திங்கள், 16 ஆகஸ்ட், 2021

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

 



சங்க இலக்கியத்தினை நாம் பல கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கலாம். அதில் முதலில் புலவர்கள் தனித்தனிப் பாடல்களாகப் படைத்த காலம், அதன்பிறகு படைத்த பாடல்களைத் தொகுத்த காலம், பிறகு உரை எழுதிய காலம், நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு சி.வை. தாமோதரம்பிள்ளையும், உ.வே.சா.வும் தேடித்தேடிப் பதிப்பித்த பதிப்புக்காலம் என வகைப்படுத்தலாம்.       இந்நூல்கள் பதிப்புகளாக வெளிவந்த பிறகுதான் உலகம் தமிழனைப் பற்றிய தமிழைப் பற்றிய மதிப்பீட்டை ஆயுதமாகப் பெற்றது. 

       ‘சங்க இலக்கியத் தொகுப்பு’ என்பது தமிழுக்கு இயல்பாகவே பரிணமித்ததா அல்லது வேறேதேனும் பின்னனியில் உண்டா என்று கூர்ந்து நோக்கினால், ஆங்கிலத்தில் Anthology என்ற சொல் உண்டு. இச்சொல்லின் அடிச்சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்றும், இதனைத் தொகை, தொகுப்பு, பூங்கொத்து என்று பொருள் கொள்ளலாம் என்பார் டாக்டர் க.ப. அறவாணன். அதேபோல் யவணர் என்ற சொல் தமிழிலக்கியங்களில் கிரேக்கர்களையே குறித்து வந்தது என்றும் இது சிதைந்த கிரேக்கச் சொல் என்றும் குறிப்பிடுவார்.

தொகுப்புக் காலம்

      சங்க இலக்கியத்தின் தொகுப்பு காலம் கி.பி. 2 அல்லது 3ஆக இருக்கலாம் என்றும் இவற்றின் மொத்தத் தொகை 2381 பாடல்கள். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் நினைவிற் கொள்வதற்காகவே பத்துபத்து பாடல்களாகத் தொகுத்துப் பாடப்பெற்றன. தொகுப்புப்பணியின் போதுதான் ஆய்வு தொடங்கியது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கும்போதுதான் அதில் பாடவேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். மிகுதியான பயன்பாடு கொண்ட நூலே பாடபேதம் கண்டது.

       சங்க இலக்கியத்தைப் பெரும்பாலும் திணை அடிப்படையிலேயே தொகுத்தனர். உ.வே.சா. மட்டும் குறுந்தொகையைக் கூற்று அடிப்படையில் பிரித்தார். இந்த இலக்கியத்தில் அகம் சார்ந்த பாடல்கள் 80 சதவீதமும் புறம் சார்ந்த பாடல்கள் 20 சதவீதமும் உள்ளது. சங்கப்பாடல்களைத் திணை அடிப்படையிலேயும், பொருள் அடிப்படையிலும், யாப்பு அடிப்படையிலும் பிரிக்கலாம் என்றும் இதனை அகமரபு, புற மரபு, இசை மரபு, அரச மரபு, நெடும்பாடல் மரபு, எண்பெருந்தொகை மரபு என்று விளங்கிக்கொள்ளலாம்.

தொகைநூல் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்

      தொகைநூல்களை ஆராயும் யாரும் அதனை ஏன் தொகுத்தார்கள், யார் தொகுத்தார்கள், எப்படித் தொகுத்தார்கள் என்பதை யாரும் ஆராயவில்லை.

       பதிற்றுப்பத்தினைத் தொகுப்பித்தவன் சேரனாக இருந்திருக்கலாம். அவை அனைத்தும் சிறுசிறு நூல்களாக இருந்து பின்னர் ஒன்றாகத் தொகுக்கப்பெற்றது. அதில் அந்தாதி அமைப்பும் உள்ளது நோக்கத்தக்கது. அந்தாதி பின்னர் வந்த ஒரு இலக்கிய வகை என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

       புறநானூற்றைத் தொகுத்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனாராக இருந்திருக்கலாம். 400 என்ற அமைப்பு முறை முன்னர் தொகுக்கப்பெற்ற இலக்கியங்களில் இருந்தபடியால் இதுவும் 400 எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்ற நோக்கில் கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்த்து இவர் தொகுத்திருக்கலாம்.

       கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் பேரரசை நிறுவுகின்றான். அவன்தான் தமிழ்ச்சங்கத்தையும் நிறுவினான் என்ற செய்தி கலித்தொகையும், பாண்டிக்கோவை என்ற நூலும் உறுதிசெய்கின்றன. பாண்டியரை மட்டுமே தமிழோடு தொடர்பு படுத்திப்பாடியுள்ளனர். இதனையும் நோக்கும்போது புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் பல பாண்டியர் காலத்தில் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆனால் சேரர்கள் தான் தொகுத்தார் என்று கா. சிவத்தம்பி, அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம் போன்றோர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் சேரர்களே செல்வச் செழிப்புடன் விளங்கினர் என்பதாகும். அதன் காரணமாகவே பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் செம்மையாக அமைந்துள்ளன.

மானுடவியல் நோக்கில் தொகுப்பு முறை

      களவேள்வி, பிள்ளையாட்டு, வாள் மங்கலம், சிலம்புகழி நோன்பு, திணைதுறைகள் போன்றவற்றை விளங்குவதற்கு மானிடவியல் அவசியம். ரொமிலா டாபர் அவர்களின் இந்திய வரலாறு என்னும் நூலில் இந்தியாவில் இருந்த மானிடவியல் கூறுகளைப் பற்றிய ஆழ்ந்த செய்திகளைத் தந்துள்ளார். வேலன் வெறியாடல் சடங்கு உட்பட அனைத்தும் மானிடவியல் துறை சார்ந்தது. இந்நிகழ்வு இன்றும் கேரள மாநிலம் வடக்கு மாவட்டத்தில் நடைபெறுகிறது.

ஏறு தழுவுதல் என்பதும் மானிடவியலில் ஒரு பகுதி. அதிலும் ஏறு தழுவி பெண்களை மணப்பது என்பது பழந்தமிழர்களின் முறைகளில் ஒன்று. இன்றும் ஏறு தழுவுதல் என்பது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்றைத் தழுவி பெண்ணை மணத்தல் என்பது அன்பின் ஐந்திணையில் வைக்க முடியாது. ஆனால் சங்கப் புலவர்கள், தம்முடைய பாடல்களில் தலைவியரின் காதலர்கள்தான் ஏற்றைத் தழுவி இவர்களை மணந்தார்கள் என்று செய்திகள் இருக்கின்றன. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்ற தொல்காப்பிய நூற்பா திருமணத்தின் முக்கியத்துவத்தையும் பின்னர் எழுந்த காதல் வாழ்க்கையைப் பற்றியும் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் குறிப்பிடுவார். இவ்வாறு மானுடவியல் சார்ந்தும் தொகுப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது கருத்தாகும்.

நற்றிணை

      தொகைநூல்களில் பண்டைய இலக்கிய வாழ்வு மரபினைக் குறிப்பிடும் நூல். தொகுக்கும்போது குறுந்தொகைக்கும் நெடுந்தொகைக்கும் இடையே தொகுக்கப்பட்டது. எனவே இதனை நற்றிணை என்று பெயரிட்டனர். இந்நூலும் அகநானூறு போன்று தொகுப்பதற்கு முயற்சி நடைபெற்றுள்ளது. இருப்பினும் அது நிறைவேறவில்லை. ஏட்டுப்பிரதியில் திணை அடிப்படையில் இந்நூல் அமையவில்லை. இந்நூலுக்குச் சிறப்பாக அகத்திணையின் துறை விளக்கமாகிய கொளு உள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் பிற்காலத்தவராக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

216-ஆம் பாடலில் ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்பது கண்ணகியின் எச்சமாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இது அக்காலத்திய பெண்கள் தங்கள் கணவனைப் பிரிந்தால் ஒரு மார்பினை அறுத்துக்கொள்ளும் எச்சமாக இருந்திருக்க வேண்டும்.

குறுந்தொகை

       அகநானூறைத் தொகுப்பித்த உக்கிரப் பெருவழுதியின் பாட்டு நற்றிணையில் உள்ளது. நற்றிணையைத் தொகுப்பித்த பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியின் பாட்டும் உண்டு. குறுந்தொகை 270ஆம் பாடலும் இவனுடைய பாட்டே. எனவே அகநானூறும் நற்றிணையும் ஓரே காலத்தில் தொகுக்கப்பட்டன என்றும், உக்கிரப் பெருவழுதி, மாரிவன்கோ, கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது ஔவையார் பாடியுள்ளார். அப்பாடல் புறநானூற்றில் உள்ளது. எனவே புறநானூறும், அகநானூறும், குறுந்தொகையும் ஒரே காலத்தில் தொகுக்கப்பெற்றிருக்கலாம் என்ற செய்தி பெறப்படுகிறது.

       முதன்முதலாகத் தொகைநூல்கள் திணை அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டன. அது ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற நூல்களைப் பின்பற்றியே அமைந்திருக்க வேண்டும். குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்த சவுரிபெருமாள் அரங்கன் அதனைத் திணைவழியில் பதிப்பிக்க, அதனை மீண்டும் பதிப்பிக்க முனைந்த உ.வே.சா. அதனைக் கூற்று அடிப்படையில் பகுத்தார். இவருக்கு முன்பு ராமரத்தின ஐயர் என்ற ஒருவரும் குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளார் அவரும் திணை அடிப்படையிலேயே பதிப்பித்துள்ளார்.

ஐங்குறுநூறு

      ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்களுள் கபிலர் மட்டுமே வேறுநாட்டைச் சார்ந்தவர். மற்ற நால்வரும் சேரநாட்டைச் சார்ந்தவர்கள். தொல்காப்பியர் குறிப்பிடும் திணை வரிசைமுறையில் இது அமையவில்லை. இதற்குக் காரணத்தை உ.வே.சா. தம்முடைய பதிப்பு நூலில் குறிப்பிடுகிறார். பத்து பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒருபொருள் பற்றிய பத்து பாடல்கள் அமைந்துள்ளது. சிலவற்றிற்கு அப்பாடலின் அடியே தலைப்பாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்துள்ளது (ஒப்பிடுக: பதிற்றுப்பத்து). 

       இதில் மருதத்திணை முதலில் வைக்கப்பட்டதற்கான காரணம், சேர மன்னனை வாழ்த்திப் பாடுவதாக அமைந்த பாடல் தொடங்குகிறது. தொகுத்தவன் சேரமன்னன். எனவே இதனை முதலில் வைத்து தொகுத்திருக்கலாம். அதிலும் தொகுப்பித்தவனின் தேவையை நிறைவேற்றும் பொருட்டும் இவ்வாறு அமைந்திருக்கலாம். அடுத்து நெய்தல் திணை வைப்பிற்கான காரணம், சேரநாட்டு துறைமுகப் பட்டினமான தொண்டியின் பெயரால் அமைந்த பத்து பாடல் மரபே காரணம் என்றும் பின்னால் கபிலர் பாடிய குறிஞ்சியை இடையில் வைத்து அதன்பின்னர் பாலையையும், முல்லையையும் வைத்தார்கள் என்று உ.வே.சா குறிப்பிடுகிறார்.

       ஐங்குறுநூறு வாய்மொழி மரபை அதிகமாகக் கொண்ட ஒரு பாடல் தொகுதி. வாய்மொழி மரபின் நோக்கம், எளிதாகப் புரிந்துகொள்வது, வந்தசொல்லே மீண்டும் மீண்டும் வருவது. நினைவில் வைத்துக்கொள்ள இதுவே உதவும். ஏற்கனவே இருந்த ஒரு மரபை நினைவில் வைத்துக்கொள்ள இசை முக்கியமானது. பிற தொகை நூல்களில் வரும் வரலாற்றுச் செய்திகள் இதில் குறைவாகவே உள்ளது. ஓசை நயமும் ஒழுங்கிற்குமே இப்படி மீண்டும் மீண்டும் வரிகள் வந்தன என்பார் ராஜ் கௌதமன்.

பதிற்றுப்பத்து

      பதிற்றுப்பத்தின் பதிகங்கள் உ.வே.சா. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் வைத்துள்ளார். பின்னர் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அதனை முன்னர் வைத்து பதிப்பு செய்தனர். பதிற்றுப்பத்தில் வரும் பதிகங்கள் பிற்காலத்தில் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேரர்களின் வரலாற்றை அறிந்தவர்தான் எழுதியிருக்கிறார் என்பதும் அவை பலவும் கற்பனை கலந்த செய்திகளாகவே அமைந்துள்ளமையும் அவற்றில் உண்மை இல்லை என்பதும் அறியலாம்.

       அதோடு இதில் வரும் செய்திகள் அனைத்தும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. இதிலும் பல செய்திகள் உண்மை உள்ளன. இதனை வெளிநாட்டார் குறிப்புகள் வழி உறுதி செய்ய முடியும் என்பார் பேராசிரியர் மருதநாயகம்.

பரிபாடல்

      நாடக வழக்கினும்….. என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கின் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதனாலேயே இதற்கு இப்பெயர் வைத்தனர். பரிபாட்டு என்னும் யாப்பு வடிவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று செய்யுளியலில் (117) குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

       மு. அருணாச்சலம் அவர்கள் தம்முடைய தமிழிசை இலக்கண வரலாறு, தமிழிசை இலக்கிய வரலாறு என்னும் நூலில் பரிபாடலின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கலாம் என்றும், அறிஞர் சிவத்தம்பி தம்முடைய காலமும் கருத்தும் என்னும் நூலில் இந்நூல் பக்தி இயக்கத்தின் தொடக்கமாகக் கொள்வார்கள். பேராசிரியர் கபில்சுவலபிள் என்போரும் இக்கருத்தை ஏற்பர்.

பரிபாடல் முழுக்க வைதீகச் சமயக் கருத்துகளை எடுத்துரைக்கிறது. கிடைத்துள்ள 27 பாடல்களைப் பாடிய புலவர்களில் பெயர்களின் அடைகள் நிறைய உள்ளன. இந்நூல் முழுவதும் முருகன், திருமால் என்று தெய்வங்களைப் பரவுவதாகவே அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதியில் இதனைப் பாடியவர், இசையமைத்தவர், இசைக்குறிப்பு, கூற்று, வாழ்த்து என்று குறிப்புகள் உள்ளன இதன்மூலமே இது பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது என்ற உண்மை புலப்படும். 

கலித்தொகை

      கலிப்பாடல்களில் உள்ள ஐந்து திணைகளையும் சேர்த்து 150 பாடல்களையும் தொகுத்தவர்கள் பாண்டியர்களாக இருத்தல் வேண்டும். அதில் பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்ற குறிப்பு உள்ளது. நெய்தல் திணையில் அதற்கான உரிப்பொருள் இல்லை.

       திணை என்றால் பால், பொருள், ஒழுக்கம் என்று நச்சினார்க்கினியர் பொருள் கொள்வார். ஒழுக்கத்தின் அடிப்படையில் கலித்தொகையில் நெய்தல் திணை அமைந்துள்ள விதத்தினை எடுத்துரைத்தார்கள்.            

அகநானூறு

       அகத்திணை இலக்கிய முக்கூறு (முதல், கரு, உரி) சிறப்புக்கூறு (உரி) என விரவி வருகிறது. அகநானூற்றின் முக்கூறுகள் பெரும்பாண்மையான பாடல்களில் விரவி வருகின்றன. மற்றொரு பகுப்பாக, செருக்குற்று செம்மாந்து செல்லும் யானைபோன்றது களிற்றுயானை நிரை, மணியும் பவழமும் கலந்தாற் போன்ற காட்சிக்கு அழகுமிக்க மணிமிடைப் பவழம், நல்முத்தின் ஒளியெனவே பொருட்சிறப்பும் பொலிவும் கொண்டது நித்திலக்கோவை என்று பொருள் கூறுகின்றனர் உரையாசிரியர்கள்.

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறை பற்றி டாக்டர் தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலில், குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை இவைமூன்றில் மூன்றடி முதல் முப்பத்தோரு அடிவரை உள்ள முறையை நோக்கினால் இவை ஒரே நேரத்தில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்டவை என்ற உண்மை விளங்கும் என்பார். பேரறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தம்முடைய தமிழ்க்காதல் என்னும் நூலில் பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப்பாடவில்லை என்பதும் அடியெல்லை வகுத்தோரின் திறம் தொகுத்தோருக்கு உரியது என்பது நம் நினைவிற்கு வேண்டும். அடி பலவாகிய அகநானூற்றில் உரிப்பொருளைக் காட்டிலும் இயற்கையைக் காட்டும் முதற்பொருள், கருப்பொருள் பலபட புனையப்பட்டுள்ளன.

புறநானூறு

      புறப்பாடல்கள் பல சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாலும் ஒரு வரன்முறையில் தொகுக்க முயற்சி செய்துள்ளனர். அது, சேரர், பாண்டியர், சோழர் என்ற வைப்பு முறையில் முதல் 16 பாடல்கள் வருகின்றன. அதன்பின் 16 முதல் 26ஆம் பாடல்வரை சேரர், பாண்டியர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 27 முதல் 47 வரை சோழ அரசர்கள் மட்டுமே வருகின்றனர். 48 முதல் 85 வரை மீண்டும் பழைய முறைப்படி மூவேந்தர்களும் வரும்படியாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. 86 முதல் 181 வரை குறுநில மன்னர்கள் மட்டுமே இடம்பெறுகின்றனர். 182 முதல் 247 வரை குறுநில மன்னர்கள், வேந்தர்கள் பாடிய வஞ்சினப் பாடல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 248 முதல் 365 வரையான மீகநீண்ட எண்ணிக்கையிலான பாடல்கள் பொதுப்பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இறுதியாக வரும் 366 முதல் 400 வரையிலான பாடல்கள் சேர, பாண்டிய, சோழ, குறுநில மன்னர்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.

புறநானூறு தொகுக்கப்பட்டமை திணை அடிப்படையிலும், மன்னர்கள் அடிப்படையிலும் என்ற இரண்டு முறையாகும். புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள துறைகளில் படி புறநானூறு தொகுப்பு அமைந்துள்ளது.

பத்துப்பாட்டு

      சங்க இலக்கிய அகப்பாடல்கள் மக்களைப் பாடுவது. அதில் சற்று முரண்பட்டு பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் மக்களுக்கான ஆற்றுப்படை நூல்களாக வந்துள்ளன. அவற்றின் முதன்முதலில் வைக்கப்பட்டது திருமுருகாற்றுப்படை. இது காலத்தினால் பிந்தியது.

       நெடுநல்வாடையில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிக்காக நச்சினார்க்கினியர் அதனைப் புறப்பாடல் என்றார். அதனை மறுத்து பேயை விரட்டவும் சங்க இலக்கியங்களில் வேம்பு பயன்படுத்தப்பட்டது. எனவே அதன்காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் வரும் 99 மலர்கள் ஆசிரியர் தன்னுடைய காலத்தில் இருந்த மலர்களைப் பதிவு செய்ய வேண்டியதற்காகவே தந்துள்ளார்.

       காலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது திருமுருகாற்றுப்படை காலத்தினால் மிகவும் பிற்பட்டது. இருப்பினும் பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்து இல்லையாகலான் அதனை முன்னர் வைத்துள்ளனர். இது ஒரு சமய அரசியல் என்று கூறலாம்.

சங்க இலக்கியம்: தொகுப்பு அரசியல்

சங்க இலக்கியத்தில் சங்கம் என்ற சொல்லே இடம்பெறவில்லை. இறையனார் களவியலுரை குறிப்பிடாத பத்துப்பாட்டை உள்ளடக்கியதும் பாட்டும்தொகையும் என உரைகளில் குறிப்பிடப்பெறுவதும் சங்ககாலத்தைத் தொடர்ந்து கலித்தொகை பரிபாடல் காலங்கள் வரையில் தொகையாக்கம் செய்யப்பட்டதும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுமான சங்கஇலக்கியத் தொகையாக்கம் என்பது ஒரு தெளிவான வரலாற்றையும் உரிய தொகையாக்க காலத்தையும் வெளிப்படுத்துவனவாக இல்லை. இப்படிப்பட்ட தொகையாக்கக் காலத்தின் அரசியல் சூழ்நிலையும், இறையனார் களவியல் உரையில் கடவுள்களைத் தொடர்புபடுத்திப் பேசப்பட்ட அரசியலும் உள்ளது.

தொகையாக்கத்தில் பெரும்பாலும் மத அரசியல் பின்னனிகள் இருந்துள்ளன. பதிப்புகள் இறைமையாக்கப்பட்டன. இதனைப் பல்வேறு சங்கப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன. இதனைத் தொகுத்தவன் ஒரு அந்தணனாக அடையாளப் படுத்தப்படுகிறான். இறைமையும் அரசும் களவியல் உருவாக்கத்தின் பின்னணிகளாக ஆக்கப்பட்டிருப்பதே அதன் அரசியலாக உள்ளது.

பாடல்கள் பாடப்பட்ட காலம் வேறு. தொகையாக்கம் செய்யப்பட்ட காலம் வேறு. இக்கருத்தை அறிஞர் சிவத்தம்பி, பாண்டுரங்கன் போன்றோரின் மேற்கோள் மூலம் அறிய முடிகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் மிகப்பெரிய அளவிற்குப் புறத்திணைகள் சேர்க்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் புறநானூறு தொகுக்கும்போது ஏற்பட்ட தொகையாக்க அரசியல் அவற்றின் வைப்புமுறை போன்றவற்றை மிகவும் விரிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. பெயர் சுட்டா மரபு என்பவை அகப்பாடல்களுக்கு மட்டுமல்லாது புறப்பாடலாகிய புறநானூற்றிலும் சில பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

சங்க அகப்பாடல்களில் அதிகம் வேந்தர்களின் மேலாண்மை ஓங்கியிருந்தது என்பதை அகப்பாடல்களில் உள்ள வேந்தர்களின் வரலாற்றுச் செய்தி அடிகளின் எண்ணிக்கை நமக்குப் புலப்படுத்துகிறது. 

 

குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...