செவ்வாய், 6 டிசம்பர், 2022

பன்முகநோக்கில் உலகமயமாக்கல்


 

உலகமயமாக்கல் என்ற சொல் உலகளவில் சமூகப் பொருளாதார வாணிப நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொல்லாகும். பன்னாட்டு அளவில் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தி சார்புடைய தன்மையை அதிகரிக்கச் செய்வதாகும். குறிப்பாகத் தாராளமயமாக்கல் கருத்தின் அடிப்படையில் வாணிபத்தில் சுதந்திரமான போக்கைக் கொண்டுவர உலகமயமாக்கல் கருத்தானது சுதந்திர வாணிபத்தைப் பரிந்துரை செய்தது.

உலகமயமாக்கல் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் செயல்முறையாகும். 1985இல் தியோடோர் லெவிட் பயன்படுத்திய உலகமயமாக்கல் என்னும் கருத்தியல் இன்று பல்வேறு அர்த்தங்களை, புரிதல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. எவ்வாறெனின் உலகமயமாக்கல் என்பதனையே விளக்கப் பல கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் அறிஞர்கள் பலரும் உலகமயமாக்கல் என்பதனை விளக்க வேறுவேறு கருத்தாக்கங்களை எடுத்துரைக்கின்றனர். “உலக நாடுகளிடையே பொருளாதார அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்த வளர்ச்சிப் பாதையை உலகமயமாக்கல்” எனலாம் என்கிறார் கவல்ஜித் சிங். “உலகம் ஒற்றை இடமாக மாறிவரும் நடைமுறையே உலகமயமாக்கல்” என்கிறார் ரோலன்ட் ராபர்ட்சன். “தொலைவிலிருக்கும் இடங்களையும் இணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களால் உள்ளூர் நிகழ்வுகள் உருவமைக்கப்படுகின்ற உலக அளவிளான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலை உலகமயமாக்கல்” என்கிறார் ஆண்டனி கிடன்ஸ்.

இதுபோன்ற கருத்தாடல்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. தங்களின் பார்வையில் இவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்துகொண்டாலும் இன்று அதனையும் கடந்து ஒரு பருப்பொருளாக இது அமைந்துள்ளது என்பதே உண்மை.

பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திய முதல்மனிதன் காலந்தொட்டு உலகமயமாக்கல் தொடங்கிவிட்டது. அவ்வுலகமயமாக்கல் இன்று அதீத வளர்ச்சி கொண்டுள்ளது. உலகின் எந்த மூலையையும் நாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் அதீத சக்தி பெற்றுள்ளோம். இதுவே மிகப்பெரிய சவால். அதனை நிறைவேற்றியிருப்பது உலகமயமாக்கல் என்னும் முதல்மனிதன் தொடங்கிய செயல்பாடு. இன்று பல்வேறு துறைகளில் உலகமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டு தன்னுடைய ஆக்டோபஸ் கைகளால் உலகை ஒன்றிணைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வி, விவசாயம், கணினித் தொழில்நுட்பம், நிதி, சட்டம், கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, அரசியல் போன்ற பல்வேறு துறைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மேற்கூறப்பட்ட பல்துறைகளில் உலகமயமாக்கலின் தாக்கம் எவ்வாறு பின்னப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் என்னென்ன போன்ற காரணிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

உலகமயம் – தாராளமயம் – தனியார்மயம்

      உலகமயமாக்கல் பற்றியும் அது சார்ந்த விரிவுகள் பற்றியும் அறிந்துகொள்ளும் முன் தாராளமயம் – தனியார்மயம் – உலகமயம் இம்மூன்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வது தேவையாகிறது. உலக அளவில் பொருள் வணிகமும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்வதும், நாடுகளுக்கிடையே பணப்பரிமாற்றம் மற்றும் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுமாக இருப்பது உலகமயம் என்று கொள்ளலாம். தாராளமயம் என்பது முதலாளித்துவத்தின் மற்றொரு வேர்நிலை வெளிப்பாடு. இது சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைகிறது. சந்தையை மாற்று அது சமூகத்தை மாற்றும் என்னும் கருத்துடையது. தனியார்மயம் என்பது, பொது என்ற கருத்தமைவை ஏற்றுக்கொள்ளாதது. பொதுத்துறையில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை நிறைவாக்க அதனைத் தனியார் துறைகளுக்கு ஒப்படைக்கும் செயல்பாடு.

      போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களால் உலகமயமாக்கல் வளர்ந்துள்ளது. அதிகரித்த உலகளாவிய தொடர்புகளுடன் சர்வதேச வர்த்தகம், யோசனைகள் மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சி வருகிறது. உலகமயமாக்கல் என்பது முதன்மையான சமூக மற்றும் கலாச்சார அம்சங்களுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் பொருளாதாரச் செயல்முறையாகும்.

உலகமயமாக்கல் வரலாறு

      “உலகமயமாக்கல்” என்ற சொல் நுணுக்கமான மற்றும் அரசியல் சார்ந்த இரு வெவ்வேறு வரலாற்றுப் பின்னனியைக் கொண்டது. பொதுவாக உலகமயமாக்கலின் வரலாறு வாணிப நடவடிக்கையை ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டின் நிலையான அமைப்பிற்கும் உள்ள தொடர்பை அதிகப்படுத்தியும் பண்டமாற்று முறையில் உள்ள இடர்களைக் குறைப்பது ஆகும்.

      “தாராளமயமாக்கல்” என்ற சொல் தடையில்லா பொருளாதாரக் கோட்பாடுகளையும், பண்டமாற்று முறையில் உள்ள கட்டுப்பாடுகளையும் களைவதே ஆகும். இதனால் ஒரு நாட்டின் வாணிபம், தனித்திறமை, பாதுகாப்பான வரிகள் மற்றும் வாணிப நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தமுடிகிறது.

      19ஆம் நூற்றாண்டில் தாராளமயமாக்கல் காலகட்டத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக இருந்தது. மேலும், இதை உலகமயமாக்கலின் முதல் பகுதியாக காணப்பட்டது. இதனால் தொழில்மயமாதல் அதிக வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது. இதனை கோட்பாடு அடிப்படையில் விளக்கலாம். ரிக்கார் டோவின், “ஒப்பீட்டு நன்மை கோட்பாட்டின்” மூலமும் சேவின் “பொதுச்சமநிலை கோட்பாடு” மூலமும் ஒரு நாடு வாணிபத்தில், விளைவுள்ள வாணிபம் மேற்கொள்வதற்கான அடிப்படையை விளக்குகிறது.

      உலகமயமாக்கலின் முதற்படி முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் தகர்க்கப்பட்டது. மேலும், பொன் திட்டத்தினால் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகவும், 1920இல் இருந்து 1930 வரை குழப்பங்கள் காணப்பட்டது. இதற்குப் பிறகு உலக நாடுகள் உலகமயமாக்கல் கருத்தை ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட சமமின்மையைச் சரிசெய்யத் திட்டம் தீட்டியது. மேலும் பொருள்கள், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்தி காரணிகளைச் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையில் பரிமாற்றிக்கொள்ள இது வழி செய்கிறது. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க பிரிட்டன் உட்ஸ் நிறுவனமான IMF மற்றும் GAAT உருவாக்கப்பட்டது.

      வாணிப ஒப்பந்தம் மறுபரிசீலனைச் செய்யப்பட்டது. இரண்டாவது உலகப்போருக்குப் பின் பன்னாட்டுப் பொருளாதார நிறுவனங்கள், மறுசீரமைப்பு, பன்னாட்டு வாணிபம் ஆகியவை விரிவுபடுத்த துரிதப்படுத்தப்பட்டது. 1970களில் இந்த விரிவுபடுத்தப்பட்ட வாணிபத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உலகமயமாக்கல்

      ‘நூல் பல கல்’, ‘கல்வி கரையில’ என்ற உரையின்வழி கல்வி கற்பதன் அவசியத்தை உணரமுடிகிறது. கல்வியினால் தாம் பெற்ற இன்பத்தை இவ்வுலக மக்களும் பெறவேண்டும் என்று கற்பித்தும் கற்றும் வருபவர்களே அறிஞர் பெருமக்கள் என்பார் வள்ளுவர். பல்துறை சார்ந்த அறிவைப் பெறக் கல்வி அவசியம். கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த சான்றோர்,

                  கற்கை நன்றே கற்கை நன்றே

                  பிச்சை புகினும் கற்கை நன்றே

 என்றுரைத்தனர். கரையில்லா பரந்துபட்ட கல்வியைப் பயில பல்வேறு நாடுகளும் இணைந்து செயலாற்றுகின்றன. அறிவை விரிவுசெய்; அகண்டமாக்கு; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்ற பாரதிதாசனின் கருத்திற்கு இணங்க, அகண்ட இவ்வுலகில் கல்வி கற்க / கற்பிக்க உலக அளவிலான தொழில்நுட்பங்கள் இன்று உதவிபுரிகின்றன. குறிப்பாக, இன்று உலகளவில் தொற்றுநோயின் பரவலால் முடங்கிக்கிடக்கும் சூழலில் கற்பதற்கோ, கற்பிப்பதற்கோ எதுவும் தடையில்லை என்ற நிலையில் வழிகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன. இணையவழிக் கல்வி இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளால் பின்பற்றப்பட்ட போதிலும், தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் கற்பித்தல் மற்றும் கற்றல் பணிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனைப் பயன்படுத்த அழைப்பு விடுக்கின்றன. குறிப்பாக, குவியம் (Zoom), Google Meet போன்றன அமைந்துள்ளன. இதன்மூலம் கல்வி கற்றல் அல்லது கற்பித்தல் பொதுமையாக்கம் பெற்றுள்ளது. இதனால், கல்வி கற்கும் மாணவர்களின் சிந்தனைத் திறன், செயலாற்றும் களம் பரந்துபட்டதாக அமைந்துள்ளது.

கல்வி பயில பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான இளையோர் சென்று சேர்கின்றனர். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது இன்றைய நவீனம். இதற்கு யுனஸ்கோவின் (UNESCO) பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது. உலகத்தரம் மிக்க கல்வியைக் கற்று மேன்மேலும் அறிவை விரிவாக்கிக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது சாத்தியமானதே உலகமயமாக்கலின் விளைவு எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த உலகமயமாக்கல்

      இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வேளாண்துறை வீழ்ச்சி அடைந்தது. அதனைச் சரிசெய்ய பல்வேறு நாடுகளின் உதவியினால் வேளாண் தொழிலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு உரங்களின் வரவு, விதைகளின் மரபணு தன்மை மாறாமை போன்றன குறிப்பிடத்தக்கன. இதன்மூலம் புதிய பசுமை புரட்சி இன்று ஏற்பட்டுள்ளது. தொழில்துறை வளர வேணாண்மை முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக இரும்பு மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்கள், வேளாண்மைக்குத் தேவையான வாகன உற்பத்தி நிறுவனங்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் என பலவாறாகக் குறிப்பிடலாம்.

பொருளாதார உலகமயமாக்கல்

      பன்னாட்டு வாணிபம் அதிகரித்து, குறிப்பாக வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளுக்குத் தங்களது பொருளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இதன்மூலம் பன்னாட்டு முதலீட்டை அதிகப்படுத்தவும் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகப்படுத்தவும் வகைசெய்கிறது. வளரும் நாடுகள் தங்களது மூலதனத்தைப் பன்னாட்டு கடன் மூலம் பெற்று வளர்ந்துவருகிறது. உலகப் பொருளாதராம் மிகவேகமாக வளர்வதாலும், வளரும் நாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி உற்பத்தி நடவடிக்கையை வேகப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கச் செய்து பன்னாட்டு தரத்தின் உற்பத்திக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் மாறுகிறது.

      பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தின் பங்கை அதிகப்படுத்தியும் வளரும் நாடுகளில் எந்தவித ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவும் இன்றி நேரடியாகத் தொழில்நுட்பத்தைப் பெற்று வளரவும் உதவுகின்றது. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகப்படுத்துதல் மூலம் போக்குவரத்துச் செலவு, செய்தித்தொடர்புச் செலவு போன்றவைகள் குறைகின்றன. இதனால் தீர்வுகள் குறைகிறது. மேலும் அன்னிய வாணிகம் உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிக்கிறது. பன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் நாடுகளின் பொருளாதார எல்லை விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது பல்வேறு நிறுவனங்களுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டு பன்னாட்டு வாணிபத்தை மேற்கொள்ள உதவுகிறது. இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகஅளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. வெளிவளம் (External Resources) எனப்படும் பொருளாதார நடைமுறையினைப் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகஅளவு வளர்ச்சியடையச் செய்துள்ளன.  

நிதி – சட்ட உலகமயமாக்கல் 

      நாட்டின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தேவைக்கு நிதி என்பது முக்கியத் தேவையாகிறது. அதற்கு பல்வேறு நாடுகளுடன் வணிக உறவு கொள்ளவேண்டிய தேவை உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் பலவும் தங்களுடைய பன்னாட்டு வணிகத்திற்குப் பயன்படுத்தும் நாணய மதிப்பு என்பது அமெரிக்காவின் டாலராகவே உள்ளது. இதனாலேயே இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதுமே அமெரிக்க டாலருக்கு நிகராக மதிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்து பெறும் பணமும், இறக்குமதிக்காக மற்ற நாடுகளுக்குக் கொடுக்கும் பணமும் அமெரிக்க டாலராகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளும் இதே முறையையே பின்பற்றி வருகின்றன.

      இதுபோன்ற உலகலாவிய பணப்புழக்கத்தை நிர்வாகம் செய்ய சர்வதேச நாணய நிதி தொடங்கப்பட்டது. மீட்டுருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்குமான சர்வதேச வங்கி (உலக வங்கி) ஐரோப்பாவில் உலகப்போருக்குப் பின்னான மீட்டுருவாக்கங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதன்பின் 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு உலக நாடுகளுக்குத் தொழில் திட்டங்களுக்கான நிதி வழங்கும் பணியைச் செய்துவருகிறது.

      உலக அளவில் பல்வேறு நாடுகளும் தங்களுக்கென்று அரசியல் சாசனம் நிர்ணயம் செய்திருக்கும் போது, உலகலாவிய சட்டம் என்பது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் எனும் கேள்வி மனத்தில் எழலாம். இருப்பினும் பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகள் இணைந்து சுற்றுச்சூழல், தீவிரவாதம், நீராதாரம் போன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். கூட்டமைப்பு நாடுகளில் சட்டம் வேறுபட்டிருந்தாலும், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அனைத்து நாடுகளுக்கும் ஒரு சட்டம் என்ற நிலை ஏற்படுகிறது. இதனை விசாரணை செய்யவும் ஒரு நீதித்தீர்ப்பாயமும் செயல்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகளின் சபை செயல்பட்டு வருகிறது.

அரசியல் உலகமயமாக்கல்

      அரசியல் உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளைத் தீவிரப்படுத்தலும், விரிவுபடுத்தலும் என்பதைக் குறிக்கிறது.

பூகோளமயமாக்கப்பட்ட மற்றும் நம் அனைவரையும் பாதிக்கும் முடிவில்லாத பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கவும் தீர்க்கவும் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகமயமாக்கல் ஊக்குவித்துள்ளது, எடுத்துக்காட்டாக, காலநிலை மாற்றம், வறுமை விகிதங்கள், இயற்கை வளங்களின் பயன்பாடு போன்ற காரணத்திற்காக, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டாக, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், சிறந்த தீர்வை வழங்குவதற்குமான ஒரு கூட்டமைப்பு. 

தொழில்நுட்ப உலகமயமாக்கல்

தொழில்நுட்ப உலகமயமாக்கல் தகவல், இணையம் மற்றும் ஊடகங்களுக்கான அணுகல் மற்றும் தொழில்துறை மற்றும் சுகாதாரப் பகுதியில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்களை உள்ளடக்கியது. நாங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம், தகவல்கள் அதிக வேகத்திலும் தூரத்திலும் பகிரப்படுகின்றன, மக்கள் தங்கள் நாட்டிலும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி பல்வேறு தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் அதிகம் அறியப்படுகிறார்கள்.

போக்குவரத்து வழிமுறைகள் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களிலிருந்தும் பயனடைந்துள்ளன, எடுத்துக்காட்டாக, எரிபொருள் நுகர்வு மற்றும் மாசு அளவைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, வாகனங்கள் அதிக பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன.

கலாச்சார உலகமயமாக்கல்

      கலாச்சாரம் என்பது உணவு, உடை, பழக்கவழக்கம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பல்வேறு கலைச்செல்வங்கள் உலககெங்கும் பரவ வழிவகை செய்திடல் வேண்டும்.

தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், பொருளாதாரம், சுற்றுலா போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட சர்வதேச உறவுகளின் விளைவாகக் கலாச்சார உலகமயமாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சந்தைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கலாச்சார பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம் ஆகியவை சினிமா, தொலைக்காட்சி, இலக்கியம், இசை, அருங்காட்சியகங்கள் மூலம் நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் இடையே முக்கியமான தொடர்புகளை உருவாக்கியுள்ளன.

இது பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்டுள்ளது. சிலர் உலகளாவிய மதிப்புகளின் பரவல், தகவல் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான அதிக அணுகல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றனர். இருப்பினும், சிறிய சமூக குழுக்கள் அதிக தொலைதூர கலாச்சார தயாரிப்புகளின் நுகர்வு மற்றும் அவற்றின் சொந்த சில மதிப்புகளை இழப்பதன் மூலம் பாதிக்கப்படுகின்றன.

மொழி உலகமயமாக்கல்

            உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!

எனும் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, பல்வேறு உலக நிகழ்வுகளைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்திட வேண்டும். அதனை உலகம் முழுமைக்கும் அறியும்படிச் செய்திட வேண்டும்.

மொழிகள் உலகமயமாக்கலில் ஒரு மொழி உலகம் முழுமைக்கும் தொடர்பு மொழியாக உயர்ந்துள்ளமையைக் காட்டுகிறது. குறிப்பாக ஆங்கிலேயர்களின் படையெடுப்பால் உலகின் பெரும்பான்மையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அவ்வாறு இருக்க அவர்களின் தொடர்புமொழியான ஆங்கிலம், அங்குள்ள மொழிகளுடன் இணைந்து அவற்றின் சாரத்தையும் ஏற்றுக்கொண்டு பல்வேறு உச்சரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், பிரிட்டிஷ் உச்சரிப்பு, அமெரிக்க உச்சரிப்பு என்று இரு வழக்கம் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு,

o   மொழிகளின் எண்ணிக்கை

o   மக்களின் பரவல்

o   அயல்மொழி கற்றல்

o   சுற்றுலாவியல்

o   இணைய மொழிகள்

o   உலகலாவிய அறிவியல் வெளியீடுகள்

போன்ற காரணிகள் மொழி பரவலாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

உலகலாவியத் தொடர்புச் செயலில் சில மொழிகள் மட்டும் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதோடு, பிற மொழிகள் தங்கள் முதன்மையை இழத்தலையும், இன்னும் பல மொழிகள் பேசுவோறின்றி மறைவதையும் காட்டுகின்ற ஒரு செயல்முறை இன்று நடைபெறுகிறது.

சமூக உலகமயமாக்கல்

சமூக பூகோளமயமாக்கல் அனைத்து மனிதர்களுக்கும் சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இந்த அர்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகமயமாக்கப்பட்ட உலகம், சமூகத் துறையில், சமூக வர்க்கம், மத நம்பிக்கைகள் அல்லது கலாச்சாரங்களைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமாகக் கருதப்படும் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

முடிவுரை

      உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு கருவி உலகமயமாக்கலாகக் கொள்ளலாம். இது இன்று அதீத வளர்ச்சி பெற்று அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. உலகமயமாக்கல் நீட்சி பெற்றுள்ள கல்வி, வேளாண்மை, பொருளாதாரம், நிதி, சட்டம், அரசியல், தொழில்நுட்பம், மொழி, கலாச்சாரம், சமூகம் போன்ற இன்றைய சில துறைகளில் பரவியுள்ளமையை இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...