புலாஅம் பாசறை
சேரன்
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது (ஏழாம் பத்து)
- பலாப்பழங்கள் பழுத்து அதன் நறுமணம் நாடுமுழுக்கப் பரவும்படி அமைந்த
மலைநாட்டை உடையவன்!
- மிகச்சிறந்த ஓவியனால் வரையப்பெற்ற ஓவியம் போன்று அமைந்த அழகுமிக்க மனைவியை
உடையவன்!
- பொன்னால் செய்யப்பட்டது போன்ற சிறியபூவை உடைய உன்னமரத்தின் பகைவன் எம் தலைவன்! (உன்னத்துப் பகைவன் எம்கோ)
- மணம்வீசும் சந்தனம் மார்பில் பூசியவனும், யார்வந்து கேட்பினும் பொருளைத்
தருபவனுமாகிய பெரிய கையுடையவன் எம் தலைவன் பாரி.
- இரவலர்கள் தங்கள் முழவில் பூசிய மண் காய்வதற்குள் பொருளைத் தருபவன்.
ஆனால் தற்போது பூசப்பட்ட மண் காய்ந்துவிட்டது. இரவலர்களும் ஏங்கித் தவிக்கின்றனர்.
திரும்ப வரமுடியாத இடத்திற்குச் சென்றான் எம் தலைவன் பாரி.
- அவன் இறந்துவிட்டான் என உன்னிடம் இரந்துகேட்க (பிச்சையெடுக்க) வரவில்லை.
- பொருளை வாரி வழங்கும் உன் வள்ளல் தன்மை கருதியே உனைக் காணவந்தேன்.
- ஒளிவீசக்கூடிய வாளும், யானைக்கூட்டங்களும் இருக்கக்கூடிய புலால் நாற்றம்
வீசும் பாசறையில் நீ தங்கியிருக்கிறாய்.
- நிலவு போன்ற நெற்றியை உடைய பாடினி முழவினை இசைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
- திருவிழாவினைப் போன்ற இவ்விடத்தில் நீ மகிழ்ந்திருக்கிறாய்.