புதன், 11 ஆகஸ்ட், 2021

வேளாண்மைவழி விழுமிய வெளிப்பாடு

 


 

ஆய்வுச்சுருக்கம்

இலக்கியங்களில் வேளாண் குறித்த விழுமியப் பதிவுகளும், அதனைப் பற்றிய விளக்கங்களும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. வேளாண் சார்ந்த தரவுகளைக் கொண்டு பல்வேறு அறநெறிகளை வலியுறுத்தும் விழுமியங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறான விழுமியக் கருத்துகள் இன்றைய சூழலோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதும், அது எவ்வாறு மனிதனுள் நற்சிந்தனைகள் / நல்லொழுக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகை செய்தது என்பதும், அதன்வழி உருப்பெற்ற தலைவர்களும், சட்டங்களும் இன்றைய சூழலில் எவ்வாறு அறச்செயல்களை வெளிப்படுத்துகின்றனர் என்பதும் இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது.

 

வேளாண்மை எனும்போது, விதை விதைப்பது தொடங்கி, அதனை உணவாகவோ அல்லது மனிதனின் சுயதேவைக்கான ஏதாவது ஒன்றாகவோ மாற்றிக்கொள்வது வரையிலான ஒரு சுழற்சி முறை என்பது அனைவரும் அறிந்ததே. வேளாண்மை என்பதைப் பற்றிய பல்வேறு கருத்தாடல்கள் இன்று நம் அனைவரின் எண்ணத்திலும் தோன்றியிருக்கிறது. அதற்குக் காரணம் அரசியல், சமூகம், ஈடுபாடு என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருப்பினும் வேளாண்மை எனும்போது அதுவொரு குறிப்பிட்ட ஒரு இன மக்களுக்கான வேலை என்பதாகவே இன்று பார்க்கப்படுகிறது. இந்தப் பொதுபுத்தியை மாற்ற பல்வேறு திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் முயற்சி செய்தாலும் அது மாற்ற இயலாததாகவே உறைந்துவிட்டது.

இதுபோன்ற கருத்துக்களை மாற்றி வேளாண் சார்ந்த விழுமியங்கள் அதாவது வேளாண்மை குறித்த அறக்கருத்துகள் தமிழ்ச்சமூகத்தில் எவ்வாறு பரவிக்கிடந்தது. அது எவ்வாறாக மதிப்பிடப்பட்டது என்பதாக இக்கட்டுரை அமைகிறது. சமூகத்தில் தோன்றும் அனைத்துக் கருத்துகள் போல இதுவும் ஒரு காலத்தில் நம் மனங்களில் இருந்து அழித்துவிடப்படலாம். இருப்பினும் வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து இதனை அழிக்க இயலாது. அவ்வாறான வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்ட வேளாண் விழுமியங்களை விவிலியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை பரவியுள்ள கருத்துகள் இங்குப் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உலகில் நல்லொழுக்கம் / நற்செயல்கள் ஆகியவற்றை வேளாண் மக்களோடும், வேளாண் பொருட்களோடும் ஒப்பிட்டு நற்சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் சில கருத்துகளை இப்பகுப்பில் காணலாம்.

விழுமியம் – பொருள் புலப்பாடு

விழுமியம் என்ற சொல் அறநெறியை உணர்த்தும் இப்பயன்பாடு சமீப காலத்திலேயே மிகுந்து பேசப்படுகிறது. Value என்ற ஆங்கிலச்சொல்லிற்கு இன்று பயன்படுத்தப்படும் விழுமியம் என்ற சொல்லாடல் தற்காலத்திலேயே மிகுந்த புலக்கத்திற்கு வந்துள்ளது. அதற்கு முன்பு, Value என்பது மதிப்பீடு என்பதாகவே அறியப்பட்டது. எவ்வாறாயினும் இன்றைய வழக்கில் உள்ள நற்செயல்கள் / அறச்செயல்கள் என்ற பொருளிலே இக்கட்டுரையில் வழங்கப்படுகிறது.

விழுமியம் என்றால் values... உலகம் முழுக்க அறநெறிகள் பல உள்ளன. நீதிகள் உள்ளன. ஆசாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சுட்டக்கூடிய சொல்லே விழுமியம். அவை மக்கள் வாழ்ந்து அறிந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்செல்லும் நெறிகள் குறித்த நம்பிக்கை மற்றும் மனக்கட்டுமானமே விழுமியம் (https://ta.wiktionary.org/wiki/விழுமியம்)  

விழுமியம் என்ற சொல் இன்று தமிழில் மிகுந்து காணப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த குணங்கள், பண்பு நலன்கள், மேற்கொள்ளும் அறங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே விழுமியம் என்று வழங்கப்பெறுகிறது. இருப்பினும் இச்சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் வேறு பொருள்களில் பயின்றுவருகிறது. விழுமியம் என்பதன் வேர்ச்சொல் ‘விழு’ என்று அமைந்து, சிறப்பான, உயர்வான, மேன்மையான பெரிய முதலான பொருள்களைத் தருவதாக அமைகிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் இச்சொல்லின் பொருளினை மேலும் அறிந்துகொள்ள தினமணி கட்டுரையைக் காண்க (முனைவர் ப. பத்மநாபன், தொல்காப்பிய(ர்)ம் காட்டும் விழுமம், தினமணி – தமிழ்மணி, 11.02.2018).

விதையும் மனிதனும்

விவிலியம் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தினை இங்கு முன்வைக்க விழைகிறேன். விதைப்பவனும், விதையும் குறித்த ஒரு பதிவினை புதிய ஏற்பாடு நமக்கு வெளிப்படுத்துகிறது. விதைப்பவன் (விவசாயி) ஒருவன் விதைகளை விதைக்கச் சென்றான். விதைக்கும்போது, பாலை நிலத்திலும், முட்புதர்களின் நடுவிலும், வழியோரங்களிலும், பண்படுத்தப்பட்ட நிலத்திலுமாய் விதைகள் விழுந்தன. அவை விழுந்த இடங்களுக்கு ஏற்ப அவை பலனைத் தந்தன. பாலை நிலத்தில் விழுந்தவை வேரில்லாமல் கருகின. முட்புதர்களின் நடுவில் விழுந்தவை முட்புதர்களின் வளர்ச்சியினால் வளரஇயலாமல் போயிற்று. வழியோரங்களில் விழுந்தவை பறவைகளுக்கு இரையாயின. நல்ல நிலத்தில் விழுந்தவை நூறு, அறுபது, முப்பது மடங்குகளாய் பலனைத் தந்தன என்று உவமை கூறுவார் (இயேசு கிறிஸ்து) (திருவிவிலியம், புதிய ஏற்பாடு, மத்தேயு, 13: 3 – 8). இங்கு விதைகள் என்பவை இறைவார்த்தைகளாகவும், விதைப்பவன் இறைமகனாகவும், நிலங்கள் மனித மனங்களாகவும் உவமேயம் செய்யப்படுகிறன.

வேளாண்மை குறித்த சிந்தனையும் மனிதமனங்களையே நிலங்களாகக் கொண்ட கருத்தும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

வேளாண்மையும் வரிவிதிப்பும்

வரிவிதிப்பு என்பது நாட்டின் முக்கிய வருவாய்களுள் ஒன்று. இன்று நாம் ஏதோவொரு முறையில் நாட்டிற்கு வரிசெலுத்திவருகிறோம். அவ்வாறு விதிக்கப்படும் வரியானது நாட்டில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்காகச் செலவிடப்படுகிறது. எனவே, வரிவிதிப்பு என்பது நாட்டிற்கு மூலாதாரம். வரிவிதிப்பு எவ்வாறு மக்களிடையே கவனம்பெறுகிறது என்று பார்க்கும்போது, அவர்களுக்கு மிகுந்த துயரத்தையும், வரிசெலுத்த வேண்டுமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணியாக இருப்பது அதில் ஏற்படும் கூடுதல் சுமை. தலைவனானவன் சுமையைச் சுகமாக்க வேண்டுமே தவிர அதில் மேலும், பாரத்தை ஏற்றி சுமக்க வைக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

மேற்கூறப்பட்ட கருத்தையே ஒரு புலவர் ஒரு மன்னனுக்கு (தலைவனுக்கு) உணர்த்த முற்படுகிறார். அவர் உணர்த்துவது மட்டுமல்லாமல், வேளாண் சார்ந்த விழுமியத்துடன் அதை விவரிக்கிறார். ஒரு சிறிய நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லைச் சரியான முறையில் எடுத்து, அதனைச் சமைத்து யானைக்கு நாமே உணவளித்தால், அது பல நாளைக்கு உணவாகும். அதைவிடுத்து அந்த யானையையே களத்தில் இறங்கி மேய்ந்துகொள்ள விடுக்கும்போது, அதன் வாயில் புகுவதைக்காட்டிலும், அதன் நான்கு கால்களால் மிதிக்கப்பட்டு அழிவதே அதிகமானதாக இருக்கும். அது எவ்வளவு பெரிய நிலத்தில் விளைவிக்கப்பட்ட பயிராக இருந்தாலும் சில நாட்களுக்கே உணவாக அமையும். அறிவுடைய மன்னன் (தலைவன்) யாராக இருந்தாலும் இதை அறிந்து இருந்தால், அவன் நாடும், நாட்டு மக்களும் அனைத்துவித பொருள்களையும் ஈட்டிக்கொடுப்பர். அவனும் வளமானதாக நாட்டை ஆளலாம். ஆனால், தன்னைச் சுற்றித் தன்புகழ்பாடும் மாக்களையே கொண்டவன் தானும் சரியான முறையில் இல்லாமலும், நாட்டைச் சரியான வழியில் நடத்திச் செல்லாதவனாகக் கெடுவர். இதனை,

                 காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே

                மாநிறை வில்லதும் பன்னாட் காகும்

                ………………………………………………

                யானை புக்க புலம்போலத்

                தானு முண்ணா னுலகமுங் கெடுமே     (புறம். 184)

என்ற புறப்பாடலில், வரிவிதிக்கும் முறையினை அன்றைய வேளாண் சார்ந்த செய்தியோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.

நெல்லும் உயிரும்

வேளாண் பெருமக்களுக்குத் தம்மை ஆள்கின்ற தலைவர்கள் சிறந்தவர்களாகவும், தம்மைப் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இன்றும் சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. எனவே, அத்தலைவர்களை, நாள்தோறும் தாம் புழங்கிவருகின்ற நெல்விதைகளோடும், நீரோடும் ஒப்பாக நினைத்துப் போற்றி வருகின்றனர். சங்கச் சமூகத்திலும் இவ்வாறான ஒரு வழக்கம் இருந்துள்ளமை புறநானூற்றின் பாடல்கள் வழி அறிய முடிகிறது. 

நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே

மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்

அதனால், யானுயி ரென்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே  (புறம், 184)

என்ற பாடலுள், வேளாண் பெருமக்களுக்கு நெல்லும், நீரும் கூட உயிரளிக்கும் மருந்தல்ல. அவர்களைப் பாதுகாக்கும் தலைவர்களே அவர்களின் உயிராக இருந்து காக்கிறார்கள் என்று புகழ்ந்துரைக்கின்றனர்.

அதேநேரத்தில் அவ்வாறாகத் தன்னைப் பாதுகாத்துவந்த தலைவர் இறந்துவிட நேர்ந்தபோது, அவரின் உயிரைப் பறித்த எமனையும் எதிர்ப்பவர்களாக வேளாண்குடி மக்கள் இருந்துள்ளனர் என்பதையும் புறநானூறு சுட்டுகிறது.

                 நனிபே தையே நயனில் கூற்றம்

                விரகின் மையின் வித்தட் டுண்டனை

                ………………………………               (புறம், 227)

இதில், அறிவில்லாத, மனத்தில் சிறிதும் ஈரமில்லாத கூற்றே (எமனே) என்று விளித்துரைத்து வசைபாடுகிறார். விதைகளைத் தின்றுவிட்டால் எவ்வாறு பயிர் விளையும், அதுபோல் எம்முடைய தலைவனையே நீ எடுத்துக்கொண்டாயே இனி எவ்வாறு நாங்கள் பிழைப்போம் என்று கூறுவதாக அமைந்துள்ளது.

மேற்கூறப்பட்ட இருபாடல்களிலும், தம்முடைய தலைவனை உயிராகவும், தாம் உட்கொள்ளும் உணவாகவும் (விதைநெல், நீர் முதலியன) கொண்டு பாடப்பட்டுள்ளமை நினைக்கத்தக்கது.   

பயிரும் வளமும்

இன்றைய சமூக சூழலில் தான் மட்டும் நலமாக, வளமாக வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நிலையில், வேளாண்குடி மக்கள் மட்டுமே தாம் மட்டுமல்ல, தம்மை நம்பியிருக்கும் அனைத்து உயிர்களும் நலமாக, வளமாக இருக்கவேண்டும் என்று உழைக்கின்றனர். அதிலும் குறிப்பாகத் தாம் சார்ந்த நாடும், நாட்டை ஆளும் தலைவர்களும் சிறந்துவிளங்க வேண்டுமென நினைக்கும் நெஞ்சத்தவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை,

                 வாழி ஆதன் வாழி அவினி

                நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க   (ஐங்குறு., 1)

என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. என்னுடைய தலைவனின் நாட்டிலே நெல் நன்முறையில் செழித்தோங்கிட வேண்டும். அதனால் வளமும் பெருகிட வேண்டும் என்று போற்றும் உள்ளம் வேளாண் குடிகளைத் தவிர வேறு யாரிடமும் இருக்கவியலாது. இம்மக்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் மேலும் மேலும் தருவார்களே தவிர வேறு யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இதனையே வள்ளுவரும்,

                இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

                கைசெய்தூண் மாலை யவர்           (குறள், 1035)

என்று குறிப்பிடுகிறார்.

தொகுப்புரை

      விழுமியங்கள் அடிப்படையில் தனிமனிதனை அல்லது சமூகத்தை அளவிட்டுப் பார்க்கும் நிலையில், அதிலும் வேளாண் பொருள்களை எடுத்துக்காட்டி அவர்களின் அறவழியினைப் பேசும்போது விழுமியக் கருத்தானது மேலும் வலுப்பெறுகிறது. இதனை முன்னிறுத்தியே வேளாண் விழுமியங்கள் என்ற இக்கட்டுரை நோக்கத்தக்கது. இன்றைய சமூகமும் அதில் வளர்ச்சிபெற்ற நிலையில் நம்மை ஆளும் தலைவர்களும் தங்களுடைய கடமையைச் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் கருவியாக வேளாண்மை நிலைபெறுகிறது. எனவே, அதனை ஒரு விழுமியமாக எடுத்துக்கொண்டு ஆராயப்பட்டது.  

 

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

1.   திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), TNBCLC, மறுபதிப்பு, 2012

2.   புறநானூறு 1 & 2, ஔவை துரைசாமிப்பிள்ளை உரை, கழக வெளியீடு, 1960

3.   சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ஆ. மணவழகன், காவ்யா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு 2001

4.   சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெ. மாதையன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2010

5.   இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2018

6.   தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூரத்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு, திருச்சி, 2008

7.   சங்க இலக்கியத்தில் சூழலியல், ஆ. அரிமாப்பாமகன், இராசகுணா பதிப்பகம், சென்னை, 2017

-------------

        முனைவர் போ. ஜான்சன்





 

(குறிப்பு: இக்கட்டுரை திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்றது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...