றிப் பேசுகிறார். அதேநேரத்தில் தாய்மொழியின் சிறப்பையும் கல்வியைத் தாய்மொழியிலேயே கற்க வேண்டும், இல்லாவிட்டால் நேரும் இடர்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

    கம்பன் இயற்றிய காவியமும், காளிதாசனின் கவிதையும், பாணினியின் இலக்கணமும், இளங்கோவின் சிலம்பும், வள்ளுவரின் குறளும், அசோகரின் ஆட்சியையும், வீரசிவாஜியின் வெற்றியும் இதுபோன்று நாடு முன்னர் பெருமையுடன் திகழ்ந்தமையும் தாய்மொழியில் பயின்றாலே அதன் பொருளுணர்ந்து படிக்க இயலும். இதனை ஆங்கிலத்தின் வாயிலாகப் படிப்போர் நெட்டுரு செய்கின்றனரே தவிர புரிந்துகொள்ளவில்லை என்று கடிந்துரைக்கிறார். ஆனால் அவருடைய தந்தையார் அவரைக் கணிதத்தை ஆங்கிலக் கல்வி வாயிலாகக் கற்க நெல்லையூர் விடுப்பதை வெறுக்கிறார். இக்கல்வி கற்கச் சென்றதன் விளைவாக, தந்தையாருக்குச் செலவு அதிகரித்தது என்றும் தனக்குத் தீது அதிகரித்தது என்றும் உரைக்கிறார். அதனால் (அக்கல்வியால்) நலம் எதுவும் விழையவில்லை என்பதை,
                   நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
                             நாற்ப தாயிரங் கோயிலிற் செல்லுவேன்               (29)
என உரைக்கிறார்.

மணம்
     காதல் கொண்ட பெண்ணைவிடுத்துத் தந்தையின் செய்கையினால் வேறொரு பெண்ணை மணம் செய்யும் நிலையில் பாரதியின் மனக்குமுறல்கள் இப்பகுதியில் வெளிப்படுகிறது. மணத்தின்மீது வெறுப்பு கொண்ட பாரதி,
                   கூடு மாயிற் பிரம சரியங்கொள்
                             கூடு கின்றில் தென்னிற் பிழைகள்செய்
                   தீட ழிந்து நரக வழிசெல்வாய்,
                             யாது செய்யினு மிம்மணஞ் செய்யல்காண்.           (31)
என்று கூறுகிறார். அதோடு, வசிட்டர், இராமர், வள்ளுவர் உள்ளிட்டோர்க்கு அமைந்த மனைவியர் போன்று ஓர் ஆயிரம் ஆண்டு உண்ணா நோன்பிருந்தாலும் அப்படியொரு மனைவி பெறல் அரிது என்கிறார். தன்னுடைய பத்து வயதில் ஏற்பட்ட காதலால் மனத்தில் ஓர் பெண்ணை நினைத்துக் கொண்டிருக்கும்போது, பன்னிரண்டு வயதில் தன்னுடைய தந்தையார் சொல்படி வேறொர் பெண்ணை மணம் செய்வது நல்லதன்று என்று அறிந்தாலும், தந்தையாரின் செயலை எதிர்க்கும் துணிவில்லாதவனானேன் என்று கூறுகிறார். காதலால் அவருடைய உள்ளம் எவ்வளவு பற்றியெறிகிறது என்பதையும் உணர்த்துகிறார். மணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட சாத்திரங்களைப் பாரதி சாடியுள்ளார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. 

தந்தையின் வறுமை நிலை
    மனிதன் தன்நிலையில் தாழ்ந்தால் யாரும் அவனை மதிக்க மாட்டார்கள் என்பது பாரதி தன் தந்தையின் வாழ்க்கையிலிருந்து உணர்ந்துகொண்ட பாடம். பெரும் செல்வத்தை இழந்து, நண்பர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் மதிக்கப்படாமல் இருப்பதை இப்பகுதி காட்டுகிறது. பொருளின் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வள்ளுவரின் வாக்கை நினைத்துப் புலம்பித் தவிக்கிறார் பாரதி. அதை உணர்கிறார். பொருளின் மேன்மையை இவ்வுலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதைக் கூறுகிறார். அறம் ஒன்றே மெய்யின்பம் தரும் என்று இளையர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இவ்வாறான இடர்மிகுந்த சூழ்நிலையில் தந்தையை இழந்தார் பாரதி. வாழ்வதற்கு எந்த வழியும் இல்லை என்றும், கற்ற கல்வியினால் எந்தப்பயனும் இல்லை, ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே? என்றும் மனம்நொந்து உரைக்கிறார்.

முடிவுரை
       பாரதியின் மன உறுதி அவரை அப்படியே விடவில்லை. மீண்டும் இந்த உலகை வென்றெடுக்க முயற்சிக்கிறார். நடந்ததை நினைத்து வருந்தி நிற்பதால் பயன்ஒன்றும் இல்லை எனவும், மனித வாழ்க்கையில் தோன்றிமறையும் சிக்கல்களை நினைத்து ஏன் சாகவேண்டும்? என்று தன்னுடைய மனத்தினுள்ளே கேள்விக்கனைகளைத் தொடுக்கிறார். இது இன்றைக்கும் பொருந்தும்.
                   ……………. வானத் தொளிருமோர்
                             மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
                   வீச லொக்கு மெனிலை மறக்கிலேன்
                             ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
                   அன்னை யேயினி யேனு மருள்வையால்                     (48)
என்ற மேம்பட்டச் சிந்தனையை விதைக்கிறார்.

ஆறிலொரு பங்கு     
       ஓர் சிறிய கதை என்று அவரே அறிமுகம் செய்கிறார். இதன் முகவுரையில், இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவுகொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று உரைத்துள்ளார். இச்சிறிய கதையும் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டது. இதுவும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கனவு என்ற நூலின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது. இக்கதையில் சுதேசி இயக்கம் பற்றிய செய்தி உள்ளது. ஐந்து அத்தியாயங்களாகப் பகுக்கப்பெற்று இந்நூல் அமைந்துள்ளது. இதில் நாயகனே தன்னுடைய கதையைச் சொல்வதாக அமைந்துள்ளது.  

     கதைக்களம், சென்னை புரசைவாக்கத்தில் (புரசபாக்கம்) தொடங்குகிறது. மீனாம்பாள் என்ற கதாநாயகியும், கோவிந்தராஜன் என்ற கதாநாயகனும் இக்கதையில் முக்கிய பாத்திரங்கள். மீனாம்பாளை மிகவும் நேசித்தான் கோவிந்தராஜன். மீனாம்பாளின் தந்தையார் ராவ்பகதூர் சுந்தர ராஜுலு நாயுடு. தன்னுடைய மகளை கோவிந்தாஜனுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அவர் நெடுங்காலம் தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்தவர். சுதேசி இயக்கம் தொடங்கும் முன்பே வேலையிலிருந்து விலகிவிட்டார். அப்போதே அவருக்கு ராவ்பகதூர் என்ற பட்டத்தை அளித்திருந்தனர் ஆங்கிலேயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

     கதாநாயகன் சென்னை கிறிஸ்தியன் கல்லூரியில் பயின்றவர். கல்வி கற்கும்போதே பிரம்ம சமாஜத்திலே ஈடுபாடுகொண்டு படிப்பைப் பாதியில்விட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தா சென்று பிரம்ம சாமஜத்தின் பாடசாலையில் படித்தான். அதனால் அவனுடைய சமூகமே அவனை ஒதுக்கியது. குடும்ப உறுப்பினர்களுள் தந்தையாரைத் தவிர அனைவரும் வெறுத்தனர். மீனாம்பாளின் தந்தையும் அதனை வெறுத்தார். திருமணம் தடைபட்டது. மீனாம்பாளும் அவளுடைய தந்தையும் தஞ்சாவூருக்கே சென்றுவிட்டனர். அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராததுகண்டு நொந்துபோய், பிரம்மசமாஜத்திலே துறவு மேற்கொண்டான். ஆனாலும் அவளை அவனால் மறக்க முடியவில்லை. ஒருநாள் கடிதம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அதில் அவள் தன்னுடைய கனவில் தேவி வந்து, உன்னுடைய கோவிந்தராஜனை எனக்காக நான் தேர்ந்துகொண்டேன். நீ உன்வீட்டுக்கு வடக்குமூலையில் தனியாக ஓர் பச்சிலை படர்ந்திருக்கும். காலையில் குளித்துமுடித்து அதிலிருந்து இரண்டு இலைகளைச் சாப்பிடத் தவறாதே என்றுகூறி மறைந்தாள் என்றவாறு எழுதியிருந்தாள். அதனைக் கண்ட அவன் மயங்கி கீழே விழுந்தான்.
   
      லாலா லஜபதிராயைச் சந்தித்து அவர் இட்ட பணிகளைச் செய்து வந்தான் கோவிந்தன். அவன் வடநாட்டில் இருக்கும்போது தென்னாட்டில் நிலவிய சாதியக் கொடுமைகள் அங்கும் இருப்பதையும் மாட்டுக்கறி உண்பதாலேயே ஒருவன் தாழ்ந்தவனாவானா? என்பதையும் நினைத்து வருந்தினான். அந்நேரத்தில் வங்காள நாட்டில் ஸ்ரீ அசுவினி குமாரதத்தர் என்ற பெயருடைய தேசபக்தர் ஒருவர் பள்ளர்களைச் சமூக வரம்பினுள் சேர்த்து உயர்வு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவதைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்தில் ஊற்றெடுத்து அவரைப் பார்க்கச் சென்றான். அப்போது கோவிந்தராஜன் அங்கிருந்த சீடரிடம், நம்நாட்டில் ஆறிலொருபங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா? என்று கேட்டார். உடனே அங்கிருந்த சீடரும் அக்கருத்திற்கு இசைந்தவராய் பேசிக்கொண்டிருந்தனர். நீங்கள் மேற்கூறிய கருத்தை அப்படியே ஒருபெண்ணும் கூறினாள் என்றும் அவளுடைய ஊர் தஞ்சாவூர் என்றும் கூறினாள். சுவாமி கூடவே அவளும் காசிக்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி அறிந்து கோவிந்தராஜனும் காசிக்குச் சென்றான். அப்பெண் மீனாம்பாள் என்று உணர்ந்தான்.

        காசிக்கு விரைந்துசென்று அவளைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் மேலிட்டது. அங்குசென்று அசுவினி பாபுவைப் பார்த்து நடந்ததைக் கூறினான். அவர் மீனாம்பாளுக்கு ஏற்பட்ட கனவின் பொருளை விளக்கினார். கோவிந்தராஜனும் தன்னுடைய காவி வேடத்தைக் களைந்து இயல்பான உடையில் சென்று அவளைக்கண்டு இருவரும் இணைந்தனர் என்பதாக கதை நிறைவடைகிறது.

கனவு – ஆறிலொரு பங்கு – தடை
        ஓர் எழுத்தாளருடைய முக்கியத்துவம், அவர் நம்மீது கொண்டுள்ள உணர்வுகள், அவரது நூல்கள் ஏற்படுத்தும் சிந்தனைகள், ஒழுகலாறு மற்றும் அவை நமது அறிவை வளர்க்கின்றனவா, வெறுமனே வார்த்தை அமைப்புகளால் மகிழ்வூட்டுகிறதா என்பதைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. பாரதியின் எழுத்துகள் சிந்தனைகளைத் தூண்டுவதாகவும், அறிவை விரிவாக்குவதாகவும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. குறிப்பாகக் கனவு, ஆறிலொரு பங்கு என்ற இரு படைப்புகளும் அவர் எழுதிய காலத்தின் சூழ்நிலையை நோக்கினால் தெளிவாக விளங்கும்.

      1910ஆம் ஆண்டு எழுதப்பட்ட இரு நூல்களும் 1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாளன்று தடைசெய்யப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பிரதிகள் பிரிட்டிஷ் அரசால் கைப்பற்றப்பட்டன.

தடைக்கான காரணம்
     புதுவையிலிருந்து பாரதி எழுதி வெளியிட்ட கனவு, ஆறிலொரு பங்கு நூல்கள் தேசத்திற்கு எதிரான பிரச்சாரமாகக் (ராஜ துவேஷம்) கருதிப் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன. அவற்றிற்கான காரணங்களாக அவர் எழுதிய நூலின் சில பகுதிகளை அரசின் மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தனர். அதன்பிறகு அதனைத் தடை செய்துள்ளனர். அப்பகுதிகளை ஆய்வாளர் சீனி.விசுவநாதன் தம்முடைய கால வரிசைபடுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

  மேலும், இந்நூல் வெளிவந்த ஓராண்டுக்குள் அதாவது 17 ஜுன் 1911 அன்று திருநெல்வேலி ஆட்சியராக இருந்த இராபர்ட் ஆஷ் துரை, மணியாச்சி இரயில்நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக்கொள்ளப்பட்டார். அதன்பிறகான தேடுதலில் கொலைச்சதியில் ஈடுபட்டவர்களிடம் மேற்குறிப்பிட்ட இரு நூல்களின் பிரதிகளும் இருந்துள்ளன. ஆகவே பாரதியின் படைப்புகளை மையமாக வைத்து அதனைத் தடைசெய்தனர். கனவு நூலில் ஆங்கிலக் கல்வி முறை பற்றிய ஒன்பது பாடல்களும் (21 – 29), மற்றும் 33 (2 - 4), 39 (3 & 4), 46 (இறுதி 4 அடிகள்) எனவந்த அடிகளில் தேசதுவேஷக் கருத்துகள் இருப்பதாக எண்ணித் தடை செய்ய உத்தரவிட்டனர்.

    ஆறிலொரு பங்கு என்ற கதையில் சில பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பற்றியும் ஒற்றர்களைப் பற்றியும் கேலியாகப் பேசியது, தேசம் பற்றிய கருத்துகள், சாதி பற்றிய கருத்துகளைக் கூறுமிடங்கள் போன்றவற்றில் தேசத்திற்கு எதிராகக் கூறியிருப்பதாகத் தடை உத்தரவு செய்தனர்.

     சி.ஐ.டி. போலீஸ் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரசு தலைமைச் செயலருக்கு 19.08.1911 அன்று தடைசெய்வதற்கான பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று அரசின் செயலர் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டார். அரசு மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய கடிதங்கள் சீனி. விசுவநாதன் தன்னுடைய தொகுப்பில் இணைத்துள்ளார் (கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொகுதி 7).

தடை எதிர்ப்பு
    பாரதி தன்னுடைய நூல்களுக்குத் தடைவிதித்ததைக் கண்டித்து இந்து ஆங்கில நாளிதழுக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதம் பிரிட்டிஷ் பார்லிமெண்டு அங்கத்தினரும் தொழிற்கட்சித் தலைவருமான ராம்ஸே மக்டானல்டுக்கு, 1914 பிப்ரவரியில் புதுவையிலிருந்து எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் போலீஸ் ஆட்சி (Police Rule in India) என்ற அக்கடிதம் தற்போது, ரா.அ. பத்மநாபனின் பாரதி கடிதங்கள் என்ற நூலில் முழுவதுமாக உள்ளது. அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். கடிதம் பல்வேறு துணைத் தலைப்புகளுடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாரதி தன்னுடைய நூல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து அக்கடிதம் அமைந்திருந்ததோடு பல்வேறு செய்திகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பும் 1910ஆம் ஆண்டு விஜயாவில் பத்திரிக்கைத் தடைச்சட்டத்தைப் பற்றி எதிர்த்து எழுதியிருந்தார். 1918ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கடலூருக்கு அருகில் கைது செய்தது. அங்கிருந்து தன் மனைவி, மக்களைத் திருநெல்வேலிக்கு அனுப்பிவைத்தார். 1914ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது இந்தியாவில் நுழைவுக் கட்டுப்பாட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இச்சட்டத்தின்மூலம் பாரதி கைது செய்யப்பட்டார்.

   சென்னை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹானிங்டன் பாரதியைப் பார்க்க கடலூர் மத்திய சிறைக்கு வந்தார். இனிமேல் தீவிர அரசியலில் பங்குகொள்ளப் போவதில்லை என்றும், புதிதாக எது பிரசுரம் செய்தாலும் போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அனுமதி பெற்றே வெளியிடுவது என்றும் பாரதியாரிடமிருந்து வாக்குறுதி பெற்று அவரை 1918 டிசம்பர் 14ஆம் நாள் விடுதலை செய்தார்கள். அவர் திருநெல்வேலி மாவட்டம் கடையத்திற்குச் சென்றார் (ரா.அ. பத்மநாபன்).  

தடை நீக்கம்
   1921ஆம் ஆண்டு பாரதி மறைவிற்குப் பிறகு 1937 ஜுலை மாதம் முதல் காங்கிரஸ் அமைச்சரவை சென்னை மாகாணத்தில் பொறுப்பு வகித்தது. அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜி அப்போது இருந்த தேசிய இயக்க நூல்களின் தடையை உரிய விண்ணப்பத்தின் வழியாக நீக்கலாம் என்று உத்தரவிட்டார். பாரதி படைப்புகளை வெளியிட்டுவந்த பாரதி பிரசுராலயம் அதற்காக விண்ணப்பிக்கவில்லை. இருப்பினும் அக்கவிதையின் தலைப்புகளை மாற்றியமைத்தனர். 1937இல் பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பாரதி நூல்கள் – காவியங்கள் என்ற தொகுப்பின் மூன்றாம் பதிப்பில் கனவு என்பது ஸ்வசரிதை என்றும், நூலின் உள்ளே காதல் என்ற தலைப்பினைப் பிள்ளைக் காதல் என்றும் மாற்றம் செய்துள்ளனர் (ஆ.இரா. வேங்கடாசலபதி). இன்றுவரை பாரதியின் கனவு படைப்பு ஸ்வசரிதையாகவே வெளிவந்திருக்கிறது - வருகிறது.

இணைப்பு
பாரதியின் கனவு, ஆறிலொரு பங்கு நூல்களுக்குத் தடைசெய்ய பிறப்பிக்கப்பட்ட அரசின் ஆணை (சீனி. விசுவநாதன் – கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொ. 7).  

ஆய்வுக்கு பயன்நின்றவை
  1. ஆ.இரா. வேங்கடாசலபதி, எழுக, நீ புலவன்!, காலச்சுவடு பதிப்பகம், முதற்பதிப்பு, 11 டிசம்பர் 2016
  2. ஆ.இரா. வேங்கடாசலபதி (ப.ஆ), பாரதியின் சுயசரிதைகள், காலச்சுவடு பதிப்பகம், திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு, மே 2016
  3. ஆ.இரா. வேங்கடாசலபதி (ப.ஆ), பாரதி: ‘விஜயா’ கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம்,
  4. ரா.அ. பத்மநாபன், பாரதியின் கடிதங்கள், காலச்சுவடு பதிப்பகம், ஏழாம் பதிப்பு, நவம்பர் 2014
  5. சீனி. விசுவநாதன் (தொ.ஆ), கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொகுதி 7, 
  6. ச.சு. இளங்கோ (தொ.ஆ), பாரதியாரோடு பத்தாண்டுகள் – பாரதிதாசன், பாரி நிலையம், முதற்பதிப்பு, 1992
  7. கி.ச. கல்யாணி, தடை அதை உடை (கட்டுரை), நூலகம் பேசுகிறது (இதழ்), ஜனவரி – பிப்ரவரி 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...