ஆய்வுச்சுருக்கம்
தமிழக மலேசிய சிறார் இலக்கியப்
படைப்பாளர்களின் தொகுப்பும், அவர்கள் படைப்புகள் தாங்கி வெளிவந்த ஊடகமும் குறித்து
பேசுகிறது இக்கட்டுரை. சிறார் இலக்கியத்திற்கான வரையறையும், சிறார் இலக்கியத்தின் தேவை,
இலக்கியப் பங்களிப்பு செய்தோர், இதற்கான முன்னெடுப்புகள், இன்றைய நிலையில் அதன் வளர்ச்சி
போன்றனவும் ஆராயப்பெறுகிறது.
குறிப்புச்சொற்கள்
சிறார்
இலக்கியம் – குழந்தை இலக்கியம் – சிற்றிதழ் – மின்னிதழ் – சொல்வளம் – படைப்பு – கட்டமைப்பு
தொடக்கமாக,
வாசிக்க இலகுவான நடை, குழந்தைகளின்
கற்பனைக்குத் தீனி போடும் கதை, மிக இயல்பான பேச்சுநடை இவைதான் சிறார் இலக்கியத்தின்
அடிப்படை. சிறார் இலக்கியம் என்பது அவர்களின் கற்பனைத் திறனை வளர்த்தெடுத்தல், அவர்களின்
பன்முகத்திறமையை அடையாளம் காணுதல், மொழிவளத்தை வெளிக்கொணர்தல் போன்றவை முக்கியப் பங்காக
இருக்கிறது. ஆனால் சிறார்களுக்கு இன்றைய இலக்கியத்தின் மீதான பார்வை எவ்வாறு உள்ளது
என்பது மிகப்பெரும் வினா. குழந்தை இலக்கியங்களில் மிருகங்களும், மனிதர்களும் பேசுவார்கள்.
கண்களுக்குத் தெரியாத இடத்தைக் கற்பனையில் காணலாம்.
சிறார்களின் மனத்திறனையும், சொல்வளத்தையும்,
கற்பனைத் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற படைப்புகள் குறித்தும், அதிலும் குறிப்பாகத்
தமிழ் – மலேசிய படைப்பாளர்களின் இலக்கிய பங்களிப்பு குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகக்
காணலாம்.
சிறார்
இலக்கியம்: வரையறை
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டில்
வளரும் இலக்கியங்களுக்கும் தமிழ்மொழியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உறுதிபடுத்தியுள்ள
நாட்டில் வளரும் இலக்கியங்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இருப்பினும் நுவலும் கருத்தில்
ஒத்த சிந்தனையையும் ஒருமித்த உணர்வையும் வெளிப்படுத்துவதாகச் சிறார் படைப்புகள் அமைகின்றன.
கலை சார்ந்தவை
சமூக
முன்னேற்றம்
செல்வம்
தொழில்நுட்ப
நிலை
அரசியல்
கட்டமைப்பு
போன்றன குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கான அளவுகோல்களாக
அமைகின்றன. இதுபோன்ற படிநிலைகளிலே குழந்தை இலக்கியம் படைக்கப்படவேண்டும் என பிரிட்டானிகா
கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது.
சிறார்
இலக்கியத்தின் தன்மைகள்
குழந்தைகளுக்கான படைப்பு என்பது
அவர்களின் உணர்வுகளைப் வெளிப்படுத்துவதாகவோ, சிந்தனையைத் தூண்டுவதாகவோ, கற்றுக்கொள்ள
எளிமை என்ற எண்ணத்தாலோ அமைதல் நலம் பயவா. அது அவர்களுக்கான இலக்கியம் அவர்களை அதில்
கடினப்படுத்தி உள்புகுத்தி விடுவதாக அமைதல் கூடாது. அவர்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகிறோ
அதனைப் படைக்கும் இலக்கிய இயக்கமாக மாறவேண்டும். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே படைக்கும்
இலக்கியமே குழந்தை / சிறார் இலக்கியம் எனக் கொள்ளமுடியும்.
பெரியவர்களாக நாம் வளர்ந்தபிறகு
மீண்டும் குழந்தை மனநிலைக்குச் சென்று குழந்தைகளோடு விளையாடி குழந்தைகளை மகிழ்விக்கும்
சிறுசிறு செய்கைகளைச் சுட்டிக்காட்டிப் படைக்கப்படுவது இன்றைய இலக்கியங்களாக வளர்ந்துள்ளது.
இருப்பினும் இதில் செய்யவேண்டிய பணிகள் ஏராளம். அதனாலேயே மிகப்பெரும் எழுத்தாளர்கள்
கூட சிறார் இலக்கியங்கள் எழுத விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்
போன்றன குறித்தெல்லாம் சிறார் இலக்கியத்தில் விவரிக்க இயலாது என்பதே அதற்கான காரணமாகக்
கொள்ளமுடியும்.
சிறுவர்களின் உலகம் கதைகளால் ஆனவை.
பல கதைசொல்லிகளைக் கடந்து உருவானதுதான் அவர்களின் குழந்தைப்பருவ மனங்கள். மேலும் அவர்களின்
உலகத்தில் கதைகளுக்குத் தனித்த இடம் உண்டு. அவ்வாறான கதைகளை அவர்களின் உலகத்திலிருந்து
பிரித்தெடுப்பது மிகப்பெரிய வன்முறைக்குச் சமமான ஒன்றாக அமைந்துவிடும்.
தமிழக
சிறார் இலக்கியப் படைப்புகள்
தமிழகத்தில் சிறார் இலக்கியம்
தொடக்கக் காலந்தொட்டு இருந்துவருகிறது. தொல்காப்பியம் கூறும் உரைவகை நான்கில்,
பாட்டிடை
வைத்த குறிப்பினானும்
பாவின்று
எழுந்த கிளவியானும்
பொருள் மரபில்லாப்
பொய்ம்மொழியானும்
பொருளோடு
புணர்ந்த நகைமொழியானும்
உரைவகை
நடையே நான்கென மொழிப (தொல். செய். 1429)
பொருள்மரபில்லாப் பொய்மொழி, பொருளோடு புணர்ந்த
நகைமொழி என்ற இரு கூறுகளும் கதைகளைப் பற்றிப் பேசுகின்றன. கதைகளிலும் விடுகதைகள் (தொல்.
செய். 1432) குறித்தும் விளக்கியுள்ளார். இலக்கியங்களிலும் இதுபோன்ற கதைப்பகுதிகள்
காணப்படுகின்றன என்றும் உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.
சிறார்களுக்கான கதைக்களத்தை மூன்றுவகைக்
காலகட்டங்களாகப் பகுத்துப்பார்பது நலம் பயக்கும்.
தொடக்கக்
காலம்
சிறுவர்கதைகளில் வரக்கூடிய சிறார்
கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாகவும் அல்லது
கதையில் வைத்துச் சீர்த்திருத்தக் கூடியவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். கதை என்பது
அறிவுரைக்கப்படும் இடமாகவும் சீர்ப்படுத்தும் பகுதியாகவும் அமைந்து சிறுவர்களை விட்டு
வெகுதூரம் விலகிச் செல்லத்தொடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் தேர்வை முதன்மையானதாக முன்னிறுத்தும்போது
குறிக்கோளைச் சிதைக்கும் அம்சமாகப் படைப்பிலக்கியத்தைக் கருதும் ஒருசாரார் எப்போதுமே
சிறார் இலக்கியவெளி உருவாக்கத்திற்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றனர்.
சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்
போன்ற இலக்கண நூல்களுக்கு அடுத்தநிலையில் சிறார்களுக்கான கதைகளை அவர்களுக்கான அறிவுரை
கூறும் போக்கில் அமைத்துள்ளனர். குறிப்பாக, ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை,
அதிவீரராமபாண்டியரின் நறுந்தொகை போன்றன பல வெளிவந்தன. இவையனைத்தும் சிறார்களுக்கான
அறிவுரை கூறும் நூல்களாக இன்றும் வழக்கத்தில் இருந்துவருகிறது. பல்வேறு சிறார் இலக்கியப்
படைப்புகளை உ.வே.சாமிநாதர் தேடித்தொகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றைக்
குழந்தை இலக்கியங்களாகக் கொள்ளமாட்டார் அழ. வள்ளியப்பா.
