சனி, 18 ஏப்ரல், 2020

*கறுப்பர் நகரம்* – *கரன் கார்க்கி*

கரோனா காலத்தில் வாசிப்பு

*கறுப்பர் நகரம்* – *கரன் கார்க்கி*
பாரதி புத்தகாலயம்
-------------------------

சென்னை என்றதுமே நம் நினைவில் வருவது நீண்ட கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டிடங்கள், சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், நினைவு இல்லங்கள், கோட்டைகள், கூவம் நதி என விரியும். ஆனால், கூவம் நதிக்கரை ஓரமாக வாழ்ந்துவரும் ஆயிரம் ஆயிரம் குடிசைகளும், அதற்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துகூட பார்ப்பது கிடையாது. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல். அதிலும் குறிப்பாக மத்திய சென்னை மக்களைப் பற்றிய பதிவாக இது அமைந்துள்ளது.

முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் முரண்பாடும் அதன்விளைவாக எழுந்த புரட்சியும் இந்நாவல் பேசுகிறது. இதற்கு இடையே செங்கேணி – ஆராயி இவர்களின் காதல் வாழ்வும், அவர்கள் குடும்பத்தோடு இணைந்த மற்றவர்களின் பிணைப்புமாக நாவல் விரிகிறது. அடிமை வாழ்வில் இருந்து கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையையும், அவர்களைக் குறிப்பிட்ட சில வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் குறித்து விரிவாகப் பேசுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. இளமையில் கல்வி கற்க வாய்ப்பிருந்தும் அதனைப் பயன்படுத்தமால் இருந்தமையால் உருவான வெறுமையைப் பதிவுசெய்கிறது.

ஆற்றோரத்தில் வசிக்கும் மனிதர்கள் அரசுவேலைக்குச் சென்றபிறகு அதனை மறந்து சென்றுவிடும் நிலையில், அரசுப்பணியில் இருக்கும் சிலரின் உதவியோடு அங்கு படிப்பு மையம் திறக்கப்பட்டு தினக்கூலிகளின் இரவுப்பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் போக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நடத்தப்படும் இரவுப்பள்ளி சிறப்புடன் செயல்படும் விதத்தினையும், அதில் பணிபுரிந்த வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்ததையும் நாவலில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

சாதாரண மனிதர்களைப் பீடித்து அழிக்கும் கள்ளச் சாராய விற்பனையும், அதன்மூலம் சீரழியும் பல்வேறு குடும்பங்களையும் பதிவுசெய்துள்ளார். காவலர்களின் ஒழுக்கக்கேடும், அவர்கள் தங்கள் பணியைச் செய்வதில் காட்டும் தொய்வும் கூட சாதாரண மனிதர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதனைக் காட்டியுள்ளார். நகரமயமாதல் சூழலில் நடக்கும் அசாதாரண வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் சிதையும் குடும்ப அமைப்பும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோபமும், இயலாமையும், காமமும், தனிமையும், அரசியலும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச்செல்லும் என்பதனை கறுப்பர் நகரம் நாவல் மூலம் கட்டியமைத்துள்ளார் கரன் கார்க்கி. இந்நாவல் சென்னையின் அசூர வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வரலாற்றுச் சரித்திரம் என்பதில் ஐயமில்லை.

---------

பிம்பச் சிறை* *எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்*

வாசிப்பின் திரை

*பிம்பச் சிறை*
*எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்*

எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்)
-------------------

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதி அவரின் அரசியல் பயணத்தையும், அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இதுபோன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).

திரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைமுறையாக இருந்தது (காட்டு: சத்துணவுத் திட்டம்).

எம்.ஜி.ஆர் ஒரு அழிக்க முடியாத, ஒரு அழியாத சக்தி என தமிழக அடித்தட்டு மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அவருக்காகப் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவருடைய திரைத்துறையின் சாதனையைப் பயன்படுத்தி வெற்றிகண்ட திமுக அதனை உடைக்க எடுத்த முயற்சிகள் ஏராளம். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் புற்றீசல்கள்போல் கிளம்பின. அனைத்தும் அவரைப் பற்றிய புகழுரைகள் என்பது நோக்கத்தக்கது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், திரைப்படங்களில் அவர் தோன்றி பேசும் வசனங்களையும் மக்கள் ஒன்றாக வைத்து எண்ண மறந்து (மறுத்தும்) விட்டார்கள். அவர்களின் பொதுபுத்தியில் இருந்தவை அனைத்தும் அவருடைய திரைக்காவியங்களே.

தமிழக மக்களின் மனநிலையையும், அதனைப் பயன்துய்த்துக் கொண்ட கதை நாயகனையும் பற்றிய விளக்க நூலாகவே இது அமைகிறது. இறுதியாக, “எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாகப் பதிவு உள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது இந்நூலினைப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். இதன்மூலம் திரைப்பிம்பம் கட்டுடைக்கப்படும் என்பது நிதர்சனம்.

-----------------

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...