சமூகம்
என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை
அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது,
இது பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல் சமூக மற்றும்
தொழில்துறை உள்கட்டமைப்பு எனலாம் என விக்கிபீடியா விளக்கம் அளிக்கிறது. எவ்வாறாயினும்
தனிமனிதன்தான் சமூகத்தைக் கட்டமைக்கிறான். அவனுள் ஏற்படும் பல்வேறுவித மாற்றங்களால்
இந்தச் சமுதாயத்தில் ஏதேனும் விளைவு ஏற்படுகிறது. அவ்விளைவுகளே சமூகத்தாக்கமாகப் பரிணமிக்கிறது.
தனிமனிதன் தான் சார்ந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொள்கின்ற அல்லது சமுதாயம் ஏற்படுத்துகின்ற
தாக்கத்தைப் பதிவு செய்கிறான். அப்பதிவுகள் ஏதாவது ஒரு படைப்பாக வெளிப்பட்டு மிளிர்கிறது.
அவனுள் ஏற்பட்ட தாக்கம் இச்சமூகத்திற்கு ஏற்படாமலும் புரிந்து கொள்ளப்படாமலும் போகலாம்.
அதனாலேயே தனிமனிதத் தாக்கம் என்று புரிந்துகொண்டும் இத்தொகுப்பை உணர்ந்து கொள்ளலாம்.
சமூகத்தில் ஏற்படும் பெரும்பான்மையான நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டே இது நிகழ்த்தப்
பெறுகிறது என்பதாலேயே இது சமூகத்தின் ஒட்டுமொத்த தாக்கம் என்றும் பதிவு செய்யலாம்.
மேற்கூறப்பட்டவாறு தன்னுடைய வாழ்க்கையில்
ஏற்பட்ட தாக்கத்தையும் தன்னுடைய சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்ட தாக்கத்தையும் ‘கூடுகள்
சிதைந்தபோது’ என்னும் படைப்பாக வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் அகில். அவருடைய பின்புலம்
இலங்கையைச் சார்ந்தது. எனவே அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் பிரிவு, துயரம், அழுகை
போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளது. தற்போது ஆசிரியர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து
வருகிறார்.
இலங்கையில் போரின்போது ஏற்பட்ட தாக்கம்
தமிழகத்தை மட்டுமல்ல. தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது
என்றால் மிகையில்லை. அவ்வாறான தாக்கம் கவிதை, சிறுகதை, நாவல் என ஏதாவது ஒரு படைப்பாக
வெளிவருகிறது. அது பிற்காலத்தில் வரவிருக்கும் சந்ததியினருக்கு ஒரு அழியா நினைவாக அமைந்து
விடுகிறது.
இதுபோன்ற படைப்புகள் தம் நாட்டைவிட்டு
அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளத்தக்கதாய்
அமைகிறது. அவர்களின் படைப்புகளில் நாம் உள்ளார்ந்து சென்று அவர்களுடன் இயைந்து வருவது
போன்று உள்ளன. இத்தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. அவற்றைத் தனிமனிதத் தாக்கம், சமூகத்
தாக்கம் என இருவகையாகப் பாகுபடுத்தி இக்கட்டுரை விரிகிறது.
தனிமனிதத் தாக்கம்
தனிமனிதன் தான் சார்ந்த சூழலில் எவ்வாறு
மற்றவர்களின் உணர்வோட்டங்களுக்குள் ஒத்து வாழ்கிறான் என்பதனை விளக்குவதே ஆகும். இத்தாக்கம்
இவ்வாறான தனி மனிதத் தாக்கத்திற்கான சிறுகதைகளாக இத்தொகுப்பில், ‘அம்மா எங்கே போகிறாய்?
உறுத்தல், ரேடியோ பெட்டி, கிறுக்கன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
‘அம்மா எங்கே போகிறாய்?, உறுத்தல்’ என்ற
இரண்டு கதைகளும் வயதான தன்னுடைய தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.
‘அம்மா எங்கே போகிறாய்’ என்ற சிறுகதையில்
பெற்றெடுத்த மகனுக்கும் மகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகளினால் அலைக்கழிக்கப்படும் ஒரு
தாயின் வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதனால் அவளாகவே யாரிடமும் சொல்லாமல் முதியோர்
இல்லத்தில் அடைக்கலம் தேடுகிறாள். தன் மகன் அல்லது மகள் தன்னைக் கண்டு அழைத்துச் செல்வார்கள்
என்ற நம்பிக்கையில்.
‘உறுத்தல்’ கதையில் இளங்கோவின் மனைவிக்கு
ஆகாத மாமியார் பாத்திரமாக அவனுடைய அம்மா உள்ளாள். அவளை அழைத்துக் கொண்டுபோய் முதியோர்
இல்லத்தில் விட முனையும்போது அவனது குழந்தை,
“அப்பம்மா! அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் உங்களை மாதிரி வயசான பிறகு நானும் அவயள இங்கதான் கொண்டுவந்து சேர்க்க
வேணும் என்ன?”
என்ற கேள்வி
இளங்கோவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தன் தவற்றை உணர்கிறான். மீண்டும் வீட்டிற்கே
திரும்புகின்றனர். ஆனால் அவனுடைய தாயின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதாகக்
கதை முடிகிறது.
‘ரேடியோ பெட்டி’ சிறுகதையில் கணவனை இழந்த
மனைவியான பூரணம் மாமி என்ற கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது. அவளுடைய ரேடியோ பெட்டியைச்
சரிசெய்தே ஆகவேண்டும் என்றும் அது அவளுடைய கணவனின் நினைவாக வைத்திருந்தாள் என்றும்
கதை விரியும். அதைச் சரிசெய்ய இயலாது என்றும் அதற்குப் பதிலாக வேறு புதிய ரேடியோ பெட்டி
வாங்கித் தருவதாகச் சொல்லியும் அவளின் மனம் அதற்கு உடம்படவில்லை. இறுதியில் சரிசெய்ய
இயலாத ரேடியோ பெட்டியை நினைத்து உடைந்து இறந்தே போகிறாள் மாமி என்றவாறு கதை நிறைவு
பெறும்.
‘கிறுக்கன்’ கதையில் வரும் வெள்ளையன்
(நாய்), கண்மணி (பூனை) இறப்பிற்காகச் சிறுகுழந்தைகளின் கதறல் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
சமூகத்தில் உள்ளவர்கள் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அக்குழந்தைகள் மனநிலையில்
அவைகளின் இழப்பு தாங்கமுடியாத சோகத்தை நிலைநிறுத்தியது என்பதாகக் கதை வளர்ந்து செல்லும்.
இறுதியில் இறப்பு என்பது நிச்சயம். இறப்பிற்குப்பின் பல பிறவிகள் உண்டு என்ற சிவபுராணப்
பாடல் வரிகளோடு கதை நிறைவு பெறும்.
மேற்கூறப்பட்ட கதைகளின் ஊடாக தனிமனிதனின்
தாக்கம் உணரப்பட்டாலும் அவையனைத்தும் இச்சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும்
இவையனைத்தையும் ஒரு குறியீடாகவே அகில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் உணரமுடிகிறது.
சமூகத் தாக்கம்
சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலும்
இறுதியில் தனிமனிதத் தாக்கத்தில்தான் நிறைவுபெறும். ஆனால் அது இச்சமூகத்திற்கு ஏற்படுத்தும்
வலியால்தான் அதனை இவ்வாறு வகைப்படுத்த காரணமாகிறது.
‘வலி, இது இவர்களின் காலம், கூடுகள் சிதைந்தபோது,
பதவி உயர்வு, கண்ணீர் அஞ்சலி’ போன்ற கதைகள் இவ்வகையில் சேர்க்கலாம்.
‘வலி’ என்ற சிறுகதையில் புலம்பெயர்ந்து
வாழும் மயூரனின் மனம் தனக்கு முன்னால் செல்லும் ஒரு வண்டியில் அடைத்துச்செல்லும் பன்றிக்கூட்டங்களின்
அவலநிலையில் நிலைகொள்கிறது. தான் எவ்வாறு கனடாவிற்குப் புலம்பெயர்ந்தோம்; என்று நினைத்து
மனம் வெதும்புவதாக இக்கதை அமைகிறது. புலம்பெயர்ந்து வருவோரின் அவலநிலையையும் அவர்களின்
வலியையும் இக்கதை உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் விலங்குகளை (உயிர்களை) அடைத்துத்
துன்புறுத்தும் செயலினையும் பதிவு செய்துள்ளார்.
‘இது இவர்களின் காலம்’ சிறுகதையில் புலம்பெயர்ந்து
கனடாவிற்கு வந்ததும் தன்னுடைய நாட்டின் கலாச்சாரம் (தமிழ்க் கலாச்சாரம்), பண்பாடு போன்றவற்றைக்
கட்டிக்காப்பாற்ற முயலும் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையேயான முரண் சுட்டிக்காட்டப்படுகிறது.
புலம்பெயர்ந்த நாட்டின் சூழலுக்குத் தக்கவாறு தகவமைத்துக்கொண்ட இளைஞர்களிடம் வயதானவர்கள்
கொள்ளும் அச்சம் எவ்வாறு உள்ளது. இளையோர்களின் பார்வையில் முதியவர்கள் (கலாச்சாரப்
பண்பாட்டில் திளைத்தவர்கள்) எவ்வாறு பார்க்கப்படுகின்றனர். போன்றவை இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன்மூலம் ஒரு சமூகம் எவ்வாறு தன்னுடைய அடையாளத்தைப் புலம்பெயர்தல் மூலம் மறந்து அல்லது
மறைக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறார்.
‘கூடுகள் சிதைந்த போது’ என்ற தலைப்பு இத்தொகுப்பிற்கான
தலைப்பாகவும் அமைகிறது. இதில் கூறியுள்ளபடி கூடுகள் சிதையவில்லை. அது சிதைக்கப்படுகிறது
என்பது இங்கு நோக்கத்தக்கது. இங்குக் கூடு என்பது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பூங்காவில் அவன் நடந்து கொண்டிருக்கும்போது கூட்டிலிருந்து பறந்துவந்த சிட்டுக்குருவியைக்
காரில் வந்தவன் அடித்துவிட்டு சென்று விடுகிறான். அடிபட்டுக் கிடக்கும் தன்னுடைய இணையின்
பிரிவினைத் தாங்கமுடியாமல் தன்னுடைய சிறகுகளை விரித்துக்காட்டி அதனையும் தன்னுடன் பறந்து
வருமாறு அழைக்கும் சிட்டுக்குருவின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டுச் சிந்தனையில் ஆழ்கிறான்.
கதை பின்னோக்கிச் செல்கிறது. அவனுடைய அக்கா, அக்கா மகன், வயிற்றில் குழந்தையுடன் இருந்த
அவன் மனைவி ஆகியோருடன் போரின்போது தப்பிப்பிழைக்க ஓடும்போது குழந்தையுடன் அவனுடைய மனைவி
துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிறாள். துணையைக் கண்ணுக்கு முன்பே பிரிந்த வருத்தம்
எவ்வளவு கொடுமையானது அதன் நோக்கத்திலேயே அந்தச் சிட்டுக்குருவியின் நிலையையும் எண்ணிப்பார்க்கிறான்.
இவ்வாறு மனைவியை இழந்த இளங்கணவனின் வாழ்க்கையினை மீட்டுருவாக்கம் செய்து இக்கதையில்
பதிவு செய்கிறார்.
இக்கதை உண்மையிலேயே மனத்தை உருக்கும் காட்சியாக
அமைகிறது. இக்கதையின் தலைப்பும் அதற்கேற்றாற்போல் வைத்துள்ளார். அதோடு இத்தொகுப்பிற்கும்
இத்தலைப்பு கொடுத்தது மிகச்சிறப்பு. இத்தலைப்பு ஒரு குறியீட்டின் தாக்கம் என்பது இதனைப்
படிக்கும் போது உணரலாம்.
‘பதவி உயர்வு’ கதையில் போர்ச்சூழலில் தமிழர்களை
அழிக்கும் கடற்படைத் தளபதி தன்னுடைய மகன் ஒரு தமிழனுடன் நட்பு கொண்டுள்ளதை அறிந்து
அதனைக் கண்டிக்கிறார். இறுதியில் தன்னுடைய மகன் போரில் அவனுடைய நண்பனுடன் இறந்துபடுகிறான்
என்ற செய்தி கேள்விபடுகிறான். அதோடு அவனுக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. தான் செய்த
மிகப்பெரிய தவறு இது என்பதை உணர்ந்து அதற்காக வருந்தி அழுது தன்னுடைய பதவியைத் துறக்கிறார்.
இத்தனிமனிதன் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை இச்சமூகத்தோடு பொருத்திப்பார்த்து முடிவு செய்கிறார்
என்பதாக இக்கதை அமைந்துள்ளது.
‘கண்ணீர் அஞ்சலி’ கதையில் வன்னிப் போர்ச்சூழலில்
மருத்துவப் பணியில் ஈடுபட்டுவந்த மருத்துவத் துறையினரின் பணியைப் போற்றுவதாக இக்கதை
அமைகிறது. அவற்றுள்ளும் இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் போராளிகளுக்கு உதவிசெய்த ஒரு
மருத்துவரைப் பற்றி இக்கதை பேசுகிறது. போரின்போது மருத்துவரின் சாதனையை நம் கண்முன்னே
விரிவாகக் காட்டியிருப்பார். அவர்களுள் டாக்டர் பார்த்திபனின் மருத்துவப் பணியைப் பாராட்டியிருக்கிறார்
அவர்.
‘இராணுவ வீரர்களாக இருந்தால் என்ன? போராளியாக இருந்தால் என்ன?
டாக்டர்களுக்கு எந்த உயிர் என்றாலும் உயிர்தானே?’
என்று
அடிக்கடி கூறுவார் என்பதனைப் பதிவு செய்யும்போதே அவருடைய பணி யாருக்குரியது என்பது
தெளிவாகிறது. மருத்துவப் பணி என்பது நோயுற்றவர்க்கு மட்டுமே. அது யாராக இருக்க வேண்டும்
என்பதனை முடிவு செய்ய வேண்டியது அல்ல என்பது கருத்தாகக் கொள்ளப்படுகிறது. இக்கதையின்
இறுதியில் அவரும் அவருடைய ஒரே மகனும் இறந்துவிட்டனர் என்ற சுவரொட்டியைப் பார்த்து கண்ணீர்
சிந்துவதாக இக்கதை அமைந்துள்ளது.
நிறைவாக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன