வியாழன், 15 டிசம்பர், 2022

பாரதி 🔥 🎉🎊



சங்கம் வைத்து வளர்த்தனர்

தமிழன்னையை 

இன்றும் பல சங்கங்கள் 

வளர்ந்துள்ளன 

தமிழ்தான் வளரவில்லை


இச்சமூகத்தில் சாதியம் அறுத்து – தீண்டாமை வெறுத்து

தனிமனிதனாய் களம்கண்டாய்

அன்றுன்னை உரைத்திட்டார் 

பித்தனென்று…

சமயம் பார்த்து 

இன்றுன்னை வைத்திட்டார் 

தமிழன்னைத் திலகமாக…


காசியில் அன்று நீ பெற்றது 

அடைக்கலம்

இன்று நீ

கேட்காமலேயே கிடைத்தது

மாபெரும் சங்கமம்


பல்நிறப் பூனைகளை 

அன்று நீ உன் வீட்டில் 

கண்டாய்…

இன்று 

இடம்தேடி அலைகின்றன

தெருக்களில்….


கவிஞனாக அல்ல 

மனிதனாகக் கூட 

ஏற்றுக்கொள்ளவில்லை அன்று….

எப்படியோ 

இன்று தலைவனாக 

உயர்ந்துவிட்டாய்

பிறந்தநாள் வாழ்த்துகள் 

சு.பா.🔥

💐🎉🎊

செவ்வாய், 6 டிசம்பர், 2022

மணிமேகலை _ ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

 


அறவண அடிகளிடம் ஆபுத்திரன் வரலாறு கேட்டல்

       ஆபுத்திரன் யார்? என்ற கேள்விக்கு விடைதேடும் வகையில் மணிமேகலையும் சுதமதியும் அறவண அடிகளிடம் கேட்க வந்தனர்.

       “நீங்கள் கூறுங்கள், அடிகளே!” என்று மணிமேகலை கேட்க, அவனுடைய வரலாற்றை அவர்களுக்குக் கூறத் தொடங்கினார் அறவணர்.

ஆபுத்திரன் பிறப்பு

·       “வாரணாசி என்ற காசிநகரத்தில் அபஞ்சிகன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் வேதத்தை ஓதுவிக்கும் தொழிலைக் கொண்டவன். அவனுடைய மனைவியின் பெயர் சாலி.

·       கற்புநெறி தவறி, அந்தப் பார்ப்பினி தனது கணவனுக்குத் தவறு இழைத்துவிட்டாள். அதன்பின், அவளுக்குக் குற்ற உணர்ச்சி மிகுந்தது. தான் செய்த குற்றத்திற்கு என்னசெய்வது என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தபோது தீர்த்தயாத்திரை செல்லும் கூட்டம் ஒன்று குமரிக் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது.

·       அவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். நெடுங்கால யாத்திரை என்பதால் அவளது சூல் மெல்லமெல்ல வளர்ந்து நிறை கர்பிணியாகிவிட்டாள்.

·       ஒருநாள் இரவு எவருக்கும் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் சிசுவைப் பெற்று இறக்கிவைத்தாள். புற்கள்நிறைந்த பரப்பில் அந்தக் குழந்தையைக் கிடத்தினாள். அதன்பின் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

ஆபுத்திரனுக்குப் பசு பால் அளித்தல்

o   பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது.

o   சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது.

o   ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது.

o   இது இப்படியே ஒருவாரம் தொடர்ந்தது.

ஆபுத்திரனை ஏற்றுக்கொள்ளுதல்

v  வயனங்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பூதி என்ற அந்தணன் ஒருவன் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தான். சிறுகுழந்தை அழுவதையும் அதற்குப் பசு ஒன்று பால் வழங்குவதையும் அவனும் அவன் மனைவியும் கண்டார்கள்.

v  பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் இருந்த அத்தம்பதி, இனிமேல் இதுதான் நம் குழந்தை என்று என்று அந்தணன் சொன்னதும் அவன் பத்தினி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

v  “தங்கள் குலம் தழைக்க நம்பி பிறந்துவிட்டான்” என்ற பெரிய உவகையுடன் அந்தணன் அக்குழந்தையைத் தங்களது இல்லத்திற்கு எடுத்துச் சென்றனர்.

v  நாள் பார்த்துப் ஆபுத்திரன் என்ற பெயர் சூட்டினார்கள். உரிய பருவத்தில் அவனுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தி, வேதம் பயில்விக்க அந்தணர்களிடம் அனுப்பினர்.

v  வேதம்பயிலும் அந்தண இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து சாத்திரங்களையும் அவன் கற்றுக்கொண்டான். கல்வியிலும் மறை ஓதுவதிலும் சிறந்து விளங்கினான்.

வேள்வியும் ஆபுத்திரன் செயலும்

Ø  அன்றொருநாள் ஆபுத்திரன் வழியில் போய்க்கொண்டிருந்தபோது ஓர் அந்தணர் வீட்டின் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது. “ஏதாவது நிகழ்விருக்கும்” என்று எண்ணிய ஆபுத்திரன் உள்ளே சென்று பார்த்தான். பெரிய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது.

Ø  சுடுமணலால் புனையப்பட்ட பெரிய யாககுண்டம் ஒன்று தெரிந்தது. வேள்விக்கூடத்தின் தூண் ஒன்றில் பசுமாடு ஒன்றைக் கட்டியிருந்தார்கள். அப்பசுவின் கொம்பில் பூ சுற்றியிருந்தார்கள்.

Ø  அதன் உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டிருந்தது. நெற்றியில் நீளமாகச் செந்தூரம் தீட்டபட்டிருந்தது. முதுகில் ஒரு புதுத்துணி போர்த்தபட்டிருந்தது.

Ø  இவ்வளவு அலங்காரம் செய்திருந்தும் அதன் கண்களில் மகிழ்ச்சி இல்லை. வேடுவர்கள் துரத்திவரும்போது மருண்டுநிற்கும் மானின் அச்சம் நிறைந்த கண்களைப்போல அதன் கண்கள் விளங்கின. அதன் மேனி பயத்தில் நடுங்கியபடி இருந்தது.

Ø  ஆபுத்திரனுக்கு அந்தப் பசுவின் துயரநிலை மனதை வருத்தியது. உடனே அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

பசுவின் செயல்பாடு - அந்தணர் இகழ்தல்

ü  அந்த இடத்திலேயே இரவு வரும்வரை தங்கியிருந்தான். பகலில் கொண்டுசென்றால் தனது செயல் தடுக்கப்படும் என்பதால் இரவு வந்ததும் ஒருவருக்கும் தெரியாமல் பந்தலுக்குள் நுழைந்து தூணில் கட்டபட்டிருந்த பசுவின் கயிற்றை அவிழ்த்து, கொண்டுசென்றான்.

ü  வேள்விச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பசுவைக் காணாமல் அந்தணர்கள் வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்போது ஆபுத்திரன் அந்தப் பசுவடன் செல்வதுகண்டு அவனை வழிமறித்தனர்.

ü  “கையில் பசுவைப் பிடித்துக்கொண்டு போகக்கூடாத வழியில் போகும் நீ பையனா? இல்லை புலையனா? எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய்?” என்று கேட்டனர். அந்தக் கூட்டத்தில் ஓர் அந்தணன் கையில் வைத்திருந்த கம்பால் ஆபுத்திரனை அடித்தான்.

ü  அந்தப்பசு, ஆபுத்திரனை அடித்துக் கேள்விகேட்ட அந்தணனின் வயிற்றைத் தனது கூரிய கொம்பினால் கிழித்து, ஆபுத்திரனின் கயிற்றுப் பிடியிலிருந்து விடுபட்டு, அருகில் இருந்த காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிமறைந்தது.

பசுவிற்காகப் பரிதல் – அந்தணர்கள் சினம்

v  ஆபுத்திரன் அந்த மறையோர்களைப் பார்த்து, “வேள்வி என்று கூறிப் பசுவைப் பலிகொடுப்பது முறையாகுமா? நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா? பாவமில்லையா அது? இந்தப் பசுமீது உங்களுக்கு எதற்காக இவ்வளவு சினம்? முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில் கூறுங்கள்!” என்றான்.

v  “யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்? நாங்கள் யார் தெரியுமா? அழகிய அணிகளுடன் விளங்கும் பொன் சக்கரத்தைத் வலக்கரத்தில் சுழலவிட்டுக்கொண்டிருக்கும் ஆதி கடவுளான மகா விஷ்ணு (திருமால்), தனது நாபியில் தோன்றிய பிரமனுக்கு வாழ்வின் நெறிகளை உபதேசித்தான்.

v  பிரம்மன் அதனை மனுவிற்குச் சொன்னார். மனு எங்களுக்கு உரைத்தான். மனுதர்மம் பிறழாமல் நடக்கும் வைதீக பிராமணர்களான எங்களுக்கு நீ உபதேசம்செய்ய வந்துவிட்டாயா?

v  நீ அந்த மாட்டுக்குப் பிறந்தவன் போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய். நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே!” என்று இகழ்ந்தனர்.

தேவர்களின் பிறப்பு – சாலியின் வரலாறு

Ø  “நீங்கள் வணங்கும் தேவர்களின் வரலாற்றைச் சொன்னால் ஒருநாள் போதாது. பசுவிற்கு மகனாகப் பிறந்தவன் அசலன்; மான் பெற்றெடுத்த மகன் சிருங்கி; புலிக்குப் பிறந்தவன் விரிஞ்சி; வானுலகும் வணங்கும் கேசகம்பளன் நரிக்குப் பிறந்தவன் என்பதை மறந்து விடாதீர்கள், நான்மறை ஓதும் பிராமணர்களே! முதலில் குற்றம்கூறும் முன்னர் உங்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு குற்றம் கூறுங்கள்” என்றான் ஆபுத்திரன்.

Ø  “வாயை மூடு” எனச் சீறினார். இவன் பிறப்பு நமக்குத் தெரியாதா? என்று கூறினார் ஒரு பிராமணர்.

Ø  “ஒரு தீர்த்தயாத்திரைக் கூட்டத்தில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். கன்னியாகுமரி போய் பாவத்தைத் போக்கச் சென்றிருந்தோம். நடக்கமுடியாமல் சிரமத்துடன் ஒரு பார்ப்பனத்தி உடன் வந்தாள். யாரென்று விசாரித்தேன். காசியிலிருந்து வருவதாகவும், அவள் பெயர் சாலியென்றும் சொன்னாள்.

ஆபுத்திரன் வரலாறு

o   “காசி நகரில் என் கணவர் வேதம் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார். கற்புநெறி பிறழ்ந்து அவருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டேன். அப்பாவத்தினைக் கரைக்க குமரிக்கடலில் குளிக்க எண்ணி இவர்களுடன் சேர்ந்துகொண்டேன் என்றாள்.

o   ‘பொன்தேர் கொண்ட பாண்டியன் செழியன் என்பவனது தென்மதுரை நகரைக் கடந்து சிறிது தூரம் சென்றபின்பு மாடு மேய்க்கும் கோவலர்களின் குடியிருப்புப் பகுதி வந்தது. நிறைமாத கர்ப்பமான எனக்குப் பேறுகால வலி எடுத்தது.

o   நான் அருகிலிருந்த தோட்டத்தில் குழந்தையை ஈன்று, அதன் முகத்தில்கூட விழிக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன். அப்படிப்பட்ட பாவியாகிய எனக்குப் பாவ விமோசனமே கிடையாது என்று கூறி அழுதாள். அந்தப் பாவியின் மகன்தான் இந்த ஆபுத்திரன்.

ஆபுத்திரன் பதிலுரையும் – அந்தணர்கள் முடிவும்

ü  ஆபுத்திரன் அவர்களுடைய வசைமொழிகளைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல் புன்னகைத்தான். தன் பிறப்பிற்கும், தாயின் நடத்தைக்கும் வருந்தாமல் சிரிப்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

ü  “உங்கள் குலத்திற்கு மூத்தவர் என்று கருதப்படும் வசிட்டமுனியும், அகத்திய முனியும் பிரம்மனுக்கும், தேவகணிகையான திலோத்தமைக்கும் பிறந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? இதை நான் சொல்லவில்லை உங்கள் சாத்திரம் கூறுகிறது. அது பிழையில்லை என்றால் என் தாய் சாலி செய்ததும் பிழையில்லை. சொல்லுங்கள் வேதங்களில் சிறந்த அந்தணர்களே” என்றான்.

ü  சபை கூடியது. ஆபுத்திரனின் செயல் விசாரணைக்கு வந்தது. பசுவைக் களவாடியது குற்றம் எனத் தீர்ப்பானது. இனி ஒருவரும் அந்த ஊரில் அவன் ஓடு ஏந்தி வரும்போது பிச்சை இடக்கூடாது என்று முடிவானது. அவன் தந்தையும் அவனை வீட்டைவிட்டு  வெளியேற்றினார்.

உணவுகொடுத்த ஆபுத்திரன்

·       ஊர்மக்கள் அவன் ஓட்டில் அன்னத்திற்குப் பதில் கற்களை இட்டனர். ஒருநாள் இரண்டுநாள் பார்த்துவிட்டு, வெறுத்துப்போய் உணவு தேடி மதுரை நகரை நோக்கிச் சென்றான் ஆபுத்திரன்.

·       “அங்கு சிந்தாதேவி கோவிலை அடைந்தான். அங்குள்ள மண்டபத்தில் தங்கினான். அனைத்து வீதிகளிலும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்தான்.

·       அப்படிப் பெற்றுவந்த பிச்சை உணவினை வைத்துக்கொண்டு, ‘கண் பார்வையற்றவர்களே! காது கேளாதவர்களே! கை, கால்கள் முடமாகிப் போனவர்களே! ஆதரவற்றவர்களே! நோய்வாய்ப்பட்டவர்களே! வாருங்கள்.... அனைவரும் வாருங்கள்.... உங்களுக்காக மிகுதியான உணவைப் பிச்சையாகக்கொண்டு வந்துள்ளேன்,’ என்று அனைவரையும் கூவி அழைத்து, அவர்களுக்கு உணவளித்து, அதன் பிறகு எஞ்சியதைத் தான் உண்டு, அந்தப் பிச்சைப் பாத்திரத்தைத் தலைக்கு அணையாகக்கொண்டு உறங்கினான்.

·       இவ்வாறாக ஆதரவற்றவர்களுக்கு உற்ற துணைவனாகத் தனது காலத்தை ஆபுத்திரன் மதுரையில் கழித்தான்,” என்று அவனின் வரலாற்றைக் கூறினார் அறவண அடிகள்.

சிலப்பதிகாரம் _ கனாத்திறம் உரைத்த காதை


 


  • மாலதி
  • பார்ப்பான் – பார்ப்பினி
  • பாசண்டச் சாத்தன்
  • தேவந்தி
  • கண்ணகி
  • கோவலன்
  • இடாகினிப்பேய்

மகளிர் மாலைக்கால வழிபாடு

*    சூரியன் மறைந்த மாலைப்பொழுதில் நெல்லோடு மலர்ந்த முல்லைப் பூக்களைக் கொண்டு பெண்கள் தங்கள் வீடுகளில் இறைவனை வழிபட்டு நிற்பர்.

மகனை இழந்து வாடும் மாலதி

  • மாலதி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன்மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள்.

அவள் சென்ற கோட்டங்கள் பின்வருமாறு:

v  அமரர் தருக்கோட்டம்

v  வெள்யானைக் கோட்டம்

v  வெள்ளை நாகர் கோட்டம்

v  உச்சிக்கிழான் கோட்டம்

v  ஊர்க்கோட்டம்

v  வேற்கோட்டம்

v  வச்சிரக் கோட்டம்

v  புறம்பணையான் வாழ்கோட்டம்

v  நிச்சந்தக் கோட்டம்

v  நிலாக்கோட்டம்

v  சுடுகாட்டுக் கோட்டம்

Ø  இறுதியாக, பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை நோக்கிச் சென்றாள். அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து, “தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தரமாட்டர்கள்” என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று விழுங்கி விட்டது.

Ø  உயிர் நீங்கிய உடலும் அடையாளத்துக்குக் கூட இல்லாமால் போய் விட்டது. இடி உண்ட மயில் போல் துடிதுடித்தாள், ஏங்கி அழுதாள். 

Ø  “அன்னையே நீ அழாதே” என்று கூறி, சோலையில் கிடக்கும் ஒரு குழந்தையை “எடுத்துச் செல்க” என்று அத்தெய்வம் கூறியது. பாசாண்டச் சாத்தனே அக்குழந்தை வடிவாகியது. மாற்றுக் குழந்தை கிடைத்தவுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் பழியைப் போக்கிக் கொண்டாள்.

Ø  அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி பெற்றுப் பெரியவன் ஆகி அந்தக் குடும்பத்துப் பொறுப்புகளை ஏற்று வாலிபன் ஆயினான். அப்பெற்றோர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்து மணமும் செய்து கொண்டான். தேவந்தி என்பாள் அவன் வாழ்க்கைத் துணைவியாயினாள்.

Ø  நாள்கள் சில நகர்ந்தன. அவளோடு தொடர்ந்து வாழாமல் தான் தெய்வம் என்பதை அவளுக்கு உணர்த்தி “எம்முடைய கோயிலுக்கு நீ வா” என்று கூறிச் சென்றான்; ஊரார்க்குப் பதில் கூற வேண்டும். தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று வழிபடுவதாகக் கூறி வழிபாடுகள் மேற்கொண்டு வந்தாள்.

கண்ணகி கனவு

o   கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவலையுறுகிறாள் என்பது அறிந்து அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள்.

o   அப்போது தான் கண்ட கனவினைத் தேவந்திக்கு எடுத்துரைத்தாள்.

o   “அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல் ஒன்று கூறினர். அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக் காவலன் முன் சென்று நான் வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவுற்றனர். அதன்பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று உரைத்தாள்.

தேவந்தியின் அறிவுரையும் கோவலன் வருகையும்

v  அதனைக் கேட்ட தேவந்தி, “சென்ற பிறவியில் நீ உன் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பினைச் செய்யாமல் விட்டு விட்டாய். அதனை இப்பொழுது செய்க.

v  கடலொடு காவிரி கலக்கும் இடத்தில், நெய்தல் மணக்கும் கானலில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. அந்நீர்த் துறைகளில் முழுகிக் காமவேள் ஆகிய மன்மதன் கோயில் சென்று தொழுதால் இந்த உலகத்தில் பெண்கள் கணவனோடு இன்புற்று வாழ்வர்;

v  அடுத்த பிறவியிலும் இருவரும் மகிழ்வுடன் இருப்பர். எனவே, நாம் இருவரும் சென்று நீராடுவோம்” என்று கூறினாள்.

v  அவள் உரைத்த உரைகள் அனைத்தும் கேட்ட கண்ணகி “பீடு அன்று” என்று கூறினாள்.

v  அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி, வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள். கோவலன் வருகிறான் என்பதை அறிவித்துச் சென்றாள்.

கோவலனின் வருத்தமும் முடிவும்

ü  கோவலனும் நேரே வந்து பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்; கண்ணகியின் வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்;

ü  “வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த செல்வத்தை எல்லாம் தொலைத்து விட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றி விட்டது; இலம்பாடு (வறுமை) அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்;

ü  கண்ணகி, “சிலம்பு உள கொண்ம்” என்றாள்.

ü  “இழந்த பொருளை ஈட்டுதல் வேண்டும், இந்தச் சிலம்பினை முதற் பொருளாகக் கொண்டு நகைகள் செல்வம் அனைத்தையும் மீட்பேன்” என்றான். மாடமதுரைக்குச் சென்று வாணிபம் செய்யும் கருத்தை அறிவித்தான்.

மதுரைக்குச் செல்லுதல்

§  அவளையும் ‘உடன் வருக’ என்று அழைத்தான். இருள் நீங்கிய விடியற்பொழுதில் வீட்டை விட்டுச்சென்றார்கள்.

§  கோவலனுடன் கண்ணகியும் புறப்பட்டாள்.

பன்முகநோக்கில் உலகமயமாக்கல்


 

உலகமயமாக்கல் என்ற சொல் உலகளவில் சமூகப் பொருளாதார வாணிப நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொல்லாகும். பன்னாட்டு அளவில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி சார்புடைய தன்மையை அதிகரிக்கச் செய்வதாகும். குறிப்பாகத் தாராளமயமாக்கல் கருத்தின் அடிப்படையில் வாணிபத்தில் சுதந்திரமான போக்கைக் கொண்டுவர உலகமயமாக்கல் கருத்தானது சுதந்திர வாணிபத்தைப் பரிந்துரை செய்தது.

உலகமயமாக்கல் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் செயல்முறையாகும். 1985இல் தியோடோர் லெவிட் பயன்படுத்திய உலகமயமாக்கல் என்னும் கருத்தியல் இன்று பல்வேறு அர்த்தங்களை, புரிதல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. எவ்வாறெனின் உலகமயமாக்கல் என்பதனையே விளக்கப் பல கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் அறிஞர்கள் பலரும் உலகமயமாக்கல் என்பதனை விளக்க வேறுவேறு கருத்தாக்கங்களை எடுத்துரைக்கின்றனர். “உலக நாடுகளிடையே பொருளாதார அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்த வளர்ச்சிப் பாதையை உலகமயமாக்கல்” எனலாம் என்கிறார் கவல்ஜித் சிங். “உலகம் ஒற்றை இடமாக மாறிவரும் நடைமுறையே உலகமயமாக்கல்” என்கிறார் ரோலன்ட் ராபர்ட்சன். “தொலைவிலிருக்கும் இடங்களையும் இணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களால் உள்ளூர் நிகழ்வுகள் உருவமைக்கப்படுகின்ற உலக அளவிளான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலை உலகமயமாக்கல்” என்கிறார் ஆண்டனி கிடன்ஸ்.

இதுபோன்ற கருத்தாடல்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. தங்களின் பார்வையில் இவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்துகொண்டாலும் இன்று அதனையும் கடந்து ஒரு பருப்பொருளாக இது அமைந்துள்ளது என்பதே உண்மை.

பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திய முதல்மனிதன் காலந்தொட்டு உலகமயமாக்கல் தொடங்கிவிட்டது. அவ்வுலகமயமாக்கல் இன்று அதீத வளர்ச்சி கொண்டுள்ளது. உலகின் எந்த மூலையையும் நாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் அதீத சக்தி பெற்றுள்ளோம். இதுவே மிகப்பெரிய சவால். அதனை நிறைவேற்றியிருப்பது உலகமயமாக்கல் என்னும் முதல்மனிதன் தொடங்கிய செயல்பாடு. இன்று பல்வேறு துறைகளில் உலகமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டு தன்னுடைய ஆக்டோபஸ் கைகளால் உலகை ஒன்றிணைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வி, விவசாயம், கணினித் தொழில்நுட்பம், நிதி, சட்டம், கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, அரசியல் போன்ற பல்வேறு துறைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மேற்கூறப்பட்ட பல்துறைகளில் உலகமயமாக்கலின் தாக்கம் எவ்வாறு பின்னப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் என்னென்ன போன்ற காரணிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

உலகமயம் – தாராளமயம் – தனியார்மயம்

      உலகமயமாக்கல் பற்றியும் அது சார்ந்த விரிவுகள் பற்றியும் அறிந்துகொள்ளும் முன் தாராளமயம் – தனியார்மயம் – உலகமயம் இம்மூன்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வது தேவையாகிறது. உலக அளவில் பொருள் வணிகமும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்வதும், நாடுகளுக்கிடையே பணப்பரிமாற்றம் மற்றும் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுமாக இருப்பது உலகமயம் என்று கொள்ளலாம். தாராளமயம் என்பது முதலாளித்துவத்தின் மற்றொரு வேர்நிலை வெளிப்பாடு. இது சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைகிறது. சந்தையை மாற்று அது சமூகத்தை மாற்றும் என்னும் கருத்துடையது. தனியார்மயம் என்பது, பொது என்ற கருத்தமைவை ஏற்றுக்கொள்ளாதது. பொதுத்துறையில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை நிறைவாக்க அதனைத் தனியார் துறைகளுக்கு ஒப்படைக்கும் செயல்பாடு.

      போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களால் உலகமயமாக்கல் வளர்ந்துள்ளது. அதிகரித்த உலகளாவிய தொடர்புகளுடன் சர்வதேச வர்த்தகம், யோசனைகள் மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சி வருகிறது. உலகமயமாக்கல் என்பது முதன்மையான சமூக மற்றும் கலாச்சார அம்சங்களுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் பொருளாதாரச் செயல்முறையாகும்.

உலகமயமாக்கல் வரலாறு

      “உலகமயமாக்கல்” என்ற சொல் நுணுக்கமான மற்றும் அரசியல் சார்ந்த இரு வெவ்வேறு வரலாற்றுப் பின்னனியைக் கொண்டது. பொதுவாக உலகமயமாக்கலின் வரலாறு வாணிப நடவடிக்கையை ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டின் நிலையான அமைப்பிற்கும் உள்ள தொடர்பை அதிகப்படுத்தியும் பண்டமாற்று முறையில் உள்ள இடர்களைக் குறைப்பது ஆகும்.

      “தாராளமயமாக்கல்” என்ற சொல் தடையில்லா பொருளாதாரக் கோட்பாடுகளையும், பண்டமாற்று முறையில் உள்ள கட்டுப்பாடுகளையும் களைவதே ஆகும். இதனால் ஒரு நாட்டின் வாணிபம், தனித்திறமை, பாதுகாப்பான வரிகள் மற்றும் வாணிப நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தமுடிகிறது.

      19ஆம் நூற்றாண்டில் தாராளமயமாக்கல் காலகட்டத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக இருந்தது. மேலும், இதை உலகமயமாக்கலின் முதல் பகுதியாக காணப்பட்டது. இதனால் தொழில்மயமாதல் அதிக வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது. இதனை கோட்பாடு அடிப்படையில் விளக்கலாம். ரிக்கார் டோவின், “ஒப்பீட்டு நன்மை கோட்பாட்டின்” மூலமும் சேவின் “பொதுச்சமநிலை கோட்பாடு” மூலமும் ஒரு நாடு வாணிபத்தில், விளைவுள்ள வாணிபம் மேற்கொள்வதற்கான அடிப்படையை விளக்குகிறது.

      உலகமயமாக்கலின் முதற்படி முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் தகர்க்கப்பட்டது. மேலும், பொன் திட்டத்தினால் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகவும், 1920இல் இருந்து 1930 வரை குழப்பங்கள் காணப்பட்டது. இதற்குப் பிறகு உலக நாடுகள் உலகமயமாக்கல் கருத்தை ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட சமமின்மையைச் சரிசெய்யத் திட்டம் தீட்டியது. மேலும் பொருள்கள், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்தி காரணிகளைச் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையில் பரிமாற்றிக்கொள்ள இது வழி செய்கிறது. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க பிரிட்டன் உட்ஸ் நிறுவனமான IMF மற்றும் GAAT உருவாக்கப்பட்டது.

      வாணிப ஒப்பந்தம் மறுபரிசீலனைச் செய்யப்பட்டது. இரண்டாவது உலகப்போருக்குப் பின் பன்னாட்டுப் பொருளாதார நிறுவனங்கள், மறுசீரமைப்பு, பன்னாட்டு வாணிபம் ஆகியவை விரிவுபடுத்த துரிதப்படுத்தப்பட்டது. 1970களில் இந்த விரிவுபடுத்தப்பட்ட வாணிபத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உலகமயமாக்கல்

      ‘நூல் பல கல்’, ‘கல்வி கரையில’ என்ற உரையின்வழி கல்வி கற்பதன் அவசியத்தை உணரமுடிகிறது. கல்வியினால் தாம் பெற்ற இன்பத்தை இவ்வுலக மக்களும் பெறவேண்டும் என்று கற்பித்தும் கற்றும் வருபவர்களே அறிஞர் பெருமக்கள் என்பார் வள்ளுவர். பல்துறை சார்ந்த அறிவைப் பெறக் கல்வி அவசியம். கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த சான்றோர்,

                  கற்கை நன்றே கற்கை நன்றே

                  பிச்சை புகினும் கற்கை நன்றே

 என்றுரைத்தனர். கரையில்லா பரந்துபட்ட கல்வியைப் பயில பல்வேறு நாடுகளும் இணைந்து செயலாற்றுகின்றன. அறிவை விரிவுசெய்; அகண்டமாக்கு; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்ற பாரதிதாசனின் கருத்திற்கு இணங்க, அகண்ட இவ்வுலகில் கல்வி கற்க / கற்பிக்க உலக அளவிலான தொழில்நுட்பங்கள் இன்று உதவிபுரிகின்றன. குறிப்பாக, இன்று உலகளவில் தொற்றுநோயின் பரவலால் முடங்கிக்கிடக்கும் சூழலில் கற்பதற்கோ, கற்பிப்பதற்கோ எதுவும் தடையில்லை என்ற நிலையில் வழிகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன. இணையவழிக் கல்வி இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளால் பின்பற்றப்பட்ட போதிலும், தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் கற்பித்தல் மற்றும் கற்றல் பணிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனைப் பயன்படுத்த அழைப்பு விடுக்கின்றன. குறிப்பாக, குவியம் (Zoom), Google Meet போன்றன அமைந்துள்ளன. இதன்மூலம் கல்வி கற்றல் அல்லது கற்பித்தல் பொதுமையாக்கம் பெற்றுள்ளது. இதனால், கல்வி கற்கும் மாணவர்களின் சிந்தனைத் திறன், செயலாற்றும் களம் பரந்துபட்டதாக அமைந்துள்ளது.

கல்வி பயில பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான இளையோர் சென்று சேர்கின்றனர். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது இன்றைய நவீனம். இதற்கு யுனஸ்கோவின் (UNESCO) பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது. உலகத்தரம் மிக்க கல்வியைக் கற்று மேன்மேலும் அறிவை விரிவாக்கிக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது சாத்தியமானதே உலகமயமாக்கலின் விளைவு எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த உலகமயமாக்கல்

      இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வேளாண்துறை வீழ்ச்சி அடைந்தது. அதனைச் சரிசெய்ய பல்வேறு நாடுகளின் உதவியினால் வேளாண் தொழிலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு உரங்களின் வரவு, விதைகளின் மரபணு தன்மை மாறாமை போன்றன குறிப்பிடத்தக்கன. இதன்மூலம் புதிய பசுமை புரட்சி இன்று ஏற்பட்டுள்ளது. தொழில்துறை வளர வேணாண்மை முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக இரும்பு மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்கள், வேளாண்மைக்குத் தேவையான வாகன உற்பத்தி நிறுவனங்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் என பலவாறாகக் குறிப்பிடலாம்.

பொருளாதார உலகமயமாக்கல்

      பன்னாட்டு வாணிபம் அதிகரித்து, குறிப்பாக வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளுக்குத் தங்களது பொருளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இதன்மூலம் பன்னாட்டு முதலீட்டை அதிகப்படுத்தவும் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகப்படுத்தவும் வகைசெய்கிறது. வளரும் நாடுகள் தங்களது மூலதனத்தைப் பன்னாட்டு கடன் மூலம் பெற்று வளர்ந்துவருகிறது. உலகப் பொருளாதராம் மிகவேகமாக வளர்வதாலும், வளரும் நாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி உற்பத்தி நடவடிக்கையை வேகப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கச் செய்து பன்னாட்டு தரத்தின் உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் மாறுகிறது.

      பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தின் பங்கை அதிகப்படுத்தியும் வளரும் நாடுகளில் எந்தவித ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவும் இன்றி நேரடியாகத் தொழில்நுட்பத்தைப் பெற்று வளரவும் உதவுகின்றது. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகப்படுத்துதல் மூலம் போக்குவரத்துச் செலவு, செய்தித்தொடர்புச் செலவு போன்றவைகள் குறைகின்றன. இதனால் தீர்வுகள் குறைகிறது. மேலும் அன்னிய வாணிகம் உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிக்கிறது. பன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் நாடுகளின் பொருளாதார எல்லை விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது பல்வேறு நிறுவனங்களுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டு பன்னாட்டு வாணிபத்தை மேற்கொள்ள உதவுகிறது. இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகஅளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. வெளிவளம் (External Resources) எனப்படும் பொருளாதார நடைமுறையினைப் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகஅளவு வளர்ச்சியடையச் செய்துள்ளன.  

நிதி – சட்ட உலகமயமாக்கல் 

      நாட்டின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தேவைக்கு நிதி என்பது முக்கியத் தேவையாகிறது. அதற்கு பல்வேறு நாடுகளுடன் வணிக உறவு கொள்ளவேண்டிய தேவை உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் பலவும் தங்களுடைய பன்னாட்டு வணிகத்திற்குப் பயன்படுத்தும் நாணய மதிப்பு என்பது அமெரிக்காவின் டாலராகவே உள்ளது. இதனாலேயே இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதுமே அமெரிக்க டாலருக்கு நிகராக மதிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்து பெறும் பணமும், இறக்குமதிக்காக மற்ற நாடுகளுக்குக் கொடுக்கும் பணமும் அமெரிக்க டாலராகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளும் இதே முறையையே பின்பற்றி வருகின்றன.

      இதுபோன்ற உலகலாவிய பணப்புழக்கத்தை நிர்வாகம் செய்ய சர்வதேச நாணய நிதி தொடங்கப்பட்டது. மீட்டுருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்குமான சர்வதேச வங்கி (உலக வங்கி) ஐரோப்பாவில் உலகப்போருக்குப் பின்னான மீட்டுருவாக்கங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதன்பின் 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு உலக நாடுகளுக்குத் தொழில் திட்டங்களுக்கான நிதி வழங்கும் பணியைச் செய்துவருகிறது.

      உலக அளவில் பல்வேறு நாடுகளும் தங்களுக்கென்று அரசியல் சாசனம் நிர்ணயம் செய்திருக்கும் போது, உலகலாவிய சட்டம் என்பது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் எனும் கேள்வி மனத்தில் எழலாம். இருப்பினும் பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகள் இணைந்து சுற்றுச்சூழல், தீவிரவாதம், நீராதாரம் போன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். கூட்டமைப்பு நாடுகளில் சட்டம் வேறுபட்டிருந்தாலும், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அனைத்து நாடுகளுக்கும் ஒரு சட்டம் என்ற நிலை ஏற்படுகிறது. இதனை விசாரணை செய்யவும் ஒரு நீதித்தீர்ப்பாயமும் செயல்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகளின் சபை செயல்பட்டு வருகிறது.

அரசியல் உலகமயமாக்கல்

      அரசியல் உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளைத் தீவிரப்படுத்தலும், விரிவுபடுத்தலும் என்பதைக் குறிக்கிறது.

பூகோளமயமாக்கப்பட்ட மற்றும் நம் அனைவரையும் பாதிக்கும் முடிவில்லாத பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கவும் தீர்க்கவும் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகமயமாக்கல் ஊக்குவித்துள்ளது, எடுத்துக்காட்டாக, காலநிலை மாற்றம், வறுமை விகிதங்கள், இயற்கை வளங்களின் பயன்பாடு போன்ற காரணத்திற்காக, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டாக, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், சிறந்த தீர்வை வழங்குவதற்குமான ஒரு கூட்டமைப்பு. 

தொழில்நுட்ப உலகமயமாக்கல்

தொழில்நுட்ப உலகமயமாக்கல் தகவல், இணையம் மற்றும் ஊடகங்களுக்கான அணுகல் மற்றும் தொழில்துறை மற்றும் சுகாதாரப் பகுதியில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்களை உள்ளடக்கியது. நாங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம், தகவல்கள் அதிக வேகத்திலும் தூரத்திலும் பகிரப்படுகின்றன, மக்கள் தங்கள் நாட்டிலும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி பல்வேறு தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் அதிகம் அறியப்படுகிறார்கள்.

போக்குவரத்து வழிமுறைகள் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களிலிருந்தும் பயனடைந்துள்ளன, எடுத்துக்காட்டாக, எரிபொருள் நுகர்வு மற்றும் மாசு அளவைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, வாகனங்கள் அதிக பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன.

கலாச்சார உலகமயமாக்கல்

      கலாச்சாரம் என்பது உணவு, உடை, பழக்கவழக்கம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பல்வேறு கலைச்செல்வங்கள் உலககெங்கும் பரவ வழிவகை செய்திடல் வேண்டும்.

தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், பொருளாதாரம், சுற்றுலா போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட சர்வதேச உறவுகளின் விளைவாகக் கலாச்சார உலகமயமாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சந்தைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கலாச்சார பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம் ஆகியவை சினிமா, தொலைக்காட்சி, இலக்கியம், இசை, அருங்காட்சியகங்கள் மூலம் நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் இடையே முக்கியமான தொடர்புகளை உருவாக்கியுள்ளன.

இது பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்டுள்ளது. சிலர் உலகளாவிய மதிப்புகளின் பரவல், தகவல் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான அதிக அணுகல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றனர். இருப்பினும், சிறிய சமூக குழுக்கள் அதிக தொலைதூர கலாச்சார தயாரிப்புகளின் நுகர்வு மற்றும் அவற்றின் சொந்த சில மதிப்புகளை இழப்பதன் மூலம் பாதிக்கப்படுகின்றன.

மொழி உலகமயமாக்கல்

            உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!

எனும் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, பல்வேறு உலக நிகழ்வுகளைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்திட வேண்டும். அதனை உலகம் முழுமைக்கும் அறியும்படிச் செய்திட வேண்டும்.

மொழிகள் உலகமயமாக்கலில் ஒரு மொழி உலகம் முழுமைக்கும் தொடர்பு மொழியாக உயர்ந்துள்ளமையைக் காட்டுகிறது. குறிப்பாக ஆங்கிலேயர்களின் படையெடுப்பால் உலகின் பெரும்பான்மையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அவ்வாறு இருக்க அவர்களின் தொடர்புமொழியான ஆங்கிலம், அங்குள்ள மொழிகளுடன் இணைந்து அவற்றின் சாரத்தையும் ஏற்றுக்கொண்டு பல்வேறு உச்சரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், பிரிட்டிஷ் உச்சரிப்பு, அமெரிக்க உச்சரிப்பு என்று இரு வழக்கம் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு,

o   மொழிகளின் எண்ணிக்கை

o   மக்களின் பரவல்

o   அயல்மொழி கற்றல்

o   சுற்றுலாவியல்

o   இணைய மொழிகள்

o   உலகலாவிய அறிவியல் வெளியீடுகள்

போன்ற காரணிகள் மொழி பரவலாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

உலகலாவியத் தொடர்புச் செயலில் சில மொழிகள் மட்டும் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதோடு, பிற மொழிகள் தங்கள் முதன்மையை இழத்தலையும், இன்னும் பல மொழிகள் பேசுவோறின்றி மறைவதையும் காட்டுகின்ற ஒரு செயல்முறை இன்று நடைபெறுகிறது.

சமூக உலகமயமாக்கல்

சமூக பூகோளமயமாக்கல் அனைத்து மனிதர்களுக்கும் சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இந்த அர்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகமயமாக்கப்பட்ட உலகம், சமூகத் துறையில், சமூக வர்க்கம், மத நம்பிக்கைகள் அல்லது கலாச்சாரங்களைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமாகக் கருதப்படும் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

முடிவுரை

      உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு கருவி உலகமயமாக்கலாகக் கொள்ளலாம். இது இன்று அதீத வளர்ச்சி பெற்று அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. உலகமயமாக்கல் நீட்சி பெற்றுள்ள கல்வி, வேளாண்மை, பொருளாதாரம், நிதி, சட்டம், அரசியல், தொழில்நுட்பம், மொழி, கலாச்சாரம், சமூகம் போன்ற இன்றைய சில துறைகளில் பரவியுள்ளமையை இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...