இடைக்காலம்
தமிழகத்தைப் பொறுத்தவரை சிறார்
இலக்கியப் படைப்பாளர்கள் பலரும் சிறார் இலக்கிய ஆக்கங்கள் 1901ஆம் ஆண்டிலேயே தொடங்குவதாகக்
கூறுவார்கள். கவிமணி தேசியவிநாயகம், பாரதி தொடங்கி பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
பாடல்கள் வழி குழந்தைகளுக்கான விளையாட்டு, செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டன.
கவிமணியின் பாடல்கள் நூல்களிலிருந்து படித்து மனனம்செய்யும் நிலையில் இல்லாமல் வழிவழியாகச்
சொல்லப்பட்டு வரும் பாடலாகவே இன்றும் உலவிவருகிறது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு… என்ற பாடல் குழந்தைகளின் மனத்தில் மகிழ்ச்சியை
உண்டாக்கவல்லன.
பாரதி, பாரதிதாசன் ஆத்திசூடிகள்,
தாலாட்டுப் பாடல்கள் போன்றன வெறும் சிறார் இலக்கியங்களாக இல்லாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கும்,
ஆண் – பெண் சமத்துவம் குறித்தும் இளம்மனத்தில் பதியவைப்பதாக அமைகின்றன. குறிப்பாகப்
பாரதிதாசனின் ஒரு பாடல்,
மலைவாழை
அல்லவோ கல்வி - நீ
வாயார
உண்ணுவாய் போ என் புதல்வி
…………………………
கடிதாய்
இருக்கும் இப்போது – கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது
(பாரதிதாசன், இசையமுது)
என்ற அடிகளில் பள்ளி சென்று பாடம் கேட்டலின்
முக்கியத்துவமும், பெண்கல்வியின் நோக்கமும் புலப்படும்.
குழந்தைகளின் படைப்பே குழந்தை
இலக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப அழ. வள்ளியப்பா தனது 13ஆவது
வயதிலேயே சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதத்தொடங்கினார். அறுபதிற்கும் மேற்பட்ட இவரின்
நூல்கள் குழந்தை இலக்கிய வரிசையாக அமைந்துள்ளன நோக்கத்தக்கது. எளிமையான சொல்லாடல்,
நினைவில் நிற்கும் சொற்கள், எதுகை மோனை கொண்ட அடிகள் என இவரின் படைப்புகள் மிகச்சிறப்பான
இடத்தைப் பெறுகின்றன. அவற்றுள் மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி, பாப்பாவுக்குப் பாட்டு,
நல்ல நண்பர்கள் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
சிறுவயதில் பெரியவர்களிடம் கதைகேட்கும்
வழக்கம் குழந்தைத்தனத்தின் வளர்நிலை. அவ்வகையில் பல எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கான
கதைகளை அவர்களின் மனோநிலையில் வெளியிட விரும்பினர். அவ்வாறான தேடலில் பலரும் தன்னுடைய
சிந்தனைகளைப் படரவிட்டுச் சிறார் இலக்கியம் உருவாக்கித் தந்தனர். அவர்களுள் ராஜாஜி,
கா. அப்பாதுரையார், நாரணதுரைக்கண்ணன், நா. வானமாமலை, அகிலன், கி.ரா., துமிலன், புவிவேந்தன்,
மாயூரன், நீலம், பூவை அமுதன், ஆலந்தூர் மோகனரங்கன், குழ. கதிரேசன், கிரிஜா, பொன்னம்மாள்,
விமலா ராணி போன்ற பலரும் சிறார் இலக்கியத்திற்கு முக்கியப்பங்காற்றிச் செழுமைபடுத்தியவர்கள்.
இன்றைய
காலக்கட்டம்
இன்றைய காலக்கட்டத்தில் சிறார்
இலக்கியமானது பல்வேறு பரிணாமங்களைக் கொண்டதாக மிளிர்கிறது. அறிவியல், சமூகம், பொழுதுபோக்கு
போன்ற பல்வேறு பண்பாட்டு முறையிலான வகைப்பாட்டுடன் வளர்ந்துள்ளன. இருப்பினும் இடைக்காலத்தில் எழுதிய
எழுத்தாளர்கள் போல் அல்லாமல் பலரும் சிறார் இலக்கியம் எழுத முன்வராத நிலையே நீடிக்கிறது.
அழ. வள்ளியப்பாவின் தொடர்ச்சியாக வந்த அவரின் பரம்பரையினர் பலரும் அதனை முன்னெடுக்கவில்லை.
ஆங்காங்கே சிலர் அவரின் நினைவாக சிறார் இலக்கிய விருதுகளை வழங்கிவருகின்றனர். தற்போதைய
சூழலில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு விருதுகளைச் சிறார் இலக்கியம் படைப்பவர்களுக்கு
வழங்கி ஊக்கப்படுத்துகிறது. தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்பிற்கான
விருது மற்றும் சாகித்திய அகாதமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது போன்றன குறிப்பிடத்தக்கது.
உதயசங்கர், தேவி நாச்சியப்பன்,
கிருங்கை சேதுபதி, தங்கப்பா, சரவணன், பஞ்சுமிட்டாய் பிரபு, பாலபாரதி, இளங்கோ, அறிவியல்
கதைகளை எழுதும் ஆயிஷா நடராசன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பலரும் இன்றைய காலக்கட்டத்தில்
சிறார்களுக்கான படைப்புகளைப் படைத்து வருகின்றனர்.
சிறார்களுக்கான
இதழ்கள்
சிறார்கள் தங்களின் படைப்புக்களை
வெளியிடவோ, சிறார்கள் குறித்த படைப்புகளை வெளியிடவோ பல்வேறு தளங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
அவற்றுள் மிகவும் நோக்கத்தக்கது பத்திரிக்கைத் துறை. குழந்தையின் செயல்பாடு பாடநூல்களிலிருந்து
விலகி அதிகம் பத்திரிக்கைகளின் பக்கமே செல்லும். அதிலும் குறிப்பாக இன்றைய இணைய உலகில்
இணைய இதழ்களின் தேவையும் அதிகரித்துவிட்டன. இருப்பினும் பல ஆண்டுகளாகக் கோலோச்சிய அத்துறை
திடீரென குறைந்து போயின. சில நின்றும் போய்விட்டன. இதழ்களைத் தொடர்ந்து நடத்துவதென்பது
பெரிய சாதனை. அதிலும் குறிப்பாக சிறார் இதழ்களின் சந்தாதாரர்கள் சொற்ப எண்ணிக்கையில்
ஆகும்போது அதனை நடத்த இயலாமல் பலரும் தொடங்கிய வேகத்திலேயே வெளியேறிவிடுகின்றனர். சிலர்
கையெழுத்துப் பிரதியாகவும் நடத்திவருகின்றனர். நாளிதழ்களாக வெளிவந்த தினத்தந்தி, தினமலர்
போன்றன சிறார்களுக்கென்று ஒருசில பக்கங்களையோ, இலவச இணைப்பாகவோ கொடுத்துவந்தனர். இன்று
அவையும் வெளிவருவதில்லை.
இதழின் பெருமையினைப் பாரதிதாசன்,
காரிருள்
அகத்தில் நல்ல கதிரொளி நீதான் – இந்தப்
பாரிடைத்
துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்
………………………………………………………..
……………………………………………………………
மண்ணில்
கருப்பெற்று
உருப்பெற்று இளநடைபெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு
வரப்பெற்றார்
பத்திரிகை நாளும் உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்
(பத்திரிகை, பன்மணித்திரள்)
என இளமையிலேயே பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தைக்
கைக்கொள்ள வேண்டும் என்று உரைக்கிறார்.
1840ஆம் ஆண்டிலேயே ‘பாலதீபிகை’
என்னும் கிறித்தவ மதத்தினர் கொண்டுவந்த இதழே சிறார்களுக்கான முதல் இதழாகப் பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு பாலியர் நேசன், பூக்கூடை போன்றன திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள கதைகளைச்
சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவந்தன. அதன்பிறகு 1940ஆம் ஆண்டிற்குப்
பின்னர், பாலர் மலர், பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங்-டாங்,
கரும்பு, அம்பி, சிறுவர் உலகம், ரேடியோ, வானரசேனன், அம்புலி மாமா, பொம்மை வீடு, சித்திரக்
குள்ளன், தமிழ்ச்சிட்டு, துளிர், பூந்தளிர், கல்கண்டு அரும்பு (சுகுமாரன், குழந்தை
இலக்கியத்தில் இதழ்கள்) போன்ற இதழ்கள் வெளிவந்தன.
குழந்தை இதழ்கள் மூன்று முக்கியப்பணிகளைச்
செய்கிறது என்பார் சுகுமாரன். அவை, குழந்தைகள் படிக்க வாய்ப்பளிக்கிறது; குழந்தை எழுத்தாளர்கள்
நிறைய எழுத வாய்ப்பளிக்கிறது; குழந்தைகள் படைப்புகளுக்கும் இடமளிக்கிறது. எனவே இவையே
குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றன. இலக்கிய வளர்ச்சி
என்பது இதழ்வளர்ச்சியினூடே அமைகிறது.
மலேசிய
சிறார் இலக்கியப் படைப்புகள்
குழந்தை இலக்கியம் என்பது எழுதப்பட்ட
படைப்புகள் மற்றும் இளைஞர்களை மகிழ்விக்க அல்லது பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட
விளக்கப்படங்களைக் கொண்டுள்ளது. உலக இலக்கியத்தின் கிளாசிக், பாடப்புத்தகங்கள் மற்றும்
குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக எழுதப்பட்ட கதைகள் மற்றும் விசித்திரக் கதைகள், தாலாட்டுகள்,
கட்டுக்கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிளான படைப்புகளை
இந்த வகை உள்ளடக்கியது – என்று வரையறை கூறுகிறது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
மலேசிய நாட்டிலிருந்து வெளியான
தமிழ் மொழி இலக்கியங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தது. அங்குள்ள எழுத்தாளர்கள் பலர் தம்முடைய
கடின உழைப்பாளும், விடா முயற்சியாலும் தமிழ்ப்படைப்பாக்கங்களை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சிறார் இலக்கியங்கள் குறித்த படைப்புகளில் மிகுந்த அக்கறை செலுத்தி
வருகின்றனர். அங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் தமிழை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்ள விரும்பி
ஏற்றுக்கற்கின்றனர். அவ்வாறான சூழலில் அவர்களுடைய ஆளுமைக்கும், மொழி வளமைக்கும் ஏற்ற
வகையில் படைப்புகளைக் கையாளவேண்டிய சூழல் நிலவுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் தமிழ்
எழுத்தாளர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனை ஒருங்கிணைத்து படைப்புகள் வெளியிடப்படுகின்றன.
இதனைக் கொண்டுவர பலரும் தம்முடைய உழைப்பைச் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறொரு தாய்மொழியைக் கொண்ட ஒரு
நாட்டில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அங்குள்ள படைப்பாளர்கள்
மூலமே சாத்தியமாகிறது. அவ்வகையில் தொடக்கக் காலம் முதல் இன்றுவரையில் அவர்கள் செய்த
பல்வேறு பணிகள் குறித்து விரிவாகக் காணலாம்.
1876ம் ஆண்டு தங்கை நேசன் என்ற
தமிழ் இதழ் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே முதன்முதல் தமிழ் இதழ். இவ்விதழ் மாதம் இருமுறை
இதழாக வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் முகம்மது சையது பின் முனையதீன். இவ்விதழின் நோக்கமாக
இசுலாமிய கொள்கை விளக்கங்களும், விழிப்புணர்வும் இடம்பெற்றிருந்தன. அதன்பின்னர், உலக
நேசன் (1883), ஞானாசிரியரன் (நாளிதழ் 1888), விஜய கேதனன் (1897), பினாங்கு ஞானாசாரியன்
(1912), தமிழ் நேசன் (1924), மலாயா மித்திரன் (1932), இஸ்லாமிய இளைஞன் (சிற்றிதழ்,
1942), எழுத்தாணி (1945), களஞ்சியம் (1950), மலாயன் (1963), நம் குரல் (1980), தமிழியம்
(1990), கூட்டுறவு (1990), மக்கள் ஓசை (நாளிதழ், 1990), ஞானசூரியன் (சிற்றிதழ்), அநங்கம்
(2008), தினக்குரல் (2012), மலேசிய நண்பன், முன்னேற்றம் (சிற்றிதழ்) என பல்வேறு இதழ்கள்
வெளிவந்துள்ளன.
தமிழ்
முரசு – மாணவர் மணி மன்றம்
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர்
பண்பாட்டுச் சின்னம் என்று கருதப்படும் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1934ஆம் ஆண்டு தமிழ்
முரசு என்ற இதழைத் தொடங்கினார். இதில் சிறுவர்களுக்கான சிறப்புப் பக்கத்தை உருவாக்கினார்.
எழுத்தாளர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மாணவர் மணிமன்றம்
பல எழுத்தாளர்களை உருவாக்க முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும்
பல எழுத்தாளர்கள் உருவானார்கள்.
மாணவர் மணி மன்ற மலர் தனி இதழாக
1953ஆம் ஆண்டு வெளியானது. இதன்மூலம் மலேசியாவில் முதன்முதலில் தமிழில் சிறார்களுக்கான
தனி இதழைக் கோ. சாரங்கபாணி தொடக்கி வைத்தார். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நேசன் இதழும்
சிறுவர்களுக்கான தனி இதழை வெளியிட முனைந்தது.
மலேசிய
சிறார் இலக்கியப் படைப்பாளர்கள்
தமிழ் முரசு பத்திரிக்கை மூலம்
பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கு வித்திட்ட கோ. சாரங்கபாணி வழிநின்று பலரும் தங்களுடைய
படைப்புகளை வெளியுலகிற்குப் படைத்து வெளியிட்டனர். அவ்வகையில், 1939ஆம் ஆண்டு ந. பழநிவேலு
சிறுவர் பாட்டு என்ற படைப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1941ஆம் ஆண்டு தமிழ்க்கொடி
இதழில் தேவதாசன் சிறுவர் பாட்டை எழுதினார். 1951ஆம் ஆண்டு சோலை இதழ் சிறுவர்களுக்கான
இதழை வெளியிட்டது. சி.வே. கிருஷ்ணன் என்பவர் திருமகள் என்ற இதழினைத் தொடங்கி சிறுவர்களுக்காக
வெளியிட்டார். 1960ஆம் ஆண்டில் மு. கந்தன் என்பவர் பரிதி என்ற புனைபெயரில் முழுநிலா
எனும் சிறுவர் நூலினை வெளியிட்டார். வே. இராமசாமி தாம் எழுதிய 55க்கும் மேற்பட்ட நூல்களில்
25 நூல்கள் சிறார் இலக்கியத்திற்கான பாட நூல்களாகக் கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாணவர் மணி மன்ற இதழின் வழிச்
சிறார் இலக்கியங்களை வழங்கியவர்களில், ம. முருகையன் (முல்லை), மு. அப்துல் லத்தீப்,
சு. அப்துல் முத்தலிப், கு. கிருஷ்ணன், மு. சீனிவாசன், மைதி. அசன்கனி, பழ. அடைக்கலம்,
அ. சந்திரசேகரன், கே.எம்.யூசுப், மு. பக்ருதீன், அ. ரெசுவப்பா, வீ. தீரைட்சகி, ப.கு.
சண்முகம், முரசு நெடுமாறன் போன்ற பலரும் இலக்கியப் படைப்பில் முன்னணி வகித்தவர்கள்
ஆவர்.
தமிழ்
– மலேசிய சிறார் இலக்கியங்கள்
தமிழக – மலேசிய சிறார் இலக்கியங்கள்
பெரும்பாலும் சிறார்களின் மனநிறைவைப் பெற முயன்றிருக்கின்றன. இருப்பினும், பொதுவான
ஒழுக்க நெறிகளை மீறாத சிறுவர்களும், கற்பனை வளம் நிரம்பிய சிறுவர்களும் உருவாக்கப்படும்
வகையிலும் புதிய புதிய கதைகள் எழுதப்பட வேண்டும்.
சிறார் இலக்கியத்தைப் பொறுத்த
அளவில் கதையாகவோ, பாடலாகவோ, கவிதையாகவோ இன்னும் மேம்பட்ட படைப்பாகவோ மேலும்மேலும் செழுமை
பெற உழைத்திருக்கிறார்கள். மொழி வளத்திலும், சொல்லும் திறத்திலும், கட்டமைப்பிலும்
சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் அவை ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளன.
சிறார் இலக்கியம் என்பது மேலும்
செழுமைபெற்று வளரவேண்டிய ஒன்று. அதனை வளர்ப்பவர்கள் சிறார்களுக்கு அறிவுரை சொல்லும்
பெரியவர்களாக இருத்தல் ஆகாது. சிறார்களையும் ஆகச்சிறந்த படைப்பாளர்களாக மாற்றும் முயற்சியாக
இது அமைதல் வேண்டும். அப்போதுதான் சிறார்களுக்காக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும்
வெற்றி பெறும். சிறார்களின் தன்மை, ஏற்றுக்கொள்ளும் மனம், வெளிப்படுத்தும் ஆற்றல்,
ஆராய்ந்து அறிந்துகொள்ளும் போக்கு போன்ற பல்வேறு திறன்களை வளர்க்க வேண்டியது சிறார்
இலக்கியத்தின் எதிர்கால நோக்குகளாக அமையலாம்.
இறுதியாக,
சிறார் இலக்கியத்தில் தமிழ் –
மலேசிய இலக்கியங்கள் கூறும் கருத்துகள் அந்தந்த நிலத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளன.
சிறார்களுக்கான தனி நூல்களும், இதழ்களும், படைப்பாளர்களும் இன்னும் அதிகம் தேவை என்பது
இதன்மூலம் உணர்ந்துகொள்ள முடியும். சிறார்களின் இன்றைய பொழுதுபோக்காக இணையத்தில் விளையாடும்
விளையாட்டுகள் மட்டுமல்ல என்பதை உணர்த்துவதாக அமைதல் வேண்டும். அவர்களாகவே விரும்பி
இதழ்களையோ, நூல்களையோ வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குதல் வேண்டும். மீண்டும் அதே பழைய
நிலையில் பெரியவர்கள் கதைசொல்லிகளாக மாறவேண்டிய சூழல் இன்றைய காலக்கட்டத்தில் பெரிதும்
தேவையாகிறது.
சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு
மேலும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக பல்வேறு விருதுகள், பாரட்டுகள், ஊக்குவிப்புகள்
தேவைப்படுகின்றன. அவ்வாறான ஊக்குவிப்புகள் இருக்கும்போது, கண்டிப்பாக சிறார் இலக்கியம்
மேம்படும். சிறார்களின் மனநிலையிலும் மாற்றங்கள் நிகழும்.
ஆய்வுக்குப் பயன்நின்றவை
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
(britannica.com)
தொல்காப்பியம், தமிழண்ணல் உரை, மீனாட்சி புத்தக
நிலையம், ஏப்ரல் 2008
பாரதிதாசன் கவிதைகள் (Tamil Virtual
Academy)
பஞ்சுமிட்டாய் இணைய இதழ் கட்டுரைகள் (panchumittai.com)
வல்லினம் இணைய இதழ் கட்டுரைகள்
(valliman.com)