சனி, 18 ஏப்ரல், 2020

*கறுப்பர் நகரம்* – *கரன் கார்க்கி*

கரோனா காலத்தில் வாசிப்பு

*கறுப்பர் நகரம்* – *கரன் கார்க்கி*
பாரதி புத்தகாலயம்
-------------------------

சென்னை என்றதுமே நம் நினைவில் வருவது நீண்ட கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டிடங்கள், சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், நினைவு இல்லங்கள், கோட்டைகள், கூவம் நதி என விரியும். ஆனால், கூவம் நதிக்கரை ஓரமாக வாழ்ந்துவரும் ஆயிரம் ஆயிரம் குடிசைகளும், அதற்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துகூட பார்ப்பது கிடையாது. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல். அதிலும் குறிப்பாக மத்திய சென்னை மக்களைப் பற்றிய பதிவாக இது அமைந்துள்ளது.

முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் முரண்பாடும் அதன்விளைவாக எழுந்த புரட்சியும் இந்நாவல் பேசுகிறது. இதற்கு இடையே செங்கேணி – ஆராயி இவர்களின் காதல் வாழ்வும், அவர்கள் குடும்பத்தோடு இணைந்த மற்றவர்களின் பிணைப்புமாக நாவல் விரிகிறது. அடிமை வாழ்வில் இருந்து கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையையும், அவர்களைக் குறிப்பிட்ட சில வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் குறித்து விரிவாகப் பேசுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. இளமையில் கல்வி கற்க வாய்ப்பிருந்தும் அதனைப் பயன்படுத்தமால் இருந்தமையால் உருவான வெறுமையைப் பதிவுசெய்கிறது.

ஆற்றோரத்தில் வசிக்கும் மனிதர்கள் அரசுவேலைக்குச் சென்றபிறகு அதனை மறந்து சென்றுவிடும் நிலையில், அரசுப்பணியில் இருக்கும் சிலரின் உதவியோடு அங்கு படிப்பு மையம் திறக்கப்பட்டு தினக்கூலிகளின் இரவுப்பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் போக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நடத்தப்படும் இரவுப்பள்ளி சிறப்புடன் செயல்படும் விதத்தினையும், அதில் பணிபுரிந்த வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்ததையும் நாவலில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

சாதாரண மனிதர்களைப் பீடித்து அழிக்கும் கள்ளச் சாராய விற்பனையும், அதன்மூலம் சீரழியும் பல்வேறு குடும்பங்களையும் பதிவுசெய்துள்ளார். காவலர்களின் ஒழுக்கக்கேடும், அவர்கள் தங்கள் பணியைச் செய்வதில் காட்டும் தொய்வும் கூட சாதாரண மனிதர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதனைக் காட்டியுள்ளார். நகரமயமாதல் சூழலில் நடக்கும் அசாதாரண வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் சிதையும் குடும்ப அமைப்பும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோபமும், இயலாமையும், காமமும், தனிமையும், அரசியலும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச்செல்லும் என்பதனை கறுப்பர் நகரம் நாவல் மூலம் கட்டியமைத்துள்ளார் கரன் கார்க்கி. இந்நாவல் சென்னையின் அசூர வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வரலாற்றுச் சரித்திரம் என்பதில் ஐயமில்லை.

---------

பிம்பச் சிறை* *எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்*

வாசிப்பின் திரை

*பிம்பச் சிறை*
*எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்*

எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்)
-------------------

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதி அவரின் அரசியல் பயணத்தையும், அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இதுபோன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).

திரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைமுறையாக இருந்தது (காட்டு: சத்துணவுத் திட்டம்).

எம்.ஜி.ஆர் ஒரு அழிக்க முடியாத, ஒரு அழியாத சக்தி என தமிழக அடித்தட்டு மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அவருக்காகப் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவருடைய திரைத்துறையின் சாதனையைப் பயன்படுத்தி வெற்றிகண்ட திமுக அதனை உடைக்க எடுத்த முயற்சிகள் ஏராளம். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் புற்றீசல்கள்போல் கிளம்பின. அனைத்தும் அவரைப் பற்றிய புகழுரைகள் என்பது நோக்கத்தக்கது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், திரைப்படங்களில் அவர் தோன்றி பேசும் வசனங்களையும் மக்கள் ஒன்றாக வைத்து எண்ண மறந்து (மறுத்தும்) விட்டார்கள். அவர்களின் பொதுபுத்தியில் இருந்தவை அனைத்தும் அவருடைய திரைக்காவியங்களே.

தமிழக மக்களின் மனநிலையையும், அதனைப் பயன்துய்த்துக் கொண்ட கதை நாயகனையும் பற்றிய விளக்க நூலாகவே இது அமைகிறது. இறுதியாக, “எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாகப் பதிவு உள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது இந்நூலினைப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். இதன்மூலம் திரைப்பிம்பம் கட்டுடைக்கப்படும் என்பது நிதர்சனம்.

-----------------

புதன், 11 மார்ச், 2020

உரிப்பொருள் அடிப்படையில் முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும்



பத்துப்பாட்டுள் உள்ள இரண்டு ஆசிரியப்பாட்டுக்களே முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும். இவ்விரண்டு பாடல்களையும் பாடியோர் முறையே காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார், கபிலர் ஆகியோர் ஆவர்.
இதில் நப்பூதனார் முல்லைப்பாட்டு மட்டுமே பாடியுள்ளார். கபிலர் சங்க இலக்கியத்தில் மிக அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அகம் மற்றும் புறம் இரண்டிலும் இவரது பாடல்கள் உள்ளன. அகத்தில் குறிஞ்சிப் பொருண்மை கொண்டே அதிக பால்களைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சிக்குக் கபிலர் என்ற சிறப்பும் இவருக்கு உள்ளது. நப்பூதனார், கபிலர் இவர்கள் இயற்றிய முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு இரண்டையும் உரிப்பொருள் அடிப்படையில் ஒப்பிட்டுக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

உரிப்பொருள் அடிப்படை

உரிப்பொருள் என்று இலக்கணிகள் வகைப்படுத்துவது ஒவ்வொரு நிலத்திற்குரிய ஒழுக்கங்களாக அமைந்துள்ளது. அவற்றைத் தொல்காப்பியர்,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
           ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
           தேருங்காலை திணைக்குரிப் பொருளே          (தொல். அகத்திணையியல், 14)

என்று குறிப்பார்.
அகப்பாடல்களுக்கு உரிப்பொருள் அடிப்படையாக அமைய வேண்டும் என்பது பொது விதி. அவை மயங்கி வருதல் கூடாது என்பது இலக்கணிகள் கருத்து. முதற்பொருளும் கருப்பொருளும் மயங்கினும் எந்நிலத்திற்கு உரியன எந்நிலத்திற்கு வந்தாலும் உரிப்பொருள் மாறி அமைதல் கூடாது. இதனை,

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத்திணையியல், 13)

என்ற தொல்காப்பிய நூற்பா இதனைச் சான்று காட்டி நிற்கின்றது.
இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருண்மைகளான முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு இரண்டும் உரிப்பொருளை அடிப்படையாகவும் அடையாளமாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

திணையும் அவற்றின் புறனும்

முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் இருத்தல் இருத்தல் நிமித்தமும், குறிஞ்சிக்குப் புணர்தல் புணர்தல் நிமித்தமும் ஆகும். இவ்விரு திணைகளையும் தொல்காப்பியனார் புறத்திணையியலில் முறையே முல்லைத்திணை வஞ்சிக்குப் புறனாகவும் குறிஞ்சித்திணை வெட்சிக்குப் புறனாகவும் குறிப்பிடுவார். அதனை,

வஞ்சிதானே முல்லையது புறனே       (தொல். புறத்திணையியல், 6)

என்றும்

வெட்சி தானே குறிஞ்சியது புறனே   (தொல். புறத்திணையியல், 1)

என்றும்
குறிப்பிடுவார் தொல்காப்பியர்.
இதில் முல்லைக்குப் புறனாக வஞ்சி வந்தது எவ்வாறெனின் தலைவனின் பிரிவால் தலைவி ஆற்றியிருத்தலும் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிய தலைவன் வெற்றிவாகை சூடக் காத்திருப்பதும் ஒப்பு நோக்கியே தொல்காப்பியனார் இவ்வாறு கூறியிருக்கிறார். அதோடு நற்சொல் கேட்டல் என்பது முல்லைத்திணையில் தலைவன் வரவிற்காகக் காத்திருக்கும் தலைவிக்கும், வஞ்சித்திணையில் போருக்குச் செல்லவிருக்கும் தலைவனுக்கும் பொருந்தி வருகின்றது. எனவே முல்லைக்கு வஞ்சியைப் புறனாகத் தொல்காப்பியர் வைத்திருக்கலாம் என்பது மற்றொரு கருத்து.
வெட்சிக்குப் புறனாகக் குறிஞ்சி வந்ததற்கு ‘‘நிரைகோடல் குறிஞ்சிக்கு உரிய மலைசார்ந்த நிலத்தின் கண் நிகழ்தலானும் இந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆநிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று’’ என்று இளம்பூரணர் குறிப்பிடுவார்.

பாட்டு என்பதன் விளக்கம்

சங்க இலக்கியப் பத்துப்பாட்டில், பாட்டு என்று வருபவை இரண்டு. அவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் மட்டுமே. பாட்டு என்பதற்குத் தொல்காப்பியர்,

அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே                      (தொல். செய்யுளியல், 34)

என்று கூறுகின்றார்.
மறைமலையடிகள் தம் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் பாட்டு என்பதற்கு விளக்கம் தருகின்றார். அவ்விளக்கம் வருமாறு,
‘‘உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம் தன்னகத்தே நெருங்கிப் பொதிந்து வைத்துப்பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப் பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டு’’ என்று குறிப்பிடுவார்.
‘‘பாட்டு என்பது அடிகளால் பரந்துபட்ட ஓசையுடன் வருவது’’ என்று ச.வே.சு. தம் பத்துப்பாட்டு உரையில் தொல்காப்பியர் வழிநின்று விளக்கிச்செல்கின்றார். பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் அடிச்சிறப்பும் பொருள் சிறப்பும் இனிய ஓசையும் கொண்டு அமைந்து பாட்டிற்குரிய பொதுவான இலக்கணம் கொண்டு அமைந்துள்ளன.

முல்லைப்பாட்டின் பின்புலம்

முல்லைப்பாட்டு பாடிய நப்பூதனார், தொடக்கத்திலேயே முல்லை நிலத்திற்குரிய தெய்வமான திருமாலை முன்னிறுத்திக் கூறுகின்றார். அதிலும் திருமாலின் வாமன அவதாரத்தில் உள்ள நிகழ்வைக் கார்காலத்தோடு ஒப்பிட்டுக் கூறத்தொடங்குகின்றார்.
அப்படிப்பட்ட கார்காலத்தே திரும்பி வருவேன் என்று கூறிய தலைமகன் காலம் நீட்டித்தான். அதனால் தலைவி துன்பமெய்தினாள். அவளை ஆற்றுப்படுத்த நற்சொல் கேட்டனர். அதனை நப்பூதனார்,

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
           உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
          நடுங்குசுவல் அசைத்த கையள்கைய
          கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர
          இன்னே வருகுவர் தாயர் என்போள்
          நன்னர் நன்மொழி கேட்டனம்

என்று குறிப்பிடுகின்றார்.
அதனை ஏற்காத தலைவி, தலைவன் பிரிவை நினைத்து வருந்தி நின்றாள்.
தலைவன் நிலையைக் காட்ட அவன் தங்கி இருக்கும் பாசறை வீடு, அதன் அமைப்பு, போன்றவற்றையும் அங்கு உள்ள யானைகளுக்குப் பாகர்கள் சோறு ஊட்டுவதும் என விளக்கிச் செல்கின்றார்.
மகளிரும் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். அதனை,

குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து
           இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
           விரிவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

என்ற அடியின் மூலம் நப்பூதனார் விளக்கிச் செல்கின்றார். இவ்வாறான பாசறையில் உள்ள பள்ளியறையில் காவலர்கள் சூழ தலைவன் இருந்தான். அவனுடைய சிந்தனை முழுவதும் அடுத்த நாள் போர் பற்றியும் அன்று நடந்த போரில் இறந்த வீரர்களைப் பற்றியுமாக இருந்தது. இதனை,

ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை           முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து

என்ற அடிகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது. அதோடு தலைவியைப் பிரிந்த தலைவன் அவளின் நினைவு சிறிதும் இன்றித் தன் வினையில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். பிரிவுகளில் போர்வயிற் பிரிவின் போது மட்டும் தலைவியைத் தலைவன் நினையாமல் இருப்பான் என்பது செய்தி.
அடுத்த நாள் போரில் வெற்றி வாகை சூடி பகைவர்கரின் இடத்தில் உள்ள பாசறையில் நிம்மதியாகத் தூங்கினான் என்று அவனது வினைமுடிந்து விட்டதை நப்பூதனார் தெளிவுபடுத்துகிறார். தலைவியின் நிலை கண்டு சுற்றத்தார் அவளைத் தேற்றினர். தலைவனும் வினை முடித்துத் தலைவியிடம் வந்து சேர்ந்தான்.

