வெள்ளி, 2 செப்டம்பர், 2022

மகாகவி பாரதியின் குயில் பாட்டு: குயிலின் முந்தைய பிறப்பு கதை




சிந்துக்குத் தந்தை, நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா என்றெல்லாம் பலவாறாகப் பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர் சுப்பிரமணிய பாரதியார். 
எட்டையபுரத்தில் 1882 டிசம்பர் 11ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
சிறுவயதிலிருந்தே கவிகளைப் புனையும் திறம்பெற்ற சுப்பிரமணியம் எட்டையபுர அரண்மனையில் பணியாற்றினார். இவரின் தனித்திறமையைக் கண்ட எட்டையபுர மன்னர் இவருக்குப் பாரதி என்ற பட்டம் அளித்தார். அப்பெயரே இன்று நிலைத்துவிட்டது. 

பாரதி கவிபுனைவதில் மட்டுமல்ல, பல்துறை சார்ந்த அறிவும் அவரிடம் மிகுந்திருந்தது. கட்டுரைகள், கதைகள், காவியங்கள் போன்றனவும் இயற்றியுள்ளார். 
சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்திய விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டவர். அதோடு சமூக விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 
ஆங்கிலேய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்துப் பத்திரிக்கைகளில் எழுதிவந்தவர். அதே நேரத்தில் இலக்கியத்தையும் படைத்தளித்தவர். 

பல்வேறு மொழிகளை அறிந்தவர். அதனால்தான், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். 
இவரின் ஆங்கில நடையைப் பார்த்து ஆங்கிலேயர்களே வியந்தனர் என்பது செய்தி. ஆங்கிலத்தில் கவிஞர் ஷெல்லியின் கவிதைகளை மிகவும் நேசித்தவர். தன்னை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டவர். 
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களைப் படைத்தளித்தவர்.

பெண்களின் துயர்நீங்க அவர்கள் சமூகத்தில் உயர அவர்களுக்குக் கல்வி அறிவு வேண்டும் என்று குரல்கொடுத்தார். பெண்களுக்குச் சமூகத்தில் சம மதிப்பு அளிக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டியவர். 
இறுதிகாலத்தில் தாம் நினைத்தவை எதுவும் நடைபெறாமல் போக மிகவும் சோர்வடைந்தார். 
1921 செப்டம்பர் 11ஆம் நாள் தம் உலகவாழ்வை முடித்துக்கொண்டார். 
(2021 ஆம் ஆண்டு அவர் மறைவின் நூறாண்டு)  


 குயிலின் முந்தைய பிறப்பு: குயில் கவிஞனை நோக்கிக் கூறுகிறது, "என் உயிரே, என்னை விட்டுப் போவதன் முன்னால் நான் சொல்லுவதனை அருள்கூர்ந்து கேட்க வேண்டும்”.

ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஆழ்ந்த சிந்தனையோடு நான் அமர்ந்திருந்தேன். அவ்வேளையில் அங்கு ஓர் முனிவர் வந்தார். பெரியவர் என்றெண்ணி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவர் என்னை வாழ்த்தி ஆசி கூறினார். அதன்பின் என் உள்ளத்திலே விடைகிடைக்காமல் இருந்த ஒரு வினாவுக்கு அவரிடம் விடை தேடினேன்.

"வேதமுனிவரே! உலகினில் மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மனிதரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்டேன்.

முனிவர் குயிலின் முற்பிறப்புக் கதையைக் கூறுதல்

"குயிலே! கேள். சேர வளநாட்டின் தென்புறத்தே ஒரு மலை உள்ளது. அம்மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். உன் பெயர் "சின்னக்குயிலி". உன்னுடைய அழகு, ஒளிவீசும் முகம் இவற்றுக்கு இணையாக தமிழ்நாட்டில் யாருமே இல்லை. அப்போது, உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் இருந்தான். உன் அழகைக் கண்டு அவன் உன்னை திருமணம் செய்துகொள்ள எண்ணி உன் நினைவாகவே சுற்றித்திரிந்தான்.

மாடனின் காதலும் வீரமுருகனின் முடிவும்

அவனைக் வற்புறுத்தல்கள் தாங்காமல் அவனை நீ திருமணம் செய்துகொள்வதாய் உறுதியளித்தாய். இந்நிலையில் உன்னுடைய அழகின் புகழ் மற்ற நாடுகளிலெல்லாம் பரவியது. தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க விரும்பி, உன் தந்தையிடம் "உன் பெண்ணை என் மகனுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றான். வீரமுருகனும் அதற்கு அனுமதியளித்தான். பனிரெண்டு நாட்களிலே உன்னை திருமணம் செய்துகொள்வதாய் அவர்கள் உறுதி செய்துவிட்டார்கள்.

மாடனின் கோபம் குயிலியின் சமரசமும்

இச்செய்தி அறிந்த மாடன் கோபம் கொண்டான். அவன் உன்னிடம் வந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினான். நீ அவனிடம் சொன்னாய், "மாடா! உன்னுடைய கோபத்தைக் குறை. நெட்டைக் குரங்கனுக்கு நான் மனைவியாகச் சென்றாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து சண்டைகள் உருவாக்கி, இங்கே வந்திடுவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிடுவேன். அடுத்த நான்கு மாதத்தில் உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன். பேச்சு தவறமாட்டேன். என்னை நம்பு" என்று கூறினாய்.

தோழிகளுடன் குயிலி – சேர இளவரசனின் காதல்

ஒருநாள் மாலை, மின்னல் ஒன்றோடொன்று இணைந்து விளையாடுவதைப் போன்று நீயும் உன் தோழியரும் காட்டிலே விளையாடிக்கொண்டிருந்தீர்கள். அப்போது சேரமன்னனின் மகன் வேட்டையாடக் காட்டிற்கு வந்தான். இடையில் வழிமாறி தன்னுடைய துணைவர்களை எல்லாம் பிரிந்து, நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த இளவரசன் உன் மீது காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது காதல் கொண்டாய். தோழிகள் உன்னை விட்டுச் சென்றனர். மனத்தினுள் காதல் இருக்க அவனிடம் வெறுப்பைக் காட்டுவதுபோல் நடித்தாய்.

உன் அரண்மனையில் உள்ள பெண்கள் கல்வியிலும், சிற்பத்திலும், இசையிலும் சிறந்தவர்களாக இருக்கும்போது என்னை விரும்புவது ஏன்? உனக்காகப் பணிவிடை புரிய ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும்போது அவர்களுடன் நானும் ஒருவளாக இருக்க விரும்பவில்லை. எனவே, ஆசையை ஒழித்து இவ்விடத்திலிருந்து சென்றுவிடு என்று கூறினாய். அவனோ, காதல் மிகுதியினால் உன்னைக் கட்டியணைத்தான். உன்னைத் தவிர வேறுபெண்ணை நான் விரும்பமாட்டேன் என்று உன் வலக்கையில் அடித்துச் சத்தியம் செய்தான். உடனே நீயும் அவனை விரும்பினாய். இருவரும் இன்ப சுகம் அடைந்திருந்தீர்கள்.

நெட்டைக் குரங்கன் வருகையும் மாடனின் கோபமும்

அப்போது, ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்துசேர்ந்தான். நீ, காட்டிற்கு விளையாடச் சென்றிருப்பது அறிந்து உன்னைக் காண ஓடிவந்தான். அங்கு சேர இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான். அவன் உள்ளம் தீப்பற்றி எரிந்தது. நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான்.

கண்களில் கனல் தெறிக்கவந்த மாடன், குயிலி அயலான் ஒருவனுடன் இருப்பதைக் காண்கிறான். நெட்டைக்குரங்கன் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாடனை நெட்டைக்குரங்கனும் கவனிக்கவில்லை. குயிலியோடு நிற்பவன் நெட்டைக்குரங்கன் என்று மாடன் நினைத்தான். குரங்கனோ இவள் காட்டில் எவனிடமோ காதல் அமுதம் அருந்துகிறாள் என்று நினைத்தான்.

எதிர்பார்த்த முத்தம் - எதிர்பாராத கோபம்

இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர். இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. உடனே, இளவரசன், தன் வாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான். அடுத்த கணமே அவனும் சாய்ந்தான். குருதி கொப்புளிக்க விழுந்து கிடந்த இளவரசன் உடலைத் தன் மடிமீது வைத்து சின்னக்குயிலி கண்ணீர் வடித்தாள்.

இளவரசனின் இறுதியுரை

"வஞ்சியே, நீ அழாதே. பிறப்பும் இறப்பும் இவ்வுலகில் புதுமை அன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்" என்று புன்னகை பூக்கச் சொல்லி உயிர் துறந்தான். இப்பிறப்பில் நீ குயிலாய் பிறந்திருக்கிறாய் என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.

இப்பிறப்பில் பிறந்த இளவரசன் – மாடன் – குரங்கன் - குயிலி

அந்த முனிவர் மேலும் பேசினார். "உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப்பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். அவன் உன்மேல் மீண்டும் காதல் கொள்வான்" என்றார். அது கேட்டு நான் வியப்படைந்தேன். "ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தாலும், எவ்வாறு திருமணம் நடக்கும்?" என்றேன்.

"இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டுவிட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். இது உனக்குத் தெரியவில்லையா?" என்றார் முனிவர்.

இணைக்க மறுக்கும் இணையர்கள்

"ஐயோ! பேய்கள் என் பிறப்பையும் மறக்கச் செய்து துன்புறுத்தி வருமெனில், யான் மீண்டும் என் மன்னவனைக் கண்டால் என் செய்வேன்? இப்பேய்கள் அவருக்குத் தீங்கிழைத்தால் நான் எப்படித் தடுப்பேன்? தேவரே! இதற்கு வேறு வழி இல்லையா?" என்று நான் கேட்டேன். மாமுனிவரும், "பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதனால் உன்மேல் சந்தேகம் கொள்வான். கோபத்தால் உன்னை விட்டுவிட நினைப்பான். அதன்பின் நடப்பதை நீயே அறிந்துகொள்வாய். எனக்கு நேரம் ஆகிவிட்டது" என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார்.

கதையை முடித்தது கவிஞனிடம்

இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பில் நடந்தவற்றை நீர் அறிவீர்! "ஆரியரே! காதலருள்புரிவீர் காதலில்லை என்றிடிலோ சாதல் அருளித் உமது கையால் கொன்றிடுவீர்!" என்று அழுகின்ற கண்களோடு குயில் கூறியது. எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்ட பாவலனின் உள்ளம் அது கேட்டு நெருப்பில் இட்ட அரக்காய் உருகியது. இன்பவெறி கொண்டு என் கைகளால் அதனை ஏந்தி, இருவிழியால் நோக்கினேன். ஆராத அன்போடு அதனை முத்தமிட்டேன்.

குயில் குயிலியானாள்

என்ன விந்தை! அடுத்த வினாடி குயிலைக் காணவில்லை. அவ்விடத்தில் பெண் ஒருத்தி நின்றாள். அவள் மிகுந்த பேரழகு கொண்டு நின்றாள். அவளை முத்தமிட்டேன். அந்த மயக்கத்தில் சித்தம் மயங்கினேன். தன்னையும் மறந்து கிடந்தேன்.

எல்லாம் கனவு

பின்னர் சட்டென கண்விழித்தேன். "விழி திறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச்சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம் ஒத்திருக்க நான் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்".

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...