‘நிமிர்ந்த
நன்னடை நேர்கொண்ட பார்வை
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறிகள்’
என்ற பாரதியாரின் வைரவரிகளுடன் நாள்தோறும் வெளிவருவது
தினமணி நாளிதழ். மேற்கண்ட அடிகளுக்கு ஏற்றாற்போல நாளும் சமூகநோக்கோடு வெளிவந்து கொண்டிருக்கிறது
தினமணி. ஒரு கோயிலில் மணி ஒலிப்பது தெய்வத்திற்குக் கேட்பதற்காகத்தான் அடிக்கப்படுகிறது
என்ற ஒரு கருத்து உள்ளது. இதழ் கோயில் போன்றது; எனவே கோயிலில் ஒலிக்கும் மணியை அதன்
பெயராக அமைத்திருக்கிறார்கள். நடமாடும் தெய்வங்களுக்குத் தொண்டுசெய்வதை முதன்மையாகக்
கொண்டு தினமணி விளங்குகிறது.
நடமாடும்
கோயில் நம்பர்க்கொன்று ஈயின்
படமாடக்
கோயில் பகவர்க்கது ஆமே (திருமந்திரம்)
என்ற திருமூலரின் கருத்தைக் கருவாகக்கொண்டு இயங்குவது
தினமணி என்றால் மிகையில்லை.
சமூகத்தின் சிக்கல்களை உரியவர்கள்
கண்டு தீர்க்கும்விதத்தில் மணியாக ஒலித்து அதனைச் சரிசெய்யும் நாளிதழ் தினமணி. இந்நாளிதழின்
தமிழ்ப்பணிகள் குறித்து இக்கட்டுரை விரிகிறது. இது என்றும் தமிழ், தமிழ்மக்கள், தமிழ்நாடு
என்ற கோட்பாட்டுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளமை பாராட்டிற்கும் சிறப்பிற்கும் உரியது.
தமிழ்
– தமிழ்மக்கள் – தமிழ்நாடு
உலகத் தமிழ்மக்களின் உயிர்த்துடிப்பாகக்
கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய செய்திபரப்பும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழ்
– தமிழ்மக்கள் – தமிழ்நாடு என்ற செயல்பாட்டில் விளங்கிக்கொண்டு வருகிறது தினமணி. இச்செய்தி
நிறுவனம் உலகளாவிய அளவில் பல்வேறு செய்திகளையும் பகிர்ந்துகொண்டு நிலவிவந்தாலும் தன்னுடைய
கொள்கையிலோ – கோட்பாட்டிலோ – எந்த மாறுதலையும் செய்யவில்லை என்றே கூறலாம்.
மொழித்தூய்மை என்பது உலகில் பலரும்
விரும்புகின்ற ஒரு செயல்பாடு. அதற்கு உறுதுணையாக அமையவேண்டியது அரசின் கடமை. அவ்வாறு
மொழித்தூய்மை பின்பற்றப்படாதபோது அல்லது அக்கொள்கையிலிருந்து தவறும்போது அரசினைக் கண்டிக்கும்விதமாகச்
செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் தினமணிக்கு நிகர் அதுவேதான். ஒரு நாட்டில்
அரசியலமைப்பு எவ்வாறு பாதுகாப்பட்டு வருகிறதோ அதேபோன்று ஊடகங்களும் பாதுகாப்பளிக்கப்பட்டு
வருகின்றன. இது நாட்டின் நான்காவது தூண். இதுதான் மக்களை நேரிடையாகச் சென்றுசேர்கிறது.
இதுபோன்ற செயல்பாடுகளில் தினமணி ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு சொல்லைப் புதியதாகப் பயன்படுத்தும்போது
அதற்கான விளக்கத்துடன் அந்தச்சொல் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற குறிப்பும்
இடப்படுகிறது.
மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இதழ்களில் தினமணி தன்னுடைய பங்காக 2014 – ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று
(மொழிக்கென்று) ஒரு விழாவினை (தமிழ்த் திருவிழா) ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவினைத்
தலைமையேற்றுத் தொடங்கிவைத்தவர் நினைவில்வாழும் மேதகு மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர்
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே ஒருமொழிக்குரிய விழாவினை
ஒரு நாளேடு எடுப்பது இதுவே முதன்முறை என்பது நோக்கத்தக்கது.
புதிய
சொற்களை அறிமுகம் செய்தல்
ஊடகங்கள்
மொழியை வளர்ப்பதில் பெரும்பங்காற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதனைப் பல்வேறு
தளங்களில் பல்வேறு மாந்தர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என்பது முயற்கொம்பாகவே
உள்ளது. ஆனால் தினமணி நாளிதழ் தானாகவே முன்வந்து இத்தமிழ்ப் பணியைச் செய்கிறது.
எட்டுத்திக்கும் செல்வீர்
கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்ற பாரதியாரின் அடிகளுக்கு ஏற்பத் தமிழறிஞர்களின்
கருத்துகளைக் கேட்டு அவர்களின் ஆலோசனைகளின்பேரில் பலரும் விரும்பும், பலரும் ஆமோதிக்கின்ற
கருத்துகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பிறமொழியிலிருந்து தமிழுக்கு எடுத்துவருகிறது.
அவற்றுள் பெரிதும் உழைத்தவர்கள் மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்
ம. இராசேந்திரன் மற்றும் தமிழிறஞர் தெ. ஞானசுந்தரம் போன்றோர் ஆவர். ஒவ்வொரு வாரமும்
ஞாயிறன்று அவர்களின் சொல் தேடலும், சொல் புதிது என்னும் பகுதியும் சிறப்பாக அமையும்.
பிறரின் கருத்துகளையும் அவற்றுடன் சேர்த்து வெளியிட்டு இறுதியில் காரணத்துடன் கூடிய
மொழிபெயர்ப்பாக அது அமைந்திருக்கும். அவற்றால் உருவான சொற்களைத் தன்னுடைய நாளேடுகளிலும்
பயன்படுத்தி அதற்கான பின்னூட்டம் பெறுவது மொழிக்குச் செய்யும் நன்மை. அவற்றுள் தற்போது
அதிகம் புழக்கத்தில் உள்ள இணையம் சார்ந்த சொற்களை அறிமுகம்செய்து அதனைப் பயன்பாட்டிற்கும்
கொண்டுவந்துள்ளது. அவற்றுள், முகநூல் (Facebook), சுட்டுரை (Twitter), கட்செவி அஞ்சல்
(WhatsApp) போன்றவை குறிக்கத்தக்கன.
ஒரு நாட்டின்
தலைவர் அல்லது நாடுகளின் பெயர்கள் அல்லது முக்கிய நபர்களின் பெயர்கள் போன்றவற்றைக்
குறிப்பிடும்போது இயன்றவரை தூயதமிழைப் பயன்படுத்தி விளக்கம் அளிக்க முற்படுகிறது தினமணி
நாளிதழ்.
தலையங்கக்
குரல் (குறள்)
ஒரு இதழுக்குச்
சிரசு போன்றது தலையங்கம். இதனை அந்தப் பெயரே உறுதிசெய்யும். மனிதனுக்குத் தலை எந்த
அளவிற்கு முக்கியமானதோ அதேஅளவு இதழுக்குத் தலையங்கம் முக்கியமானது. ஒரு செய்தியின்
முக்கியத்துவத்தை அறிந்து அதனையே தலையங்கமாக வெளியிடுவர். இதனை அந்த இதழின் ஆசிரியர்தான்
எழுதவேண்டும். அவற்றின் அமைப்புமுறை போன்றவை இதழியலில் விரிவாக இடம்பெற்றிருக்கும்.
தினமணியில்
நாள்தோறும் (ஞாயிறு தவிர்த்து) நடுப்பக்கத்தில் தலையங்கம் இடம்பெற்றிருக்கும். அதன்
தலையங்கங்கள் சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதற்குரிய காரணம் மற்றும்
தீர்வுகளை இதில் குறிப்பிடுவார். இது முக்கிய இதழ்கள் செய்கின்ற ஒரு பணியாகவே அமைந்திருக்கிறது.
ஆனால் தினமணியில் இதுவொரு சிறப்புப்பகுதியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருநாள்
தலையங்கத்திற்கும் அதற்கேற்ப ஒரு திருக்குறளும் அதற்குரிய விளக்கமும் அமைத்திருப்பார்
ஆசிரியர். தினமணியின் இதுபோன்ற பணி சமூகத்தோடு தமிழையும் வளப்படுத்தும் நிகழ்வாகவே
அமைகிறது.
கட்டுரையின்
பான்மை
தினமணியில்
வெளியாகும் நடுப்பக்கக் கட்டுரைகள் சமூக நிகழ்வுகளை மையப்படுத்தியிருக்கும். இது பல்வேறு
தளங்களில் அமையும். இக்கட்டுரைகளைச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் எழுதுகிறார்கள்.
அதில் யாருடைய கட்டுரை சிறப்பாக இருக்கிறதோ அல்லது அந்நாளுக்குரிய முக்கியக் கட்டுரைகளை
வெளியிடுவதில் தினமணிக்கு நிகர் வேறொன்றுமில்லை. அதன் தலைப்பும் முக்கியமான அடிகளை
மையப்படுத்திக்காட்டியும் வெளியிடுவார்கள். அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் மூத்த
பத்திரிக்கையாளர் எஸ். குருமூர்த்தி எழுதியிருப்பார். இக்கட்டுரைகள் அனைத்தும் நல்ல
தமிழில் அமைவதோடு புரிந்துகொள்ளும் வகையிலும் தமிழின் மேன்மையை வெளிப்படுத்துவதாகவும்
அமைகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
தமிழ்மணி
- தினமணி
ஞாயிறுதோறும்
நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ்மணி என்ற பெயரில் வெளியாகும். இப்பகுதியில் தமிழர்களின்
இலக்கியங்கள் மற்றும் அதன்மீதான விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. அதோடு ஆசிரியரின்
பகுதியாகக் கலாரசிகன் என்ற பகுதி இடம்பெறுகிறது. இப்பகுதியில் அவர் தம்முடைய நினைவுகளை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இறுதியாகத் தாம் படித்த ஒரு நூலினை அறிமுகம் செய்து
அதிலிருந்து அவருக்கும் இல்லையானால் அனைவர்க்கும் விருப்பமான பகுதியைத் தருகிறார்.
இதன்மூலம் தினமணி என்றும் தமிழ்மணியே என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இணைப்பு
இதழ்கள்
தினமணியின்
இணைப்பாகச் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாள்களில் முறையே இளைஞர் மணி,
மகளிர் மணி, வெள்ளி மணி, சிறுவர் மணி, கொண்டாட்டம், கதிர் போன்றன வெளிவரும். இந்த இணைப்புகளில்
பல்வேறு பொதுத் தகவல்களுடன் வெளிவரும். இளைஞர் மணியில் தமிழ்மொழி மூலமாக ஆங்கிலப் பயிற்சி
மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராவது, வேலைவாய்ப்பு என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மகளிர் மணியில் மகளிர் சாதனையாளர்கள் மற்றும் அதுபோன்ற அனைத்துச் செய்திகளும் வெளிவரும்.
வெள்ளி மணி இதழில் திருத்தலங்களின் வரலாற்றைத் தெளிவாகவும் மூன்று மதங்களின் (இந்து,
இஸ்லாம், கிறித்தவம்) உலக ஒருமைப்பாட்டுச் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.
சிறுநூலாக வெளிவரும் சிறுவர் மணியும்,
கதிரும் படித்துவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில்
உதவிசெய்வதாகச் செய்திகள் அமைந்திருக்கும். கதிரில் தமிழைத் தவறில்லாமல் எவ்வாறு எழுதலாம்
என்ற பகுதி இடம்பெற்றுவந்தது என்பது குறிக்கத்தக்கது. கொண்டாட்டம் பகுதி இப்போது வெளிவருவது
இல்லை. அதனையே இளைஞர் மணி, மகளிர் மணி என்ற இரண்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்படுகிறன.
தொடர்க – வெல்க - வளர்க
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு (குறள்.
382)
என்ற குறளின் அடிப்படையில் எந்தவொரு செய்தியையும்
வெளியிடுவதற்குத் தயங்காமல் அதோடு மட்டுமல்லாமல் பிறருக்கு உதவி (பொருள், கல்வி) செய்வதிலும்
தவறாமல் ஈடுபட்டு நாளும் மக்களுக்கு அறிவுச் செல்வத்தினையும் கேள்விச் செல்வத்தினையும்
ஈந்து வளர்த்து ஊக்கம் கொடுப்பது தினமணியின் செயல்பாடாக இருப்பது போற்றுதற்குரியது.
அதன் சுற்று குறைவாக இருப்பினும் அதன் வீரியம் பெரிது என்பதனைக் காட்டத் தவறவில்லை
(மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது). தனது பதிப்பை இந்தியத் தலைநகர் புதுதில்லியிலும்
தொடங்கி அங்கும் தமிழ்ப்பணியைச் செம்மையாக மேற்கொண்டு வருகிறது. இதனை நாம் நன்றியுணர்வோடு
போற்ற வேண்டும். தினமணியின் தமிழ்ப்பணி என்றும் தொடரவும் தொடர் முயற்சியில் வெல்க என்று
வாழ்த்தியும் அது மேலும் ஓங்கி வளரவும் நாளும் அதன் பணியை நாம் ஊக்கிஉயர்த்துவோம்.
ஆறானது குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களை வளப்படுத்திக் கடலினை நோக்கிச் செல்வதுபோல
தினமணி இதழ் பலதுறைகளின் வளம்பெருக்கும் இதழாக விளங்கினும் அதன் இறுதிநோக்கு சமுதாயக்
கருதுகோளாக விளங்குவது இதன் மணிமகுடம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன