இலக்கணம் சிலருக்கு
வேப்பங்காயினும் கசப்பாய் இருக்கும் என்பர். நன்னூலை விட தொல்காப்பியம் கடின நடையுடன்
விளங்குகின்றது என்பது சிலர் கருத்து. ஏன் மரபிலக்கணங்கள்? மரபினைப் பின்பற்றி எழுதும்
வழக்கம் இன்றில்லையே… என்பது சிலரின் எண்ணம். மரபிலக்கணங்களை விடுத்து, அதனை மீளாய்வு
செய்து – மீள் வாசிப்புக்கு உட்படுத்தி – மீள் கட்டமைப்பு செய்யவேண்டிய தேவையுள்ளது
என்பர் சிலர். இதுபோன்ற பல்வேறு இலக்கணக் கட்டமைப்பு கருத்தாக்கங்கள் உருவானபோதிலும்
தொல்காப்பிய மூலத்தினைப் படித்துணராமல் இதனைப் பேசுவது வீண்வேலை.
தொல்காப்பியம் தொடங்கிப்
பல்வேறு இலக்கண நூல்கள் கிளைத்து வளர்ந்து விழுதூன்றியுள்ளன (காண்க: ச.வே.சு. – தமிழ்
இலக்கண நூல்கள்). அவற்றுள் வீரசோழியம் தவிர்த்த ஏனைய நூல்கள் தொல்காப்பியத்தை அடியொற்றியே
அமைந்துள்ளன. எனவே மற்றைய இலக்கண நூல்களை நாம் அறிந்துகொள்வதற்கு முன்பு தெரிந்திருக்கவேண்டியது
தொல்காப்பிய இலக்கணமும் அதுதோன்றிய சூழலுமே. வெறும் மூலத்தை மட்டும் படித்துப் பொருள்தெரிந்து
கொள்ள முயல்வது ‘குன்று முட்டிய குரீஇ போல’ (உரையாசிரியர் குறிப்பிடுவது) ஆகிவிடும்.
எனவே அதற்கான முன்னுரையாக
இடம்பெற்றுள்ளதும், அதனை அறிமுகம் செய்து வைக்கின்ற விதத்தில் அமைகின்றதுமான தொல்காப்பிய
அறிமுகம் என்ற இந்நூலினை (தொடர் சொற்பொழிவின் தொகுப்பு) முறையாக வாசித்தால் நன்மை ஏற்படும்.
தொல்காப்பிய இலக்கணத்தை நன்றாக உணர்ந்து அதனையே மொழியியல் நோக்கில் ஆராய்ந்தவரும் புத்திலக்கணம்
படைத்த (இக்காலத் தமிழ் இலக்கணம்) ஆசிரியருமான பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள்,
அதனை விளக்கிச் செல்லும் பாங்கு ஒரு குழந்தையை வழிநடத்துவதை ஒக்கும். இது உண்மை வெறும்
புகழ்ச்சி இல்லை. அவருடைய நூல்களைப் படித்துணர்ந்தோருக்கு இது தெளிவு.
தொல்காப்பியம் முழுவதையும்
படித்தவர்களுக்கு இந்நூல் ஒரு குறிப்பேடாகவும், முதன்முதலில் படிக்கப் புகுவோருக்கு
இந்நூல் ஒரு கைவிளக்காகவும் அமையும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன