புதன், 6 நவம்பர், 2019

தந்தை பெரியார் வாழ்கவே!

                                             Image result for periyar


அறிவுச் சுடரே! ஆக்கத் திருவே!
அனைவர் உள்ளமும் அணைக்கத் துடிக்கும்
அன்புத் தந்தாய்! ஆருயிர் நீயென
அகிலம் போற்றும் அணையா விளக்கே!

தன்னலம் கொண்ட தலைவர் இடையே
பொதுமை கொண்டு பொதுத்தொண் டாற்றினாய்!
மாறினர் பலரும் வசைச்சொல் நீங்கவே
சேர்ந்தனர் உம்மிடம் தாமாய் வந்தே!

வைக்கம் வீரர் வாழ்க்கை தன்னில்
வீரம் கொண்டு வீறிட்(டு) எழுந்து
வீணர் தம்மை வெற்றி கொண்டார்

பெண்கள் கொடுத்த பெரியார் பட்டம்
நீங்கா நிலைத்தது நெஞ்சில் இன்றும்
பேதை மக்களின் பேதமை விரட்டிப்
பெரியோர்க் கெல்லாம் பெரியார் ஆனாய்!

மறுமணம் என்னும் மாண்பை உரைத்து
மக்கள் மனதில் மங்காப் புகழுடன்
உயர்ந்து நின்றீர் உத்தமத் தலைவ!

திருக்குறள் மாநாடு சிறப்புற நடத்தி
வள்ளுவன் புகழை வையகம் பரப்பினார்

ஏழை மக்கள் எளிதாய்ப் பயில
நிலத்தைக் கொடுத்து நீங்கா நின்றார்

சாதி என்னும் சமூகப் பிணியைக்
கைத்தடி கொண்டு விரட்டி அடித்தார்

அரசியல் உலகில் ஆணிவேர் ஆனவர்
ஞாலம் தழைக்க நாளும் உழைத்தவர்
இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றார்
பகைவர் ஆயினும் பரிவு கொண்டார்
பல்துறை அறிஞரைப் பாங்காய் நடத்தினார்

சீர்மிகு கருத்தைச் சிந்தைக் குரைத்துத்
தரணி போற்ற வாழ்ந்தவர் நீயே!
என்றுமே மறவோம் உம்புகழ் யாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...