சேவியர் தனிநாயகம்
அடிகளார் (Rev. Xavier S. Thani Nayagam adigal)
யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி
தனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 02.08.1913 அன்று பிறந்தார்.
ஈழத்துத் தமிழறிஞர், மிகச்சிறந்த கல்வியாளர். இவர் தம்முடைய தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை
புனித அந்தோணியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம்
புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆங்கிலவழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல்
1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார்.
இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், ஸ்பானிஷ், போத்துக்கீசியம்
ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், ஹுபுரு, சிங்களம்,
தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றுத்தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். படிக்கும்
காலத்திலேயே இவருக்குப் பன்னாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தன.
திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில்
பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று
The Carthaginian Clergy என்ற தலைப்பில் இறையியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை
எழுதிப் பட்டம் பெற்றார். இந்த ஆய்வுக் கட்டுரை 1960-இல் நூல் வடிவில் வெளியானது.
குருத்துவக் கல்வியை
முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்
என்னும் ஊரில் உள்ள புனித திரேசா பாடசாலையில் துணைத் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.
1945-ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைப்
பட்டம் பெற்றார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கியத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில்
இயற்கை (Landscape and Poetry) என்னும் தலைப்பில் தனது ஆய்வினை நிகழ்த்தினார். இவர்
செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு
சென்றது.
1952 தொடக்கம்
1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில்
தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் (Educational Thoughts in Ancient Tamil
Literature) என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துக் கல்வியியலில் முனைவர்
பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். இந்த ஆய்வேட்டினைப் பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை இயக்குநராக இருந்த முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ
அவர்கள் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில்
பணியாற்றிய காலத்தில் தனிநாயக அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி
1952-ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்ப் பண்பாடு) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை
ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள்
வரை சென்றடைந்தது. இதன்காரணமாகப் பல்வேறு நாட்டு அறிஞர்கள் இவ்விதழில் தொடர்ந்து தமது
ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக்
கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராய்ச்சி
மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக
"Journal of Tamil Studies" என்னும் இதழுக்கான ஆசிரியராகச் சிறிது காலம்
பணியாற்றிப் பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்தார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும்
பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற
நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின்
முதல் தொகுப்பு இதுவாகும். அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒன்றே உலகம்"
என்ற தலைப்பில் 1963-ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார்
ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற பெயரில் 1967 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து Collected
papers of Thaninayagam Adigal என்னும் நூலாக வெளிக்கொணர்ந்தார் அந்நிறுவனத்தில் இயக்குநராகப்
பணியாற்றிய முதுமுனைவர் ச.சு. இளங்கோ.
தமிழைப் பற்றிய ஐரோப்பிய
மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு அளவில் தமிழ்மொழியை உலகின்
கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற
122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து
நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, செருமனி, உருசியம், மலாய், ஆங்கிலம்
போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக
விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு இதுவொரு வழித்துணை நூலாக
விளங்கவே இதனை வெளியிட்டார்.
தனிநாயக அடிகள் பன்மொழிப்
புலமை மிக்கவராக இருந்தாலும் தமிழ்மொழி மேல் மாறாத அன்பும் பற்றும் கொண்டிருந்தார்.
அம்மொழிப் பற்றைப் பற்றிய உணர்வுப்பூர்வமான நூல் நம்மொழி உரிமைகள். ஒவ்வொருவரும் தம்முடைய
தாய்மொழியைப் பேணி வளர்க்க வேண்டும். அது பற்றாகவே இருக்க வேண்டும். அது வெறியாக மாறிவிடக்கூடாது
என்பது பற்றியும் அதற்குத் தேவையான அறிவுரைகள் பற்றியும் அடிகளார் கூறும் செய்திகளைத்
தொகுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.
மொழியுணர்வு
தமிழா!
தமிழை
இழந்து நம் ஒப்பற்ற இலக்கியங்களையும்
பண்பாட்டினையும்
இழப்பதா!
தமிழை
இழந்து நம் செல்வச் செழிப்பை இழப்பதா!
வழிபாட்டுப்
பாடல்களையும் இழப்பதா!
தமிழை
இழந்து நம் கவின்கலைகளை இழப்பதா!
தமிழை
இழந்து பண்பாடின்றிப் புறக்கணிக்கப்பட்ட கீழ்
வகுப்பினராக
நம் சொந்த நாட்டில் வாழ்வதா!
தன்னலம்
கருதித் தமிழ் இனத்தைக்காட்டிக் கொடுப்பதா? பெரும்பான்மையோரின்
அடிமைகளாக வாழ்வதா – அல்லது
சாவதா
– இன்றேல் சம உரிமைகளுடன் தனி
இனமாக
(Nation) மானத்துடனும் புகழுடனும் சேர்ந்து இயங்குவதா?
அம்மான நிலையை அடைய,
விடாது முயல்க.
மேற்குறிப்பிட்ட
பாடல் 1956-ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் என்னும் தீர்மான
நகலை எதிர்த்துக் குரல் எழுப்பிய தனிநாயக அடிகளாரின் பாடல். அத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாகவும் பல்வேறு சமூகப் பிணிகளினால் சிதறுண்டு கிடக்கும் தமிழ்மக்களை
ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் உரையாற்றினார் அடிகளார்.
அடிகளாரின்
அப்பேச்சு “நம் மொழியுரிமைகள்” என்ற தலைப்பில் அமைந்தது. கண்டியில் உள்ள தமிழ்ப்பண்பாட்டுச்
சங்கம் 1956-ஆம் ஆண்டு அதனை நூலாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. நம் மொழியைக் காக்க
செய்யவேண்டிய செயல்கள், நம்மொழியின் உரிமைகள் போன்றவற்றை அவருடைய பேச்சாற்றல் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார். அந்நூலின்வழி அவருடைய மொழியுணர்வு எவ்வாறு வெளிப்படுகிறது.
அம்மொழியுணர்வு என்பது வெறும் பேச்சுக்காக மட்டும் அவர் கூறவில்லை. வாழ்க்கையிலும்
செயல்முறைப்படுத்தியுள்ளார்.
உணர்வு - உரிமை
உணர்வு
என்பது எல்லா மனிதரிடமும் இயற்கையாய் அமைந்த ஒன்று. அது உடல் சார்ந்த உணர்வு. ஆனால்
மனம் சார்ந்த உணர்வு என்ற ஒன்று உண்டு. அதுவே, மொழியாகும். மொழி மனம் சார்ந்து இயங்குகிறது.
நம் மனத்தின் எண்ணங்களையே மொழி வாயிலாக வெளிப்படுத்துகிறோம். அது கோபமோ, மகிழ்ச்சியோ,
இன்பமோ, துன்பமோ எதுவானாலும் சரி. அதனை மொழி வாயிலாகப் புலப்படுத்தத் தெரிந்தவர்கள்
தான் உயர்திணை மக்கள்.
மொழியுணர்வு
என்பதற்கு டாக்டர் பொற்கோ, “ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மனத்தில் உள்ள
அந்த மொழியைப் பற்றிய உள்ளுணர்வை மொழியுணர்ச்சி என்று பொதுவாகக் குறிப்போம். இதே அடிப்படையில்
பார்த்தால் தமிழர்களின் மனத்திலுள்ள தமிழைப்பற்றிய உள்ளுணர்வுதான் தமிழுணர்ச்சி என்பது
விளங்கும். இந்த உணர்ச்சி தனிமனித விருப்பு வெறுப்பு போன்ற உணர்ச்சியல்ல” என்று வரையறை
செய்வார்.
அடிகளார்
குறிப்பிடும்போது, இன்று ஓர் இனத்தாரின் மொழிக்குச் சமஉரிமை கொடுப்பதே முறையாகும்.
மக்கள் சமகுடிகளாயின் ஒரு நாட்டில் சமத்துவம் விளங்குமாயின் சிறுபான்மையோர் பேசும்
மொழிக்கும் பெரும்பான்மையோர் பேசும் மொழிக்கும் சமஉரிமை சட்டத்தால் அளிக்கப்படுதல்
வேண்டும். இன்றேல் சிறுபான்மையோரைக் குறைந்த குடியுரிமை உடையோராகவும் கருதுவதற்கு இடமுண்டு
என்பார்.
எந்நாட்டினைச்
சார்ந்தவர்களாக இருந்தாலும் தம் தாய்மொழியின் மீது மதிப்பு வைக்காதவர்கள் யாரும் மொழியுணர்ச்சி
அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இதன் மூலம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்தை
எதிர்த்துத் தம்முடைய மொழியுணர்ச்சியை வெளிப்படுத்தினார் அடிகளார். இச்செயலை எதிர்ப்பது
தமிழ்மக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
மொழியைக் காக்க (வளர்க்க) நடவடிக்கைகள்
ஒரு
நாட்டின் மொழியை அது சிறுபான்மையான மக்களால் பேசப்படும் மொழியாக இருப்பினும் அது அந்நாட்டில்
வழங்கிவரும் மொழியாயின் அம்மொழிக்கும் சமஉரிமை அளித்து அதனைச் சட்டமொழியாக்க வேண்டும்
என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர்கள், அதற்காகத் தன் இன்னுயிரை மாய்த்தவர்கள் எல்லோரும்
மொழியைக் காக்கவந்த மறவர்கள். அம்மறவர்களின் வரிசையில் தனிநாயகரும் ஒருவர்.
தனிநாயக
அடிகளார் நம் மொழியைக் காக்க மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள், ஆற்றவேண்டிய செயல்கள், நிறைவேற்ற
வேண்டிய பணிகள், பங்களிப்புகள் குறித்து உரையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
1956-ஆம் ஆண்டில் (சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு) பேசுகின்ற தனிநாயக அடிகளார், தமிழ்
மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவ்வொற்றுமையின் வலிமையால் தம் உரிமையை நிலைநாட்டாவிடின்
எதிர்காலத்தில் அதனைப் பெறப்போவதில்லை என்று உரைத்தார் (இன்றும் அந்நிலைமை உள்ளதை அறியலாம்)
பின்நிகழப்போவதை முன்பே உரைத்த தீர்க்கதரிசி அவர்.
தமிழ்மொழியினைக்
காக்க எடுக்கவேண்டிய நடைமுறைகளாக, பல்வேறு உரிமைகளை நாம் பெறவேண்டும் என்று கூறும்
அடிகளார் பத்துக்கும் மேற்பட்ட கருத்துகளை இங்கு முன்வைக்கிறார்.
- அரசியல்வாதிகளுடனும், அரசியல் துறையில் நம் உரிமைகளைப் பெற நிகழ்த்தும் இயக்கங்களுடனும் நாம் ஒத்துழைக்கவேண்டும்.
- அனைத்து விண்ணப்பப்படிவங்கள் (Forms), கடிதங்கள் (Letters), அதன் முகவரிகள் (Address), கையெழுத்து (Signature) போன்ற அனைத்தையும் தமிழில் எழுதுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
- அனைத்துத் துறைகளிலும் தமிழைக் கையாள வேண்டும்.
- இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தமிழிலேயே பேசி, எழுதிவரல் வேண்டும்.
- தமிழ்மொழி உரிமைகளைப் பெற முயலும் இயக்கம் இதுகாறும் வெற்றிபெறாததற்குக் காரணம், தமிழ்மக்களின் உணர்ச்சியின்மை என்றே கூறவேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
இது இன்றளவும்
உண்மையாகவே அமைந்துள்ளது என்பது வேதனைக்குரியது.
மேற்குறிப்பிட்ட
கருத்துகளின் மூலம் தமிழ்மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் மொழிக்காகப்
பாடுபடவேண்டும் என்ற கருத்தை முன்மொழிகிறார்.
அடிகளாரின் உணர்வு - உழைப்பு
அடிகளார்
தமிழ்மொழியின் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். அவருக்கு பதினைந்திற்கும்(15) மேற்பட்ட
மொழிகள் தெரிந்திருப்பினும் தம் தாய்மொழியாகிய தமிழை அவர் உயிரினும் மேலாக நினைத்துப்
போற்றிவந்தார். அவர் இருபதுக்கும்(20) மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
அங்குள்ள மக்களின் மொழியுணர்வு, கலாச்சராரம், பண்பாடு போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து
பார்த்து அதனை ஒன்றே உலகம் என்ற நூலின்
வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் உலகில் எல்லா திசைகளிலும் தமிழனின் எச்சங்கள்
இருப்பதாகக் கூறுகிறார். அந்நூல் தமிழரின் வரலாற்றை உலகிற்கு அறியச்செய்தது என்றால்
மிகையில்லை.
ஒன்றே
உலகம் என்ற நூலில் ரோமில் உள்ள போப்பாண்டவர் அவர்களின் அரிய நூல்கள் பிரிவில் தமிழ்
நூல்கள் கிடைத்ததாகச் செய்திகளைத் தந்துள்ளார். தாய்லாந்து நாட்டிற்குச் சென்றபோது
மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் அங்குள்ள மன்னர் முடிசூட்டுவிழாவில் பாடுவர் என்று
கூறியுள்ளார். இதன்மூலம் அடிகளாரின் மொழியுணர்வு புலனாகும்.
நம்மொழி
உரிமைகள் என்ற தலைப்பில் அமைந்த அடிகளாரின் உணர்ச்சிப்பேரூரை வெறும்பேச்சாக மட்டுமல்லாமல்
செயலாகவும் இருந்துள்ளது என்பதற்கு ஒன்றே உலகம் என்ற நூல் ஒரு சான்று.
மொழியுரிமை
மொழியை
அழிக்கும்போது அந்த இனமும் அழிந்துபோகும். எனவே மொழியின் வளமை அழியாமல் இருக்க அடிகளார்
கூறுவது, ஒவ்வொருவரும் தாய்மொழியில் எழுதுங்கள், பேசுங்கள் என்கிறார். பின்லாந்து,
பெல்ஜியம் போன்ற நாடுகளில் அந்நாட்டினுடைய மொழி சிறுமைபடுத்தப்பட்டபோது அவர்கள் 700
ஆண்டுகளும், 100 ஆண்டுகளும் தாய்மொழிக்காகப் போராடி வெற்றிபெற்று இன்று வளமுடன் வாழ்கின்றனர்
என்று வரலாற்றில் நடந்த சில செய்திகளைக் குறிப்பிடுகிறார் அடிகளார்.
பிறநாட்டினர்
தம்மொழிக்காகப் போராடி வெற்றிபெற்றுத் தம்மொழிக்கான சமஉரிமை பெற்று மகிழ்வுடன் வாழ்கின்றனர்
என்று ஏக்கத்துடன் கூறுகிறார். இந்த வெற்றியே அடிகளாரின் இப்பேச்சுக்குக் காரணமாக அமைந்தது.
அத்தூண்டுதலால்தான் மற்றவர்களைத் தட்டியெழுப்பி, சைவர், வைணவர், இஸ்லாமியர், கத்தோலிக்கர்
என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மையை ஒழித்து அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்
பின்லாந்து, பெல்ஜியத்தைப்போல நாமும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை விதை ஊன்றுகிறார்
அடிகளார். அதனை வேரூன்ற வைத்து மரமாக வளர்க்கவேண்டியது நம் கடமை.
மொழியடக்கு முறைக்கு எதிரான போர்
தமிழ்மொழியைத்
துச்சமென மதித்துத் தமிழ்மொழி பேசும் மக்களையும் நாட்டை விட்டுத்துரத்தும் சிங்கள அரசினையும்
கண்டு வெகுண்டார் அடிகளார். தமிழ் மக்கள் தங்கள் உயிருக்கு இன்னல் நேரிடினும் தமிழ்மொழிக்கு
அழிவு நேராவண்ணம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்தார்.
எங்கள்
பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள
தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
என்ற
பாரதிதாசனின் அரிமா முழக்கத்திற்கிணங்க அனைவரும் ஓர் இயக்கமாகச் சேரவேண்டும் என்று
வலியுறுத்துகிறார். ஆனால் அதிலும் தமிழ்மக்கள் ஒரு மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்
என்றும் கூறுகிறார். நம்முடைய இந்த எதிர்ப்பு
அரசின் மீதும் அதனை ஆதரிப்போர் மீதும் இருக்கவேண்டுமே தவிர “சிங்கள மக்கள்பால் சிந்தையாலும்
செயலாலும் அன்பும் அறனும் காட்டி அவர்களுடன் ஒழுகவேண்டும். அவர்களுக்குச் சிறிதேனும்
சிந்தையாலோ, செயலாலோ தீமைசெய்யலாகாது. அவர்கள் இயற்கையில் நற்குணம் படைத்தவர்கள். அவர்களுள்
பலர் சிறுபான்மையோரைப் பாதிக்கும் இதுபோன்ற சட்டங்களை விரும்புவதில்லை. ஏனையோர் பெரும்பான்மையோரின்
ஆட்சியென்றால் தனிச்சிங்கள ஆட்சியாதல் வேண்டுமென்று நம்புகின்றனர். அவர்கள் அறியாது
செய்வதை நாம் பொறுத்தல் வேண்டும். அதுவே தமிழ் அறம்.
இன்னா செய்தார்க்கும்
இனியவே செய்யாக்கால்
என்ன
பயத்ததோ சால்பு (குறள். 987)
என்று
கூறும் அடிகளாரின் அன்புள்ளமும், கருணை உருவமும் இன்றும் போற்றத்தக்கது. எனவே தமிழறத்தைப்
பிழையாது நம் உரிமையைக் காப்போம்.
மொழிப்போர்: ஆற்றவேண்டிய அரும்பணிகள்
அடிகளார்
மொழிப்போரின்போது செய்யவேண்டிய அரும்பெரும் பணிகளைப் பின்வருமாறு கூறுகிறார். தனிச்சிங்களம்
சட்டமாகிவிட்டது இனிச்செய்வது யாதொன்றுமில்லை என்னும் மனப்பான்மை கோழையின் மனப்பான்மையாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தம்மீது படையெடுத்துவந்த மாற்றாரைப் புறங்கண்ட தமிழன்னை நம்மிடம்
வீரத்தையும் ஆற்றலையும் எதிர்பார்க்கிறாள் என்று அடிகளார் நட்ட விதைக்கு உரமேற்றுகிறார்.
அந்த எதிர்ப்பு காலமறிந்து, இடமறிந்து, கண்ணோட்டத்துடன் செய்வது நலம்பயக்கும்.
மேலும்
தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை யாதொன்றும் வளர்க்காது தமிழ்மொழியின் பெருமையினை
நிலைநாட்ட வேண்டும். அதோடு தாம் காட்டவேண்டிய வீரத்தையும் வளர்க்கவேண்டும். தமிழ்மொழியின்
உரிமைப்போர் இன்று(1956) ஆரம்பித்துள்ளது. இப்போரில் வெற்றிகாணுமட்டும் தமிழ்மக்கள்
அனைவரும் அணிவகுத்து ஆடவரும், பெண்டிரும், மாணவரும், முதியோரும், நாள்தோறும் போரில்
பங்குபெற்று ஒத்துழைப்பது நம்முடைய கடமை.
தமிழ்மக்களே!
தமிழ்த்துறைகள் அனைத்தையும் காப்பாற்றவேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்மக்களின் முயற்சியை
வருங்காலத்தில் வரலாறு புகழ்ந்து கூறுமென்று முழங்குகிறார். அடிகளார் எங்கு சென்றாலும்
தமிழின் வளமையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் எடுத்துகூறத் தவறுவதில்லை.
மேற்குறிப்பிட்ட
கருத்துகளால் அடிகளார் தம்மொழியைக் காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
ஒன்றுபட்டால் தானே வாழ்வு, நம்மில் அவ்வொற்றுமை இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு
மட்டுமல்ல. நம்மொழிக்கே அதுகேடு. நம்மொழிக்குக் கேடு விளைவிக்கும் அந்நிய சக்திகளை
வேரூடன் அழிப்போம். நம்மொழியை வளர்க்க அனைவரும் தமிழிலேயே அனைத்துத் துறைகளையும் கையாளுவோம்.
பிறநாட்டினர் தமிழ்மீது கொண்டிருக்கும் பற்றினை நாமும் கொள்வோம் என்னும் இதுபோன்ற பல
அரிய கருத்துகளை அடிகளாருடைய நம்மொழி உரிமைகள் என்ற உரையின் வழி அறியமுடிகிறது.
மொழியால்
இணைவோம்; தாய்மொழியிலே பேசுவோம்; நம்மொழி உரிமையைக் காப்போம்.
பார்வை நூல்கள்
- தனிநாயக அடிகளார் - நம்மொழி உரிமைகள்
- அமுதன் அடிகள் – சேவியர் தனிநாயக அடிகள்
- ச.சு. இளங்கோ – தமிழ்ப்பேரறிஞர் தனிநாயக
அடிகளார்
- ஆ. ஏகாம்பரம் – தனிநாயகம் அடிகளாரின்
தமிழியல் ஆய்வு மரபு (கட்டுரை)
- போ. ஜான்சன் – ச.சு. இளங்கோ வாழ்வும்
பணியும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன