வெள்ளி, 2 செப்டம்பர், 2022

பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்


 முன்னுரை

பத்துப் பாட்டில் இரண்டாவதாக இருப்பது பொருநர் ஆற்றுப்படை. கரிகாற் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த வேறொரு பொருநனைப் பார்த்து சோழமன்னன் கரிகால் வளவனைச் சென்று சந்தித்துப் பரிசுகளைப் பெற்று வருவாய் என்று வழிப்படுத்தியது.

ஆற்றுப்படையின் இலக்கணத்தை,

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெருநர்க் கறிவுறீ இச்

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”

என்று தொல்காப்பியம் சொல்கிறது.

தான் பெற்ற பெரிய செல்வத்தைப் பெறாமல் தவிக்கும் எதிர் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களையும் வள்ளலிடம் சென்று பயன் பெறும்படிச் சொன்ன முறையும் என்பது பொருள்.

பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். பொருநர் ஆற்றுப்படையில் வருபவன் தடாரி கொட்டுபவன். அவனுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் தருபவரைத் தேடிச் செல்பவன். இந்த ஆற்றுப்படையில் முதலில் யாழின் வருணனையும், பிறகு விறலியின் வருணனையும், பொருநனுடைய இயல்பையும் கூறுகிறது. பிறகு, “நானும் வறுமையால் துன்புற்றவன்தான், கரிகால் சோழனிடம் சென்று இந்தப் பரிசுகளையெல்லாம் பெற்றேன்” என்று சொல்கிறான். அதன்பின், கரிகாற் பெருவளவன் பெருமை, கொடைச்சிறப்பு, வெண்ணிப்போர் வெற்றி, சோழநாட்டின் வளம், காவிரியின் வளம் போன்றன குறிப்பிடப்படுகின்றன.

 

பொருணனை விளித்தல்

முதலில் எதிர்வரும் பொருநனைப் பரிசு பெற்று வரும் பொருநன் விளிக்கிறான். பெரிய ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் சென்று தன் வாத்தியத்தை வாசித்து உணவும் பரிசும் பெற்றவன் எதிர் வருபவன். “தடாரி வாசிக்கும் முறைகளை எல்லாம் அறிந்த பொருநனே” என்று அவனை அழைக்கிறான்.

 யாழின் இயல்பு      

    யாழின் குடம் போன்ற அமைப்பில் நடுவில் மேடாகவும் இரு பக்கமும் பள்ளமாகவும் இருக்கிறது. அதைப் பார்த்தால் மானின் காலடி அழுத்திய இடம் எப்படி இடையில் மேடும் இரு பக்கமும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.

·       விளக்கினுடைய எரிகின்ற நிறத்தைப் போன்றது யாழை மூடிய தோலால் விசிக்கப்பட்ட போர்வை இருக்கிறது.

·       யாழின் மேற்போர்வையைத் தைத்துப் போட்டிருக்கிறார்கள். இன்னும் நன்றாகத் தெரியாத இளஞ்சூலையுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லியதாக மயிர் தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக்கிறது.

·       குடத்தைத் தைப்பதற்கு ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண்களைப் போல இருக்கின்றன.

அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி.

·       யாழின் கொம்பு வளைந்திருக்கிறது. அது எட்டுநாள் ஆன பிறையைப்போல தோற்றம் கொண்டுள்ளது. அதன் இறுதிப்பகுதி நாக்கு இல்லாமல் அமைந்த பாம்பினைப் தோற்றத்தை அளிக்கிறது.

·       யாழில் வாரைக் கட்டியிருக்கிறார்கள். அது கரிய நிறத்தை உடைய பெண்ணின் முன் கையில் அணிந்த வளையல்களைப் போல உள்ளன.

·       நரம்புகளே ஒன்றொடொன்று நெருக்கமாக இருக்கிறது. விரலால் சுண்டி அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அது.

·       திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்தாற் போன்ற அழகையுடையதாக உள்ளது.

·       அந்த யாழ் பாலையாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆறலைக் கள்வராகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள கொலைகருவிகள் தாமே நழுவிவிடும். அன்புக்கு எதிரான பகைமையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும்.

அத்தகைய இனிய யாழ் அது. அந்தப் பாலையாழை வழிச்செல்பவர்களோடு செல்லும் விறலி வாசிக்கிறாள். நரம்புகளைக் கூடத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும் பாடுகிறர்கள்.

பாடினியின் நிலை

o   பாடினியின் கூந்தல் ஆற்றில் படிந்திருக்கும் கருமணலைப் போலக் கருமையாக, அலையலையாக இருக்கிறது

o   அவள் அழகிய நெற்றியோ பிறை போலத் தோற்றம் அளிக்கிறது. அவளுடைய புருவம், கொலை செய்வதற்காக வளைந்திருக்கும் வில்லைப் போல உள்ளது.

o   அவளுடைய கண்கள் மழை போன்ற குளிர்ச்சியைப் பெற்றனவாக இருக்கின்றன.

o   அவளுடைய வாய் பூவின் இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்து வரும் சொல் இனிமையாக இருக்கிறது.

o   அவள் பற்கள் முத்துக்களை வரிசையாக வைத்தது போன்ற காட்சியை அளிக்கின்றன.

o   மென்மையான மயிருடைய காதுகளில் குழைகளை அணிந்திருக்கிறாள். அழகுபெற்ற குழைகள் ஊசலாடுகின்றன.

o   அவள் நாணமுடையவள். அவள் தன் கழுத்தைக் கீழே சாய்த்திருக்கிறாள்.

o   அவளுடைய பெரிய தோள்கள் மூங்கிலைப் போல இருக்கின்றன.

o   அவளுடைய முன்கை மெல்லிய, மயிர்களை உடையதாகக் காட்சி அளிக்கிறது.

o   அவளுடைய விரல்கள் மலையின் மேலே வளர்ந்திருக்கும் காந்தளைப் போன்றவை.

o   அவள் விரலில் உள்ள நகங்கள் கிளியின் மூக்கைப் போல ஒளி விடுகின்றன.

o   அவளுடைய மார்பு இளமையும் அழகும் பொருந்தியவை.

o   அவளுடைய கொப்பூழ் நீரிலே உள்ள சுழியைப் போல் விளங்குகிறது.

o   அவளுடைய இடை உண்டோ இல்லையோ என்று உணர முடியாமல் உள்ளது.

o   அல்குலில் மணிகோக்கப்பட்ட ஆரத்தை அணிந்திருக்கிறாள்.

o   அவளுடைய தொடைகள் பெண் யானையின் பெரிய கையைப் போல உள்ளன.

o   அவளுடைய அடி சிறியதாக இருக்கிறது. நாயின் நாவினைப் போன்று மென்மையான பாதம் உடையவள்.

o   பெண் மயிலின் உருவத்தைப் போன்ற வடிவமும் பெருமையும் தகுதியையும் உடையவளாக விளங்கினாள் அந்த விறலி.

கூட்டத்தோடு வந்த அவர்கள் ஓரிடத்தில் இளைப்பாறினர். அந்த இடம் ஆண் யானைகள் நடமாடும் வழிகளையுடைய காடு. அந்த இடம் பாலை நிலம் என்பதால், அங்குள்ள மரா மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து மொட்டையாக நிற்கின்றன. நிழல் அடர்ந்து இல்லாமல் வலையை மேலே கட்டினாற் போன்று காட்சிதருகிறது. மரக்கிளைகளின் இடையிடையே கதிரவன் வந்து வெப்பம் அதிகரிக்கிறது. அங்கே தங்கினவர்கள் காட்டிலே உறையும் கடவுளைப் பாடித் தம் கடமையை முடிக்கிறார்கள்.

பரிசில் பெற்றவன் பெறாதவனிடம் உரைத்தல்

பெருமைமிக்க செல்வத்தையும், பெரும்புகழையும், வலிமையான முயற்சிகளையும் உடைய வெற்றி முரசுகள் முழங்கும் படைகளை உடையவர்களாகிய சேர சோழ பாண்டியர் மன்னர்கள் ஒருங்கே தங்கியிருந்த தோற்றத்தைப் போல, பாடலைப் பாடித் தனக்கு வேண்டியவைகளை உடைத்தாக்கிக் கொள்ளும் கூத்தர்க்குத் தலைவனே! எங்கே போவது என்று தெரியாமலும், வழிமாறிச் சென்றுவிடாமலும் நான் வரும் வழியின் எதிரில் பட்டாயே; இது நீ செய்த தவத்தின் பயன்தான். நான் சொல்வதை விரும்பிக் கேள்!

பசியாலே வருந்துகின்ற உன்னுடைய உறவினர்களுடன், பலகாலம் உங்களை வருத்தும் பசியானது நீங்க வேண்டுமானால் நான் சொல்லும்படிச் செய். “ஏழு சுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவாயாக”

பரிசுபெற்றோன் தன் நிலை கூறுதல்

நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். எங்கே பழுத்தமரம் உள்ளது என்று தேடும் பறவை போல அலைந்தேன். நான் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றபோது, என்னைப் போன்ற வறியவர்கள் பலர் இருந்தனர். அவ்விடம் பெரிய மதிலையுடையதாக இருந்தது. அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம் பொருந்தியது. மிகப் பெரியது. அவனிடம் இரவலராக (பரிசுபெறுவோர்) வருகிறவர்களுக்கு எப்போதும் வாயில் (மதில் கதவு) திறந்தே இருக்கும். அங்கே நான் போகும்போது யாரிடத்திலும், “உள்ளே போகலாமா?” என அனுமதி கேட்கவில்லை.

இளைத்த என் உடம்பிற்கு இங்கே நலம் கிடைக்கும் என்று எண்ணிய போதே என் இளைப்புத் துன்பம் தீர்ந்து விட்டது. என் கையில் வைத்திருந்த தடாரியை அடித்தேன். அதில் பதிந்த என் கைத்தடம், படம் விரித்த பாம்புபோல் வடுபட்டுக் கிடந்தது. அப்போது நள்ளிருள் போய் விடிந்திருந்தது. விடிவெள்ளி முளைத்திருந்தது. அப்போது இரட்டைத் தாளத்திற்கும் பொருந்த ஒரு பாட்டினை நான் பாடினேன்.

பாடுவதற்கு முன்பே, என்னோடு பழகிய நண்பரைப் போல அவன் வந்தான்; அன்பாகப் பேசினான்; என்னை உட்காரச் செய்தான்; தன் பார்வையில் படும் படியாக அருகில் என்னை அமரச்செய்தான். அவன் பார்த்த பார்வை என்னைப் பருகுவதுபோலக் இருந்தது. அவனுடைய பார்வை என்னை உருக்கிவிட்டது. அதனால் என் எலும்பெல்லாம் குளிர்ச்சி ஆயின.

அதன்பின், நான் உடுத்தியிருந்த கந்தை ஆடையை முற்றும் நீக்கினான். அந்த கந்தை, ஈரும் பேனும் பிடித்ததாகவும், வியர்வையில் நனைந்ததாகவும் இருந்தது. வேறு நூலில் அங்கங்கே தைத்திருந்தேன். அதை நீக்கிய பிறகு எனக்கு வேறு ஆடை அணிவித்தான். எனக்குப் புதிய ஆடையை வழங்கினான். நூலில் நெய்யப்பட்ட ஆடை நெருக்கி நெய்தமையால் ஓரிழைக்கும் மற்றோரிழைக்கும் இடையே பார்வை செல்லாது. மிகவும் நுண்மையான பூவேலை செய்த ஆடையாக இருந்தது. பாம்பின் உரியைப் போல மெல்லிதாகவும் இருந்தது.

