புதன், 7 செப்டம்பர், 2022

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 



ஒரு நாட்டின் இயல், இசை, நாடகம் சீர்குலைந்தது என்றால் அதற்குக் காரணம் பிறமொழிக் கலப்புத்தான் என்று கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். ஒரு நாட்டின் மொழி நன்னிலை பெற்று உயர வேண்டுமெனில் அந்த மொழி பேசும் இனம், அந்த இனத்தின் கலை, அந்த இனத்தின் நாடு தனித்தியங்க வேண்டும் என்பது தெளிவாகிறது. மறைமலையடிகள் காலத்தில் பிறமொழி வரவால் தூய தமிழ்மொழி அழிந்து விடுமோ என்னும் நிலை ஏற்பட்டது. பிறமொழிகளின் மீதுள்ள ஆர்வத்தாலும், விருப்பத்தாலும் தமிழுக்குரிய சிறப்புகள் மறுக்கப்பட்டன.

ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் இனத்தாரை விட்டு நீங்காதும், அவர்தம் நாட்டில் பிறமொழி பேசுவார் வந்து புகாதும் இயங்கும் வரையில் அயல்மொழிச் சொற்கள் கலப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பன்னெடுங்காலமாகப் பிறநாட்டாருடன் தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். எனவே, அந்நாட்டினரின் பழக்கங்களும், பண்பாடுகளும் தமிழரிடையே கலந்தன. “ஒருவர் நாகரிகத்தை மற்றொருவர் பின்பற்றும்போது மொழியிலும் கலப்பேற்படல் இயற்கையே” என்பார் மறைமலையடிகள்.

உயர்ந்த கருத்துக்களமைந்த தமிழ் நூல்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அக்கருத்துக்களனைத்தும் வடமொழி நூல்களிலிருந்தே தமிழர் பெற்றதாகச் சொல்லப்பட்டது. தொல்காப்பியருடைய இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும் தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வடநூற் கருத்துக்களைத் தழுவியன என்றும் கூறினர். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்று ஆக்கியதோடு அமையாது திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்ம சாத்திரத்தையும் பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும் காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின என்று கூறவும் தலைப்பட்டனர்.

1838இல் இந்தியா வந்து, மொழியாராய்ச்சியில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பண்படுத்தப்பட்ட மொழி ஆறும், பண்படுத்தப்படாத மொழி ஆறுமாகத் தெளிவான திராவிட மொழிகள் பன்னிரண்டு என்று கண்டு அவற்றை ஒப்புநோக்கி ஆழ்ந்து ஆராய்ந்து திராவிடம் ஆரியத்திற்கு முந்தியதென்றும், திராவிடச் சுட்டெழுத்துக்களினின்றே ஆரியச் சுட்டுச் சொற்களெல்லாம் தோன்றியுள்ளனவென்றும், திராவிடத்திற்குள் முந்தியதும் முதன்மையானதும் தமிழேயென்றும் தக்கசான்று கொண்டு தெள்ளத் தெளியவும் திட்டவட்டமாகவும் நிறுவி உலகிற்கு முதன்முதல் எடுத்துக்காட்டியவர் கால்டுவெல் ஆவார்.

ஆங்கில மொழியில் எவ்வளவு பிரிட்டிஷ் சொற்கள் உண்டோ அவ்வளவு திராவிடச் சொற்கள் வடமொழியில் உண்டு என்றார் கால்டுவெல். அன்றியும் தமிழ்ச்சொல்லா வடசொல்லா என்று ஐயுறத்தக்க நிலையில் உள்ள சொற்களையெல்லாம் அக்காலத்தில் தயங்காமல் வடசொல் என்று கூறினார். வடமொழி நிகண்டு நூலாரும் இலக்கண நூலாரும் தமிழ்ப்புலவர்களைப் போல் நடுவுநிலையுடன் சொற்களை ஆராயாமலே எல்லாவற்றையும் வடசொல் என்று கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்று அக்கால மொழியின் நிலையினை விளக்குகின்றார் கால்டுவெல்.

தனித்தமிழ் இயக்கம்: நோக்கமும் காரணங்களும்

எம்மொழியாயினும் பிறசொற் கலப்பின்றி வழங்கப்படல் வேண்டுமென்றும் அப்போதுதான் மொழிகள் நிலைபெற்று வாழுமென்றும் மறைமலையடிகள் நம்பினார். அடிகள் எம்மொழியையும் வெறுத்தவரல்லர். தமிழ், ஆங்கிலம், வடமொழி போன்ற மொழிகளில் வல்லவரான அவர் ஒவ்வொரு மொழியும் தூய்மையுடன் காக்கப்பட வேண்டுமென்பதில் அக்கறை காட்டினார். அடிகளின் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு, பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் போன்ற அறிஞர்களின் பாராட்டைப்பெற்றது. தமிழில் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று வெளிவந்துள்ள என்றும் அவற்றுள் அடிகளின் மொழபெயர்ப்பே சிறந்ததென்றும் வடமொழி அறிஞர்களே பாராட்டுவார்.

தனித்தமிழ் இயக்கம் ஒரு மொழிக்கு எதிராகவோ, ஒரு வகுப்பாரின் பேரிலுள்ள வெறுப்பாலோ ஏற்பட்டிருப்பதாகக் கருதுவது தவறு என்பதைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் சோமலெ விளக்குகின்றனார். அமைச்சு, மொழி, ஆண்டு போன்ற சொற்கள் மந்திரி, பாஷை, வருஷம் என்ற வடமொழி சொற்கள் மூலமே அதிகம் கையாளப்படுகின்றன. அவ்வாறு இருக்க தமிழ்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து வருவதைக் கண்ட மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

எந்நாட்டிலும் நாட்டுத் தாய்மொழிக்கு எதிர்ப்பில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே தாய்மொழி ஒதுக்கப்பட்டது. தொல்காப்பியர் காலத்திருந்த தூய தமிழ் வழக்கற்றுப்போக வடசொற்கலப்பு மிகுந்த தமிழே எங்கும் கையாளப்பட்டது. வடசொற் கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியாது என்று பேசப்பட்டது. அதனைக் கேட்ட அடிகள் தூய தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என்பதை உணர்த்தவே தனித்தமிழ் இயக்கம் கண்டார் (செந்தமிழ்ச் செல்வி, தலையங்கம், 1970)

வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களில் வடவெழுத்து இன்ன தமிழ் எழுத்தாகும் என்று விரிவான ஒலிமாற்று விதிகள் கூறுவதற்கு வழிகாட்டியாக விளங்கியது சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியம் ஆகும் என்பார் வ.சுப. மாணிக்கனார் (சிந்தனைக் களங்கள்). ஒரு கருத்தோ அல்லது இயக்கமோ ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பு அல்லது அறிவுத்திறன் அடிப்படையில் தோன்றியது இல்லை. அது எந்தளவு சமுதாயத்தால் ஏற்கப்படுகிறதோ அப்போதுதான் அக்கருத்து உறுதியாகிறது. அதற்குப் பல சூழல்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாத இயக்கம் போன்றன குறிப்பிடத்தக்கது. அதேபோல தனித்தமிழில் எழுதுவதும் பேசுவதும் என்ற கோட்பாடு 20ஆம் நூற்றாண்டளவில் முன்வைக்கப்பட்டது.

தொல்காப்பியம் தொடங்கித் தமிழ் இலக்கண நூல்கள் தமிழில் இருப்பினும் பின்னர் வந்த இலக்கண நூலாசிரியர்கள் வடமொழியின் தாக்கத்தால் தமிழ்மொழி சமஸ்கிருதத்தின் அடியொற்றி வளர்ந்தது என்று கூறலாயினர். இதனைத் தொடர்ந்து கூறியும் எழுதியும் கொண்டிருந்தனர். அதன்பின்னர் 19ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

திராவிட மொழிகளில் தமிழ்தவிர மற்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றன அளவுக்கு மீறி சமஸ்கிருதச் சொற்களைக் கடன்வாங்கியுள்ளன. அவற்றுள் அவை இரண்டறக் கலந்தன. எனவே, அவற்றில் இருந்து விடுபடல் என்பது இயலாதது. ஆனால் தமிழில் உள்ள சமஸ்கிருதச் சொல்லாடல்களை நீக்கி நோக்கும்போது அவை தனித்து வாழும் தன்மையுடையதாக விளங்குகின்றது.

வின்சுலோ என்னும் ஐரோப்பிய நாட்டார் 1862இல் வெளியிட்ட தமிழ் அகராதியில், சிலர் கருதுவதுபோல இந்தியாவின் சில மொழிகளைப் போன்று அது சமஸ்கிருதத்தின் குழந்தையன்று. அதன் இலக்கணம் சமஸ்கிருதத்தோடு ஒத்திருப்பினும் அம்மொழியின் தனித்திறம் அதனைப் பெரிதும் வேறுபாடுடையதாக வைத்துள்ளது என்று புகழாரம் சூட்டுகிறார்.

தனித்தமிழ் ஆதரவும் எதிர்ப்பும்

தனித்தமிழில் படைப்புகளும் கருத்துகளும் வெளியிட வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்தபோது அவை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழி வடிவத்தை (பிறமொழி கலந்து) இதுநாள்வரை பின்பற்றிவிட்டுப் புதியதாக ஒருநடையை அதிலும் பிறமொழி கலப்பில்லாத ஒரு நடையினைப் பயில வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர் இதனை ஏற்றுக்கொண்டனர். இந்நடைமுறை ஏற்றுக்கொள்ள இயலாத முறை என்றும் வாதிடுவோரும் இருந்தனர். 

ஞானப்பிரகாசர்

தருக்க சாஸ்திரச்சருக்கம் என்ற நூலினை எழுதியவர். இந்நூலுள் தனித்தமிழ் நடையை மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறார். அதற்கான காரணமாக, வடசொற்களை அடியோடு நீக்கிவிட்டால் தருக்கம், சாத்திரம் போன்ற நூல்கள் அழிந்துவிடும். எனவே, வடசொல் கலந்தே இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்றும் அறியில் சொற்கள் வடசொற்கள் கலந்தே எழுதப்பட வேண்டும் என்பதும் அவரது கொள்கையாக இருந்தது.

உ.வே.சாமிநாதர்

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் என பலவற்றைத் தன் வாழ்நாளில் தேடியலைந்து தொகுத்தவர். இவரின் உரைநடையில் பல்வேறு வடமொழிச் சொற்கள் இருந்தன என்பர் அறிஞர்கள். தம் குறுந்தொகை ஆராய்ச்சி உரையுள் நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் நாற்பத்து நான்கு சொற்களை வடசொற்களாகக் காட்டுகிறார். அவற்றுள் அகில், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கலாவம், காமம், காலம், குணன், குவளை சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவழம், மண்டிலம், மண், மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத்தேழும் தென் சொற்களாம் என்று தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலமும், சமஸ்கிருதமும் மொழி வழக்கில் பலரிடமும் வந்துள்ள நிலையில் அவற்றை நீக்கித் தனித்தமிழில் பேசவும், எழுதவும் முற்படுவது சரியாகாது என்பது இவர் கருத்து. அவ்வாறு தனித்தமிழ் நடையை ஏற்கும்போது தாம் கூறவந்த கருத்து சரியாகச் சென்ற்டையாது என்பது ஒரு குறைபாடாக அமைந்துவிடும் என்று கூறுகிறார்.

வழக்கில் கலந்து சொல்கின்ற தமிழ்ச்சொல் ஒன்றை மாற்றித் தனித்தமிழில பயன்படுத்தும்போது அது மக்கள் வாகிற்கு வருவதற்குப் பல்லாண்டுகள் ஆகும். எனவே, இம்முயற்சி தேவையற்றது என்பதனையும் கூறி இதற்கு எதிர்ப்பு காட்டினார்.

தனித்தமிழ் ஆதரவு

திரு.வி. கலியாணசுந்தரனார்

திரு.வி.க. இந்திய விடுதலை இயக்கத்தில் பெரிதும் செயல்பட்டவர். மேலும், தொழிற்சங்கத் தலைவர், தமிழாசிரியர், பத்திரிக்கையாளர், சொற்பொழிவாளர் எனப் பல்வேறு பரிமாணங்களில் திகர்நதவர். ஆராய்ச்சி நூல்கள் யாவும் எழுதியுள்ளார். மறைமலையடிகளார் கொண்டுவந்த தனித்தமிழ் நடை பற்றி மிகத் தெளிவான புரிதலோடு இருந்தவர். தான் எழுதிய நூல்களலும், நடத்திய இதழிலும் (தேசபக்தன்) இயன்ற அளவு தனித்தமுர் நடையைக் கையாண்டார்.

திரு.வி.க.வும் மறைமலையடிகளும் ஒரே கருத்தினை உடையவர். இருப்பினும் திரு.வி.க.வின் மொழிநடையில் சிற்சில இடங்களில் வடசொற்களைக் காணமுடிகிறது என்பார் மா.ரா. இளங்கோவன். அதோபோல், பாவாணர் தம்முடைய கருத்தைக் கூறும்போது, பிறமொழிபோல் மணிப்பவள மாலையும், பன்மணிக்கோவையுமாக இல்லாமல் வடசொல் மிகக்குறைந்தே வரப்பெறுகிறது என மறைமலையைம் திரு.வி.க. வையும் ஒப்பிட்டுக் கூறுவார்.

மு. கதிரேசன்

கலப்பின்றி எழுதப்படும் மொழியில் ஏற்படும் சுவை கலப்போடு எழுதப்படும் மொழிக்க இருப்பதில்லை எனும் கருத்துடையவர் கதிரேசனார். இருமொழியிலும் புலமைமிக்கவர். பண்டிதமணி என அனைவராலும் அழைக்கப்படுபவர். பழந்தமிழ் இலக்கியங்களில் வடமொழிக் கலப்பில்லை எனும் மறமைலையடிகளின் வாதத்தை எதிர்த்தவர். தாம் எழுதிய சமயக் கட்டுரைகளிலும் தனித்தமிழ் நடையை முழுமையாகக் கையாண்டவர்.

பா.வே. மாணிக்கனார்

பா.வே. மாணிக்கனார் பொறியியல் வல்லுநர். அரசுப்பணியில் இருந்தவர். தமிழில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவர். “தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம்” எனும்ஆய்வு நூலைப் படைத்தவர். தமிழே உலக முதன்மொழி என்பதனை ஆராய்ந்து அறிந்தவரும் அதனை அஞ்சாது எங்கும் பறைசாற்றியவருமானவர் என பாவாணர் புகழ்ந்துரைப்பார்.

பல்வேறு அறிவியல் கலைச்சொற்கள் தமிழில் இல்லாமையைக் கண்டு அதனைத் தனித்தமிழில் எழுதவேண்டும் என வலியுறுத்தியவர். ஐரோப்பிய, ஆங்கிலேயர் கூட தங்கள் மொழியிலே அதனைக் கூற முற்படும்போது எப்போதும் இளமையான தமிழ்மொழியில் சொற்களுக்கா பஞ்சம். அதனை ஏன் பிறமொழியினின்று இரவல் பெற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்.

ந.மு. வேங்கடசாமி

திருச்சியில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தம் பேச்சாற்றல் மூலம் நாவலர் எனும் பட்டம் பெற்றவர். கபிலர், நக்கீரர், வேளிர் வரலாறு போன்ற நூல்களை எழுதியவர். தமிழ்மொழியைக் கையாளும்போது தவறியேனும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது எனும் வழக்கம தமிழ்மக்களிடம் வளரவேண்டும். அவ்வாறு பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துமநிலை வரின் அச்சொலுலுககு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த முனைய வேண்டும். தவறியேனும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

சோமசுந்தர பாரதியார்

அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வழக்கறிஞர், பேச்சாற்றல் மிக்கவர். திருவள்ளுவர், சேரர் பேரூர், சேரவேந்தர் தாயவழக்கு, தயரதன் துறையும் கைகேயி நிறையும், நற்றமிழ் முதலிய நூல்களை எழுதியவர்.

இவர் படைப்புள் அனைத்திலும் தூய தமிழையே கையாணட்ர். தமிழில் புதுச்சல் படைக்க இயலவில்லை எனில் தமிழ்மரபுக்கேற்ப மாற்றி அதனை ஏற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தியவர். பயன்படுத்தும்போது தமிழ எழுதித்தியல்மரபு, மொழி மரபுக்கு பிறழா வகையில் மாற்றிவழங்க வேண்டும. புள்ளி வைத்த எழுத்துக்களை முலாகக் கொண்டு எழுதும் பிறமொழிநடையை அறவே ஒதுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அ. சிதம்பரநாதன்

அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப்பேராசிர்ய, மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வர். நாடறிந்த தமிழறிஞர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கத்தில் மிக்பெரும் பங்காற்யிவர். அவற்றில் உள்ள தமிழ்ச்சொற்கள் தனித்தமிழில் உள்ளன குறிப்பிடத்தக்கது.

வடமொழி நீக்கித் தனித்தமிழில் எழுத முற்படுவதால் பிறமொழியின் மீது வெறுப்பு என்பது ஆகாது. தமிழ்மொழியோடு பிறமொழி கலந்து பேசும் வழக்கம் தொடர்ந்தால் பிற்காலத்தில் தமிழ்ச்சொற்கள் அழியும் நிலை ஏற்படும். அல்லது வடமொழியீல் இருந்து தமிழ் பிறந்தது என்ற கருத்து புனையப்படும் என்பதனாலேயே தனித்தமிழ் கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார்.

மகிழ்நன்

க.ப. சந்தோசம் எனும் பெயரை மறைமலையடிகள் தொடர்பற்குப் பிறகு மகிழ்நன் என மாற்றிக் கொண்டார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மகிழ்நன் கட்டுரைகள் என வெளிவந்துள்ளது. வடக்கும் தெற்கும் என்ற இவரது நூல் மிகு சிறப்பு வாய்ந்த நூல். தூய தமிழில உரைநடைப் பாடங்களை எழுதியும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் நற்றமிழ் தொண்டாற்றியவர் என பாவாணர் புகழ்ந்துரைப்பார்.

இளவழகனார்

பாலசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்திற்குப் பிறகு இளவழகன் என மாற்றிக்கொண்டார். மறைமலையடிகளின் திருவொற்றியூர் மும்மணிக்கோவை நூலுக்கு உரை எழுதியவர். சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, சங்கநூற் கட்டுரைகள், பண்டைத்தமிழர் இன்பியல் வாழ்க்கை, பண்டைத்தமிழர் பொருளியல் வாழ்க்கை, மறைமலை அடிகளார் வரலாற்று மாட்சி முதலிய நூல்களை எழுதியவர். முல்லைக்கொடி எனும் இதழ் நடத்தியவர். தம் வாழ்நாள் இறுதிவரை தனித்தமிழ்க் கொள்கையில் பற்றுகொண்டிருந்தவர்.

மா. இராசமாணிக்கனார்

வரலாற்று அறிஞர், இலக்கிய ஆராய்ச்சியாளர். பல்லவர் வரலாறு, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி முதலிய நூல்களை எழுதியவர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். பேச்சுத்தமிழ்தான் எழுத்து மொழிக்கு அடிப்படை. எனவே, பேச்சுத் தமிழைத் தனித்தமிழில் பேச வேண்டும என்னும் கோட்பாட்டைக் கொண்டவராக விளங்கினார். அப்போதுதான் எழுத்துநடை சிறப்புற விளங்கும் என வலியுறுத்தினார்.

பிறமொழியை ஏற்பது நம் தாயை நாமே கொலைசெய்வதற்குச் சமமென்றும், பெண்ணின் கற்புபோல மொழியும் காக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சி. இலக்குவனார்

தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறள் உரை முதலான நூல்களை எழுதியவர். குறள்நெறி எனும் தனித்தமிழ் இதழ் நடத்தினார். லட்சுமணன் எனும் தம் பெயரை அவரது ஆசிரியர் சாமி. சிதம்பரனார் இலக்குவன் என்று அழைத்தமையால் அதனையே தம்முடைய பெயராக மாற்றிக் கொண்டார்.

வ.சுப. மாணிக்கம்

காரைக்குடி அழகப்பர் கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எனப் பணியாற்றியவர். வள்ளுவம், தமிழ்க்காதல் முதலிய நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தளித்துள்ளார்.

தனித்தமிழியக்கத்தைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை எழுதியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் எம்மொழியைக் கற்பதற்கும் எதிரானதன்று. இதன்ஒரே நோக்கம்உலக முதற் செம்மொழிகளில் ஒன்றான தமி அதன் இயல்பில் வளர்ப்பதே இதன் நோக்கமாகும் என்பதனைக் கூறியுள்ளார்.

மு.வ.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். திறனாய்வு, மொழிநூல், மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, நாவல்கள், கட்டுரைகள் என பல நூல்களை இயற்றியுள்ளார்.

எவ்வகையினும் ஒரு சில சொற்கள் பிறமொழியிலிருந்து வந்து கலவாமல் ஒரு மொழி நிலவுதல் அரிது. கலைச் சொற்களாக உள்ள பிறமொழிச் சொற்களை எந்த மொழியும் ஓரளவு கடன்வாங்க வேண்டியுள்ளது. இருப்னும் அதனை வேண்டுமென்றே உட்புகுத்துதல் தவறு என்றும் கூறியுள்ளார். தம்முடைய கட்டுரை, ஆய்வுநூல்கள், படைப்புகள் என அனைத்திலும் தனித்தமிழ் நடையைக் கையாண்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது.

தந்தை பெரியார்

தாம் நடத்திய இதழ்களுக்கு குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை எனத் தனித்தமிழில் பெயர் சூட்டியமை சிந்திக்கத்தக்கது. எம்மொழியிலிருந்தும் நம்மொழீக்கு ஆக்கம் தரக்கூடியதும் அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக்கொள்ளலாம். எம்மொழீத் தொடர்பிருந்தாலும் பராயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ்மொழி ஒன்றுதான் இன்றுவரை வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ்மொழி பெற்றிருக்கிறதென்று மேனாட்டு வல்லுநர்களே எடுத்துக்காட்டியுள்ளார்கள் என தனித்தமிழின் தேவையைக் குறித்து எழுதியுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன்

பள்ளிகள், கல்லூரிகள், இதழ்கள், இசை, நாடகம், மேடை முதலிய அனைத்துத் துறைகளிலும் தனித்தமிழே விளங்கிடச் செய்தல் வேண்டும் என அறிவுறுத்திப் பாடிய பாடல்களால் தனித்தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிய பாரதிதாசன் தனித்தமிரியக்கப் பாவலாகவும் பரப்புநராகவும் திகழ்ந்துள்ளார்.

                  தாய்ப்பாலில் நஞ்செனவே

                        தமிழில்வட மொழிசேர்த்தார்

                              தவிர்தல் வேண்டும்

                  தமிழ்ப்புலவர் தனித்தமிழில்

                        நாடகங்கள படக்கதைகள்

                              எழுதவேண்டும் (தமிழியக்கம்)

தனித்தமிழ் இயக்கத் தலைவர்களான பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரைப் போற்றிப் பாடினார். தாம் நடத்திய குயில் இதழில் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா? என்னும் கட்டுரைத் தொடரை எழுதினார். பாரதிதாசன் பாடல்களால் தமிழுணர்ச்சியும் எழுச்சியும் பெற்ற பல இளையோர் தனித்தமிழ்க் கொள்கையை ஏற்றுக்கடைப்பிடிக்கவும் செய்தனர்.

புலவர் குழந்தை

உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரான இவர் தனித்தமிழ்இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொல்காப்பியர் காலத் தமிழர், யாப்பதிகராம், தொடையதிகாரம், இராவண காவியம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

                  அரிசியிற் கலைலைக்கலப் பதுபோல் வலிந்து

                  அயல்மொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து

                  முரசு முழங்குதானை மூவர்முன் விழைந்து

                  முறையொடு போற்றிய முத்தமிழை நலிந்து

                  கொலைபுரி யாதிரையா – ஐயா

                  கொலைபுரி யாதிரையா (புலவர் குழந்தைப் பாடல்கள்)

என மொழிக்கலப்பு செய்வோரை வேண்டினார்.

கா. அப்பாதுரையார்

பன்மொழிப் புலவரான இவர், திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். தமிழாக்கம், வரலாற்றாய்வு, இலக்கிய ஆய்வு, மொழியாய்வு என பல துறைகளிலும் தம் திறத்தைக் காட்டியவர். தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, மொழிவளர் முதலிய நூல்கள் பல படைத்துள்ளார்.

தனித்தமிழ் இயக்கம் தமிழை வளர்க்கும் இயக்கம் மட்டுமன்று. தமிழ்கடந்து தமிழினத்தையும் உலகையும் வளர்க்கும் இயக்கமும் ஆகும் என முழங்கியவர்.

அறிஞர் அண்ணாத்துரை

பலதுறைகளில் சிறப்புமிக்க எழுத்தாளராவும், புகழ்மிக்க சொற்பொழிவாளராகவும், இதழியலாளராகவும் திகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா.  

ஆரியத்தை இலக்கியம், எண்ணம், இசை முதலிய எல்லாத் துறைகளிலுமிருந்து விரட்டி ஒழித்தால்தான் தமிழர் தமிழராக முடியும். ஆகவே, தமிழர் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு தளராமல் உழைக்க முன்வரவேண்டும் என அறைகூவல் விடுத்தவர்.

வடமொழி கலந்து எழுதும் சூழல்

தமிழ் நூல்கள் பலவற்றை வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு பிறகு வடமொழியிலிருந்து அவை வந்தன என்று கூறுவதே அடிகள் காலத்தில் பெருமையாகக் கருதப்பட்டது. எந்தவொரு நூலை எழுதுபவரும் தம் நூல் வடமொழியிலிருந்து எழுதப்பட்டது என்றோ, வடமொழியைக் கற்று எழுதப்பட்டது என்றோ கூறினால்தான் மக்கள் போற்றும் சூழல் இருந்தது. பேரறிஞர்கள் எனக் கருதப்படுபவர்கள் வடமொழியில்தான் நூல் எழுதுவர் என்றோ அல்லது வடமொழி கற்று அதன்வழி எதனையும் எழுதுவதாகப் பாவனை செய்பவர்களே பேரறிஞர்களாவர் என்றோ கருதப்பட்ட சூழல் இருந்தது.

நாளிதழ்களில் தமிழ்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற கிழமை, திங்கள், நாள் இதழ்கள் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்துக்கு மேல் அமிர்தவசனி, ஆனந்த போதினி, இந்து பாஷிணி, இந்து மதாபிமானி, உதயதாரகை, கலாரத்நாகரம், கிருஹலக்ஷ்மி, கிருஷிகள், குலாலமித்திரன், சக்கரவர்த்தினி, சன்மார்க்க போதினி, சீவரத்தினம், சுதேச பரிபாலனி, ஜெயபாரதி, ஜோதிடகலாநிதி, ஞானசித்தி, ஞானாமிர்தம், தமிழர்நேசன், தர்மபோதினி, தார்மீக ஹிந்து, திவ்வியார்த்த தீபிகை, தேசபந்து, தேசோபகாரி, நகரமித்திரன், நீலலோசனி, பஞ்சாமிர்தம், பிரபஞ்சமித்திரன், மாகர் மனோரஞ்சனி, யதார்த்த பாஸ்கரன், லோகோபகாரி, வர்த்தக மித்திரன், விசுடரத்தினம், வித்தியாபிமான், விவசாய தீபிகை, விவேகபோதன், விஜயபாரதி, வீரகேசரி, ஜனவிநோதினி எனப் பிறமொழிப் பெயர்களால் வெளிவந்தன. இன்று கூட தினத் தந்தி, தின மலர், தினகரன், தின பூமி, எக்ஸ்பிரஸ் போன்றன பிறமொழிச் சொற்கள் கலந்த இதழ்களாகவே வெளிவருகின்றன. அதில் இடம்பெறும் செய்திகளும் அவ்வாறே திகழ்கின்றன.

பேராசிரியர்கள் பரிதிமாற் கலைஞரும் பூர்ணலிங்கமும் சேர்ந்து கூட்டாக நடத்திய திங்கள் இதழ் ஞானபோதினி. மறைமலையடிகளின் ஞானசாகரம் (தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய பின் அறிவுக்கடல் என மாற்றப்பட்டது), தந்தை பெரியாரின் குடிஅரசு, அயோத்திதாசரின் தமிழன், திரு.வி.க.வின் தேசபக்தன், நவசக்தி  போன்றன தனித்தமிழில் அமைந்திருந்தன. இவ்வாறு தனித்தமிழ் கொள்கையாளர்கள் நடத்திய இதழ்கள் தமிழ்ப்பெயர்கள் தாங்கி வெளிவந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் இதழ்களுக்குத் தனித்தமிழில் பெயர் வைக்க முனைந்துள்ளனர். அவற்றுள், மணற்கேணி, ஓலைச்சுவடி, காலச்சுவடு, அரிமா நோக்கு, வளன் ஆயம், செம்மொழித் தமிழ், நவீனத் தமிழாய்வு போன்ற பல்வேறு இதழ்கள் குறிப்பிடத்தக்கன.

அழைப்பிதழ்களில் தமிழ்

மக்கள் தங்கள் வாழ்க்கையில் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர் இன்றும் அதன் முக்கியத்துவம் குறைவில்லாமல் இருந்துவருகிறது. விழாக்களில் அழைப்பிதழ்களின் பங்கு இன்றியமையாததாகிறது. ஆனால் பல்வேறு அழைப்பிதழ்களிலும் தலைப்பும், செய்தியிலுள்ள சொற்களும் பிறமொழிச் சொற்களாகவே அமைந்திருக்கின்றன. அவற்றுள், விவாஹ சுபமுகூர்த்தம், நிச்சியதார்த்தம், கிருஹப் பிரவேசகம், சீமந்த முகூர்த்தம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், நமஸ்காரம், சூரியோதயம், வருஷம், தினம், நக்ஷத்திரம், லக்கினம், சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, தம்பதிகள், ஆசீர்வதித்தல் போன்ற சொற்கள் ஏராளமாக எடுத்தாளப்பட்டுள்ளன.

இவற்றை மாற்றித் தனித்தமிழில் இச்சொற்களை மன்றல் விழா (திருமண விழா), புதுமனை புகுவிழா, நாள், நேரம், ஆண்டு, திருநிறை செல்வன், செல்வி என்று சொற்களில் மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடைத்தெருக்களில் தமிழ்

கடைத்தெருக்களின் விளம்பரப் பலகைகளில் பிறமொழிச் சொற்கள் காணப்பட்டனவே தவிர தமிழ் சிறப்படையவில்லை. இந்நிலை கண்டு நொந்த பாரதிதாசன் வணிகர் தம் முகவரி வரைகின்ற பலகையில் ஆங்கிலத்தில் எழுதக்கூடாதென்றும், மாணுயர்ந்த செந்தமிழால் வரைதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பவன், மண்டல் முதலிய சொற்கள் தமிழகத்தில் பயிலக்கூடாது. அறிவிப்புப் பலகைகள் அருந்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட வேண்டும். அச்சொற்களும் குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையவேண்டுமென்று பாரதிதாசன் அறிவுறுத்தினார்.

அகராதியில் தமிழ்

சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியிலும் தமிழ்ச் சொற்கள் இடம்பெறவில்லை. அடிப்படையும், முதன்மையுமான தமிழ்ச்சொற்கள் வடசொற்களின் திரிபாகக் காட்டப்பட்டன. வேண்டாத அயற்சொற்களும் இந்திச் சொற்களும் இடம்பெற்றன. அந்த அகராதியைப் பார்த்தால் தமிழ் வடமொழியின் கிளை என்ற முடிவுக்குத்தான் வரஇயலும் என்பர் பாவாணர்.

இங்ஙனம் அனைத்துத் துறைகளிலும் மொழிக்கலப்பால் தமிழின் நிலை தாழ்ந்தது கண்டு வருந்திய திரு.வி.க. இப்பொழுது நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி எந்நிலையுற்றிருக்கிறது? தமிழ்த்தாய் யாண்டு உறைகிறாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கிறாளா? மன்றங்களில் வசிக்கிறாளா? சட்டசபைகளில் வாழ்கிறாளா? கல்லூரிகளெனப்படும் நிலையங்களிலாதல் அவளைப் பார்க்கலாமா? உரிமைக்கு உழைப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கழகங்களிலாதல் அவளைக் காணலாமா? தமிழ்ப் பத்திரிக்கைகளிலாதல் அவளுக்கு இடம் உண்டா? பல பத்திரிக்கைகள் தமிழ்த்தாயின் சிகையை, கழுத்தை, இடுப்பைக் கொய்யும் இறுவாளாகவும், அறுக்கும் கொடுவாளாகவும் உடைக்கும் தண்டமாகவும் அல்லவோ உலவுகின்றன? சுருங்கக் கூறின் தமிழ் மக்கள் தாய்மொழியைக் கொலை செய்வதில் பேரும் புகழும் பெற்றவர்களளென்று கூறலாம்.

                  அசைபோடுங் கல்லூரிப் பயிற்சி தன்னில்

                  அங்காடி நிறுவனத்தில் ஆலயத்தில்

திசைகாட்டும் பலகைகளில் நீதிமன்றில்

திருமணத்தில் இழவுவீட்டில் மேடைப்பேச்சில்

இசையரங்கில் வனொலியில் நாடகத்தில்

எங்கெங்கும் தாய்மொழிக்குத் துரோகக் கூட்டம்

கசப்பான உண்மை இதை மாற்றாவிட்டால்

களிப்பேது முன்னேற்றம் காண்பதேது

என்னும் கு.சா. கிருட்டிணமூர்த்தியின் கருத்து நோக்கத்தக்கது (கதையல்ல வரலாறு, செங்கோல் வெள்ளிவிழா மலர்)

தமிழ்மொழி வளர்க்க இன்றைய சூழல்

தமிழை வளர்க்க இன்று பெரும்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

v  ஒவ்வொரு துறையிலும் தமிழின் சிறப்பினை எடுத்துரைக்க அரசால் தமிழ் வளர்ச்சித்துறை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

v  தமிழ்ச்சங்கங்கள் மூலமும், உலகத் தமிழ் மன்றத்தின் வழியாகவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சிகள் மேலோங்குகின்றன.

v  தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. செந்தமிழைச் செழுந்தமிழாக்கி அதன் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடவும், அதனை மொழிபெயர்த்து வெளியிடவும் வழிவகை செய்யப்படுகிறது.

v  இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழியினை மேம்படுத்த செயலிகள் வழியும், கையாளப்படும் தமிழ்ச்சொற்களைச் சேர்த்து வெளியிட சொற்குவைத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

v  தமிழைத் திரைத்துறையில் இணைக்க வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. பாடல்களும் தமிழ்நடையில் இருக்க ஊக்குவிக்கப்படுகிறது.

v  தனித்தமிழில் பேசுவோர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

v  அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களின் பெயர்களும், தமிழகத்தின் பல்வேறு தெருக்களின் பெயர்களும், சாலைகளின் பெயர்களும் தமிழ்மொழியிலேயே இருந்திடச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

v  அரசில் பல்வேறு கொள்கைக் குறிப்புகள் தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் வெளியிடப்படுகிறது.

v  பள்ளிகளில் கட்டாயத் தமிழ் வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டும், தமிழ்வழியில் பயின்றோர்க்கு அரசுப்பணியில் முன்னுரிமை என்றும், அரசுப்பணித் தேர்வுகளில் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...