வெள்ளி, 20 மே, 2022

லாரி டிரைவரின் கதை: சூழலும் வாழ்வியலும்


 

ஆய்வுச்சுருக்கம்

            தமிழ் நாவல் உலகில் பொதுவுடைமை பேசும் நாவல்கள் மிக அருகியே காணப்படுகின்றன. அவ்வாறான சூழலில் பொதுவுடைமை இயக்கத்தையும், இவ்வியக்கம் எடுத்துரைக்கும் தொழிலாளர் நலன்சார்ந்த கூட்டமைப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் இந்நாவல் எடுத்துரைக்கிறது. தமிழுக்கு இது புதுவரவு என்றோ, இதற்கு முன்பு இவ்வாறான படைப்புகள் வரவில்லை என்பதோ கூறமுற்படவில்லை. எனினும் அதிலிருந்து மாறுபட்டு வேறுகோணத்தில் நகர்த்திச் சென்றுள்ளார் சிங்கிஸ் ஐத்மாத்தவ்.

            சரக்குந்து (லாரி) ஓட்டுநர்களின் வாழ்க்கை என்பது எவ்வளவு கடினமான நிலை. அதிலும் குறிப்பாக மலையேற்றப் பகுதிகளிலும், கொண்டை ஊசி வளைவுகளிலும் அவர்கள் அதனை ஓட்டிச்செல்வதோடு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகப் பொருளை ஒப்படைக்க வேண்டிய சூழல். தன்னுடைய உயிரையும், குடும்பத்தாரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் தம்முடைய வேலையின் முக்கியத்துவம் அறிந்து நடக்கும் ஓட்டுநர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சூழ்நிலைகள், ஆட்படும் வேதனைகள், மனதில் இழையோடும் காதல் போன்றவற்றையும் அதோடு சாலைப் பாதுகாப்புப் பணித் தொழிலாளர்கள் குறித்த பதிவையும் விரிவாக இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

கலைச்சொற்கள்

பொதுவுடைமை – கூட்டமைப்பு – இயக்கம் – மலையேற்றம் – தொழிலாளர்கள் – சாலைப்பாதுகாப்பு – இனம் – சோவியத் யூனியன் – சோவியத் எழுத்தாளர்கள் – பணியாளர்கள் – காதல்  

முன்னுரை

                                    எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான

                                    இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் (பாண்டியன் பரிசு, 56: 4)

தொழிலாளர் நலன் சார்ந்தும் வாழ்க்கைத் தரம் மேம்படவும் பல இலக்கியங்கள் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக நாவல் இலக்கியத்தின் கருப்பொருளாக தொழிலாளர்களே நிறைந்து காணப்படுகின்றனர். தமிழ் சார்ந்த புனைவுகள் மட்டுமன்றிப் பிறமொழி சார்ந்தும் உலகம் முழுமைக்குமான இலக்கியங்கள் பலவும் தொழிலாளர்களை முன்னிறுத்துகிறது.

          இயல்பான உலாகனுபங்களை ஒட்டிச்செல்லும் இலக்கிய வடிவமே நாவல் என்பது எட்மன் கொ.சே. கருத்து என்பார் கைலாசபதி (தமிழ் நாவல் இலக்கியம், ப. 35). உலகானுபங்களோடு தொழிலாளர்களின் அன்றாட வழக்கமான வாழ்க்கை நிகழ்வுகள், அவர்களின் பண்பு நலன்கள் மற்றும் பல்வகையான பொதிவுகளே கதை வடிவில் இடம்பெறுகின்றன. அதனை உணரும் வாசகர்களின் வாசிப்பு அனுபவம் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே புனைவுகள் உருவாக்கப்படுகின்றன.

            சாதாரணமாகக் கடந்துசெல்லும் தொழிலாளர்கள் பலரின் உழைப்பு எந்த அளவிற்கு நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது என்பது இவ்வாறான படைப்புகள் வழி வெளிப்படுகிறது. இக்கட்டுரையில் சரக்குந்து ஓட்டுநர்களின் வலியும், வாழ்க்கைத் தரமும் பேசுபொருளாகிறது. அதோடுமட்டுமல்லாமல் நாம் கடந்துசெல்லும சாலைகள், அதனைப் பாதுகாக்கும் பணியாளர்கள் குறித்தும் விளக்கிச் செல்கிறது லாரி டிரைவரின் கதை எனும் மொழிபெயர்ப்பு நாவல்.  

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

            சோவியத் எழுத்தாளர்களுள் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பொதுவுடைமை இயக்கப் போராளியாகவும் அதுசார்ந்தும் இயங்கியவர். தொழிலாளர்களின் நலுனுக்காகவும், அவர்களின் பொருளாதார நலனுக்காகவும் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தம் கருத்துக்களை முன்வைத்தவர் ஐத்மாத்தவ். கிர்கீஸிய இனத்தைச் சார்ந்த இவர் தம்முடைய படைப்புகளில் தம் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசென்ற தொழிலாளர்களையே கதைத்தலைவர்களாகக் கொண்டு படைத்துள்ளார். அவற்றுள் முதல் ஆசிரியர், ஜமீலா, குல்சாரி, சிகப்புத்துண்டு அணிந்த என் சிறிய லிண்டன் மரம், வெள்ளைக் கப்பல், அன்னை வயல், லாரி டிரைவரின் கதை போன்றன ஆகும். இவரின் பல நாவல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

            சோவியத் எழுத்தாளர்களுள் மாக்சிம் கார்க்கி போன்ற எழுத்தாளர்களே அதிகம் கவனம் பெறுகிறார்கள். அவ்வாறான சூழலில் ஐத்மாத்தவ் போன்றோரின் எழுத்துக்களை உலகறியச் செய்தவர்கள் மொழிபெயர்ப்பாளர்களே. அவ்வகையில் TO HAVE AND TO LOSE என்னும் நூலை லாரி டிரைவரின் கதை எனத் தமிழில் மொழிபெயர்த்தவர் தமிழகப் பொதுவுடைமை இயக்கத் தலைவராக விளங்கிய தா. பாண்டியன் ஆவார். அவரின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் மிகச்சிறந்து விளங்குகின்றது கதைக்களம்.

 

பொதுவுடைமைச் சிந்தனை

            எல்லாரும் எல்லாம் பெறவேண்டும்; அதனைச் சமமாய்ப் பெறவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு பேரியக்கம். அதிலும் உருசியா போன்ற வல்லரசு நாடுகளில் வளர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று பரவி தன் கொள்கையை உணர்த்தியிருக்கிறது. பல்வேறு நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இவ்வியக்கம் தொடர்பான கொள்கைகளில் மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாத சூழலில் அதனைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியைப் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் இன்னும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

                                    உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்

                             உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் (இதயக்கனி, 1975)

என்று இயற்றினார் கவிஞர் வாலி. உழைக்கும் மக்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும் பொதுவுடைமை இயக்கம் பெரிதும் பாடுபட்டது என்பது மறுக்கவியலாது.

கதையமைப்பு

            லாரி டிரைவரின் கதை எனும் இந்நாவல் ஒரு மாறுதலான மற்ற படைப்புகளிலிருந்து வேறுமாதிரியான ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. முன்னுரை முடிவுரை என்று அமைந்துள்ளது. கதைசொல்லியாக வருவபர் ஒரு பத்திரிக்கையாளர். தான் செய்யும் பணியில், தம்மைச் சந்தித்தவர்களையும், இவர் சந்தித்த நண்பர்களையும் அவர்களின் வாய்ச்சொற்களாலே தம்முடைய கதையைக் கூறவைத்து அமைதியாக இடையீடு இல்லாமல் கேட்டுக்கொண்டு அதனைப் பதிவு செய்வதாக அமைகிறது. அதோடு மட்டுமல்லாமல் தம்முடைய மனறிலையையும் கதையின் ஊடே செலுத்தி முழுமைபெற வைத்துள்ளார் எழுத்தாளர். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களாகவே கதையை நகர்த்திச் செல்வதாக அமைத்திருக்கிறார்.

            நாவல் முழுக்க விருவிருப்பும், நீரோட்டமான கதையும் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்புக் கதை என்பதால் பெயர்களும், இடங்களும் புதியனவாகத் தோன்றினாலும், கதை செல்லும் போக்கிற்கு அவை எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரக்குந்து ஓட்டுநரின் (லாரி டிரைவர்) பயண அனுபவம்

            இலியாஸ் என்ற ஓட்டுநர் தன்னைச் சுற்றி நடைபெறும், தன் வாழ்க்கையில் சந்தித்த, கடந்துவந்த பாதையை நினைவுகூர்வதாக இக்கதை அமைகிறது. அவனின் நண்பன் அலிபேக். தான் முதன்முதலில் சந்தித்துப் பின் தன்னுடைய மனைவியாக்கிக்கொண்ட ஏசெல், தன்னுடைய மகன் சமத், தான் வேலைசெய்த பணிமனையின் (டிப்போ) நிர்வாகியான கதீஜா, தன்னை எப்போதும் சண்டைக்கு இழுக்கும் ஜாண்டாய், மலையேற்றத்தின் போது, எதிர்பாராத விதமாக வழியில் நின்றபோன வண்டியின் ஓட்டுநர் பெய்ட்மீர் எனப் பலர் இவன் வாழ்க்கையில் எதிர்படுகின்றனர்.

            இவர்களைப் பற்றிய செய்திகளைப் பயணத்தில் தற்போது உடன்வரும், ஏற்கனவே தனக்கு அறிமுகமாகியிருந்த பத்திரிக்கையாளரிடம் எடுத்துரைக்கின்றார். பத்திரிக்கையாளரும் இடையீடு எதுவும் செய்யாமல் அவனிடமிருந்தே அனைத்து செய்திகளையும் பெறுவதாக இந்நாவல் அமைகிறது.

            லாரி டிரைவர்களின் (சரக்குந்து ஓட்டுநர்) கடின உழைப்பும் அயராத பணியும் இந்நாவலில் சுட்டப்படுகிறது. செங்குத்தான, கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த பல ஆபத்தான வழிகளை உள்ளடக்கிய பாதைகளில் லாரிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு உரிய இடத்தில், சரியான நேரத்தில் கொண்டுசேர்க்கும் பணி என்பது மகத்தானது. இதுபோன்ற செய்திகளையும், அவர்களின் உழைப்பினையும் எடுத்துரைக்கிறது. அதோடுமட்டுமல்லாமல் பெய்ட்மீர் தலைமையில் சாலை அமைக்கும் பணியும் அங்கு நடைபெறுகிறது.

                               ………… …………… பருக்கைக் கல்லின்

                                       நெடுங்குன்றில் பிலஞ்சேர பாம்புக் கூட்டம்

                             போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்

                                      புதுக்கியவர் யார்? அழகு நகருண்டாக்கி (புரட்சிக்கவி; 6: 3–4)

எனும் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப சாலை அமைக்கும் பணியையும், அதனைப் பாதுகாக்கும் பணியும் செய்பவர்களின் கடின உழைப்பையும் உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் பணி, சாலை அமைக்கும் பணி, சாலைப் பாதுகாப்புப் பணி போன்றன இங்கு பேசுபொருளாக அமைகிறது. இதற்கிடையில் உருவாகும் மெல்லிய காதலும், அவர்களுக்கு இடையேயான உறவுநிலைகளும், பணியாளர்கள் தங்களுக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதலும், அதன் முக்கியத்துவமும் இந்நாவல் முழுக்க உணர்த்தப்படுகிறது.

சாகச மனநிலை

            கதைக்களம் உருசிய நாட்டின் மலைப்பகுதிகளில் தொடங்குகிறது. அங்கு நிறுவப்படும் சீன நிறுவனத்திற்குப் பொருள்களைக் கொண்டு சேர்க்க திட்டம் தீட்டப்படுகிறது. ஆனால் செல்லும் பாதையானது மலைகளையும், வளைவுகளையும் அதிகம் கொண்ட பகுதியாகவும், சரக்குந்துகள் அதிகம் சென்றுவர இருப்பதால் மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. ஓட்டுநர்கள் தங்களின் உடல்நிலையையும், பாதையின் நிலையினையும், தட்ப வெப்ப சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

“மப்பும் மந்தாரமுமாக ஈரவாடையோடு புனுப்புனு என்று விழுந்து கொண்டிருக்கும் பஞ்சுமூடம், மலைமுகடுகளில் நுரை மாதிரி ஒட்டிக்கொண்டு இருக்கும். என் லாரியின் முன்பக்கம் கண்ணாடியைத் துடைப்பான் எந்நேரமும் துடைத்துக்கொண்டே இருக்கும்……… மிகவும் பயங்கரமான இடம், பாதை நெளிந்து நெளிந்து, வளைந்து வளைந்து, திருகித்திருகிச் செல்லும். ஒரு சுவரில் ஏறுவது மாதிரி ஏற்றம். மேகங்களைச் சக்கரத்தில் நசுக்கியழுத்திக்கொண்டு, ஆகாயத்தில் ஏறுவது மாதிரி இருக்கும். முன்பக்கமாக ஸ்டியரிங்குப் பக்கம் சாயக்கூட முடியாது. பின்பக்கமாக சீட்டில் பிடித்துத் தள்ளிவிடும். தீடீரென்று முன்னால் ஒரு தூக்குத் தூக்கிப்போடும். அப்புறம் சக்தி முழுவதையும் பயன்படுத்தித்தான் நிமிர்ந்து உட்கார முடியும். கால நிலையோ இடக்குப் பண்ணும் ஒட்டகம் மாதிரிதான். தோலான் கணவாயைப் பொறுத்தமட்டில், அது கோடைக் காலம், குளிர்காலம் எனப் பார்க்காது. அதன் நினைப்புக்குத் தகுந்தாற்போல பனிமழையையோ, பனிப்புயலையோ சுழற்றியடிக்கும். ஆனால் டின்ஷான் மக்களாகிய எங்களுக்கு இது பழகிப்போய்விட்டது” (ப. 54)

என்ற இலியாஸின் வார்த்தைகளிலிருந்து மலையேற்றம் காணும் சரக்குந்துகள் அதன் ஓட்டுநர்கள் எந்தளவு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை இதன்வழி அறிய முடிகிறது.  

கூட்டமைப்பின் முக்கியத்துவம்

            எந்தவொரு வேலைக்கும் கூட்டமைப்பு என்பது இன்றியமையாததாகிறது. கூட்டமைப்பு வலுப்படும்போது எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டுவிட இயலும். ரைப்பாச்சியே என்ற இடத்தில் இருந்த கனரக வாகன மையத்தில் (மோட்டார் டிப்போ) உள்ள சரக்குந்து ஓட்டுநர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அவ்வமைப்பின் மூலம் தொழிலாளர்கள் நிலை குறித்தும், முதலாளிகளின் ஆணைகளை ஏற்றுக் கொள்வது குறித்தும் தங்களுக்குள் விவாதம் செய்யும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கியாங் நகரில் உள்ள ஒரு சீன நிறுவனத்திற்கு ரைப்பாச்சியே இரயில் நிலையத்திலிருந்து பொருள்களை ஏற்றிச்செல்ல அந்த கனரக வாகன மையத்தின் தலைவர் அமாஞ்சலோவ் உத்தரவு பிறப்பித்தார். இரயிலில் வந்திறங்கிய அப்பொருள்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகக் கொண்டு செல்ல இயலாது என்றும், பாதை மிகவும் மோசமானது மற்றும் ஆபத்தானது என்றும் அச்சங்கத்தின் மூலம் கூறப்பட்டது. “சரியான நரகத்தில் மாட்டிக்கொண்டோம். ஒரு ஆட்டுத்தோலில் இரண்டு கோட் செய்வதைப் போன்றதுதான் அவர்கள் இந்த யோசனையை முன்னாலேயே செய்திருக்க வேண்டும்” (ப. 67) என்று அதற்கு எதிர்ப்பு வலுத்தது. அதன்பின்னர் கலந்தாலோசனை செய்து அதனை எவ்வாறு எடுத்துச்செல்லலாம் என்பதற்கான மாற்று ஏற்பாடுகள் சிந்திக்கப்பட்டது. அதனை சரியான முறையில் செய்து காட்டியவன் அலிபேக்.

இதன்மூலம் தொழிலாளர் கூட்டமைப்பின் முக்கியத்துவம் நாவலில் பேசப்படுகிறது. இன்றைய காலத்திலும் தனிநபரால் இயலாத ஒன்று தான் சேர்ந்திருக்கும் கூட்டமைப்பால் உறுதிபடுத்தப்படுகிறது என்பது உண்மை.

தொழிலாளர் கூட்டமைப்பும் – இலியாஸும்

            தொழிலாளர் கூட்டமைப்பின் விதிமுறையைக் கடந்து இலியாஸ் தன்னுடைய சரக்குந்தில் மேலும் ஒரு இணைப்பைப் பொருத்தி மிகுதியான பாரத்தோடு தோலான் மலைப்பகுதியில் பயணத்தைத் தொடங்கினான். அவனின் எண்ணம், தான் ஏற்கனவே சாலைப்பாதுகாப்பு மையத்திற்கு பழுதாகி நின்ற பெய்ட்மீரின் சரக்குந்தை இழுத்துச்சென்றது மனதிற்கு ஆறுதலாக அமைந்தது. எனவே யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இம்முடிவை எடுத்தான். அவன் செய்த அந்த ஆபத்தான பயணத்தை ஆசிரியர் மிக விரிவாக எடுத்துரைக்கிறார். அக்காட்சி நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை அந்நாவலின் மொழிநடை எடுத்துக்காட்டுகிறது.

            “இயந்திரங்களின் உறுமலும், அலறலும் மாறி, நடுநடுங்கும் குரல் கேட்டது. பிறகு சத்தம் திடீரென்று நின்றது. லாரி பின்பக்கமாக வழுக்கி மலையிலிருந்து கீழ்நோக்கி ஓடத்தொடங்கியது. பிரேக்குகள் பிடிக்கவில்லை. டிரெய்லர் இழுக்க லாரி பின்பக்கமாக மலையின் கீழ்நோக்கி ஓடியது. கடைசியாக ஒரு பாறையில் மோதி நின்றது……… சக்தியற்றுப்போன நான் தரையில் குப்புற விழுந்து, பனிக்கட்டி மீது புரண்டு, கண்ணீர் விட்டழுதேன்” (ப. 81)

            என்று இலியாஸின் மலைநிலையையும், இயலாத் தன்மையையும் காட்டியுள்ளார் ஆசிரியர். தன் இயலாமையை மறைக்க குடிக்கு அடிமையானான். அங்கேயே அதன் இணைப்பைத் (டிப்பர்) துண்டித்துவிட்டு சரக்குந்தை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். இதனால் தான் மிகப்பெரும் பழிக்கும், அவச்சொல்லுக்கும் ஆளானதாகக் கூனிக்குறுகி நின்றான்.

தோலான் மலைத்தொடர் பயணம்

            இலியாஸ் செய்ய நினைத்தது நிறைவேறாமல் போக அதன்பின் சரக்குந்து முனையத்திற்கு அவன் வரவில்லை. அந்நிறுவனத்தின் மேலாளராக இருந்த கதீஜாவுடன் வேறிடத்திற்குச் சென்றுவிட்டான். ஆனால் அவனின் நண்பன் அலிபேக் தன்னுடைய அறிவைப் பயன்படுத்திச் சரக்குந்துகள் சுமையுடன் மலையேறுவதற்குப் பெரிதும் உதவினான். இதனை அறிந்த அருகில் இருந்த பல்வேறு சரக்குந்து நிறுவனங்கள் தாமாக முன்வந்து உதவின. இதனால் சிங்கியாங் நகரில் இருந்த சீன நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் பொருள்கள் சென்று சேர்ந்தன.

          “பிற டிரைவர்களும் டிரெய்லர்களைக் கட்டிஇழுத்துக் கொண்டு போவதற்கு முன்னதாகவே அலிபேக் செய்து காட்டிவிட்டான். எந்தவொரு வேலையிலும் முக்கியமானது தொடங்கிவைப்பதுதான்” (ப. 102)

இதனைக் கண்ட இலியாஸ், தன்னால் இயலாத ஒன்று தன் நண்பன் நிறைவேற்றினான் என்ற எண்ணம் இருப்பினும், அவனால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால் அவன் இழந்தது வேலை மட்டுமல்ல. தன் குடும்பத்தையும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலைப் பராமரிப்புப் பணி – பெண்ணின் பங்களிப்பு

          பெய்ட்மீர் தன்னுடைய கதையைக் கூறுவதாக அமைந்த பகுதி. சாலைப் பராமரிப்பாளர் தூதுக்குழு ஒன்று தாஜிகிஸ்தானுக்குப் போவதைப் பற்றியும், அதற்குத் தலைவராகப் பெய்ட்மீர் செல்வதாகவும் அறிந்து அதனைக் குறித்து நேர்காணல் செய்ய வந்திருந்தார் அப்பத்திரிக்கையாளர். அவரிடம் தன்னுடைய வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

            ஒரு பெண் சாலை அமைப்பு வேலைசெய்ய கிர்கிஸ் என்னும் கிராமத்திலிருந்து வந்திருந்தாள். ஆனால் 1940களில் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது மிகவும் வியப்பு. அப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண் சாலை அமைக்க வந்தாள். அவள் பெயர் குல்பரா. இன்றைய காலத்தில் பெண்கள் பொறியியல் படிப்புகள் கூட எளிமையாகப் படிக்க முடிகிறது. ஆனால் அன்று அவர் வந்தது பெரியவியப்பு. சாலைப்பணி செய்து வேலை முடியும் நிலையில், சாலைப் பாதுகாப்புப் பணி மட்டுமே இருந்தது. அது எளிமையன்று. எதிர்பாரா விதமாக அந்நாட்டில் போர் மூள வீட்டில் உள்ள ஆண்கள் போருக்குச் செல்ல வேண்டிய சூழலில், குல்பரா, பெய்ட்மீரைத் திருமணம் செய்துகொண்டதோடு, அவர்களுடைய குழந்தையுடன் அப்பணியையும் ஏற்றுக்கொண்டாள்.

            பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கடிதப்போக்குவரத்து இருந்தது. இறுதியாக சில மாதங்கள் அக்கடிதப்போக்குவரத்து நின்றது. போர் முடிந்தபின் தன்னுடைய மனைவி மக்களைப் பார்க்க வந்த பெய்ட்மீருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலைப் பாதுகாப்புப் பணியில், மலையிலிருந்து வீழ்ந்த பனிச்சரிவால் அவர்கள் இருந்த வீடு முற்றிலும் சேதமானது. இருவரும் இறந்திருந்தனர். அதன்பிறகு அவர் ரைப்பாச்சியே நகரத்திற்குக் குடியேறிவிட்டதாகக் கூறினார். மீண்டும் அத்தூதுக்குழுவுடன் தாம் செல்லப்போவதில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

            தாம் இருந்தவரை சாலையையும், அதன் பாதுகாப்பு அலுவலகத்தையும் மிகச்சரியாகக் குல்பரா வழிநடத்தினாள் என்பது நோக்கத்தக்கது.

 மெல்லிய காதல் (இலியாஸ் – ஏசெல்)

          லாரி டிரைவரின் கதை என்னும் நாவலில் வெறுமனே ஓட்டுநர்களின் பயண அனுபவத்தையும், அவர்களுடைய பணிப்பழுவை மட்டும் குறிப்பிடாமல் அவர்களுக்கு இடையேயான இழையோடிய மெல்லிய காதலையும் குறிக்கத் தவறவில்லை ஐத்மாத்தவ். மிக முக்கியமாக இலியாஸ் – ஏசெல் காதல் வாழ்க்கை.

            முதன்முறையாக ஏசெலை அறிமுகம் செய்யும்போது அவளின் கையில் சிவப்புநிற சிறு துணியுடன் காட்சியளிக்கிறாள். இலியாஸ் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தன் வண்டியை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். இவளைக் கண்டதும் இன்னும் வேகமாகச் செயல்பட்டு வண்டியை விடுவித்துக்கொண்டு அவள்பின் செல்கிறான். இருவரும் மனம்ஒத்துப் பேசிக்கொள்கின்றனர். காதல் மலர்கிறது. இருப்பினும் அவளின் வீட்டில் அனுமதி மறுக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறித் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நண்பன் அலிபேக் உதவிசெய்கிறான். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு சமத் என்னும் பெயர்சூட்டி மகிழ்கின்றனர்.

இலியாஸ் – கதீஜா

            கதீஜா, இலியாஸ் வண்டிஓட்டும் அலுவலகத்தில் தடம் எண் எழுதித்தருபவள். யாருக்கும் இல்லாத மதிப்பும் மரியாதையும் கருணையும் காதலும் இலியாஸ் மேல் எப்போதும் இவளுக்குண்டு. மற்றவர்கள் ஜன்னலின் வழியே பேசினாலும், அலுவலகம் உள்வரை செல்லும் உரிமை இவனுக்கு இருந்தது. தன்னுடைய இயலாமையால் மலையேற்றத்தில் உள்ள தோல்வியில் மனம் வெதும்பி தன் மனைவி மக்களை விட்டு, போதைக்கு அடிமையானான். அப்போது அவனுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் கதீஜா. எனவே அவளையே தன் அன்புக்குரியவளாக ஏற்றுக்கொண்டான். காலம் கடந்து செல்ல ஏசெலின் நினைவுக்ள மீண்டுவர இருவரும் மனம் ஒத்து பிரிகின்றனர்.

பெய்ட்மீர் – ஏசெல்

            ஏசெல் தன் கணவனின் தவறான போக்கால் அவனை விட்டுப் பிரிந்து செல்ல நினைத்தபோது பெய்ட்மீர் ஆறுதலாக விளங்குகிறார். தன்னுடைய குழந்தை சமத் அவருடன் நெருங்கிப் பழகி அவரையே தன்னுடைய அப்பா என்று அழைக்கவும் முற்பட்டான். இதனால் இருவருக்கும் ஒரு இனம்புரியாத நட்பு ஏற்பட்டு அது காதலாகிக் கசிந்தது. பெய்ட்மீர், தன்னுடைய மனைவி குல்பராவும் தன்னுடைய குழந்தையும் இல்லாத ஏக்கத்தை மறந்தார். ஏசெலை ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை மாற்றினார். இருப்பினும் அவளுடைய கணவனுடன் அவள் வாழ தான் என்றும் தடையாக இருக்க மாட்டேன் என்றும் உறுதிகொண்டார்.

            பெய்ட்மீர் – ஏசெல் – இலியாஸ் மூவரும் சந்திக்கும் இடத்தில், “நாங்கள் அனைவருமே இதற்குமுன் சந்திக்காதவர்கள் போல நடந்துகொண்டோம். நான் மிக எச்சரிக்கையோடு நடந்துகொண்டேன். ஏதாவது ஒரு சொல்லாலோ, சைகையாலோ, சாடைமாடையாக் கூடத் தவறாக நடந்து அவர்களுக்கு வேதனையை உண்டாக்கக் கூடாதே என்று நடந்துகொண்டேன்” (ப. 177) என்ற பெய்ட்மீரின் கூற்று அவனை எண்ணத்தில் உயர்ந்தவனாகக் கட்டமைத்துள்ளது.

முடிவுரை

            தமிழில் பல்வேறு நாவல் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் சோவியத் எழுத்தாளர்களின் கதைசொல்லும் பாங்கும், நேர்த்தியும் தனித்துவமாக விளங்குகின்றது. அதிலும் குறிப்பாக பொதுவுடைமை பேசும் இலக்கியங்களைப் படைத்தளித்து அதன்வழிச் சிந்தனை எழுச்சிக்குத் துணை நிற்கின்றது.

            லாரி டிரைவரின் கதையில் சொல்லப்படும் ஓட்டுநர்களின் திறமை, விடா முயற்சி, கனிவு, விருந்தோம்பல் போன்ற குணங்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ள சங்கங்கள், தொழில் செய்வதற்கான அறிவியல் வழியிலான முயற்சிகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் நோக்கத்தக்கது. இதனிடையே தொழிலாளர்களின் ஈடுஇணையற்ற உழைப்பில் இன்று உயர்ந்துநிற்கும் வழிகளும், பெற்ற செல்வங்களும், பயனடைந்த நிறுவனங்களும், நாடுகளும் எண்ணிலடங்கா என்பதனை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

            இந்நாவலாசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் கதைகளைக் குறிப்பிடும்போது, ‘மலைகளிலும் ஸ்டெப்பிகளிலும் தோன்றும் கதைகள்’ என்று கூறுவார்கள். இக்கதையிலும் மலையைப் பற்றியும் அதில் படர்ந்திருக்கும் பனி பற்றியும், அகல விரிந்திருக்கும் ஏரிகள், அதன் கரையில் மலர்ந்திருக்கும் மலர்கள் என இதனைப் பற்றிய விவரிப்புகள் ஏராளம். இறுதியாக இலியாஸ் கூறும்போது கூட “டீன்ஷான் மலைக்கும், இசிக்-குல் ஏரிக்கும் பிரியாவிடை சொல்லிக்கொண்டு நின்றேன்” என்று தன் பிரிவாற்றாமையை எண்ணிப் புலம்புகிறான்.

            மிகச்சீரிய கதை வார்ப்பும், எளிமையான சொற்களால் பாமரரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மொழிபெயர்த்திருக்கும் நடையையும் யாராலும் எளிதில் கடந்துவிட முடியாது. மனக்கண்ணில் என்றும் கையில் செங்கொடியுடன் நிற்கும் ஏசெல் நிழலாடிக்கொண்டிருப்பாள்.

 துணைநின்ற நூல்கள்

கைலாசபதி, க., தமிழ் நாவல் இலக்கியம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், முதற்பதிப்பு, டிசம்பர் 2017

சிங்கிஸ் ஐத்மாத்தவ் (தமிழில்: தா. பாண்டியன்), லாரி டிரைவரின் கதை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு, நவம்பர் 2008

பாரதிதாசன், பாரதிதாசன் பாடல்கள், தொ. பரமசிவன் (தொ.ஆ), நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, ஏழாம் பதிப்பு, ஆகஸ்ட் 2006


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...