அதன்பின் அந்த மாடத்தில் பலவகை அணிகலன்களை அணிந்த பெண்கள் மயங்கச்செய்யும் கள்ளை, பொற்கலங்களில் நிறைய ஊற்றித் தந்தார்கள். அவர்கள் பலமுறை தரத்தர வழிநடந்த வருத்தம் போகும்படியாக நிறைய குடித்து, இதுநாள்வரை இத்தகைய கள்ளைக் குடிக்கவில்லையே என்று மனத்தில் இருந்த வருத்தம் போய்விட்டது.

பிறகு அவனுடைய அரண்மனையில் ஓரிடத்தில் தங்கினேன். தவம் புரிகிறவர்கள் மனத்தை ஒருமைப்படுத்திக் கடவுள் தியானத்தில் ஈடுபட்டால் இந்த உடம்பு இறப்பதற்கு முன்னே தவத்தின் பயனாகிய பேரின்பத்தை இந்த உலகத்திலேயே பெறுவார்கள். நான் பெற்ற இன்பம் அவர்கள் பெற்ற பேரின்பத்தைப் போல இருந்தது. அங்கே சுகமாகப் படுத்து உறங்கிப் பின் எழுந்தேன். கள் உண்டதால் ஆன உடம்பு நடுக்கம் அல்லது வேறு மனக்கவலையின்றி எழுந்தேன்.

நான் அவனைக் காண்பதற்கு முன்பு மாலை நேரத்தில் என்னிடத்தில் வறுமையையும் அவனைக் கண்ட மறுநாளில் என்னுடைய நிலை மாறிற்று. இவற்றை யெல்லாம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். அப்போது, நான் இருப்பது கனவோ என்று கலங்கியது நெஞ்சம். பிறகு நனவென்று துணிந்து பெருமிதம் கொண்டது. ‘சிறிது நேரம் காத்திருக்கட்டும்’ என்று சொல்லாமல், ‘அவர்களை விரைவில் அழைத்து வாருங்கள்’ என்று வாயிலோர்க்குக் கூறினான். நாங்கள் உள்ளே போனவுடன், ‘அருகில் வாருங்கள்’ என்று அழைத்தான். அவனிடம் சென்றவுடன் நாங்கள் முறைப்படி அவனை வணங்கி அவன் அன்பைப் பாராட்டினோம்.

 

கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு

செம்மறியாட்டுக் கிடாயின் பெரிய மேல் தொடையின் வெந்ததனை விழுங்குங்கள் என்று பல முறையும் வற்புறுத்தினான். இருப்புக் கோலில் கோத்து சுட்ட ஊனை வழங்கினான். அது சுட்டமையின் வாயின் இரு புறமும் மாறி மாறி ஒதுக்கி ஆற்றித் தின்றேன்.

அவ்வாறு தின்ற தசைகள் தெவிட்டிவிட்டு வேண்டாம் என்று சொன்னபோது இனிய சுவையும் வெவ்வேறாகிய பல வடிவத்தையுடைய பணியாரங்களையும் கொண்டு வந்து தின்னும்படி எங்களை வற்புறுத்தினான். அந்த உணவுகளை உண்ட மகிழ்ச்சியாலே, ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர்கள் முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள்.

அவ்வாறு மகிழ்ச்சியையுடைய கள்ளை உண்பதிலே பல நாளைப் போக்கினோம். இப்படி ஊனையே தின்று கொண்டிருந்த எங்களுக்கு ஒருநாள் சோறாகிய உணவு கிடைத்தது. ‘இந்தச் சோற்றையும் உண்ணுங்கள்’ என்று வரியற்ற இடை முரியாத அரிசி விரலென்று தோன்றும்படி நீண்ட, ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும் வழங்கினான்.

பிறகு பல கொட்டைகளைப் பொரித்து அவற்றோடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் நிரம்பும்படி விழுங்கினோம். இவ்வாறு அவன் வழங்கிய ஊனைத்தின்று எம்முடைய பற்கள் கொல்லை நிலத்திலே உழுத கொழு முனை மழுங்குவது போல, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கிவிட்டன.

சற்றே இளைப்பாறவும் நேரம் இன்றி உண்டோம். இப்படி இருப்பது எங்களுக்கு அலுத்துப் போயிற்று. ஆகவே, ஒரு நாள் அவனிடம், ‘குற்றம் செய்த பகைவரிடத்து பெற்ற திறை வகையெல்லாம் முற்றச் செய்த தலைவனே’ என்று அழைத்து, ‘நாங்கள் எங்கள் பழைய ஊருக்குப் போகவேண்டும்’ என்று மெதுவாகச் சொன்னோம். அது கேட்ட அவன் எம்முடைய கூட்டத்தை விட்டுவிட்டு விரைந்து போகிறீர்களோ? என்று சொல்லும் போது கோபித்தவன் போல இருந்தான்.

அவனைப் பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது.

கரிகாலன் வழங்கிய கொடை

பெண் யானைகளோடு சேர்ந்த ஆண் யானைகளை அதன் கன்றுகளுடனே ஏற்றுக் கொள்வாயாக என்று சொன்னான். பின்னும் ஊர்திகள், ஆடைகள், அணிகலன்கள் முதலியவற்றை மேன்மேலே தந்தான். அவன் கொடுத்த எல்லாவற்றையும் ஏற்றுச் செல்வது என்பது என்னாலே இயலாத காரியம். ஆகவே யானும் எனக்கு வேண்டியவற்றை யானறிந்த அளவிலே வாங்கிக் கொண்டேன்.
அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை நீங்கிற்று.

கரிகாலன் பெருமை

 

அவன் பகைவரிடத்தில் கோபம் கொள்பவன். முருகனது சிற்றம் போல அது இருக்கும். அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே, தன் தந்தை இறந்து போனமையின் அரசுரிமையைப் பெற்றான்.

அவனுடைய பெருமையை அறியாமல் அவனை எதிர்த்துத் தோல்வியுற்றுப் பிறகு அவனுடைய வலிமையை அறிந்து அவன் சொன்ன தொழிலைச் செய்தார்கள்.

அவனுக்கு பணிந்து நடக்காமல் இருந்த பகைவர்கள், ‘இவன் நம்மை என்ன செய்து விடுவானே’ என்று அச்சம் பெருக இருந்தார்கள்.

மிக்க வெம்மையையுடைய சூரியன் கடலின் மீது தன் கதிர்களைப் பரப்பிப் பின்னர் வானத்திற்குச் சென்றாற் போல அவன் தோற்றினான். அவன் பிறந்தது முதல், சிறந்திருந்த சோழ நாட்டைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு நாள்தோறும் அதன் வளம் பெருகும்படி வளர்த்தான்.

யாளியென்னும் விலங்கினையுடைய குட்டி, மிகுந்த வலிமையினாலே தன் தாய்ப்பாலை உண்ணும் பருவத்திலேயே, விரைவிலே தான் உண்ண விரும்பி வேட்டையாடி யானையைக் கொன்றது. அத்தகு வலிமை அதற்கு இயல்பிலே அமைந்திருக்கிறது. அதைப் போலவே கரிகாலனும் இருந்தான்.

கரிகாலன் செயல் (வெண்ணிப்பறந்தலை போர்)

கரிகாலன் இளம் பருவத்திலேயே சேரனையும் பாண்டியனையும் போரிட்டு வென்றான். பனை மாலையை அடையாளமாக அணிந்தவன் சேரன். ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையுடைய வேம்பின் அழகிய தளிராற் செய்த மாலையை அணிந்தவன் பாண்டியன். அவற்றைத் தம்முடைய தலைகளில் விளங்கும்படி அணிந்த இரண்டு பெரிய வேந்தர்களாகிய சேரனையும் பாண்டியனையும் ஒருசேரக் களத்தில் அழியும்படிச் செய்தவன் கரிகாலன்.

வெண்ணி என்ற ஊரில் இந்தப்போர் நடைபெற்றது. வலிய முயற்சியை உடைய அவன், ஆத்தி மாலையை அணிந்திருந்தான்.

கரிகாலன் வழங்கும் பரிசில்

அவனிடம் சென்று அவன் திருவடியைப் பணிந்து அவன் முன்னே நீங்கள் நின்றால், அவனுடைய பார்வை உங்கள் மேற்படும். கன்றுக்குப் பால்தர வேண்டுமென்ற கன்றை ஈன்ற பசுவைப் போல, உங்கள் தோற்றத்தைக் கண்டு, வறுமையை உணர்ந்து அதைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பான்.

அவனைக் கண்டவுடன் உங்கள் கலைத் திறமையைக் காட்டத் தொடங்குவீர்கள். நீங்கள் வாத்திய ஒசையை இசைப்பதற்கு முன்பே அவன் உங்களுக்கு நலம் புரியத் தொடங்குவான்.

அழுக்காகவும், தையலையுடையதுமாக இருக்கும் கந்தைத் துணியை நீக்கி, தூய கரையை உடைய பட்டாகிய உடைகளைத் தருவான். நீங்கள் பகுகுவதற்குக் கள்ளைத் தருவான். நீ விரும்பியப்படியே உண்பாயாக என்று வழங்குவான். நீங்கள் உண்ண உண்ண அவன் மேலே மேலே வழங்குவான். அதை ஒவ்வொரு நாளும் பருகுவீர்கள்.

இவ்வாறு உண்ட பிறகு ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழ் இல்லாத பொற்றாமரைப் பூவை, உங்கள் மயிரிலே சூட்டுவான். உங்களுடன் வரும் விறலிக்கும் அவன் பரிசில் தருவான்.

நூலில் கட்டாத பொன்னரி மாலையை ஒளியையுடைய பாடினி சூடிக்கொள்ள வழங்குவான். பிறகு பொருநனுக்கு விடை கொடுத்தனுப்புகிறான். எங்களை ஒரு தேரிலே ஏற்றினான். அந்தத் தேர் யானைக் கொம்பால் செய்தது. உயரமான தேர். அதில் பூட்டிய குதிரைகள் வெள்ளை வெளேரென்று பாலைப் போல இருந்தன. தலை மயிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய இருந்த அத்தகைய குதிரைகள் நான்கை அந்தத் தேரில் பூட்டினான்.

பிறகு எங்களை வழியனுப்பும்போது தன் காலாலே ஏழடி எங்கள் பின்னலே வந்தான். குதிரைபூட்டிய வண்டியை ஓட்டுவதற்கு தாற்றுக்கோலை அதன் முள் நீக்கிக் கொடுத்தான். அவன் ஏறுக என்று ஏற்றினான்.

வீறுபெற்ற யாழ்ப்பாணர்களுக்குக் கொடுக்கும் வரிசைகளையெல்லாம், உனக்குத் தருவான். அவை மட்டுமல்ல, உங்களுக்கு அவன் பல ஊர்களையுடைய நாடுகளையே வழங்குவான். அந்த ஊர்கள் வளம் மிக்கன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை.

அங்கே வாழ்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ்வதனால் வேறிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பமே அவர்களுக்கு இராது. இவற்றோடு உங்களுக்கு யானைகளையும் வழங்குவான். இவ்வாறு பரிசில்களை அவன் இடைவிடாது தந்து கொண்டே இருப்பான்.

தன்பால் வரும் பொருநர், பாணர், விறலியர் ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசில்களைத் தருவதில் அவன் கை ஓயமாட்டான். நீங்கள் பெற்றவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு வர இயலாது. ஆதலின் நீங்கள் பெற்றவற்றில் உங்களால் எடுத்துச் செல்ல முடியாதவற்றை உங்களைப் போல வந்த வேறுவேறு பரிசிலர்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

சோழ நாட்டு வளம்

ஒல்லென்ற ஓசையோடு அலைகள் புரளும் கடற்கரை சூழ்ந்த அகன்ற இடத்தை உடையது சோழநாடு. அங்கே மிகுதியாக நெல் விளைகிறது. அவற்றைக் குதிர்களில் சேமித்து வைப்பார்கள். அங்கே தாழ்ந்த தென்னை மரங்களும் குளிர்ச்சியான சோலைகளும் நிரம்பியிருக்கின்றன. அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுவார்கள். அவற்றைக் கரிய காக்கைகள் விழுங்கும். இவ்வாறு செஞ்சோற்றைப் பல காலும் உண்டமையினால் வேறு உணவை விரும்பி, நொச்சி மரங்களின் நிழலில் ஆமை ஈன்ற குட்டியை பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாதுகாத்து வைக்கும்.

மருத நிலத்தில் உள்ள உழவர்களின் பெண்கள் விளையாடுகிறர்கள். நெய்தல் நிலத்தில் உள்ள மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடுகிறர்கள். கரிகாலனுடைய நாட்டில் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை. எல்லோரும் சமாதானமாக வாழ்ந்தார்கள். அரசனது அவையிலே ஒன்றாகக் கலந்து சென்று புகுவார்கள். அவர்களிடம் இருந்த மாறுபாடெல்லாம் போயிருக்கும். அவ்வாறு கரிகாலன் ஆட்சி புரிந்தான்.

மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தையும் சிவந்த சுளையை உடைய பாலாப் பழத்தையும் தின்று, வளைந்து வளர்ந்த காஞ்சி மரத்திலும் செவ்விய மருத மரத்திலும் அவை தங்கிப் போகின்றன. நிலவளம் இருப்பதால் கரும்புகள் நன்றான வளர்ந்திருக்கின்றன. அவற்றை வெட்டி ஆலையிலிட்டுச் சாறு பிழிவார்கள். கரும்பை அறுக்கும் பொழுதும் நெல்லை அரியும் பொழுதும் உழவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து கொண்டே தம் செயலைச் செய்கிறார்கள்.

பகன்றை என்ற கொடி படர்ந்திருக்கிறது. தளிர்கள் நிரம்பிய புங்கை மரங்கள் உள்ளன. இவ்வளவு மரங்களையும் கொடிகளையும் உடையதாக உள்ள அந்தச் சோலை தாழ்ந்து இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் நிற்கின்றன. இப்படிப் பலவகை மரங்கள் சூழ்ந்தது அவ்விடம். அந்த இடத்தில் சில காலம் தங்கிச் சலிப்பு ஏற்பட்டால் அங்கிருந்து நீங்கி மாறுகின்றன.

முல்லை நிலத்தில் முல்லை படர்ந்திருக்கிறது. முல்லையினையும், கொன்றையினையும், நீலமணி போன்ற பூவினையுடைய காயாவினையும் உடைய நல்ல காட்டில் சில காலம் உறைவர். பிறகு அது சலித்துவிட்டால் மருத நிலத்துக்குச் செல்வார்கள். பிறகு அங்கும் சலிப்பு ஏற்படும்.

இனி, சுறாமீன்கள் உலாவுகின்ற விரிந்த கடலில் உள்ள இறால் மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்கள் நிரம்பிய புன்னை மரத்தின் கிளையில் தங்கினால், ஓங்கி வீசும் கடல் அலையின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடல்களில் தங்கும். குலைகுலையாகக் காய்த்த தென்னை மரங்களின் காய்க் குலைகளையும், வாழையையும், கொழுவிய காந்தளையும், மலர்ந்த சுரபுன்னையையும் உடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழ்பவர்கள் அவ்விடத்தில் சலிப்பு ஏற்பட்டால் குறிஞ்சி நிலத்துக்குச் செல்கிறார்கள்.

குறிஞ்சி நிலத்தில் வண்டுகள் யாழைப் போல இசைபாடுகின்றன. அந்தப் பாட்டுக்கு ஏற்பத் தன் தோகை விரித்த இளைய மயில்கள் நிலவு போன்ற நிறமுடைய மணல் மேட்டில் பலவாகப் பெயர்ந்து செல்கின்றன.

திணை மயக்கம் (நிலம் மயங்குதல்)

குறிஞ்சி நிலத்தின் தேனையும் கிழங்கையும் கொண்டு போய் விற்கிறார்கள். அவற்றிற்குப் பதிலாக மீன் நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிறார்கள். இனிய கரும்புகளையும் அவலையும் கூறுபடுத்தி விற்கிறார்கள் சிலர். அவர்கள் அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு கள்ளை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். குறிஞ்சி நிலத்தில் மிகுதியாகப் பாடப்படும் குறிஞ்சிப்பண் நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் பாடுகிறார்கள். நெய்தல் நிலத்திற்குரிய நெய்தல்பூவினை மலைவாழ் குறவர் சூடுகிறார்கள்.

முல்லை நிலமாகிய காட்டில் உள்ளவர்கள் மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணைப் பாடுகிறர்கள், மருத நிலத்திலுள்ள பாட்டுக்காரர்கள் நீல நிறம் பொருந்திய முல்லை நிலத்துக்குரிய பலவகைப் பாடல்களைப் பாடுகிறார்கள். முல்லை நிலத்திலுள்ள கோழிகள் மருத நிலத்தில் உள்ள நெற்கதிரைத் தின்கின்றன. மருத நிலத்தில் வீடுகளில் உள்ள கோழிகள் மலையில் விளையும் தினையைத் தின்கின்றன. மலையிடத்தில் வாழும் குரங்குகள் (மந்திகள்) நெய்தல் நிலத்துக் கழியிலே மூழ்கவும், கழியில் திரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும் என குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களும் உடைய நாடுகள் சேர்ந்தது சோழ நாடு.

உலகத்தில் உள்ளவர்கள் கரிகாலனப் புகழ்கிறார்கள். அப்படி இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் அவன். தன்னுடைய ஆட்சி எங்கும் பரவ, யாவரும் அவனுடைய ஆணை ஒன்றையே ஏற்கின்றனர். அன்பும், உதவியும், ஆட்சிச் சிறப்புமிக்க செங்கோலும், வெல்லுகின்ற வேற்படையையும் உடைய அந்தக் கரிகால்வளவன் வாழ்க!

காவிரியின் பெருமை

நல்ல ஒளியைப் பரப்புகிறான் கதிரவன். ஆதலால் மிகுந்த வெப்பம், பசுமைக்கே இடம் இல்லை. கஞ்சங்கொல்லை கருகுகின்றன. மரங்களின் கிளைகள் தீப்பற்றி எரிகின்றன. மலைகளிலிருந்து வீழும் அருவிகள் எல்லாம் வறண்டு போயின. மேகங்கள் கடலிலுள்ள தண்ணீரை எடுக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம் இல்லாத பொல்லாத காலத்திலும், காவிரி தன் வளம் குன்றுவதில்லை. இப்படிப் பெரிய பஞ்சம் ஏற்பட்டு, நற்பண்புகள் எவையும் இல்லாமல் போன காலத்திலும் காவிரியாறு நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் தேக்கிக்கொண்டு போகிறது.

புது வெள்ளம் நுரையுடன் வருகிறது. ஆரவாரத்தோடு ஓடுகிறது. குளத்திலும் மடுக்களிலும் புகுகின்றது. ஆற்றில் நீர் வந்தமையால் மகளிர் குதித்து மூழ்கி விளையாடுகிறார்கள். இவ்வாறு வந்த வெள்ளத்தினால் நெல் நன்றாக விளைகிறது. அதை அறுவடை செய்கிறார்கள். நெற்கதிர் முற்றிச் சாய்ந்திருத்தலின் அவற்றை அறுப்பவர்கள் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லை அறுக்கிறார்கள். நெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி மூட்டைகளில் அடுக்குகிறார்கள். அரிந்த நெல்லின் கதிர்களை மலை போல அடுக்குகிறர்கள்.

ஒவ்வொரு நாளும் அறுத்த நெற்கதிர்களைக் கடாவிட்டு அடித்து நெல்லைத் திரட்டிக் குவிக்கிறார்கள். நெல் மூட்டைகளைக் குதிர்களில் சேமித்து வைக்கிறார்கள். செந்நெல்லின் விளைவு ஒரு வேலிக்கு ஆயிரம் கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்தக் காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரிகால்வளவன்.

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...