புதன், 6 நவம்பர், 2019

கிறித்துவக் கீர்த்தனைகளில் உவமையணி

                                                    Image result for கிறித்தவ கீர்த்தனைகள்


கீர்த்தனை
இறைவனைப் புகழ்வதற்காகவோ அல்லது மனதில் எழும் உணர்ச்சிகளை இறைவனிடம் வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது வேண்டுதலையோ குறிக்குமாறு இந்திய இசையுடன் பாடப்படும் பாடல்கள் கீர்த்தனைகள் என்றழைக்கப்படுகின்றன. கீர்த்தனைகள் பொதுவாக பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்படுவது வழக்கம்.  சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப் பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். கீர்த்தனைகளில் சுரத்தை விட சொற்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கீர்த்தனைகள் பிறமொழி மரபைத் தழுவி எழுதப்பட்டது என்பது பலரின் கருததாக அமைந்துள்ளது. அதாவது தெலுங்கு மற்றும் கன்னட இசைமரபிலிருந்து வந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.
உவமை அணி
      உவமை இல்லாத இடமேயில்லை. எப்போதும் எங்கும் உவமை பிறக்கும். உவமை கவிஞனுக்கு எளிதில் பிறக்கும். உலகைப் படைத்த இறைவன் உலகப் பொருள்களுக்கெல்லாம் முதன்மையானவனாகவும் தாயாகவும் இருக்கிறான். அதேபோல் அணியிலக்கணத்துள் முதன்மையாகவும் தாய் அணியாகவும் இருப்பது உவமையணி.
           வினை பயன் மெய் உரு என்ற நான்கே
           வகைபெற வந்த உவமத் தோற்றம் (உவமையியல்)
வினை, பயன், மெய், வடிவம் என்ற நான்கின் அடிப்படையிலேயே உவமைத் தோன்றும் என்பார் தொல்காப்பியர். மேலும், அது சிறப்பு, நலன், காதல், வலிமை போன்றவற்றை இடமாக்கொள்ளும் என்றும் கூறுவார்.
உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது அவன்காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டுவைத்த பொருளைப் புதிதாகக் காணும்பொருளோடு பொருத்திவைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான். பொதுவாகப் பொருளின் சிறப்பை வற்புறுத்தவே உவமை அமைக்கப்படுகிறது. அதன் உயர்வைக் காட்ட அதனினும் உயர்ந்த பொருளையே வரையறையாக அமைக்க வேண்டியுள்ளது. இதனை,
‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’
‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை’
என்றவழி அறியலாம்.
கீர்த்தனைகளில் உவமையின் இடம்
      கீர்த்தனைகளில் உவமை இடம்பெறும்போது அவை வெளிப்படையாகவும், மறைந்துநின்று உவமத்தொகையாகவும் அமைகின்றன. அவற்றுள் சில பாடல்கள்,
போல
·         காலம் சொல்போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்.
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்
மண்ணில் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது. (306 – 1)
·         படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக்கு அனுதினம் பணி செய்ய வேண்டும் (101 – 3)
·         காலையில் பனிபோல் மாயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் (105 – 3)
·         சென்ற ராவதின் (ராஅதின்) இருளைப்போலவே, என்றன் பாவ இருளைப்போக்கி, இலங்கப் பண்ணுமே (282 – 4)

·         சிசுவைப்போல் மறுபடிப் பிறந்திடச் செய்யும் (208 – 4)
·         ஏசுவைப் போல நட – என் மகனே!
ஏசுவைப் போல நட – இளமையில் (220 – பல்லவி)
செபம்
·         முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவதுமாக.
பிறர் இயற்றும் நீதிக்கேடினை யாம் பொறுப்பது போல, நிமலனே, எம்பவம் மனியாய் (335) – (கர்த்தர் கற்பித்த செபம்)

வேதாகமத்திலிருந்து….
·         ஆயம் கொள்வோன் போல் பாவ ஸ்திரீபோல்
            அருகிலிருந்த கள்ளன்போல்
            நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
            நீ எனக்காகவே மரித்தனை, பரனே (138 – 3)
·         வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த்து எடுத்தபின்
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே
·         மேய்ப்பவன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடி கண்டபின்,
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே,
மானுவேல் உனைத் தழுவலாலே (199 – 1, 2)
போன்ற
·         செஞ்சோதி போன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
நெஞ்சாசனத்தில் வைத்து நீடூழிவாழ்த்தல் வேணும் (85 – 5)
அன்ன
·         நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே,
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே (135 - 1)
ஆய்
            குயவன் கைக் களிமண்ணாய்க் குருவே உமக்கு அமைவேன்
            நயமிது என்றறிந்த ஞானமுள்ள பிதாவே – ஐயா
            உமது சித்தம் ஆகிட வேணும் (175 – 5)
உவமைத்தொகை
·         அபயமென்று உனக்குக் கை
            அளித்தேன் பொற்பாதா (206 – அனுபல்லவி)
·         மலர்த்திருவாய் (271 - 2)
·         பொன்னடிக்கு அபயம் நாதா. (271 - 4)
·         மலரடி (323 – 4)
·         பொன்னடி (275 – 1)
·         பொற்பாதம் (275 – 2)
உவமைக்கான களங்கள்
      பல்வேறு உவமைகள் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேதாகமத்திலேயே பல உவமைகள் பயின்றுவந்துள்ளன. இயேசுகிறிஸ்து பல நேரங்களில் உவமை வாயிலாகவே மக்களுக்குப் போதித்துள்ளார்.
      இறைவனைப் போற்றிப் புகழும்போது உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
      நிலையாமை கருத்துகளைக் கூறும்போதும், இறைவனைத் தவிர வேறொரு பற்றுக்கோடு இவ்வுலகில் இல்லை என்ற கருத்தோட்டத்தோடும் கீர்த்தனைகளில் உவமைகள் கையாளப்பட்டுள்ளன.
உவம உருபுகள் - பயன்பாடு
     தொல்காப்பியரும், தண்டியலங்கார ஆசிரியரும் பல்வேறு உவம உருபுகளைப் பட்டியலிடுகின்றனர். அவற்றில் 20ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் போல என்ற உவமஉருபு தவிர மற்ற அனைத்தும் வெகுவாக இன்று வழக்கத்திலேயே இல்லை. ஆனால் அவர்கள் குறிப்பிடாத வேறுபல உவமஉருபுகள் இன்று வழக்கில் இடம்பெறுகின்றன.
இவற்றை நோக்கும்போது, இலக்கணத்தைக் கொண்டு சமூகம் உருவாக்கப்படுவதில்லை. மாறாக சமூகத்தை முன்வைத்தே இலக்கணம் தோற்றுவிக்கப்படுகிறது என்ற கா. சிவத்தம்பியின் கூற்று இங்கு நினைவூட்டுகிறேன்.

உயிர்த்தமிழ்

                                                            Image result for thamizhannai


அன்னைத் தமிழை அழகு படுத்த
எடுப்போம் சீரிய எளிய முயற்சி
கன்னித் தமிழைக் கண்ணெனக் கொண்டு
காப்போம் என்றும் கலைஞனைப் போலே

அன்னிய மொழிகள் அரித்திட முயலினும்
தோற்கச் செய்து தேறுதல் அளிப்போம்
தேறுதல் நாமே தெள்ளிதின் உரைத்தால்
மக்கள் கூட்டம் மங்கா(து) என்றுமே

மொழிகள் அனைத்திலும் முதன்மை மொழியிது
தமிழே என்றும் தன்னிகர் மொழியே
இதனைக் காக்க இன்னுயிர் நீத்தோர்
இன்றும் நினைவில் ஈரமாய் உறைகிறார்

மொழிப்போர் மீண்டும் மையம் கொள்ள
எதிர்ப்போர் அதனை எதிர்த்துக் கேட்க
நினைப்போர் இன்று தரணியில் வாழ
மீட்போர் நாமென உறுதி கொள்வோம்.

-    நிலைமண்டில ஆசிரியப்பா

தந்தை பெரியார் வாழ்கவே!

                                             Image result for periyar


அறிவுச் சுடரே! ஆக்கத் திருவே!
அனைவர் உள்ளமும் அணைக்கத் துடிக்கும்
அன்புத் தந்தாய்! ஆருயிர் நீயென
அகிலம் போற்றும் அணையா விளக்கே!

தன்னலம் கொண்ட தலைவர் இடையே
பொதுமை கொண்டு பொதுத்தொண் டாற்றினாய்!
மாறினர் பலரும் வசைச்சொல் நீங்கவே
சேர்ந்தனர் உம்மிடம் தாமாய் வந்தே!

வைக்கம் வீரர் வாழ்க்கை தன்னில்
வீரம் கொண்டு வீறிட்(டு) எழுந்து
வீணர் தம்மை வெற்றி கொண்டார்

பெண்கள் கொடுத்த பெரியார் பட்டம்
நீங்கா நிலைத்தது நெஞ்சில் இன்றும்
பேதை மக்களின் பேதமை விரட்டிப்
பெரியோர்க் கெல்லாம் பெரியார் ஆனாய்!

மறுமணம் என்னும் மாண்பை உரைத்து
மக்கள் மனதில் மங்காப் புகழுடன்
உயர்ந்து நின்றீர் உத்தமத் தலைவ!

திருக்குறள் மாநாடு சிறப்புற நடத்தி
வள்ளுவன் புகழை வையகம் பரப்பினார்

ஏழை மக்கள் எளிதாய்ப் பயில
நிலத்தைக் கொடுத்து நீங்கா நின்றார்

சாதி என்னும் சமூகப் பிணியைக்
கைத்தடி கொண்டு விரட்டி அடித்தார்

அரசியல் உலகில் ஆணிவேர் ஆனவர்
ஞாலம் தழைக்க நாளும் உழைத்தவர்
இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றார்
பகைவர் ஆயினும் பரிவு கொண்டார்
பல்துறை அறிஞரைப் பாங்காய் நடத்தினார்

சீர்மிகு கருத்தைச் சிந்தைக் குரைத்துத்
தரணி போற்ற வாழ்ந்தவர் நீயே!
என்றுமே மறவோம் உம்புகழ் யாமே!

காலம் வென்ற கலாம்

                                                     Image result for abdul kalam


கனவு கண்டதைக் கனவாய் விடாமல்
நினைவு கொண்டு நித்தம் செய்க
என்றே உரைத்த எந்தன் தலைவா!


பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்த்திட
நித்தம் உழைத்தாய் நீயும் விரைவாய்!
தீவில் பிறந்து தீபகற்பம் ஆண்டவன்
பாரே போற்றும் பல்புகழ் எய்தவன்!


சின்னக் குழந்தையின் சிறப்புத் தோழனாய்
சீரிய நெஞ்சொடு சிறப்புற வாழ
பல்வழி காட்டிச் சென்ற தலைவ!


கடின உழைப்பும் கற்ற கல்வியும்
என்றுமே உனக்கு ஏற்றம் தந்தது
இலட்சியக் கனவின் இலட்சிய நாயகா!


பாராட்டு உன்னைத் தேடி வந்தது
பதவியும் உன்னைப் பார்த்து வியந்தது
மனிதப் பண்பே மாண்புயர் பண்பென
விளக்கிக் காட்டிய விடியலின் கீதமே!


அறிவியல் அறிஞராய் ஆக்கம் செய்து
அகிலத்தை ஆண்ட அப்துல் கலாமே!
அனைவர் உள்ளமும் அதிர்ச்சியில் ஆழ
அண்டி வந்தது அறிவிலி எமனே


விதைநெல் எடுத்து விதைக்கும் போது
விடாமல் வந்து விழுந்த செய்தி
விடியலில் தானே விரிவு பெற்றது

விழிக்கும் போது விழிநீர் சிந்தி
வியந்து பார்த்தேன் விளைவு தனையே!
வியத்தகு மனிதர் விடைபெற்றுச் சென்றார்


விண்ணும் மண்ணும் வியப்பு கொண்டது
விழிநீர் சிந்தி விடையும் கொடுத்தோம்
விழுதுகள் அற்ற விருட்சம் ஆனோம்


ஏவு கணையின் எழுச்சி நாயக
என்றுமே உம்மில் ஏற்றம் கொள்வோம்
மனிதனில் புனிதன் ஆனாய் நீயே!


தமிழினை உயிரெனத் தாங்கிட நீயும்
தரணியில் உரைத்த தாரக மந்திரம்

திருத்திய மசோதா திருப்பி அனுப்பித்
திருப்பம் செய்த திலகமே போற்றி!


கடமை கண்ணியம் கட்டுப் பாடெனும்
மூன்று முத்தை மூலமாய்க் கொண்டு
உழைத்த உண்மை உத்தமன் நீயே!


உலகமே திரண்டு உமக்காய் அழுதது
உண்மை மனிதரை உலகம் உணர்ந்தது


ஊனமுற் றோர்மனம் உவந்து நோக்கி
ஊழியம் செய்தாய் உவகை பொங்கவே


மனித மனத்தை மதிக்கத் தெரிந்த
மனிதருள் நீயே மாணிக் கம்மே


காலம் உன்னைக் கடத்திச் சென்றாலும்
கற்றவர் நெஞ்சில் கலந்தவன் நீயே!

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...