முல்லைப்பாட்டின் அடிச்சிறப்பு

முல்லைப்பாட்டு முதல் 23 அடிகள் தலைவியின் பெருந்துயர் பற்றியும் 24 முதல் 80 அடிகள் வரை தலைவன் போர்க்களப் பாசறை நிலை பற்றியும் 81 முதல் 103 அடி வரை தலைவியின் பெருந்துயர் போக்க தலைவன் வந்ததையும் கொண்டு அமைகின்றது. இதில் மேற்கூறப்பட்டவாறு அகத்திணையான முல்லையும் புறத்திணையான வஞ்சியும் கலந்து வருகின்றது.
இவ்வாறு பாட்டில் இடையறுந்து செல்லுதல் படிப்போரைத் தூண்டச்செய்யும் என்பார் மறைமலையடிகள். இம்முல்லைப்பாட்டில் வரும் செய்திகள் இருத்தலை அதாவது உரிப்பொருளை மையப்படுத்தியே அமைகின்றது.

குறிஞ்சிப்பாட்டின் பின்புலம்

குறிஞ்சிப்பாட்டு தலைவியின் நிலைபற்றித் தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்றல் என்னும் துறையில் அமைந்த பாட்டு. இதில், தலைவி திணைப்புனக் காவலுக்குச் செல்கிறாள். அவளுடன் தோழியும் செல்கின்றாள். அங்கு அவர்கள் கிளியை ஓட்டிக் கொண்டிருந்த போது மழைபெய்தது. அதனால் அவர்கள் நீராடி அங்குள்ள பல்வகையான மலர்களைப் பறித்துப் பாறையின் மீது போட்டு தழையாடைகளை உடுத்தினர். இவ்வாறாக அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலைவன் வருகின்றான். அவன் தலைவியிடம் பேசமுற்படுகின்றான். அவள் பேசவில்லை. அப்போது அங்கு யானை அவர்களை விரட்டுகின்றது. தலைவி உடனே தலைவனின் பின் சென்று மறைந்துகொள்கின்றாள். அதனை,

திருந்துகோல் எல்வளை தெழிப்ப நாணுமறந்து
           விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்திச்           சூர்வறு மஞ்ஞையின் நடுங்க                                       

என்று தலைவியின் பயத்தைக் கபிலர் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
அவளது பயத்தை அறிந்த தலைவன் யானையைத் தன் கையில் உள்ள அம்பால் எய்கின்றான். அந்த அம்பானது, யானையின் முகத்தில் பட்டு இரத்தம் வழியவழிய அது ஓடி மறைகின்றது. அதன் பிறகு தலைவியிடம் இல்லற வாழ்வு பற்றிக் கூறி அவளுடன் புணர்ந்தான்.
மாலைக்காலத்தில் அவன் தலைவியை விட்டுப்பிரிந்தான். பிரியும் முன்னர் உன்னை (தலைவியை) மணப்பேன் என்று ஆணையிட்டு நீரைக்குடித்து உறுதிகூறினான். இதனைக் கபிலர்,

....... ....... ....... பிறங்குமலை           மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
           ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
           அம்தீம் தெள்நீர் குடித்தலின்

என்று விளக்கிச்செல்கின்றார்.
அன்று முதல் தலைவி, தலைவன் நினைவில் துன்பமுற்று வாடுகின்றாள். அவள் வருந்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது, தலைவன் தன்னைச் சந்திக்க இரவுக்குறிக்கண் வரும்போது அவனுக்கு ஏற்படும் இடற்பாடுகளை எண்ணியும் வழியின் அருமை கருதியும் வருந்தி நிற்கின்றாள் என்று தோழி செவிலியிடம் அறத்தோடு நிற்கின்றாள்.

குறிஞ்சிப்பாட்டின் அடிச்சிறப்பு

குறிஞ்சிப்பாட்டு இயற்கைப் புணர்ச்சி பற்றிப்பேசுகின்றது. இயற்கைப்புணர்ச்சி மூன்று வகையில் நிகழும். அவை பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, ளிறுதரு புணர்ச்சி என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவ்வகையில் இக்குறிஞ்சிப்பாட்டு களிறுதரு புணர்ச்சியில் அமைந்துள்ளது. கபிலர் குறிஞ்சிக்குரிய நிலத்தெய்வமான முருகனைத் தலைவனுடன் ஒப்பிட்டுக் கூறுவது சிறப்பு. அதோடு 99 வகையான மலர்களைப் பற்றியும் இக்குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.
குறிஞ்சிப்பாட்டில் வரும் பின்புலமெல்லாம் அதன் உரிப்பொருளான புணர்தலை மையப்படுத்தியே அமைகின்றது. 99 மலர்களைப்பற்றிக் குறிப்பிடும்போதும் புணர்தலை மையப்படுத்தியே காட்டுகின்றார் என்பது கருத்து. இதனாலேயே இவர் இப்பாட்டிற்குக் குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் வைத்திருக்கலாம்.

இறுதியாக,

மேற்கூறப்பெற்ற இரண்டு பாடல்களையும் முழுமையாகப் படிக்குந்தோறும் அவை அந்நிலத்திற்கு உரிய உரிப்பொருள்களான இருத்தல், புணர்தல் மட்டுமே மையப்படுத்தப்படுகிறது.
பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு தவிர்த்த ஏனைய பாடல்கல் உரிப்பொருள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது. இவை இரண்டில் மட்டுமே உரிப்பொருளின் பொருண்மை முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது.
அகத்திணைகளான முல்லை, குறிஞ்சிக்குத் தொல்காப்பியர் வகுத்த புறத்திணைப் புறன் இரண்டிற்குமே சரியாக ஒத்து வருகின்றது.
இரண்டுமே நிலத்தின் பெயரிலேயே பாடல்களின் தலைப்புக்கள் அமையப்பெற்றுள்ளன.
பாட்டின் சிறப்பே அடியென கூறும் தொல்காப்பியரின் கூற்று இரண்டிலும் பொருந்தி வருகின்றது.
இரண்டுமே பாட்டு என்றே முடிகின்றது.
பெறப்பட்ட முடிவுளின் மூலம் இவை இரண்டு பாடல்களும் திணையால் உரியால் வேறுபட்டு நின்றாலும் சில ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டுள்ளன என்பதே இந்த ஆய்வின் ஆய்ந்த முடிவாகும்.

இலக்கியத்தில் சூழலியல்




சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக, அரசியல், பொருளாதார உலகலாவிய தத்துவ இயக்கமே சூழலியல் என்பர். சூழலியல் சார்ந்து இயங்குகின்ற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசுசார் நிறுவனங்கள் சூழலியல் மேம்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறன.
"சூழலியல் திறனாய்வின் ஒரு நூற்றாண்டு – 1864 - 1964" (A Century of Early Ecocriticism – 1864 - 1964) என்னும் ஆங்கில நூலை எழுதியதன் மூலம், டேவிட் மாசல் (David Mazal) என்பவர் சூழலியல் திறனாய்வுக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொடுத்தார். தொடர்ந்து பலரும் இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர். லாரென்சு புவெல் (Lawrence Buel) என்பார் இது தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் (பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், 2011, பக். 354). தமிழ் இலக்கியங்களும் சூழலியல் சார்ந்த பல்வேறு கூறுகளைச் சுட்டுகிறது. அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஐம்பூதக் கூறு
            தமிழிலக்கியங்களில் ஐம்பூதக் கூறு இடம்பெறுகிது. இயற்கையையே தெய்வமாக வழிபட்ட நம் முன்னோர்கள் அந்த இயற்கையை ஐம்பெரும் பூதங்களாகக் (கடவுளாக) கொண்டு வழிபாடு செய்துள்ளனர். அந்த ஐம்பெருங் கூறுகள் பற்றிய செய்தி பல்வேறு இலக்கண இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.
நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்                               (தொல்.பொருள்.மர: 644)

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதைவரு வளியும்
தீமுரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை                            (புறநானூறு: 12)

                                    நீரு நிலனுந்தீயும் வளியு
மாக விசும்போடு ஐந்தும் உடனியற்ற      (மதுரைக்காஞ்சி: 453 - 454)
என்ற ஐம்பெரும் இயற்கை அமைப்பே உலகம் என்ற கோட்பாடு அனைத்திலும் வலியுறுத்தப்பெற்றுள்ளது.
இயற்கையோடு இயைந்த வாழ்வு
          சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடங்கள் இயற்கை சார்ந்த சூழல்பரப்பாகவே காணப்படுகிறது. அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகூட ஒரு குறிப்பிட்ட மரத்தையோ அல்லது அதனைச் சார்ந்த ஒரு இடத்தையோ வைத்தே நிகழ்த்தப்படுகிறது. சங்கத் திணைச் சூழல் சார்ந்த வாழ்க்கையுடன், தமிழர்கள் தங்களைப் பொருத்திக் காண்பது இயல்பாக நடந்தேறியுள்ளது. தான் சிறுமியாக இருந்தபோது செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தனது உடன்பிறந்தவளாகக் கருதி, அம் மரத்தின் அருகில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கிறாள் இளம்பெண் (நற்றிணை, 172).
தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலனை நினைந்து வருந்துகிற இளம்பெண், இரவு நேரத்தில், தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம், ‘உன்னிடம்கூட தூதுசொல்லக் காதலன் மறந்துவிட்டான்’ என ஆதங்கப்படுகிறாள் (குறுந்தொகை, 266).
இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் பிரிவினால் வாடுகிற மனதைத் தேற்றுவது இவ்விரு பாடல்களிலும் பதிவாகியுள்ளது. இதேபோல், காளிதாசர் எழுதி, மறைமலையடிகள் மொழிபெயர்த்த சாகுந்தலம் நாடகத்தில்கூட சகுந்தலை, தன்னைவிட்டுச் சென்ற கணவனைக் காண புறப்படும்போது, அவள் தன் மகள்போல வளர்த்த மல்லிகைக் கொடியை விட்டுப் பிரியும்போது ஏற்படும் மனவருத்தத்தைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரம் உள்ளிட்ட அஃறிணை உயிர்கள் அவளின்மீது பரிவுகொண்டுள்ள திறத்தைக் குறிப்பிட்டுச் செல்வார்.
தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அவற்றையே தம் உறவுகளாக்கி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.
சூழலியப் பாதுகாப்பின் முன்னோடி
            இயற்கையைப் பாதுகாப்பதே நம் வாழும் இச்சமூகத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. தற்போதுள்ள இயற்கை வளங்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அதனை வழங்கியே ஆகவேண்டும். எனவே இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதே அதற்கான தீர்வாக அமையும். இவ்வாறு நம் முன்னோர்கள் இயற்கையைப் பாதுகாத்து, அதனோடு இயைந்து வாழ்ந்துள்ளனர்.
            சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பெறும் ஏழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகளில் பாரி, பேகன் இருவரும் செய்கிற கொடைகளை மடக்கொடை என்று அழைப்பர். அதனை,  
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்
கானம் மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெரு மகன்
பெரு கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாகம் நெடு வழி
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி                       (சிறுபாண், 84 – 91)
என நத்தத்தனார் பாடுவார்.
            மயில் என்ற அஃறிணை உயிர் குளிரால் நடுங்குகின்றது என எண்ணி தன் போர்வையைத் தந்த பேகனும், முல்லைக்கொடி தன் தேர்க்காலில் நசுங்கிவிடக் கூடாதே என்று தன்னுடைய தேரையே முல்லைக்கொடிக்கு வழங்கிய பாரியும் மனிதர்களில் மாமனிதர்களாக இன்றும் போற்றப் பெறுகிறார்கள். அவர்கள் போற்றப் பெறுதலுக்குக் காரணம் அவர்கள் இயற்கை மீதுகொண்ட பற்றே என அறியலாம்.
இயற்கைசார் மருத்துவம்
இயற்கையோடு வாழ்ந்த மக்கள் அந்த இயற்கை தந்த மருத்துவப் பொருள்களையே உட்கொண்டனர். அதனை அவர்கள் மருத்துவச் சுவடிகளாக எழுதிவைத்தனர். மருந்து பொருள்கள் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு நோயை நீக்குகிறதோ, அதேபோல் பல்வேறு குணநலன்கள் இணைந்து ஒரு மனிதனை நல்முறையில் வாழ வைக்கிறது என்பதற்கு அடையாளமாகவே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற மருத்துவம் சார்ந்த பெயர்களைக் கொண்டு நூல்கள் அமைத்தனர்.
உணவு கொடுப்பவரே உயிர் கொடுப்பவரைப் போலாவார் என்று இலக்கியங்கள் கூறும். உணவு என்பது நிலத்தோடு நீரும் சேர்ந்ததே ஆகும். இதனை,
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;                      (புறநானூறு, 18)
என்ற பாடல் புலப்படுத்தும்.

                                    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                                    உழந்தும் உழவே தலை (குறள். 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள். 1033)
என வள்ளுவரும் நிலத்தைப் பண்படுத்தும் உழவுத் தொழிலைச் செய்வோரைப் பெருமைபடப் பேசுவார்.
சூழலியமும் சமூக மேம்பாடும்
        சூழலியப் பாதுகாப்பின் வழியே மனித சமூகம் மேம்பாடு அடைய இயலும். தான் வாழும் சூழலும், தன்னைச் சார்ந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வாழ்கின்றனர். இலக்கியங்களில் இடம்பெறும் ஐந்து நிலத்திற்கான மக்களையும் குறிப்பிடும்போது, அவர்களின் சூழலியலுக்கு ஏற்பவே அவர்களின் தொழிலும் அமைகிறது. குறிஞ்சி நில மக்கள் மலையும் மலைசார்ந்த பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும், மருத நில மக்கள் வயல்வெளிகளாலும், பசுக்களாலும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தம் சூழலைப் பாதுகாப்பதும் நடைபெறுகிறது. அதேபோல்தான், முல்லை, நெய்தல் நில மக்களும் தங்களுடைய சூழலினைப் பாதுகாத்து வந்துள்ளமை புலனாகிறது.
            இனக்குழுக்கள் பல இணைந்து சமூகமானது. அச்சமூகத்திலிருந்து நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம் பிறந்தது. அதேபோல் இயற்கையைப் பாதுகாப்பதும், அதன்மூலம் பயன்பெறுவதும் அவர்களின் குறிக்கோளாய் இருந்தது. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலும் இதனையே உணர்த்துகிறது. 
இயற்கை அழிவும் சூழலியப் பாதுகாப்பும்
            சங்க மன்னர்கள் தம்முடைய வீரத்தை நிலநாட்ட வேண்டியும், பொன் வேண்டியும், பெண் கேட்டும், நிலத்திற்காகவும் பல சிற்றரசுகளின் ஊர்களையும், காடுகளையும் அழித்து, ஏரி குளங்களை அழித்து தமதாக்கிக் கொண்டனர் அல்லது பாழ்படுத்தினர். இதனை, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கிய இலக்கணங்கள் பதிவுசெய்துள்ளன. அவற்றை முறையே உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி (புறம். 7, 16, 21) எனக் குறிப்பர்.
                                    நேராதார் வளநாட்டைக்
                                    கூரெரி கொளீஇயன்று       (பு.வெ.மாலை)
இன்று உலகில் ஏற்படும் பல்வேறு பேரிடர்களால் காடுகளும், மலைகளும், நதிகளும், வெப்பமும் தம்முள் மாறி, ஏதோவொரு விதத்தில் அழிவை உண்டாக்கிச் செல்கிறது. இந்த அழிவுகள் மனிதர்களின் அறியாமையும், அவர்களின் முறையற்ற பயன்படுத்தத்தினாலுமே உருவாகிறது. தடைசெய்யப்பட்ட நெகிழிகளை உபயோகிப்பதும், மண்ணிற்குத் தேவையற்ற பூச்சிக்கொல்லி உரங்களைத் தெளிப்பதும், காடுகளை அழித்து நகரங்களை மேம்படுத்துதல், மணலைச் சுரண்டுதல் போன்றவை இயற்கை அழிவுக்கு முதன்மையான காரணியாக அமைந்துள்ளது.
                                    காடுகொன்று நாடாக்கி
                                    குளந்தொட்டு வளம்பெருக்கி
என்பன இன்றைய சூழலில் தேவையெனினும், அதற்கேற்றாற்போல் இயற்கை வளங்களைப் பெருக்கவும் வழிவகை செய்ய வேண்டியுள்ளது. இயற்கை அழிவு என்பது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிராக முடியும். சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம். சூழலியத்தைப் பேணிக்காப்போம்.

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...