பத்துப்பாட்டுள் உள்ள இரண்டு ஆசிரியப்பாட்டுக்களே
முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும். இவ்விரண்டு பாடல்களையும் பாடியோர்
முறையே காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார், கபிலர்
ஆகியோர் ஆவர்.
இதில் நப்பூதனார் முல்லைப்பாட்டு மட்டுமே பாடியுள்ளார். கபிலர்
சங்க இலக்கியத்தில் மிக அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அகம் மற்றும் புறம் இரண்டிலும்
இவரது பாடல்கள் உள்ளன. அகத்தில் குறிஞ்சிப் பொருண்மை கொண்டே அதிக பாடல்களைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சிக்குக் கபிலர் என்ற சிறப்பும்
இவருக்கு உள்ளது. நப்பூதனார்,
கபிலர் இவர்கள் இயற்றிய முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
இரண்டையும் உரிப்பொருள் அடிப்படையில் ஒப்பிட்டுக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக
அமைகின்றது.
உரிப்பொருள் அடிப்படை
உரிப்பொருள் என்று இலக்கணிகள் வகைப்படுத்துவது ஒவ்வொரு நிலத்திற்குரிய
ஒழுக்கங்களாக அமைந்துள்ளது. அவற்றைத் தொல்காப்பியர்,
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே (தொல். அகத்திணையியல்,
14)
என்று
குறிப்பார்.
அகப்பாடல்களுக்கு உரிப்பொருள் அடிப்படையாக அமைய வேண்டும்
என்பது பொது விதி. அவை மயங்கி வருதல் கூடாது என்பது இலக்கணிகள் கருத்து.
முதற்பொருளும்
கருப்பொருளும் மயங்கினும் எந்நிலத்திற்கு உரியன எந்நிலத்திற்கு வந்தாலும் உரிப்பொருள் மாறி அமைதல் கூடாது. இதனை,
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத்திணையியல்,
13)
என்ற
தொல்காப்பிய நூற்பா இதனைச் சான்று காட்டி நிற்கின்றது.
இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருண்மைகளான முல்லைப்பாட்டு,
குறிஞ்சிப்பாட்டு இரண்டும் உரிப்பொருளை அடிப்படையாகவும்
அடையாளமாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
திணையும் அவற்றின் புறனும்
முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் இருத்தல் இருத்தல் நிமித்தமும், குறிஞ்சிக்குப்
புணர்தல் புணர்தல் நிமித்தமும் ஆகும். இவ்விரு திணைகளையும் தொல்காப்பியனார் புறத்திணையியலில்
முறையே முல்லைத்திணை வஞ்சிக்குப் புறனாகவும் குறிஞ்சித்திணை வெட்சிக்குப் புறனாகவும் குறிப்பிடுவார். அதனை,
வஞ்சிதானே முல்லையது புறனே (தொல். புறத்திணையியல்,
6)
என்றும்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே (தொல். புறத்திணையியல்,
1)
என்றும்
குறிப்பிடுவார்
தொல்காப்பியர்.
இதில் முல்லைக்குப் புறனாக வஞ்சி வந்தது எவ்வாறெனின் தலைவனின்
பிரிவால் தலைவி ஆற்றியிருத்தலும் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிய தலைவன்
வெற்றிவாகை சூடக் காத்திருப்பதும் ஒப்பு நோக்கியே தொல்காப்பியனார் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதோடு நற்சொல் கேட்டல் என்பது முல்லைத்திணையில் தலைவன் வரவிற்காகக் காத்திருக்கும்
தலைவிக்கும், வஞ்சித்திணையில் போருக்குச் செல்லவிருக்கும் தலைவனுக்கும் பொருந்தி
வருகின்றது. எனவே முல்லைக்கு வஞ்சியைப் புறனாகத் தொல்காப்பியர் வைத்திருக்கலாம்
என்பது மற்றொரு கருத்து.
வெட்சிக்குப் புறனாகக் குறிஞ்சி வந்ததற்கு ‘‘நிரைகோடல் குறிஞ்சிக்கு உரிய மலைசார்ந்த நிலத்தின் கண் நிகழ்தலானும் இந்நிலத்தின்
மக்களாயின் பிறநாட்டு ஆநிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய
களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று’’
என்று இளம்பூரணர் குறிப்பிடுவார்.
பாட்டு என்பதன் விளக்கம்
சங்க இலக்கியப் பத்துப்பாட்டில், பாட்டு
என்று வருபவை இரண்டு. அவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் மட்டுமே. பாட்டு
என்பதற்குத் தொல்காப்பியர்,
அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே (தொல். செய்யுளியல்,
34)
என்று
கூறுகின்றார்.
மறைமலையடிகள் தம் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில்
பாட்டு என்பதற்கு விளக்கம் தருகின்றார். அவ்விளக்கம் வருமாறு,
‘‘உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம்
தன்னகத்தே நெருங்கிப் பொதிந்து வைத்துப்பின் அவற்றை நம் அறிவினிடத்தே
புலப்படுவண்ணந் தோற்றுவித்துப் பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன்
இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டு’’ என்று
குறிப்பிடுவார்.
‘‘பாட்டு என்பது அடிகளால் பரந்துபட்ட ஓசையுடன் வருவது’’ என்று ச.வே.சு.
தம் பத்துப்பாட்டு உரையில் தொல்காப்பியர் வழிநின்று விளக்கிச்செல்கின்றார்.
பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் அடிச்சிறப்பும் பொருள்
சிறப்பும் இனிய ஓசையும் கொண்டு அமைந்து பாட்டிற்குரிய பொதுவான இலக்கணம் கொண்டு
அமைந்துள்ளன.
முல்லைப்பாட்டின் பின்புலம்
முல்லைப்பாட்டு பாடிய நப்பூதனார், தொடக்கத்திலேயே
முல்லை நிலத்திற்குரிய தெய்வமான திருமாலை முன்னிறுத்திக்
கூறுகின்றார். அதிலும் திருமாலின் வாமன அவதாரத்தில் உள்ள நிகழ்வைக் கார்காலத்தோடு
ஒப்பிட்டுக் கூறத்தொடங்குகின்றார்.
அப்படிப்பட்ட கார்காலத்தே திரும்பி வருவேன் என்று கூறிய
தலைமகன் காலம் நீட்டித்தான். அதனால் தலைவி துன்பமெய்தினாள். அவளை ஆற்றுப்படுத்த
நற்சொல் கேட்டனர். அதனை நப்பூதனார்,
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள்கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
என்று
குறிப்பிடுகின்றார்.
அதனை
ஏற்காத தலைவி, தலைவன் பிரிவை நினைத்து வருந்தி நின்றாள்.
தலைவன் நிலையைக் காட்ட அவன் தங்கி இருக்கும் பாசறை வீடு, அதன்
அமைப்பு, போன்றவற்றையும் அங்கு உள்ள யானைகளுக்குப் பாகர்கள் சோறு ஊட்டுவதும் என
விளக்கிச் செல்கின்றார்.
மகளிரும்
இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். அதனை,
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரிவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
என்ற
அடியின் மூலம் நப்பூதனார் விளக்கிச் செல்கின்றார். இவ்வாறான பாசறையில் உள்ள பள்ளியறையில்
காவலர்கள் சூழ தலைவன் இருந்தான். அவனுடைய சிந்தனை முழுவதும் அடுத்த நாள் போர்
பற்றியும் அன்று நடந்த போரில் இறந்த வீரர்களைப் பற்றியுமாக இருந்தது. இதனை,
ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
என்ற
அடிகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது. அதோடு தலைவியைப் பிரிந்த தலைவன் அவளின்
நினைவு சிறிதும் இன்றித் தன் வினையில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.
பிரிவுகளில் போர்வயிற் பிரிவின் போது மட்டும் தலைவியைத் தலைவன் நினையாமல் இருப்பான்
என்பது செய்தி.
அடுத்த நாள் போரில் வெற்றி வாகை சூடி பகைவர்கரின் இடத்தில்
உள்ள பாசறையில் நிம்மதியாகத் தூங்கினான் என்று அவனது வினைமுடிந்து விட்டதை
நப்பூதனார் தெளிவுபடுத்துகிறார். தலைவியின் நிலை கண்டு சுற்றத்தார் அவளைத்
தேற்றினர். தலைவனும் வினை முடித்துத் தலைவியிடம் வந்து சேர்ந்தான்.
முல்லைப்பாட்டின் அடிச்சிறப்பு
முல்லைப்பாட்டு முதல் 23 அடிகள் தலைவியின்
பெருந்துயர் பற்றியும் 24 முதல் 80 அடிகள் வரை தலைவன் போர்க்களப் பாசறை நிலை பற்றியும் 81 முதல்
103 அடி வரை தலைவியின் பெருந்துயர் போக்க தலைவன் வந்ததையும் கொண்டு அமைகின்றது. இதில்
மேற்கூறப்பட்டவாறு அகத்திணையான முல்லையும் புறத்திணையான வஞ்சியும் கலந்து
வருகின்றது.
இவ்வாறு பாட்டில் இடையறுந்து செல்லுதல் படிப்போரைத்
தூண்டச்செய்யும் என்பார் மறைமலையடிகள். இம்முல்லைப்பாட்டில் வரும் செய்திகள்
இருத்தலை அதாவது உரிப்பொருளை மையப்படுத்தியே அமைகின்றது.
குறிஞ்சிப்பாட்டின் பின்புலம்
குறிஞ்சிப்பாட்டு தலைவியின் நிலைபற்றித் தோழி செவிலிக்கு
அறத்தோடு நிற்றல் என்னும் துறையில் அமைந்த பாட்டு. இதில், தலைவி திணைப்புனக்
காவலுக்குச் செல்கிறாள். அவளுடன் தோழியும் செல்கின்றாள். அங்கு அவர்கள் கிளியை
ஓட்டிக் கொண்டிருந்த போது மழைபெய்தது. அதனால் அவர்கள் நீராடி அங்குள்ள பல்வகையான
மலர்களைப் பறித்துப் பாறையின் மீது போட்டு தழையாடைகளை உடுத்தினர். இவ்வாறாக
அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலைவன் வருகின்றான். அவன் தலைவியிடம்
பேசமுற்படுகின்றான். அவள் பேசவில்லை. அப்போது அங்கு யானை அவர்களை விரட்டுகின்றது.
தலைவி உடனே தலைவனின் பின் சென்று மறைந்துகொள்கின்றாள். அதனை,
திருந்துகோல் எல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்திச் சூர்வறு மஞ்ஞையின் நடுங்க
என்று
தலைவியின் பயத்தைக் கபிலர் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
அவளது பயத்தை அறிந்த தலைவன் யானையைத் தன் கையில் உள்ள அம்பால் எய்கின்றான். அந்த அம்பானது, யானையின் முகத்தில் பட்டு இரத்தம் வழியவழிய அது ஓடி மறைகின்றது. அதன் பிறகு தலைவியிடம் இல்லற வாழ்வு
பற்றிக் கூறி அவளுடன் புணர்ந்தான்.
மாலைக்காலத்தில் அவன் தலைவியை விட்டுப்பிரிந்தான். பிரியும் முன்னர் உன்னை (தலைவியை)
மணப்பேன் என்று ஆணையிட்டு நீரைக்குடித்து உறுதிகூறினான். இதனைக் கபிலர்,
.......
....... ....... பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
அம்தீம் தெள்நீர் குடித்தலின்
என்று
விளக்கிச்செல்கின்றார்.
அன்று முதல் தலைவி,
தலைவன் நினைவில் துன்பமுற்று வாடுகின்றாள். அவள்
வருந்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது, தலைவன் தன்னைச் சந்திக்க இரவுக்குறிக்கண் வரும்போது அவனுக்கு ஏற்படும்
இடற்பாடுகளை எண்ணியும் வழியின் அருமை
கருதியும் வருந்தி நிற்கின்றாள் என்று தோழி செவிலியிடம் அறத்தோடு நிற்கின்றாள்.
குறிஞ்சிப்பாட்டின் அடிச்சிறப்பு
குறிஞ்சிப்பாட்டு இயற்கைப் புணர்ச்சி பற்றிப்பேசுகின்றது.
இயற்கைப்புணர்ச்சி மூன்று வகையில் நிகழும். அவை
பூத்தரு புணர்ச்சி,
புனல்தரு புணர்ச்சி,
களிறுதரு புணர்ச்சி என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவ்வகையில் இக்குறிஞ்சிப்பாட்டு களிறுதரு புணர்ச்சியில் அமைந்துள்ளது. கபிலர் குறிஞ்சிக்குரிய நிலத்தெய்வமான முருகனைத் தலைவனுடன் ஒப்பிட்டுக் கூறுவது சிறப்பு. அதோடு 99
வகையான மலர்களைப் பற்றியும் இக்குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.
குறிஞ்சிப்பாட்டில் வரும் பின்புலமெல்லாம்
அதன் உரிப்பொருளான புணர்தலை மையப்படுத்தியே அமைகின்றது. 99
மலர்களைப்பற்றிக் குறிப்பிடும்போதும் புணர்தலை மையப்படுத்தியே காட்டுகின்றார் என்பது கருத்து.
இதனாலேயே இவர் இப்பாட்டிற்குக் குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் வைத்திருக்கலாம்.
இறுதியாக,
மேற்கூறப்பெற்ற இரண்டு பாடல்களையும் முழுமையாகப்
படிக்குந்தோறும் அவை அந்நிலத்திற்கு உரிய
உரிப்பொருள்களான இருத்தல்,
புணர்தல் மட்டுமே மையப்படுத்தப்படுகிறது.
பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
தவிர்த்த ஏனைய பாடல்களல் உரிப்பொருள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.
இவை இரண்டில் மட்டுமே உரிப்பொருளின் பொருண்மை முழுமையாகக்
கையாளப்பட்டுள்ளது.
அகத்திணைகளான முல்லை, குறிஞ்சிக்குத்
தொல்காப்பியர் வகுத்த புறத்திணைப்
புறன் இரண்டிற்குமே சரியாக ஒத்து வருகின்றது.
இரண்டுமே நிலத்தின் பெயரிலேயே
பாடல்களின் தலைப்புக்கள் அமையப்பெற்றுள்ளன.
பாட்டின் சிறப்பே அடியென கூறும் தொல்காப்பியரின் கூற்று இரண்டிலும் பொருந்தி வருகின்றது.
இரண்டுமே பாட்டு என்றே முடிகின்றது.
பெறப்பட்ட
முடிவுகளின் மூலம் இவை இரண்டு பாடல்களும் திணையால் உரியால் வேறுபட்டு நின்றாலும் சில ஒற்றுமைப்
பண்புகளைக் கொண்டுள்ளன என்பதே இந்த ஆய்வின் ஆய்ந்த
முடிவாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன