புதன், 11 ஆகஸ்ட், 2021

இரட்டைக் காப்பியங்களில் செவ்வியல் பண்புகள்



திரு. . அடைக்கலராஜ்

முனைவர் போ. ஜான்சன்

முன்னுரை

            தொல்காப்பியம் தொடங்கி 41 நூல்கள் செவ்வியல் பண்புகளைக் கொண்ட நூல்களாக அடையாளப்படுத்தப்பட்டு வழங்கிவருகின்றன. செவ்வியல் பண்பு என்பதற்குப் பதினோரு வகையான தகுதிப்பாடுகளை முன்வைக்கின்றனர் சான்றோர்கள். அவை, தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடுகலையறிவு வெளிப்பாடு, பிறமொழிக் கலப்பில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு, மொழிக்கோட்பாடு என்பன வரையறுக்கப்படுகின்றன. இவ்வனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது தமிழ்மொழி. அவற்றுள், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் - மணிமேகலை என்ற படைப்பில் காணலாகும் செவ்வியல் பண்புகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.   

செவ்வியல் மொழி: தமிழ்

            செவ்;;வியல் மொழி என்று அழைக்கப்பட வேண்டுமானால் ஒரு மொழி பல கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்;. அது பழமையானதாக இருக்க வேண்டும். ஒரு தனித்துவ மரபைக் கொண்டிருக்க வேண்டும். அது தானே எழுந்த மரபாக இருக்க வேண்டும். வேறு மரபிலிருந்து கிளைத்திருக்கக் கூடாது. பெரிய வளமான பண்டைய இலக்கியத் திரட்சியைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் பிற நவீன மொழிகளைப் போல அல்லாமல் தமிழ்மொழி மேற்குறித்த எல்லாக் கூறுகளையும் கொண்டுள்ளது. தமிழ் மிகப்பழமையானது. முழுவதும் தன்னிச்சை மரபாக எழுந்தது. எந்த மொழியின் செல்வாக்கும் இல்லாமலேயே இது உருவானது

இரட்டைக் காப்பியங்களின் இயல்பு

            தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமையைச் சிலப்பதிகாரம் பெறுகிறது. அதனையடுத்து அதனுடன் நெருங்கிய தொடர்புடைய அதன் தொடர்ச்சியாக அமைந்த மணிமேகலையும் இணைந்து இரட்டைக் காப்பியங்கள் என்ற பெயருடன் தமிழ்கூறும் நல்லுலகில் வலம்வருகிறது. தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைப்பாட்டில் முதல் இருகாப்பியங்களாக இவை விளங்குகின்றன. பல்வேறு ஒற்றுமைகளின் அடிப்படையில் இவ்விரு காப்பியங்களும் இரட்டைக் காப்பியங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. உலக இலக்கியங்களோடு ஒப்பிடத்தக்க வகையில் கிரேக்க இலக்கிய ஆசிரியரான ஹோமரின் இலியட், ஒடிசி என்ற இரு படைப்புகளுக்கும் இணையானதாக இந்த இரட்டைக் காப்பியங்கள் நோக்கப்படுகிறது. இவ்விரு காப்பியங்களில் காணலாகும் செவ்வியல் பண்புகள் சிலவற்றை விரிவாகக் காணலாம்

தொன்மை

            இரட்டைக் காப்பியங்களின் பொருண்மை எவ்வாறு தொடர்ச்சியாக அமைந்துள்தோ அதேபோல அவை இயற்றப்பட்ட காலமும் ஒன்றாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் இளங்கோவடிகளாலும், சீத்தலைச்சாத்தனாராலும் இயற்றப்பட்டது. நூல் எழுந்த காலமே இரண்டாம் நூற்றாண்டு. இருப்பினும் அதில் சொல்லப்பட்டு வந்த கண்ணகியின் வரலாறு அதற்கு முன்னரே அங்குள்ளவர்களால் வாய்மொழியால் வழங்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நற்றிணையில்,

                        ஏதிலாளன் கவலை கவற்ற

ஒருமுலை அறுத்த திருமா உண்ணி (நற்றிணை, 216)

என்ற பாடலின் மூலமும், சிலப்பதிகாரத்தின் பதிகம் வாயிலாகவும் அறிய இயலுகிறது. இதனை, நாட்டுவளம் காணவந்த சேரமன்னனுக்கும் அவனுடைய சகோதரரான இளங்கோவடிகளுக்கும் அங்கிருந்த சீத்தலைச்சாத்தனாரே முழுமையாக எடுத்துரைத்துள்ளார் என்பதும் பதிகத்தின் வாயிலாக அறியக்கிடைக்கிறது. இதனை

                        குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்

                        பொலம்பவேங்கை நலங்கிளர் கொழுநிழல்

                        ஒருமுலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு

                        அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டியவள்

                        ……………….

                        அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்

                        யானறிகுவன் அது பட்டதென்று உரைப்போன் (சிலம்பு, பதிகம், 3 – 11)

என்ற பாடலடிகள் உறுதி செய்கின்றன                       

            தமிழ்மரபில் தாய்த்தெய்வ வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. தமிழ்ச்சமூகம் தொடக்கத்தில் தாய்வழிச் சமூகமாக இருந்து வளர்ந்தது என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்து. இதன் தொடர்ச்சியாகவே சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்களும் பெண்களை முன்னிறுத்தி நிகழ்த்தப்பெறுகின்றன. கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தலும், மணிமேகலையை ஒரு துறவியாக நிலைநிறுத்தி முன்னிறுத்துவதிலும் இதனைப் புரிந்துகொள்ள இயலும். காப்பியத்தினுள் இடம்பெறுகின்ற கௌந்தியடிகள் என்ற துறவி கோவலன் - கண்ணகியை வழிப்படுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது

            சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஆய்ச்சியர் குரவையில், கூத்தாடும் குரவர்கள் பாடுகின்ற பாடல்கள் வாய்மொழிப் பாடல்களை ஒத்திருக்கின்றன. வாய்மொழிப் பாடல்களைச் சேகரித்து அதனைப் பதிவுசெய்யும் போக்கு குறிப்பிடத்தக்கது. வாய்மொழிப் பாடல் மரபில் சொற்களை மீண்டும் மீண்டும் வைத்துப் பாடும் மரபு உள்ளது. அதற்குக் காரணம், கேட்பவர் எளிமையாக நினைவுகொண்டு மீண்டும் அதனைப் பாட உதவியாக இருக்கும். ஆய்ச்சியர் குரவை பகுதியில் உள்ள பாடல்கள் அவ்வாறானதாகவே அமைந்துள்ளது. காட்டாக

                        கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்

                        இன்றுநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்

                        கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

 

                        பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

                        ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்

                        ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!

                        ………………….. 

                                             (சிலம்பு, ஆய்ச்சியர் குரவை, பாடல்கள், 19 – 20)

எனும் பாடல்களில், ஆய்ச்சியர்கள் தம்முடைய நிலத்தெய்வமான கண்ணனை நினைத்துப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது

தனித்தன்மை

            காப்பிய இலக்கணம் படைத்த தண்டியலங்கார ஆசிரியர், காப்பியத்திற்குத் தன்னேரில்லாத தலைவன் இருக்கவேண்டும் என்றார். இங்குக் குறிப்பிடப்படும் இரண்டு காப்பியங்களிலும் தன்னேரில்லாத தலைவிகளை முன்னிறுத்தியுள்ளனர். பெண்களை முன்னிறுத்திச் செய்யப்பட்ட காப்பியங்களுள் தலைசிறந்ததாகவும். முதன்மையானதாகவும் இக்காப்பியங்கள் திகழ்கின்றன

            காப்பியங்கள் அல்லது ஒரு இலக்கியப் படைப்பு இறைவனையோ, அரசரையோ மையப்படுத்தி எழுதப்படாமல் அவர்களைத் தவிர்த்த மக்களைத் தலைமையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. அதிலும் கோவலனுக்கும் பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவள் என அவமதிகப்பட்ட மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையைத் தலைவியாகக் கொண்டு இயற்றப்பட்டது மணிமேகலைக் காப்பியம்.

            தமிழில் தோன்றிய முதல் முத்தமிழ்க் காப்பியம் என்ற பெருமை சிலப்பதிகாரத்தைச் சாரும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் ஒருங்குபெற்று தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் மட்டும் வழிநடத்தாமல் சமய நெறிநின்று வழிநடத்துபவர்களாவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் கௌந்தியடிகள் என்ற பெண் துறவியும், மணிமேகலையில் அதன் தலைவியே துறவியாகச் சென்று அனைவரின் துயர்துடைப்பவளாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்

சிலப்பதிகாரத்தில் ஒரு சமயம் என்றில்லாமல் எல்லாச் சமயங்களையும் ஒருங்கிணைத்து ஒரு சமயச்சார்பற்ற இலக்கியமாகப் படைத்தளித்துள்ளமை நோக்கத்தக்கது. மணிமேகலையில் பௌத்த மதத்தை முன்னிறுத்தி, அதனை ஒரு பெண் வழிநடத்திச் செல்கிறாள் என்பதும் இக்காப்பியங்களின் தனித்தன்மையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

இலக்கிய வளம்

            படைப்பு ஒன்றினைத் தொடங்குவதற்கு முன்பு இறையை வாழ்த்தித் தொடங்குவது என்பது மரபு. இளங்கோ தம் காப்பியத்தைத் தொடங்கும்போது

                        திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

                        கொங்கலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ் 

                        அங்கண் உலகு அளித்தலான் 

 

                        ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

                        காவிரிநாடன் திகிரிபோல் பொன் கோட்டு 

                        மேரு வலம் திரிதலான் 

                        ………………………

                                                                        (சிலம்பு, மங்கல வாழ்த்துக் காதை, 1 – 6)

என இயற்கையையே இறையாக நினைத்துப் போற்றும் தமிழர் மரபு நோக்கத்தக்கது

            மணிமேகலை, தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம். சீர்த்திருத்தக் கொள்கைகளை எடுத்தியம்பும் காப்பியமாகவும் திகழ்கிறது. குறிப்பாக

                        மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்

                        கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய் 

                                                            (மேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை, 84 – 85)

 கள்ளுண்ணாமையும், உயிர்க்கொலைகளும் கைவிடத்தக்கவை என விளம்புகிறது. மேலும் 

                        நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்

                        அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

                        உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் 

(மேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை, 88 – 90)

அறத்தின் வழியில் வாழ்வோருக்கு நல்லுலகும், அதனை விடுத்து தீவழிச் செல்வோர் நரகத்தையும் அடைவர் என்பது உண்மை என்பதனால் அதனைச் சான்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். இதன்மூலம் மக்களை நல்வழியில் நடத்த விழைந்தனர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

பொதுமைப்பண்பு

உலக உயிர்கள் அனைத்திடத்தும் நேயம் செலுத்த வேண்டும் என்பது இளங்கோ, சாத்தனார் ஆகியோரின் கருத்தாக அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூறும்போது,

                        எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப

                        புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

                        வாயிற் கடைமணி நடுநா நடுங்க

                        ஆவின் கடைமணி உகுநீர்; நெஞ்சுசுட தான்தன்

                        அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

                                                                        (சிலம்பு, வழக்குரை காதை, 51 – 55)

என்ற அடிகளில் துன்பம் எவ்வுயிர்களுக்கானதாக இருப்பினும் அதனைத் தன் துன்பம்போல் எண்ணிச் செயல்பட்ட இரு வேந்தர்களைக் குறித்து எடுத்தாளப்பட்டுள்ளது.

            சாத்தனார் ஆபுத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது,

                                    குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி

                                    வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்

                                    கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

                                    வலையிடைப் பட்ட மானே போன்றாங்கு 

                                    ………………………….. 

                                    அல்இடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன்

                                                (மேகலை, ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, 29 – 38)

என்ற அடிகளில் பசுவினுடைய துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி அதனை விடுவித்த ஆபுத்திரனைக் குறித்து எடுத்துத்துரைக்கிறார்.

நடுவுநிலைமை

            தமிழகத்தைப் பொறுத்தவரை மூவேந்தர்கள் ஆட்சி செய்த நிலம் என்ற வரலாறு உண்டு. இருப்பினும் அது சேர, சோழ, பாண்டிய நாடுகளாகவே இருந்தது நோக்கத்தக்ககது. மூவேந்தர்களும் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டனர் என்ற வரலாற்றை சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஓரிரு இடங்களில் மூவேந்தர்களும் ஒருங்கிருந்தனர் என்ற செய்தியைக் கடந்துபோக நேர்ந்தாலும், அம்மூவரையும் பொதுவான ஒரு புலவர் பாடிய செய்தியாகவே அமைந்திருக்கும். ஆனால் சேர நாட்டு இளவரசன், தனக்குச் சொல்லப்பட்ட செய்திகளைத் திரிக்காமல் மூவேந்தர்களைப் பற்றியும், அவர்கள் நாடுகளின் வளங்களைப் பற்றியும், நீதிநெறி தவறாமல் போற்றிவந்த திறத்தினையும் சிலப்பதிகாரத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றுள்

  • கன்றின் துயர்தீர்க்க தன் மகனையே இழக்கத் துணிந்த மன்னனைப் பற்றியும்
  • புறாவிற்காகத் தன் உயிரையும் விடத்துணிந்தவனைப் பற்றியும்
  • தவறான தீர்ப்பு அளித்ததால் தன் உயிரையே போக்கிக் கொண்டவனைப் பற்றியும் 
  • தன் கற்பு நெறியை நிலைநாட்டி தன் கணவன் கள்வன் இல்லையென உலகிற்கு உரைத்த பெண்ணிற்குச் சிலை எடுத்தவன் பற்றியும் 

என மூவேந்தர்களையும் ஒரே நூலில் பழுதுபடாமல் இணைத்திருக்கிறார் 

            பல்வேறு சமயங்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் எடு;த்துரைத்துள்ளமை இங்கு நோக்ககத்தக்கது. அவற்றுள், திருமாலை வழிபடும் ஆய்ச்சியர் குரவை, கொற்றவையை வழிபடும் வேட்டுவவரி, குமரக்கடவுளை வழிபடும் குன்றக்குரவை, தேவர் கோமானை வழிபடும் இந்திரவிழா போன்றவற்றின் வாயிலாக பல்வேறு சமயங்களைச் சேர்ந்தோர் அங்கு ஒன்றாக இருந்துள்ளமை வெளிப்படுகிறது. அவற்றோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த கோயில்கள் (கோட்டங்கள்) பற்றிய செய்தியும் கிடைக்கின்றன

                        நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்

                        உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்

                        மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்

                        கோழிச்சேவல் கொடியோன் கோட்டமும்

                        அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்

                        மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

                                                                        (சிலம்பு, ஊர்காண் காதை, 7 – 12)

மேலும், தருக்கக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், வெள்ளை நாகர் கோட்டம், சூரியக் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம் என பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் இருந்தமையைக் குறிப்பிடுகிறார். மதுரைக்குச் செல்லும் வழியில் கோவலன், கண்ணகி மற்றும் கௌந்தியடிகள் மூவரும் ஐயைக் கோட்டம் எனுமிடத்தில் தங்கி ஓய்வெடுத்துப் பிறகு புறப்பட்டுச் செல்கின்றனர்.   

இதுதவிர சாத்தனார் குறிப்பிடும் சக்கரவாளக் கோட்டம் அல்லது சுடுகாட்டுக் கோட்டம் குறிப்பிடத்தக்கது. மணிமேகலா தெய்வம், அக்கோட்டத்தின் இயல்பினை மிக விரிவாக எடுத்துரைப்பதாக அமைத்துள்ளார் (சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை).  

உயர்சிந்தனை

            உலகில் மிக உயரிய பண்பு பசித்தவனுக்கு உணவு கொடுத்தல். புறநானூற்றில் ஷபசிப்பிணி மருத்துவன்| என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் பாராட்டப்பட்டவன் சிறுகுடி பண்ணன். ஷபசி வந்தால் பத்தும் பறந்து போகும்| என்பது முதுமொழி. நாட்டில்

                        உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

                        சேரா தியல்வது நாடு (குறள். 734) 

என்றவாறு அமைய வேண்டுமென வள்ளுவர் குறிப்பிடுவார். பசியைப் போக்குவதற்கு விருந்தோம்பல் செய்வது என்பது இன்றியமையாமை. சிலப்பதிகாரத்தில் கணவனைப் பிரிந்திருந்த போது தான் இழந்த பெருமை விருந்தோம்பல் செய்ய இயலாமையே என தன் கணவனிடம் வருத்தம் கொள்கிறாள் கண்ணிகி

                        அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                        விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை 

                                                                        (சிலம்பு, கொலைக்களக் காதை, 71 – 73)

இதன்மூலம் இல்வாழ்வில் ஈடுபடுவோரின் கடமையில் விருந்தோம்பலும் இருந்துள்ளமை நோக்கத்தக்கது. இதனை

                        துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்;க்கும் 

இல்வாழ்வான் என்பான் துணை (குறள். 42)  

என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார் 

            மணிமேகலை காப்பியம்,

                        பசியும் பிணியும் பகையும் நீங்கி

                        வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி 

(மேகலை, விழாவறைகாதை, 70 - 71)           

என வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காப்பியத்தில் ஆபுத்திரன் வைத்திருந்த பாத்திரத்தைக் கொண்டு பசிப்பிணி போக்கினாள் மணிமேகலை. இதனைச் சாத்தனார்,

                        மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

                        உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 

(மேகலை, பாத்திரம் பெற்ற காதை, 95 – 96)

என்று குறிப்பிடுகிறார். மேலும் விருந்தோம்பல் குறித்த பல்வேறு செய்திகள் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது.

கலை - இலக்கியத் தன்மை வெளிப்பாடு

            கலை என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. அவரின் எண்ண வெளிப்பாடுகளே ஏதாவது ஒரு படைப்பாக வெளியாகிறது. அது சிற்பம், ஓவியம், எழுத்து, இசை என பலவாறாகப் பிரதிபலிக்கிறது. இரட்டைக் காப்பியங்களில் கலையைப் பற்றிய நுணுக்கமான பல்வேறு செய்திகளைச் சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்துகிறது. கலையை இலக்கியத்தில் குழைத்து அரங்கேற்றுக்காதையில் சிறப்பாக எடுத்துரைப்பார் இளங்கோவடிகள்.  

இசைக்கருவிகளைப் பற்றிய மாதவியின் அறிவு, அதனைப் பயன்படுத்தும் தெளிவு, தன்னை ஒப்பனை செய்வதில் அவளின் ஆர்வம் என பலவாறாகச் சொல்லலாம். சிலம்பிற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுக் காதையை மிக விரிவாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக, குழலின் அமைப்பு, நாடக மேடை அமைப்பு, அமைவிடம், மேடைகளில் தொங்கவிடப்படும் மூவகைத் திரைச்சீலைகள் (ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி), நாடக நடிகர்கள், இசைக்கலைஞர்கள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் போன்றனவும் விரிவாக விளக்கியுள்ளமை நோக்கத்தக்கது

மாதவியைப் பற்றிக் குறிப்பிடும்போது,

                        ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்

                        கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்

                        ………………….


                        இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து

                        பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து 

                        பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் 

                                                                                    (சிலம்பு, அரங்கேற்றுக்காதை, 8 – 14)

என ஆடல், பாடல், அழகு இவற்றில் எதுவும் குறைவில்லாமல் வேத்தியல், பொதுவியல் என்னும் இருவகைக் கூத்துகளின் இலக்கணம் முறையாகக் கற்று, பல்வேறு புற நடனங்களையும் கற்று, இந்திரன் முதலான தெய்வங்கள் ஒவ்வொரு சூழலில் ஆடிய பதினோரு வகை ஆடல்களையும் கற்றிருந்தவள் மாதவி என்று அறிமுகம் செய்வார் இளங்கோவடிகள்

            மணிமேகலைக் காப்பியத்திலும் மாதவி கற்றிருந்த கலைகளைச் சாத்தனார் உணர்த்திச் செல்கிறார்

                        வேத்தியல் பொதுஇயல் என்றுஇரு திறத்து

                        ……………………………

            
           
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்

                        கற்றுத் துறைபோகிய பொன்தொடி நங்கை

                        நல்தவம் புரிந்தது நாண்உடைத்து  

                                                      (மேகலை, ஊர் அலர் உரைத்த காதை,18 – 33) 

முடிவுரை

காப்பியம் என்ற இலக்கியமே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் சமூக, சமய, அரசியல் வரலாற்றை அல்லது வரலாறாக நம்பப்படுவதைத் தான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. அவ்வாறாக அமைந்த இந்த இரட்டைக் காப்பியங்களின் தொன்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, உயர்சிந்தனை, கலை - இலக்கியத் தன்மை வெளிப்பாடு முதலான செவ்வியல் பண்புகள் கொண்டு விளங்குவதைக் காணமுடிகிறது. மற்ற மொழிக் காப்பியங்களைக் காட்டிலும் தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளோடு இரட்டைக் காப்பியங்கள் உயர்ந்து விளங்குவதைக் உணர்ந்துகொள்ள முடிகிறது.

 

(குறிப்பு: இக்கட்டுரை திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை வெளியிட்டுள்ள நற்றமிழ்க் கோவை என்ற நூலில் இடம்பெற்றுள்ளது)

1 கருத்து:

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...