சங்ககாலச் சோழர்களில் இரு மரபுகள் உள்ளது. ஒன்று கழுமல மரபு. மற்றொன்று உறையூர் மரபு. சோழர்கள் இருவேறு தலைநகரங்களைக் (கழுமலம், உறையூர்) கொண்டு ஆண்டுள்ளனர். எனவே அம்மரபினர் என அழைக்கப்பட்டனர். சங்க காலத்தில் இலக்கியங்கள் எழுதிய புலவர்களும், இலக்கணிகளும் அவர்களுக்கென்று ஒரு பொதுவான மரபைப் பின்பற்றினர். அம்மரபுகளில் ஒன்றான அகநூல்களில் தலைவன் தலைவி பெயரைச் சுட்டக்கூடாது. புறநூல்களில் பெயர்களைச் சுட்டலாம் என்பதே அம்மரபு. இதனைத் தொல்காப்பியர்,
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (தொல். பொருள். அகம்., 1001)
என்பார்.
புறம் பாடிய புலவர் மரபு
புறம் பாடிய புலவர்கள் தங்களுக்கென்று ஒரு மரபைப்
பின்பற்றினர். என்னவெனில் பாடல்களில் மன்னரது பெயரைக் குறிப்பிடும்போது, மன்னனின் முழுப்பெயராகவோ, அல்லது
பெயரின் பகுதியையோ அல்லது சிறப்புப்பெயர், பட்டப்பெயர்களையோ குறிப்பிடுவதே அவர்கள் பின்பற்றிய மரபு. வாய்ப்பு கிடைத்த
இடத்தில் மன்னரின் முழுப்பெயரையும் பயன்படுத்தி உள்ளனர். இரும்பிடர்த்தலையார்
எனும் புலவர்,
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாட்பெரும்பெயர் வழுதி (புறம். 3)
என்று மன்னனின் முழுப்பெயரையும் பயன்படுத்தியுள்ளமை
நோக்கத்தக்கது.
புராணப் பழங்கதைகளும் வரலாறும்
வரலாறு எழுதும்போது அதற்குத் தேவையான கல்வெட்டுச் சான்று, இலக்கியச் சான்று போன்ற பல சான்றுகளைக் காட்டி வரலாற்றை விளக்கலாம். ஆனால்
புராணங்களையும் பழமரபுக் கதைகளையும் இவற்றோடு இணைத்து வரலாற்றை மழுங்கச் செய்யும்
நிலை உள்ளது. அதனை நீக்க வேண்டும்.
அவ்வாறு வரலாற்றில் உள்ள புராணக் கதைகள், பழமரபுக் கதைகள் போன்றவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் வரலாறு தெளிவாக
விளங்கும். சங்ககாலச் சோழ வரலாற்றில் இது போன்றன பலவற்றையும் சேர்த்து அதனை
மழுங்கச் செய்துள்ளனர். காட்டாக, கோப்பெருஞ்சோழனைப்
பாடும் மாறோக்கத்து நப்பசலையார் புல்லின் புண்கண் தீர்த்தோன் உன் முன்னோன் என்று
கூறுவதாக அமைந்த பாடலுக்கு கோப்பெருஞ்சோழனின் முன்னோன் ‘சிபி’ எனும் மன்னன் இருந்துள்ளான் என்று வரலாற்றை மாற்றி விடுகின்றனர்
பழமரபுவாதிகள்.
ஆனால் புலவர் இவ்வாறு பாடுவது மன்னனின் உயர்வு
நவிற்சிக்காகவே தவிர வேறொன்றுமில்லை. மேலும் உதாரணமாகக் கலிங்கத்துப்பரணியைக்
கூறலாம். புறநானூறு, பரணி போன்றவற்றில் உள்ள இதுபோன்ற செய்திகள் மன்னனை
உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கமே தவிர வேறு காரணம் இருக்கவியலாது
என்பதே ஆய்வாளரின் கருத்து.
இக்கருத்தை அரண் சேர்க்கும் வகையில் சோழர் சரித்திரம்
எனும் நூலில், "உலகில் எல்லா வகுப்பினரும் சிறிது நாகரிகமுற்ற காலையில்
தம்மை ஏனையவரினும் மேம்பட்டவர் என்று காட்டிக்கொள்வதற்காகச் சூரியன், சந்திரன், அக்கினி என்பவரில் ஒருவனிடத்திருந்தோ அல்லது வேறு ஏதாவது
ஒரு தெய்வத்திடமிருந்தோ தமது மரபு தோன்றியதாகக் கற்பித்துக்கொள்வது வழக்கமாக
உள்ளது. இத்தகைய எண்ணம் தமிழ் நாட்டாரையும் பற்றாமல் விடவில்லை" என்று
சுட்டப்பெறுகிறது.1
மேற்கூறப்பட்டவாறு புனைவுகளை வைத்துக்
கலிங்கத்துப்பரணியில் சோழ வரலாறு குறிப்பிடப்படுகிறது. பரணியில் செயங்கொண்டார்
காட்டும் அச்சோழ மரபினைக் காணலாம்.
பரணி காட்டும் சோழ மரபு
கலிங்கத்துப் பரணியில் `இராசபாரம்பரியம்’ எனும் தலைப்பின் கீழ் நாரதர் இச்சோழ வரலாற்றைக்
கூறுவதாகச் செயங்கொண்டார் அமைத்து உள்ளார். அவ்வரலாறு வருமாறு,
எல்லா வரலாற்றுக்கும் முதன்மையானவர் திருமால், அவர் உந்தியில் பிறந்தவர் நான்முகன், என்று தொடங்கி மரீசி, காசிபன், சூரியன், மனு, இக்குவாகு, விகுட்சி, ககுத்தன், மாந்தாதா, முசுகுந்தன், பிருதுலாட்சன், சிபி, சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி, கிள்ளிவளவன், கவேரன், மிருத்யுசித், சித்திரன், வியாக்கிர கேது, சமுத்திரசித், பஞ்சபன், தூங்கையில்
எறிந்த சோழ மன்னன், உபரிசரன், கிள்ளிவளவன், செங்கணான்2 என்று
கூறப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு உரையெழுதிய புலியூர்க்கேசிகன், இதனைக் கூறி முடித்த பிறகு "இந்த வரலாறுகள் புராணக் கதைகள் போலப்
புனையப் பெற்றுள்ளன."3 என்று
கூறுவது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றாய்வாளர்கள் காட்டும் சோழ மரபு
வரலாற்றாய்வாளர்கள் எவ்வாறு இலக்கியம் காட்டும்
சோழமரபிலிருந்து மாறுட்டுச் செல்கின்றனர் என்பதனை விளக்கும் நோக்கமாக இங்குக்
கூறப்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வரலாற்றைப் பற்றி நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடும்போது, "நம்நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு
இடம் இருந்துகொண்டே தான் இருக்கும்"4 என்பார். கலிங்கத்துப்பரணி மட்டும் அல்லாது பல்வேறு வரலாற்றறிஞர்களும்
தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற மற்றும் அறிந்த சான்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு
வரலாற்றைப் புனைகின்றனர். அவற்றிலும் ஒவ்வொரு வரலாற்றாய்வாளரும் தனித்தனி
சோழமரபினரையே கூறுகின்றனர். இதில் எவரும் ஒன்றுபடவில்லை. இவர்கள் அனைவரும்
பழமரபுக்கதைகளையும் இதில் சேர்த்துள்ளனர் என்பது தெளிவாக விளங்கும்.
நீலகண்ட சாஸ்திரியார், ‘சோழ வமிசச் சரித்திரம்’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சோழ வமிசச் சரித்திரம், அண்மையில்
எழுதப்பட்டதுடன் செவிவழிச் செய்திகளையும், அதிசய நிகழ்ச்சிகளையும் கொண்ட ஒரு தலபுராண வடிவைக் கொண்டதாகும். இந்நூலைக்
கொண்டு பண்டைய சோழ மன்னரது வரலாற்றைப் பற்றி யாதும் அறிய இயலவில்லை என்பார்.5 1800 ஆண்டுகட்கு
முற்பட்ட தமிழகம் என்ற நூலைப் பற்றித் தி.சு. நடராசன் - திறனாய்வுக்கலை என்ற
நூலில் விமரிசனம் எழுதியுள்ளார். இனி வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் சோழ
மரபுகள் சிலவற்றைக் காணலாம்.
ந. மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடும் சோழ மரபு
ந. மு. வே - கலிங்கத்துப்பரணியில் உள்ள சோழ வழிமுறையைப்
பின்பற்றி எழுதுகின்றார். இவர், கூற்றுப்படி, சங்க காலத்திற்கு முன் திருமால் முதற்கொண்டு இம்மரபு தொடர்கின்றது. இவர்கள்
சூரிய வமிசத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இவர் கருத்து.
இம்மரபில் சிபி, முசுகுந்தன், சங்ககாலச் சோழனாகிய துடிதோட்செம்பியன் போன்றோரைக்
குறிப்பிடும் ஆசிரியர் பின்வருமாறும் கூறுகின்றார். "இம்மரபு உண்மை காணும்
நோக்கத்துடன் ஆராய்ந்து வெளிப்படுப்பன. பழங்கொள்கையுடன் ஒரோவழி மாறுபடின் இவையும்
வெறுக்கத்தக்கன அல்ல"6 என்று
கூறிச்செல்கிறார்.
இரத்தினசாமி குறிப்பிடும் மரபு
இவர் ‘சங்க கால
அரசர்கள்’ என்ற நூலில் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன்
கரிகாலன், இவனின், மக்களே
பெருநற்கிள்ளி, நலங்கிள்ளி போன்றோர் என்று கூறிச் செல்கின்றார். இவரின்
கூற்றுப்படி இருமரபு இலக்கியத்தில் காணப்படவில்லை.
இராசமாணிக்கனார் குறிப்பிடும் மரபு
இராசமாணிக்கனார் தமது ‘சோழ வரலாறு’ எனும் நூலில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்
மனுநீதிச்சோழனையும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டச் சோழர்களில்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும் குறிப்பார். சோழ மன்னர்கள் அனைவரையும்
இதுபோன்று கால வரிசை கொடுத்து அமைத்துள்ளார். இவ்வாறாகப் பலரும் பலவிதமாகச் சோழ
மரபினை அமைத்துச் செல்கின்றார். இனி இலக்கியங்கள் வழி அறியலாகும் சோழ மரபினைக்
காணலாம்.
இலக்கியங்களில் சோழர் குடி வரிசை
கழுமல மரபு
கழுமல மரபில் சோழ வேந்தர்களாக உருவப்பஃறேர் இளஞ்சேட்
சென்னியும், கரிகால் பெருவளத்தானும், அடங்குவர். காரிகால் பெருவளத்தானுடன் கழுமல ஆட்சி நிறைவு பெறுகிறது.
ஏனெனில் இவனுக்கு ஆதிமந்தி என்ற பெண் பிறந்தாள். அவள் ஆட்டனத்தி என்ற சேர மன்னனை
மணந்து கொண்டாள். அவன் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். இச்செய்தி
அகநானூறில் (அகம். 222,
236, 376, 396) இடம்பெற்றுள்ளது.
உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி
உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் தலைநகரம் கழுமலம். அது
இன்றைய சீர்காழி ஆகும். இவனின் மனைவி அழுந்தூரில் பிறந்தவள் இவனைப் பரணர்
பாடியுள்ளார் (புறம். 4). இளஞ்சேட்சென்னி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை
ஒள்வாள் பெரும்பெயர் வழுதி அனைவரும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள். இதனை அவர்களைப்
பாடிய புலவர்கள் மூலம் அறிய முடிகிறது. மாமூலனார், பரணர், கழாத்தலையார் போன்றோர் இவர்களைப் பாடியுள்ளனர்.
உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனே கரிகாற்
பெருவளத்தான் என்பதனைப் புறநானூறு 4 - ஆவது பாடலின்
உரை சுட்டுகின்றது.7 அதோடு
மட்டும் இல்லாமல்,
"உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்" (பொருந. 130)
எனப் பொருநராற்றுப்படையும் இதனை உறுதிசெய்கிறது.
கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும் போதே அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி
இறந்துவிட்டான் என்பார் சண்முக சுந்தரம்.8
நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும் உருவப்பஃறேர்
இளஞ்சேட்சென்னியும் ஒருவரே எனும் சிலரின் கருத்து தவறாகும். நெய்தலங்கானலைத்
தலைநகராகக் கொண்ட இளஞ்சேட்சென்னி கோப்பெருஞ்சோழனின் மகன் என்பதனைப் புல்லாற்றூர்
எயிற்றியனாரின் புறநானூற்றுப் பாடல் (புறம். 213) வழி அறியலாம்.
கரிகாற் பெருவளத்தான்
இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன். இதனைப்
பொருநராற்றுப்படை கூறுகிறது. இவன் தாய் வயிற்றில் இருந்தபோதே இவனின் தந்தை
இறந்தான் என்று கூறப்பட்ட செய்தியை வலுசேர்க்கும் வகையில்,
"தாய் வயிற்று இருநது தாயம் எய்தி" (பொருந. 132)
என்ற அடிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவனது கன்னிப்போர் (முதற்போர்) வெண்ணிப்பரந்தலைப் போரே
ஆகும். இப்போரில் இவனை எதிர்த்து இரண்டு பேரரசர்களும் பதினொரு வேளிரும்
சேர்ந்துகொண்டு படையெடுத்து வந்தனர். வெண்ணியில் போர் நடைபெற்றதற்கான சான்று
பொருநராற்றுப்படையில் உள்ளது. இப்போரில் சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் மார்பில் பட்ட
கரிகாலனது வேல், முதுகு புறத்திலும் புண் உண்டாக்கியதால் அதற்கு நாணி
அவன் உயிர்த் துறந்தான். இதனைக் கழாத் தலையார் புறநானூற்றில் (புறம். 65) பாடியுள்ளார்.
இவன் காலத்தில் வாழ்ந்தவன் பெருஞ்சேரலாதன் என்பது
தெளிவு. இவர்களைப் பாடியோர், மாமுலனார், கல்லாடனார், வெண்ணிக் குயத்தியார் போன்றோர் ஆவர். அதோடு கரிகாலனின்
வெண்ணிப் போர் வெற்றியையும் புகழ்ந்து பாடியவர் வெண்ணிக் குயத்தியார் (புறம். 66) ஆவார். இவன் வாகைப் பறந்தலை எனும் இடத்திலும் போரிட்டு வென்றவன் என்பது
குறிப்பிடத்தக்கது. கரிகாலன் இளமையிலேயே நரைமுடித்து முறைசெய்தான் என்பதனைப்
பழமொழி நானூறு விளக்கும். இதனைப் பொருநராற்றுப்படையும்,
"இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்
அவைபுகு பொழுதில் தம்பகை முரண்சொலவும்" (பொருந. 187 - 188)
இவ்வாறு உறுதி செய்கிறது. உரையாசிரியர்
நச்சினார்க்கினியரும் கூறிச்செல்கிறார். மாமூலனார், பரணர் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர். பரணர் இவனைப்பற்றிய நிறைய செய்திகளைத்
தருகிறார். இவனுக்கு ஆண்வாரிசு இல்லை. இவனுடைய மகளே ஆதிமந்தி. ஆதிமந்தியின் கணவனான, சேர இளவரசன் ஆட்டனத்தி. இவனையே காவிரி கொண்டு சென்றது. எனவே கரிகாற்
சோழனோடு கழுமலச் சோழமரபு நிறைவு பெறுகின்றது. இவனைப்பற்றிக் குறிப்பிடும்
சிவத்தம்பி ‘ஆரம்ப காலச் சோழர்களில் கரிகாலன்’ ஒருவனைத் தவிர
மிகப்பெரிய சோழ அரசன் என்று எடுத்துக் கூறப்படத்தக்க சோழ அரசர்கள் எவரும் இல்லை
என்றே கூறவேண்டும். அதன்பின் சோழர்களின் பெருவளர்ச்சி 9 - ஆம் நூற்றாண்டில் விஜயாலனுக்குப் பின்னரே வருகிறது’9 என்பார்.
உறையூர்ச் சோழர்கள்
உறையூரில் இருந்து இவர்கள் ஆட்சிபுரிந்து வந்ததால்
இவர்கள் இம்மரபினர் எனப்பட்டனர். இம்மரபில் வந்த சோழர்களைப் பின்வருமாறு காணலாம்.
பெருவிறற் கிள்ளி
உறையூர்ச் சோழர்களில் மிகப்பழையவன் இவனே ஆவான். கழுமலச்
சோழரில் முதலில் வந்த உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் காலத்தவன். இவன் காலத்தில்
வாழ்ந்த சேரன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். பாண்டியன், ஒல்லையூர்த் தந்த பூதப்பாண்டியன் ஆவர். இவர்களைப் பாடியோர் மாமூலனார், பரணர், கழாத்தலையார் போன்றோர் ஆவர்.
பெருவிறற் கிள்ளியும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும்
போரிட்டனர். முடிவில் இருவரின் படைகளும் அழிந்துபட்டன. இவர்கள் போரிட்ட இடம்
திருப்போர்ப்புறம் ஆகும். இப்போரினைப் புறப்பொருள் வெண்பாமலை ‘தொகை நிலை’ என்று வகையில் அடக்கும். அதற்கு முன்னர் எழுந்த
தொல்காப்பியத்திலும், தொகைநிலைக்குக் காட்டாக இதனையே குறிப்பார்கள்
உரையாசிரியர்கள்.
இந்நிகழ்வினைப் பாடியோர் கழாத்தலையாரும் (புறம். 62) பரணரும் ஆவர்.
"எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையழிந்தனவே" (புறம். 63; 1 - 2)
எனவாறு பரணர் பாடியுள்ளார்.
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
பெருவிறற்கிள்ளியை அடுத்து அரியணை ஏறியவன் தூங்கெயில்
எறிந்த தொடிதோட் செம்பியன் ஆவான். இவனைச் சங்க காலத்திற்கு முற்பட்டவன். அதாவது
கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையவன் என்பார்
இராசமாணிக்கனார்.10 இவன் மீது
இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் படையெடுத்து அகப்பா கோட்டையையும்
கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அதனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவனிடம்
இருந்து செம்பியன் கைப்பற்றிக் கொண்டான். இவன் அதனைக் கைப்பற்றி அகப்பா
கோட்டையையும், அவ்வூரையும் அழித்தான்.
இதனை,
".........குட்டுவன்
அகப்பா
அழிய நூறி, செம்பியன்" (நற்றிணை. 14; 3 - 5)
என்ற நற்றிணை பாடல் வழி அறிய முடிகிறது.
இவனே மேற்கு மலைத்தொடரில் இருந்த தூங்கெயிலையும்
அழித்தான். அதனால் ‘தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்’ எனப்பட்டான். இதற்குச்
சில புராணக் கதைகளைக் கூறுவார் வேங்கடசாமி நாட்டார்.11 இவன் காலத்திய பாண்டிய மன்னன் ஒல்லையூர்த் தந்த பூதப்பாண்டியன் மகனாகிய
நெடுஞ்செழியன் எனும் சிறுவன் ஆவான். பாண்டியன் சிறுவனாகையால் சேரமன்னன்
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், சோழமன்னன்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனும், தித்தன் என்ற
குறுநில மன்னனும் மேலும் நான்கு குறுநில மன்னர்களும் சேர்ந்து நெடுஞ்செழியன் மீது
போர் தொடுத்தனர்.
அப்போரில் நெடுஞ்செழியன் அனைவரையும் வென்று அவர்களைத்
தலையாலங்கானம் என்ற ஊரில் கொன்றான். அன்று முதல் அவன் ‘தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்’ என அழைக்கப்பட்டான்.
பாண்டிய மன்னன் போரில் வென்ற அவ்வெழுவரின் பெயர்களை நச்சினார்க்கினியர்
மதுரைக்காஞ்சியின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகின்றார். அப்பெயர்கள் வருமாறு,
"சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்"
போன்றோர் ஆவர். இப்போர் பற்றி மதுரைக்காஞ்சி,
"இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்
பொருதவரைச் செருவென்றும்" (மதுரைக். 128 - 129)
என்று குறிப்பிடுகிறது. மேலும் இச்செய்தி
நெடுநல்வாடையிலும் (நெடுநல் - 188) புறநானூற்றிலும்
(புறம். 371 - 372) குறிப்பிடப்பட்டுள்ளது. சோழன் தூங்கெயில் எறிந்த
தொடிதோட் செம்பியனை மாறோக்கத்து நப்பசலையார் அதிகம் பாடியுள்ளார்.
போரவைக்கோ பெருநற்கிள்ளி
செம்பியன் இறந்த பிறகு ஆட்சியில் ஏறியவன் சோழநாட்டு
இளவரசனாகிய போரவைக்கோ பெருநற்கிள்ளி. ஆனால் செம்பியனைக் கொன்றதால் ஆட்சி
அதிகாரத்தைக் தனதாக்கிக்கொண்டான் பாண்டியன் தலையாலங்கானத்துச் செறுவென்ற
நெடுஞ்செழியன். சோழ நாடு பாண்டியன்வசம் சென்றமையால், அந்நாட்டு இளவரசனாக இருந்த பெருநற்கிள்ளி நாட்டை விட்டு வடபகுதியில் இருந்த
பெருங்கோழி எனும் ஊரில் வாழ்ந்து வந்தான். இச்செய்தியை நக்கண்ணையார் பாடல் மூலம்
அறிய முடிகிறது. அப்பாடலில்
"என்னை புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே" (புறம். 84; 1 - 2)
என்று கூறுகின்றாள்.
நக்கண்ணையார், பெருங்கோழியில்
வாழ்ந்த நாய்கன் மகள் ஆவார். அவன் பெருங்கோழியில் இருந்தபோது, அவனுக்கென்று நாடு இல்லை என, நக்கண்ணையார்
பாடல் மூலம் அறிய முடிகிறது.
"என்னைக் கூரிஃ தன்மை யானும்
என்னைக்கு
நாடிஃ தன்மை யானும்" (புறம். 85; 1- 2)
என்ற அடிகள் மூலம் இதனை உறுதி செய்யலாம்.
சோழனிடம் இருந்து கைப்பற்றிய நாட்டைப் பாண்டியன்
தலையாலங்கானத்தான், தித்தன் என்பவனிடம் கொடுத்து ஆளும் படி உத்தரவு
பிறப்பித்தான். தித்தன் உறையூரை ஆண்டான் (புறம். 352 (9 - 10), 395; (18 - 19). தித்தன் காலத்தில்தான் காரி ஓரியைக் கொன்று (நற். 320) கொல்லி மலையைப் பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொடுத்தான். இதனை அகநானூற்றுப்
பாடல் (அகம். 209) வழி அறியலாம். கொல்லி மலையைப் பெற்ற சேரன் ஆன்பொருநை
ஆற்றங்கரையில் கருவூர் எனும் ஊரை அமைத்துத் தன் தலைநகராக்கிக் கொண்டான். ஆன்பொருநை
நதியே இன்றைய அமராவதி ஆறு என்பார் பே. க. வேலாயுதம்.12 கருவூரைத் தலைநகராக்கிக் கொண்டதனால் சேரனை, ‘கருவூர் ஏறிய ஒள்வாள் பெருஞ்சேரல் இரும்பொறை’ என அழைக்கப்பெற்றான்.
தன் உறவினனாகிய ஓரியைக் கொன்றதனால் அதியமான், காரி மீது படையெடுத்துச் சென்று காரியினுடைய திருக்கோவிலூரை அழித்தான்.
காரி தப்பியோடிச் சென்று சேரனிடம் அடைக்கலம் புகுந்தான். இதனிடையே காலங்கருதி, பெருங்கோழியில் வாழ்ந்திருந்த கோப்பெருற்கிள்ளி உறையூரை ஆண்டு கொண்டிருந்த
தித்தனை வீழ்த்தி முடிபுனைந்து கொண்டான். அன்றுமுதல் தன் பெயரை முடித்தலைக்கோ
பெருநற்கிள்ளி என மாற்றிக்கொண்டான்.
இந்நிலையில் கோப்பெருநற்கிள்ளி பெருங்கோழியில்
இருந்தபோது அவனைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கணையார் விரும்பினாள். அவன்
பிரிந்துசென்று தனக்குக் காதல் துன்பம் தருகின்றான் (புறம். 84) என்று பாடியுள்ளார். இப்பாடல் காதற்பாடலாக இருப்பினும் அகத்தில் வைக்காமல்
புறத்தில் வைத்தற்குக் காரணம், ஒரு பெண்
வெளிப்படையாகத் தன் காதல் உணர்வை வெளிப்படுத்தினாள் என்பதற்காகவே என்பது
குறிப்பிடத்தக்கது.
கோப்பெருநற்கிள்ளி சோழ நாட்டை ஆண்டபோது பாண்டிய நாட்டை
ஆட்சி செய்தவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஆவான்.
இவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனின் மகன். இடைப்பட்ட
காலத்தில் தலையாலங்கானத்தான் என்னவானான் என்பற்கான சான்றுகள் இலக்கியங்களில்
இல்லை. சோழன், பாண்டியன், சேரன்
பெருஞ்சேரல் இரும்பொறை இவர்களுக்கு நிகராக ஆட்சி புரிந்த வள்ளல் அதியமான் என்பதனை, அசோகனது இரண்டாம் பாறைக் கல்வெட்டு ‘சேர, சோழ, பாண்டிய
சதியபுதோ’ எனக் குறிப்பிடுகின்றது என்பார் பே.க. வேலாயுதம்.13 இதில் சதியபுதோ எனக் குறிப்பிடப்பெறுவது அதியமான் என்பவனையே என்று
சான்றுகள் கூறுகின்றன.
காரி நாடு இழந்ததனைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை
அதியமானின் தகடூர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி அதியமானையும் கொன்றான்
(புறம். 231). அதனால் "தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை"
என அழைக்கப்பட்டான். அதன்பின் சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி சேரனின் கருவூர்
மீது போர் தொடுத்தான். சேரனுக்கும் சோழனுக்கும் கருவூரின் புறத்தே போர்
நடைபெற்றது. அப்போது சோழன் கோப்பெருநற் கிள்ளி ஏறியிருந்த யானை மதம் கொண்டு
ஊருக்குள் புகுந்தது. இதனை அந்துவஞ்சேரல் அருகிருக்க உறையூர் ஏணிச்சேரி முட
மோசியார் பாடினார்.
"களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
................ ............... ................
.............
நோயில னாகிப் பெயர்கதி லம்ம" (புறம். 13; 5 - 9)
என்று முடமோசியார் யானை மதம் கொண்டு நகருக்குள்
புகுந்ததனைப் பற்றிப் பாடுகின்றார்.
அப்போருக்கு அடுத்து வெட்டப்பட்ட அசோகனது 13 - ஆம் பாறைக் கல்வெட்டில் தமிழக அரசர்களில் சோழன், பாண்டியன் இருவரை மட்டுமே குறித்தான்’ என்பார் பே. க. வேலாயுதம்.14 சேரநாடும், தகடூரும் இல்லை. எனவே அக்கல்வெட்டில் குறிக்கப்பெறவில்லை
என்பது தெளிவு.
சேரனுடன் செய்த போருக்குப் பின்னர் சோழன்
கோப்பெருநற்கிள்ளி இராசசூய வேள்வி செய்தான். அவ்வேள்விக்குச் சேர மரபில் வந்த
மாரிவண்கோவும், பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும்
கலந்து கொண்டனர். மூவேந்தர்களையும் ஒருங்கு கண்ட ஒளவையார்,
"முத்தீப் புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
..............
............. ............... .....................
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நானே" (புறம். 367; 13 - 18)
என்று வாழ்த்திப் பாடுகிறார். அன்றுமுதல் இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டான்.
கோப்பெருஞ்சோழன்
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குப் பின் அரியணை
ஏறியவன் கோப்பெருஞ்சோழன் இவன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தவன் அறிவுடை
நம்பி. சோழ நாட்டை இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி புரிந்துவந்தான். எவ்வாறெனின், கோப்பெருஞ்சோழன், தன் தந்தை
பகைவர்களை வென்று கைக்கொண்ட பகுதிகளை இழந்தான். அதுவும் அறிவுடை நம்பியிடம்
பாண்டிய நாட்டுப் பகுதிகளை இழந்தான். சேரனிடம் போரிட்டு கருவூரை இழந்தான்.
இவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் முறையே
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நெய்தலங்கானல்
இளஞ்சேட்சென்னி ஆவர். இவர்கள் தங்கள் தந்தை கோப்பெருஞ்சோழனுக்கு எதிராகப்
போரிட்டனர். கோப்பெருஞ்சோழனும் தன் மகன்கள் மீது போரிடத் தயாரானான். அப்போது
புல்லூற்றூர் எயிற்றியனார் எனும் புலவர்,
"நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
..............
............. ............... ..............
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே" (புறம். 215; 14 - 18)
என்று கூறி தடுத்தார்.
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழனின் மகன்களில் ஒருவன் இவன். சோழனின்
மகன்கள் இருவருமே சோழ நாட்டை ஆண்டனர்.
எவ்வாறெனின் நாட்டை இரண்டாகப் பிரித்துக்கொண்டு நெய்தலங்கானல் என்ற ஊரைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். மற்றொருவன் (கிள்ளிவளவன்) உறையூரையே
தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான் (புறம். 39, 34) என்பது குறிப்பிடத்தக்கது.
கிள்ளிவளவனைப் பற்றி அதிகம் பாடியவர் மாறோக்கத்து
நப்பசலையார். இப்பெண்பாற் புலவர் இவனைப் பற்றிப்பாடும் இடங்களிலெல்லாம், உன்னுடைய முன்னோன் என்று “புல்லுறு
புண்கண் தீர்த்தோன்" (புறம். 37) என்றும்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனது (புறம். 39) வாழ்க்கையையும் குறிப்பார்.
கலிங்க அரசன் காரவேலன் தமிழகத்தின் மீது படையெடுத்து
வந்தான். அப்போது அவனுக்குப் பயந்து கிள்ளிவளவன் மலையனுக்கு உரிய முள்ளூர் மலையின்
மீது ஒளிந்துகொண்டான். இதனைக் கண்ட மலையனான் திருமுடிக் காரியின் மகன்
திருக்கண்ணன், கார வேலனிடம் போரிட்டுச் சோழநாட்டை மீட்டுக்கொடுத்தான்.
கிள்ளி வளவனைச் சோழநாட்டு அரியணையில் ஏற்றினான் திருக்கண்ணன். இதனை நப்பசலையார்,
"அருவழியிருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
புதமையி னிறுத்த புகழ்மேம் படுந" (புறம். 174; 14 - 16)
என வாழ்த்திப் பாடுகிறார்.
தன்னை அரியணை ஏற்றிய திருக்கண்ணனைச் சோழன், படைத்தளபதி ஆக்கினான். அதுமுதல் திருக்கண்ணன், ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்’ என அழைக்கப்பட்டான். ‘ஏனாதி’ என்ற பட்டம் ‘பண்டைத்
தமிழ் மன்னர்கள் தம் படைத்தலைவர்களுக்கு இட்டு வழங்கினர்’ என்பார் மு.வை. அரவிந்தன்.15
கோப்பெருஞ்சோழனின் ஆட்சிக்குப் பிறகு உறையூரை ஆட்சி செய்தவன் நெடுங்கிள்ளி ஆவான்.
இளஞ்சேட்சென்னி
கோப்பெருஞ்சோழனின் மகன் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் கிள்ளிவளவனின் தம்பி.
இவனை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என அழைத்தனர். இவன் வலிமை உடையவனாகத்
திகழ்ந்தான். இவனே சேர மன்னர்களுடைய பாமூளூரை வென்றான் என்பார் ஒளவை
துரைசாமிப்பிள்ளை (புறம். 10; 203). இவன் ‘வம்ப வடுகர்‘ என்றும் ‘வட வடுகர்’
என்றும் அழைக்கப்பட்ட கலிங்கரிடம் இருந்து மீட்கப்படாத சோழநாட்டுப் பகுதியாக
இருந்த பாழி என்னும் வலிமை வாய்ந்த கோட்டையைக் கலிங்கப் படையோடு அழித்தான். அதனால்
நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை, சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என அழைத்தனர். இதனை ஒளவை துரைசாமிப்பிள்ளை பதிவு
செய்கிறார்.
இவனுடைய மக்களே நலங்கிள்ளியும் மாவளத்தானும் ஆவர்.
இதனைப் புறநானூறு (புறம். 43) சுட்டுகின்றது.
நெடுங்கிள்ளி
சோழன் நெடுங்கிள்ளி கோப்பெருஞ்சோழனின் மகன். இவன்
கோப்பெருஞ்சோழனுக்குப்பின் உறையூரை ஆட்சி புரிந்தவன். நெடுங்கிள்ளிக்கும், நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் மகனான நலங்கிள்ளிக்கும் போர் மூண்டது.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் உறையூரை முற்றுகையிட்டான். ஆனாலும்
நெடுங்கிள்ளி வெளியே வரவில்லை. அப்போது, கோவூர்
கிழார் நெடுங்கிள்ளியிடம் சென்று,
"திறவா தடைத்த திண்ணிலைக்கதவின்
நீண்மணி லொருசிறை யடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே" (புறம்: 44; 14 - 16)
என்று கூறி அவனைப் ‘போர் செய்ய எழுக’ என்று அழைத்தார். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவரும் உறையூரிடத்தே போர் செய்ய முனைந்தபோது அப்போரைத்
தடுத்து அவர்களைச் சந்து செய்வித்தவரும் கோவூர் கிழாரே ஆவார் (புறம். 45).
நெடுங்கிள்ளி காரியாறு எனும் இடத்தில் இறந்தான். அதனால்
இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று பெயர் பெற்றான் என்பார் ஒளவை
துரைசாமிப்பிள்ளை. இவனது இறப்பிற்குப் பின் நலங்கிள்ளி, சோழநாட்டுத் தலைநகரை நெய்தலங்கானலில் இருந்து உறையூருக்கே மாற்றினான்.
நலங்கிள்ளி
சோழன் நலங்கிள்ளி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியின் மகன். இவன் இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளி
என்றும் அழைக்கப்பட்டான். இதனைப் புறநானூறு,
"கேட்ப லெந்தை சேட் சென்னி நலங்கிள்ளி" (புறம். 27: 10)
என்று உறுதி செய்கிறது. இவனுக்கு மாவளத்தான் என்ற தம்பி
இருப்பதனைப் புறநானூறு 43 - ஆம் பாடலின்
அடிக்குறிப்பில் ‘சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும்’ என்ற அடியின்
மூலம் அறியலாம். நலங்கிள்ளி ஆற்றல் மிக்க அரசன். இவனுக்குத் துணையாகவே இவன் தம்பி
மாவளத்தான் செயல்பட்டான். இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளி தம் வலிமையால் சேர, பாண்டியர்களோடு போரிட்டு அவர்களை வென்று அவர்களின் கொடிகளைக் கைப்பற்றினான்
என்பதும் அதோடு பாண்டிய நாட்டில் உள்ள ஏழு அரண்களை வென்று கைப்பற்றி அவற்றில் தன்
புலிக்கொடியை நாட்டினான் என்பதனைப் புறநானூறு (புறம். 33) விளக்குகின்றது.
நலங்கிள்ளி சேட்சென்னி
இவன் இளஞ்சேட்சென்னி நலங்கிள்ளியின் மகன். இவனைப் பற்றிய பாடல் ஒரு பாடல்தான் உள்ளது. இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலின் மதுரைக் குமரனார். இவனது பெயர் தன் தந்தையின் பெயரை முன்வைத்து தாத்தாவின் பெயரைப் பின் வைத்துள்ளான். இவன் இளவந்திகை எனும் இடத்தில் இறந்துபட்டான் என்பார் ந.மு.வே.16
மாவளத்தான்
நலங்கிள்ளி சேட்சென்னிக்கு அடுத்து அரியணை ஏறியவன்.
நலங்கிள்ளி சேட்சென்னி குறைந்த வயதிலே இறந்து பட்டதன் காரணமாக, இவனின் சிற்றப்பனாகிய மாவளத்தான் அரியணை ஏறினான். இதனையே பட்டினப்பாலை,
"உருகெழு தாயம் ஊழி னெய்தி" (பட்டினப். 227)
என்கின்றது.
இவன் தன் பெயரைத் திருமாவளவன் என மாற்றிக் கொண்டு
சிறப்பாக ஆட்சி செய்தான். சேரர், பாண்டியர்
மற்றும் பல குறுநில மன்னர்களைத் தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தான் (புறம். 58). இவன் ஆட்சிக் காலத்தில் கடல் வாணிபம் பெருகிற்று. அதனால் சோழ நாட்டின்
தலைநகரை உறையூரில் இருந்து காவிரிபூம்பட்டினத்திற்கு (பூம்புகார்) மாற்றினான். சோழ
நாடு பெரும் வாணிப நகரமாக மாறியது. இச்செய்தியைப் பட்டினப்பாலை உறுதி செய்கிறது.
கரிகாலன் வேறு; மாவளத்தான் வேறு
வரலாற்றாய்வாளர்கள் சிலர் திருமாவளவனைப்
பொருநராற்றுப்படைத் தலைவனாகிய கரிகாலன் இவனே என்று குறிப்பர். ஆனால் இருவரும் வேறு
வேறு என்பதனைக் கீழ்காணும் செய்திகள் மூலம் நிறுவலாம்.
கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன் பிறப்பதற்கு முன்பே இவனின் தந்தை இறந்துபட்டான். இவனுக்கு உடன்
பிறப்புகள் யாரும் இல்லை. தாய் வயிற்றில் இருந்து பிறந்த உடனே அரசாட்சி அமைத்தான்
என்பதனை, ‘தாய் வயிற்றிருந்து தாய மெய்தி’ என்ற பொருநராற்றுப்படை
அடி உணர்த்தும். இதன் மூலம் இவன் சிறு வயதிலேயே ஆட்சிப்பொறுப்பேற்றவன் என்பது
தெரியும். அதோடு இவன் கழுமல மரபைச் சார்ந்தவன்.
ஆனால் திருமாவளவன் தந்தை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி.
இவனுக்கு உடன் பிறப்பு உண்டு. அதனைப் புறநானூற்று அடிக்குறிப்பின் (புறம். 43) வழி அறியலாம். இவன் நேரடியாக ஆட்சிப்பொறுப்பேற்கவில்லை என்பதும்
இலக்கியங்கள் மூலம் விளங்குகின்றன. இவன் மீது பாடப்பட்டதே பட்டினப்பாலை ஆகும்.
இவன் உறையூர்ச் சோழ மரபு. இவனே புகாருக்குத் தலைநகரை மாற்றியவன் ஆவான்.
திருமாவளவன் காலத்துப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (புறம். 58). அப்போது தொண்டை நாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். இவனே
பெரும்பாணாற்றுப்படையின் தலைவன்.
சோழன் செங்கணான்
செங்கணான் பற்றிய பாடல்கள் புறநானூற்றுப் பகுதியில்
இல்லை. இருப்பினும் சேரமான் கணைக்கால் இரும்பொறையுடன் செய்த போர் பற்றிய குறிப்பு
மட்டுமே உள்ளது (புறம். 74). அப்பாடலில்
சேரனை வென்று சிறைப்படுத்திய செய்தி இடம்பெற்றுள்ளது.
இவன், திருமாவளவனுக்குப்
பின் ஆட்சி அமைத்தவன். சிவனிடத்து மிகுந்த ஈடுபாடு கொண்டு கோயில் தொண்டு செய்து
வந்தான். இவன் காவிரிக்கரையோரம் எண்டோள் ஈசனாகிய சிவனுக்கு எழுபது கோயில்கள்
கட்டினான் என நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறுகின்றது. அப்பாடல்
வருமாறு.
"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாடல் எழுபது செய்து
உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்
சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே" (நா.திவ்ய
பிரபந்தம்.1505; 3, 4)
இவனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர்
நடைபெற்ற இடம் குணவாயிற்கோட்டம் எனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என நற்றிணை முன்னுரையும் திருப்போர்ப்புறமெனப்
புறநானூற்றுக் குறிப்பும், உள்ளது
(புறம். 74, உரை). இதில் திருப்போர்ப்புறமே ஆய்வாளர்களால்
ஏற்றுக்கொள்ளப் பெறுகிறது. அவனை அடைத்த இடம் குடவாயிற் கோட்டம் ஆகும்.
சோழன் நல்லுருத்திரன்
இவன் சங்க நூற்காலத்துச் சோழ வேந்தர்களுள் காலத்தால்
பிற்பட்டவன் என்பதனை இவன் பெயரே நன்கு உணர்த்தும் என்பார் ஒளவை துரைசாமிப் பிள்ளை.17 இவன் சோழன் செங்கணானின் மகன். இவனுக்குச் சிவன் பெயராகிய நல்லுருத்திரன்
என்ற பெயரை வைத்துள்ளான். நல்லுருத்திரனே கலித்தொகையில் முல்லைக்கலியைப் பாடியவன்.
இதனைப் பழம்பாடல் உணர்த்தும். இவனுக்கு முன்னர் முல்லைத் திணை பாடியவர்கள்
அனைவரும் அதன் உரிப்பொருளான ‘இருத்தல்’
என்பதனையே வைத்துப் பாடினார்கள். ஆனால் சோழனின் முல்லைக் கலியில் ஏறு அடக்குபவனைத்
தலைவி மணப்பதாகப் புதுமையான ஒன்றைப் பாடுகின்றார். இது தமிழ் இலக்கியத்தில்
புதுமைப்படைப்பு.
இவனுக்கு இரு பிள்ளைகள். அவர்களில் ஒரு பெண். அவள் பெயர்
நற்சோணை. நற்சோணையின் மக்களே சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் ஆவார். நற்சோணையின் உடன்பிறந்தோன் யார் என்பதற்கானச்
சான்றுகள் இல்லை. இளங்கோவடிகள் தன் பாட்டனை அடியற்றியே சிலம்பு ‘ஆய்ச்சியர்க்குரவையில்’ ஏறு தழுவுவாரே இடையர் குலப்பெண்களை மணப்பதாகக்
காட்டுகின்றார். அதோடு இளங்கோவடிகள் தன் தாத்தாவின் பெயரான சோழன் நல்லுருத்திரன்
என்பதனை ‘ஞாயிற்றுச் சோழன்’ என்றுதான் சிலம்பில் அமைத்து உள்ளார்.
சோழன் நல்லுருத்திரனைப் பற்றிய புறப்பாடல் எதுவுமில்லை.
இவனே பாடிய பாடல் ஒன்று மட்டும் உள்ளது (புறம். 190). வேறு எந்தப் புலவரும் இவனைப் பாடியதற்கான சான்று இல்லை.
வரலாற்றில் மாறுபாடு ஏற்படக் காரணம்
கால வரலாற்றிலோ அரசியல் வரலாற்றிலோ பிழை ஏற்பட முக்கியக்
காரணம் சான்றாதாரம் இன்மையே பெருங்குறையாகும். அதே போலவே சோழ வரலாற்றை அறிவதற்கான
போதுமான சான்றுகள் கிடைக்கப்பெறாத நிலையில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு
வரலாற்றை எழுதியுள்ளனர். அதனாலேயே பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
அதோடு பாடலைப் பாடிய புலவர்களோ, அல்லது சங்க
இலக்கியங்களைத் தொகுத்த புலவர்களோ காலவரிசைப்படி தொகுக்க முயற்சி செய்யவில்லை. அது
புறநானூற்றைப் பதித்தவர்களே இச்செய்யுட்கள் கால வரிசையில் அமைக்கப் படவில்லை என்று
கூறுவது எண்ணத்தக்கது.
அதனைப் பற்றிக் கைலாசபதி கூறும் போது, "பதிப்பித்தவர்கள் செய்யுள்களில் போற்றிப் புகழப்பெற்றுள்ள அரசர்கள், குறுநிலமன்னர்களின் அடிப்படையில் செய்யுட்களைப் பிரிக்க முயன்றுள்ளனர்
என்பது தெரிகிறது. ஆனால் அவர்கள் இம்முயற்சியில் நிலையாக இல்லை. அதோடு குறித்த சில
முக்கியமான மாந்தர்களை மையப்படுத்திய செய்யுள் தொகுதிகள் இருந்திருக்கின்றன.
அல்லது தொகையில் அது இருக்க வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கும் என்பார்.18
இதுபோன்ற காரணங்களால் வரலாற்றில் ஐயம் ஏற்பட்டு அது
வரலாற்றறிஞர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடுகின்றது.
தொகுப்புரை
சங்க காலச் சோழர்கள் பற்றிய வரலாற்றைக் கட்டமைக்கும்
போது, புலவர்கள் பின்பற்றிய பெயர் மரபு, வரலாற்றாய்வாளர்களைப் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. அவற்றோடு
புராணப் பழங்கதைகள் அதிகமாக உள்ள பரணி, உலா போன்ற
நூல்கள் மூலமும் சோழ வரலாறு சிதைந்துவிட்டது. மன்னர்களை இறைவனின் குடியில்
தோன்றியவன் என்பதும் சிபி, மனு
போன்றோரின் வழிவந்தவன் என்பதும் அவர்களை பெருமைபடுத்தும் நோக்கிலேயே
அமைக்கப்பட்டது என்பதனை வரலாற்றாய்வாளர்கள் உணரவேண்டும்.
பரணி போன்ற நூல்களில் உள்ள புராணக் கதைகளை நீக்கிவிட்டு
மரபுகளைச் சரியாக ஆராய்ந்து சோழமரபு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இலக்கியச்
சான்றைக் கொண்டு அறிய முடிகிறது.
சான்றெண் விளக்கம்
1. வேங்கடசாமி, ந.மு. சோழர் சரித்திரம், ப. 11
2. கலிங்கத்துப்பரணி. இராசபாரம்பரியம் - பக். 105 - 107
3. மேநூல் - ப. 107
4. நீலகண்ட சாஸ்திரி, சோழர் வரலாறு நூலின் முன்னுரை ப. கூஐ
5. நீலகண்ட சாஸ்திரி - சோழர்கள், புத்தகம் - 2. ப. 1
6. வேங்கடசாமி. ந.மு. சோழர் சரித்திரம். ப. 11
7. துரைசாமிப் பிள்ளை, ஒளவை. சு. (புறம். 4. உரை), ப. 13
8. சண்முக சுந்தரம். க. சங்ககாலச் சோழ வேந்தர்கள். ப. 32
9. சிவத்தம்பி.
கா, சங்க
இலக்கியத்தில் கவிதையும் கருத்தும், சூழல் உறவுகள், உணர்ச்சிகள், புறத்திணைப் பாடல் மரபுகள் (கட்.) ப. 63
10. இராசமாணிக்கனார். மா., சோழர் வரலாறு, ப. 32
11. வேங்கடசாமி. ந.மு. சோழர் சரித்திரம், ப. 21
12. வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப.10
13. வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப. 35
14. வேலாயுதம். பே.க., சங்க கால மன்னர் வரிசை, ப. 35
15. அரவிந்தன். மு. வை., உரையாசிரியர்கள், ப. 195
16. வேங்கடசாமி, ந.மு., சோழர் சரித்திரம், ப. 41
17. துரைசாமி, ஒளவை சு., புறம். 190. உரை.
18. கைலாசபதி க., தமிழ்
வீரநிலைக் கவிதை. ப. 29
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன