செவ்வாய், 5 நவம்பர், 2019

உரைநடைத் தமிழில் இடைவெளியின் ஆளுமை

உலகில் பேசப்படும் இலக்கண இலக்கிய வளம்பெற்ற மொழிகள் சிலவற்றுள் நம் தமிழ் மொழியும் ஒன்று. ஒரு மொழியின் எளிமைக்கும், இனிமைக்கும், உணர்வுக்கும் காரணமாக அமைவது அம்மொழியின் இலக்கிய, இலக்கண அமைப்புகள் என்பது கண்கூடு. அதிலும் குறிப்பாக நடைமுறைத் தமிழ் அல்லது எளிமைத் தமிழ் என்று கூறப்படும் அளவிற்குத் தமிழ் மொழியில் உரைநடை வளங்கள் பெருகியுள்ளன. உரைநடை தொடக்ககாலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறலாம். உரையாசிரியர்கள் தொடங்கி இன்றுவரை உரைநடை கடுமையும் எளிமையும் என மாறிமாறி வளர்ந்து வருகின்ற நடைமுறையைக் கூர்ந்து நோக்க வேண்டும்.
          உரையாசிரியர்களின் உரைநடைக்கும் பிற்கால அல்லது நடுத்தர (வீரமாமுனிவர் காலத்தில்) உரைநடைக்கும் தற்போதைய உரைநடைக்கும் மிகுந்த வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இத்தாக்கம் சமூகத்தினாலும் பிரதிபலித்தது என்பது திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள இயலும். இதுபோன்று பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்து நாம் உரைநடையின் வளர்ச்சிப்போக்கு மற்றும் காலநிலையை ஆயலாம். ஆனால் அந்த உரைநடையில் ஒரு ஒழுங்கு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என்பது தற்போதைய சூழலில் நிலவும் வினாவாகவே அமைகிறது.
          உரைநடை ஒழுங்கு என்பது அவை எழுதும் நடைமுறையைக் குறித்து அமைகிறது. எழுதும்போது இடைவெளி என்பது மிகமுக்கியம். அது படிப்பவரின் அல்லது புரிந்து கொள்பவரின் திறனுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். அதற்குத் தீர்வுகாணும் போக்கில் எங்கு இடைவெளி தேவை என்பது நடைமுறையைக் கருத்தில் கொண்டு இங்கு ஆராயப்படுகிறது.
மொழிக்கட்டமைப்பு
          மொழிக்கட்டமைப்பு என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதாவது பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்னும் அடிப்படையில் அமைகிறது. அவ்வாறு அமையும் சூழலில் பயன்படுத்துவோர் எவ்வாறு அதனைப் புரிந்து கொள்கின்றனர் என்பதும் வெளிப்படுத்துகின்றனர் என்பதும் இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
          இவர்களின் மூலமே உரைநடை (எழுத்து வழக்கு) கட்டமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்படும்போது அது சீராகவும் செம்மையாகவும் அமைய இலக்கண விதிகள்/கூறுகள் பின்பற்றப்படுகின்றன. அதனூடாகவே மொழி (உரைநடை) பயணம் செய்கிறது. இவ்வாறாக மொழிக்கட்டமைப்பில் ஈடுபடுவோர் ஒரு மிகச்சிறந்த இலக்கண இலக்கியவாதியாகவோ அல்லது மொழியில் புலமைமிக்க அறிஞராகவோ இருத்தல் வேண்டுமென்பது அவசியமற்றது. அதேநேரத்தில் மொழிச்சிதைவு ஏற்படும்போது அதனைத் திருத்திக்கொண்டு செயல்படுபவராகவும் இருத்தல் நலம் பயக்கும். இவ்வாறான மொழிக்கட்டமைப்புச் சூழலில் ஏற்படும் இடர்கள் எவ்வாறு தவிர்க்கப்படவேண்டும். அவை ஏற்படுகின்றனவா? அல்லது ஏற்படுத்தப்படுகின்றனவா? என்பதனைக் கண்டு ஆராய்ந்து அதற்கேற்ற முறையில் சரிசெய்யப்பட வேண்டும்.
உரைநடை உருவாக்கத்தில் பின்னுருபுகள்
பெயர் வினையிலிருந்து பிறந்து, பெயர், வினைத்தன்மையை இழந்து, இலக்கணச் செயலாக்கம் பெற்றுப் பெயரைச் சார்ந்து நின்று, வேற்றுமைப் பொருளுணர்த்துவது பின்னுருபு எனப்படும் (இக்காலத் தமிழில் தொடரியல் நோக்கில் பின்னுருபுகள், ப. 267).
          உருபுகள் என்றாலே வேற்றுமை உருபு, உவம உருபு என்பன போன்றே நம்முடைய மொழிச்சூழமைவு அமைந்துள்ளது. சொற்களின் பின்னர் ஒட்டி அதன் பொருளையே மாற்றும் தன்மை கொண்டவை வேற்றுமை உருபுகள். இது தொகையாகவும் அமைந்து வரும் என்பது இலக்கணிகளின் விதி உருவாக்கம்.
          பின்னுருபுகளும் அதேபோல் வேற்றுமை உருபின் பணியையே செய்கின்றன. ஆனால் அவற்றை வேற்றுமை உருபுகள் என்று அழைக்க முடியாது. அவை ஒட்டுகள் அல்லது உருபுகள் என்று அழைக்கலாம். இதுபோன்ற பின்னுருபுகள் சொற்களின்பின் சேர்ந்து தான் சேர்ந்த சொல்லின் பொருளை மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கிறது. தமிழில் முன்னொட்டு (Prefix) இல்லை என்பது மு. முருகேசன் அவர்களின் கருத்து (இக்காலத் தமிழில் தொடரியல் நோக்கில் பின்னுருபுகள்).
          பின்னொட்டாக வரும் உருபுகள் அது சேர்ந்த சொற்களுடன் இணைத்தே எழுத வேண்டும். பிரித்து எழுதக்கூடாது என்பது குறிக்கத்தக்கது.
          அடுத்து, ஒட்டி, ஒத்த, ஒத்து, காட்டிலும், மூலம், பேரில், பின், படி, மேலே
போன்று மேலும் பல்வேறு பின்னுருபுகள் தமிழில் உள்ளன. இவை உரைநடையில் எழுதப்படும்போது சேர்த்து எழுதப்பட வேண்டும். காட்டாக,
          வேலனையடுத்துக் கண்ணன் வந்தான் / முருகன் கருத்தையொட்டி வளவன் பேசினான்
          முருகனுக்குப்பின் வேலன் வந்தான் / புலியொத்த மிருகம் எதுவும் இல்லை
இதுபோன்ற ஒத்தவடிவுடைய கிளவிகளில் பெயரைச் சார்ந்துநின்று வேற்றுமைப் பொருளை உணர்த்தி நிற்கும் மேற்காணும் கிளவிகளே பின்னுருபுகள். அவை பெரும்பாலும் பெயருடன் சேர்த்தே எழுத வேண்டும்.
வினையடைகளின் தன்மை
வினைச்சொற்களுக்கு அடையாக வரும் எல்லாச் சொற்களையும் பொதுவாக வினையடைக் கிளவி என்று குறிப்பர் (இலக்கணக் கலைக்களஞ்சியம், டாக்டர் பொற்கோ).
                   இன்று வந்தான்/நடந்து வந்தான்/அழகாகப் பாடினான்/அங்கே நின்றான்
                   உரக்கப் பேசினான்/ஏன் சிரிக்கிறான்
இவையெல்லாம் வினையடை கிளவிகள். இவை வினைச்சொற்களுடன் சேர்ந்து வருவதில்லை. தனியாக நின்று பொருள் உணர்த்துகின்றன. இவற்றைப் பிரித்து எழுதலாம்.
          ஆனால், வினையடைகள் தனியாக வராமல் அவற்றின்முன்னர் ஒலிக்குறிப்புச் சொற்களாகிய பகீர், திடுக், திக்கு, படக் போன்றன வரும்போது வினையடைகள் இவற்றுடன் சேர்ந்துநின்று பொருள் உணர்த்துகின்றன. காட்டாக,
          என்னுடைய நெஞ்சு பகீரென்றது / அவனைக் கண்டதும் எனக்குத் திக்கென்றது
          எனக்கு மனம் படக்கென்றது
அதுமட்டுமல்லாமல் ‘இரு’ என்ற ஒலிக்குறிப்பும் சிலவிடங்களில் பயின்றுவரும். மேலும் ஒலிக்குறிப்புச் சொற்கள் இரட்டித்துவரும்போதும் அவை சேர்த்தே எழுதப்பட வேண்டும்.
                   பக்பக்கென்றது / திக்திக்கென்றது
இருப்பினும் ஒலிக்குறிப்புச் சொற்களே இரட்டைக்கிளவிகளாக அமையும் வினையடைகளும் தமிழில் இன்றைய வழக்கிலும் காணப்படுகிறது.
                   கடகடவென உருண்டது / படபடவென வீசியது / குறுகுறுவென நடந்தது
இதுபோன்ற இடங்களில் இரட்டைக்கிளவிகளாக வரும் வினையடைகள் தமக்குள் மட்டுமே சேர்ந்துவரும் (இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா, தொல்.சொல்., 48). இவை ஒலிக்குறிப்புச் சொற்களுக்கான பண்பைப் பெற்றிருந்தாலும் அதற்கான இலக்கணத்துள் பொருந்தி வராது.
          வினையாக்க வினைகள் (ஒரு வினைச்சொல் மற்றொரு சொல்லுடன் இறுதியில் இணைந்து நின்று ஒரு வினைப்பொருளைத் தருவது) என்று வரும்போது அவை வினையடைகளுடன் வந்து கூட்டு வினைகளாக உருப்பெறுகின்றன. அவை தற்போது பெரிதும் நடைமுறையில் உள்ளது. இவையனைத்தும் சேர்ந்து ஒரு புதிய வினையை / புதிய வினைப்பொருளை உருவாக்குகின்றன. இச்சொற்களெல்லாம் ஒருசொல் நீர்மையதாய் நின்று ஒரு வினைப்பொருளைத் தருவதுடன் தனிவினைகள் போல் பல்வேறு இலக்கணக் கூறுகளையும் எடுத்துவருகின்றன. காட்டாக,
                   புத்தகம் அச்சடித்தான்
என்ற சொல்லில் ‘அடித்தான்’ என்ற வினையுடன் ‘அச்சு’ என்ற ஆக்கப்பெயர் இணைந்து ஒரே வினையாக வரும் நிலையில் அடித்தான் என்பதனை வினையாக்க வினையாகக் கொள்ளலாம். இதேபோல்,
                   அதிர்ச்சியடை, சீரழி, முன்னேறு
என்ற சொற்கள் அமையும். இவ்வாறு அமைவதனைச் சேர்த்தே எழுத வேண்டும்.
சுட்டு, வினாச் சொற்கள்
          சுட்டுச்சொற்கள், வினாச்சொற்களில் இலக்கணிகளிடையே பெரிய கருத்து வேறுபாடு இல்லை. அ, இ, உ இவை மூன்றும் சுட்டெழுத்துகள். எ, யா, ஆ, ஓ, ஏ என்பன வினா எழுத்துகள். இவை உரைநடை வழக்கில் அமையும்போது,
                   அ + அழகு = அவ்வழகு / அந்த அழகு
அ + ஆய்வு = அவ்வாய்வு / அந்த ஆய்வு
                   இ + நாடு =     இந்நாடு - இ + வழி = இவ்வழி
என அமையும். சுட்டுச்சொற்களில் ‘அ‘கரத்திற்கு முதலில் கூறியதுபோன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர் (அவ்வழகு, அவ்வாய்வு). ஆனால் அது சரியான சொல்லாட்சியாக அமைந்தாலும் இரண்டாவது சொல்லாட்சி (அந்த அழகு / அந்த ஆய்வு) என்பன சரியாக இருக்கும் என்பது ஆய்வாளர் கருத்து. இருப்பினும் சில இடங்களைத் தவிர (உயிர் + உயிர் புணர்ச்சி) மற்ற இடங்களில் (உயிர் + மெய் புணர்ச்சி) அவை சரியாகவே பொருள் புரிதலுக்கு ஏற்ற வகையில் அமைகிறது. இதனைப் பொற்கோ அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கணம் என்ற நூலில் விளக்கியுள்ளார். அந்த, இந்த, உந்த என்ற சுட்டுச்சொற்களின் சுருங்கிய வடிவமே அ, இ, உ என்றும் அதனால் தேவைப்படாத இடங்களில் அவற்றை அப்படியே பயன்படுத்தலாம் என்பார். அவ்வாறு எழுதும்போது அந்த, இந்த, உந்த என்ற அமைப்பிற்கு இடைவெளிவிட்டும் சுருங்கிய வடிவத்திற்கு இடைவெளி இல்லாமல் எழுதுவது சிறந்தது.
          வினா எழுத்துகளின் நடைமுறை வேறு. அச்சொற்கள் என்ன, யார், அவனா, இவனோ, ஏன் என்பனவாகும். இவை உரைநடை அமைப்பில் தனிச்சொல்லாகவே அமைந்து பொருள்தரும். அவை இணைந்து வராது. 
என்ன பேசினான்? / ஏன் பேசினார் / யார் கேட்டது? /
அவனா கேட்டான்? / இவனோ கூறியது?
என்று இடைவெளியுடன்தான் எழுதவேண்டும்.
நாளிதழ்கள் / இதழ்கள்
          நாளிதழ்கள், இதழ்கள் போன்றவற்றில் மேற்கூறப்பட்ட அனைத்தும் அடங்கியுள்ளன. இவைகளின் மொழிக்கட்டமைப்பு என்பது தற்காலத் தமிழ் உரைநடையின் பிரதிபலிப்பாக அமைகிறது. இதனையே புதுமைப்பித்தன்,
‘தமிழை மீட்க பத்திரிகைகள் இருக்கின்றன. ‘தனித்தமிழ் உரைநடைக்கென்று தொண்டாற்றும்’ பத்திரிக்கைகள், அவைகளல்ல. எழுதுவது வாசிப்பதற்காகத்தான் என்பதை மட்டும் கவனித்து வெளிவரும் பத்திரிகைகள்தான் இந்த மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளால் இலக்கியத்தைச் சிருஷ்டிக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால் வளைந்து கொடுக்கும் வசனத்தைப் பழக்கிவிட முடியும்’ (தமிழ் மொழி அரசியல், ப. 129) என்பார்.
          நாளிதழ்களில் உள்ள இடைவெளிப் பிழையைக் களைவதின் வழியாகத் ‘தமிழ் உரைநடை மேம்பட்டதாக்க முடியும். மேற்குறிப்பிட்டதோடு பொருள் மயக்கம் தரும் நடைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
                   புதிய அரசு ஆலைகள் தொடங்கப்பட்டன
என்பதில் அரசு புதிதா? ஆலைகள் புதிதா? என்பது மயக்கத்தை விளைவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இவைகளுக்குத் தீர்வுகாண சொற்பிரிப்பு, சேர்ப்பு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
கலைச்சொற்கள்
ஒரு துறையில் உள்ள கருத்துகளை அல்லது கருத்துத் தொகுப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தும் (பொதுப்பொருளில் வழங்காத) அந்தத் துறைக்கே உரிய சொல் கலைச்சொல் என விளக்கமளிக்கிறது க்ரியா தமிழ் அகராதி.
இதுபோன்ற பல்துறை சார்ந்த கலைச்சொற்களைத் தமிழில் அறிமுகம் செய்து அதனை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் போக்கு அளப்பரியது. அவ்வாறான செயல்முறையில் அவற்றைச் சரியாக எழுதி அறிமுகம் செய்யவேண்டிய அவசியமும் உள்ளது. ஏனெனில் புதிய சொற்களைப் பழக்கும்போதே அது எந்நடைமுறையில் அமைகிறதோ அதுவே இறுதிவரை நிலவும். இதுபோன்ற சூழலைக் கருத்தில் கொண்டு சிலவற்றைக் காணலாம்.
          உளவியல் கலைச்சொற்களில் மனவளர்ச்சி, மனநலம், மனக்காட்சி
எனத் தமிழில் எழுதும்போது அதனை ஒரே சொல்லாக இடைவெளியின்றிப் பயன்படுத்துதல் வேண்டும். அதேபோல்
சட்டத்துறைக் கலைச்சொல்லில் ஆட்கொணர்வு மனு, குடியேறிடம், குடிநுழைவிடம்
போன்றனவும் இவ்வாறு அமையும்.
          மொழி தனித்து இயங்கக் கூடிய ஒன்றல்ல. அது குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கை முறை சார்ந்து, நிலம் சார்ந்து, கலைகள், தொழில்கள், கலாச்சார மற்றும் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து உருவாவது. இந்த மொத்தக்கூறுகளும் சேர்ந்ததுதான் மொழி. இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க இயலாது. அதிலும் தமிழ்மொழி காலங்காலமாக ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டேதான் வருகிறது. இந்தத் தாக்குதல்களால் மொழி இழந்ததும் அதிகம். பெற்றதும் அளவிட முடியாதது.
மொழியை மக்கள் உருமாற்றம் செய்கிறார்கள். இவ்வுலகில் பெரிய அறிஞர்கள் அவற்றை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறார்கள். மக்களின் மொழிப் பிரயோகத்திற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற ‘ழாக் ப்ரெவரின்’ கருத்தோடு இதனை நிறைவு செய்கிறேன்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
  1. தமிழ் நடைக்கையேடு, (இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், மொழி அறக்கட்டளை, தமிழ்ப் பல்கலைக்கழகம், சூலை 2008), அடையாளம் பதிப்பகம், திருச்சி.
  2. பொற்கோ (2001), தற்காலத் தமிழ் இலக்கணம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
  3. பொற்கோ (மூன்றாம் பதிப்பு 2000), இலக்கணக் கலைக்களஞ்சியம், பூம்பொழில் வெளியீடு, சென்னை.
  4. முருகேசன் மு. (அக்டோபர் 2006), இக்காலத் தமிழில் தொடரியல் நோக்கில் பின்னுருபுகள், தி பார்க்கர், சென்னை
  5. இராசாராம் சு., (டிசம்பர் 2014), தமிழ்மொழி அரசியல், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.
  6. இராசாராம் சு., (நவம்பர் 2010), இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.
  7. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (மறுபதிப்பு டிசம்பர் 2014), க்ரியா வெளியீடு, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...