புதன், 11 மார்ச், 2020

இலக்கியத்தில் சூழலியல்




சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சமூக, அரசியல், பொருளாதார உலகலாவிய தத்துவ இயக்கமே சூழலியல் என்பர். சூழலியல் சார்ந்து இயங்குகின்ற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசுசார் நிறுவனங்கள் சூழலியல் மேம்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறன.
"சூழலியல் திறனாய்வின் ஒரு நூற்றாண்டு – 1864 - 1964" (A Century of Early Ecocriticism – 1864 - 1964) என்னும் ஆங்கில நூலை எழுதியதன் மூலம், டேவிட் மாசல் (David Mazal) என்பவர் சூழலியல் திறனாய்வுக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொடுத்தார். தொடர்ந்து பலரும் இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர். லாரென்சு புவெல் (Lawrence Buel) என்பார் இது தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் (பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், 2011, பக். 354). தமிழ் இலக்கியங்களும் சூழலியல் சார்ந்த பல்வேறு கூறுகளைச் சுட்டுகிறது. அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஐம்பூதக் கூறு
            தமிழிலக்கியங்களில் ஐம்பூதக் கூறு இடம்பெறுகிது. இயற்கையையே தெய்வமாக வழிபட்ட நம் முன்னோர்கள் அந்த இயற்கையை ஐம்பெரும் பூதங்களாகக் (கடவுளாக) கொண்டு வழிபாடு செய்துள்ளனர். அந்த ஐம்பெருங் கூறுகள் பற்றிய செய்தி பல்வேறு இலக்கண இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.
நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்                               (தொல்.பொருள்.மர: 644)

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதைவரு வளியும்
தீமுரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை                            (புறநானூறு: 12)

                                    நீரு நிலனுந்தீயும் வளியு
மாக விசும்போடு ஐந்தும் உடனியற்ற      (மதுரைக்காஞ்சி: 453 - 454)
என்ற ஐம்பெரும் இயற்கை அமைப்பே உலகம் என்ற கோட்பாடு அனைத்திலும் வலியுறுத்தப்பெற்றுள்ளது.
இயற்கையோடு இயைந்த வாழ்வு
          சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடங்கள் இயற்கை சார்ந்த சூழல்பரப்பாகவே காணப்படுகிறது. அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகூட ஒரு குறிப்பிட்ட மரத்தையோ அல்லது அதனைச் சார்ந்த ஒரு இடத்தையோ வைத்தே நிகழ்த்தப்படுகிறது. சங்கத் திணைச் சூழல் சார்ந்த வாழ்க்கையுடன், தமிழர்கள் தங்களைப் பொருத்திக் காண்பது இயல்பாக நடந்தேறியுள்ளது. தான் சிறுமியாக இருந்தபோது செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தனது உடன்பிறந்தவளாகக் கருதி, அம் மரத்தின் அருகில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கிறாள் இளம்பெண் (நற்றிணை, 172).
தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலனை நினைந்து வருந்துகிற இளம்பெண், இரவு நேரத்தில், தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம், ‘உன்னிடம்கூட தூதுசொல்லக் காதலன் மறந்துவிட்டான்’ என ஆதங்கப்படுகிறாள் (குறுந்தொகை, 266).
இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் பிரிவினால் வாடுகிற மனதைத் தேற்றுவது இவ்விரு பாடல்களிலும் பதிவாகியுள்ளது. இதேபோல், காளிதாசர் எழுதி, மறைமலையடிகள் மொழிபெயர்த்த சாகுந்தலம் நாடகத்தில்கூட சகுந்தலை, தன்னைவிட்டுச் சென்ற கணவனைக் காண புறப்படும்போது, அவள் தன் மகள்போல வளர்த்த மல்லிகைக் கொடியை விட்டுப் பிரியும்போது ஏற்படும் மனவருத்தத்தைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரம் உள்ளிட்ட அஃறிணை உயிர்கள் அவளின்மீது பரிவுகொண்டுள்ள திறத்தைக் குறிப்பிட்டுச் செல்வார்.
தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அவற்றையே தம் உறவுகளாக்கி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.
சூழலியப் பாதுகாப்பின் முன்னோடி
            இயற்கையைப் பாதுகாப்பதே நம் வாழும் இச்சமூகத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. தற்போதுள்ள இயற்கை வளங்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அதனை வழங்கியே ஆகவேண்டும். எனவே இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதே அதற்கான தீர்வாக அமையும். இவ்வாறு நம் முன்னோர்கள் இயற்கையைப் பாதுகாத்து, அதனோடு இயைந்து வாழ்ந்துள்ளனர்.
            சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பெறும் ஏழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகளில் பாரி, பேகன் இருவரும் செய்கிற கொடைகளை மடக்கொடை என்று அழைப்பர். அதனை,  
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்
கானம் மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெரு மகன்
பெரு கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாகம் நெடு வழி
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி                       (சிறுபாண், 84 – 91)
என நத்தத்தனார் பாடுவார்.
            மயில் என்ற அஃறிணை உயிர் குளிரால் நடுங்குகின்றது என எண்ணி தன் போர்வையைத் தந்த பேகனும், முல்லைக்கொடி தன் தேர்க்காலில் நசுங்கிவிடக் கூடாதே என்று தன்னுடைய தேரையே முல்லைக்கொடிக்கு வழங்கிய பாரியும் மனிதர்களில் மாமனிதர்களாக இன்றும் போற்றப் பெறுகிறார்கள். அவர்கள் போற்றப் பெறுதலுக்குக் காரணம் அவர்கள் இயற்கை மீதுகொண்ட பற்றே என அறியலாம்.
இயற்கைசார் மருத்துவம்
இயற்கையோடு வாழ்ந்த மக்கள் அந்த இயற்கை தந்த மருத்துவப் பொருள்களையே உட்கொண்டனர். அதனை அவர்கள் மருத்துவச் சுவடிகளாக எழுதிவைத்தனர். மருந்து பொருள்கள் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு நோயை நீக்குகிறதோ, அதேபோல் பல்வேறு குணநலன்கள் இணைந்து ஒரு மனிதனை நல்முறையில் வாழ வைக்கிறது என்பதற்கு அடையாளமாகவே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற மருத்துவம் சார்ந்த பெயர்களைக் கொண்டு நூல்கள் அமைத்தனர்.
உணவு கொடுப்பவரே உயிர் கொடுப்பவரைப் போலாவார் என்று இலக்கியங்கள் கூறும். உணவு என்பது நிலத்தோடு நீரும் சேர்ந்ததே ஆகும். இதனை,
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;                      (புறநானூறு, 18)
என்ற பாடல் புலப்படுத்தும்.

                                    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                                    உழந்தும் உழவே தலை (குறள். 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள். 1033)
என வள்ளுவரும் நிலத்தைப் பண்படுத்தும் உழவுத் தொழிலைச் செய்வோரைப் பெருமைபடப் பேசுவார்.
சூழலியமும் சமூக மேம்பாடும்
        சூழலியப் பாதுகாப்பின் வழியே மனித சமூகம் மேம்பாடு அடைய இயலும். தான் வாழும் சூழலும், தன்னைச் சார்ந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வாழ்கின்றனர். இலக்கியங்களில் இடம்பெறும் ஐந்து நிலத்திற்கான மக்களையும் குறிப்பிடும்போது, அவர்களின் சூழலியலுக்கு ஏற்பவே அவர்களின் தொழிலும் அமைகிறது. குறிஞ்சி நில மக்கள் மலையும் மலைசார்ந்த பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும், மருத நில மக்கள் வயல்வெளிகளாலும், பசுக்களாலும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தம் சூழலைப் பாதுகாப்பதும் நடைபெறுகிறது. அதேபோல்தான், முல்லை, நெய்தல் நில மக்களும் தங்களுடைய சூழலினைப் பாதுகாத்து வந்துள்ளமை புலனாகிறது.
            இனக்குழுக்கள் பல இணைந்து சமூகமானது. அச்சமூகத்திலிருந்து நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம் பிறந்தது. அதேபோல் இயற்கையைப் பாதுகாப்பதும், அதன்மூலம் பயன்பெறுவதும் அவர்களின் குறிக்கோளாய் இருந்தது. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலும் இதனையே உணர்த்துகிறது. 
இயற்கை அழிவும் சூழலியப் பாதுகாப்பும்
            சங்க மன்னர்கள் தம்முடைய வீரத்தை நிலநாட்ட வேண்டியும், பொன் வேண்டியும், பெண் கேட்டும், நிலத்திற்காகவும் பல சிற்றரசுகளின் ஊர்களையும், காடுகளையும் அழித்து, ஏரி குளங்களை அழித்து தமதாக்கிக் கொண்டனர் அல்லது பாழ்படுத்தினர். இதனை, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கிய இலக்கணங்கள் பதிவுசெய்துள்ளன. அவற்றை முறையே உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி (புறம். 7, 16, 21) எனக் குறிப்பர்.
                                    நேராதார் வளநாட்டைக்
                                    கூரெரி கொளீஇயன்று       (பு.வெ.மாலை)
இன்று உலகில் ஏற்படும் பல்வேறு பேரிடர்களால் காடுகளும், மலைகளும், நதிகளும், வெப்பமும் தம்முள் மாறி, ஏதோவொரு விதத்தில் அழிவை உண்டாக்கிச் செல்கிறது. இந்த அழிவுகள் மனிதர்களின் அறியாமையும், அவர்களின் முறையற்ற பயன்படுத்தத்தினாலுமே உருவாகிறது. தடைசெய்யப்பட்ட நெகிழிகளை உபயோகிப்பதும், மண்ணிற்குத் தேவையற்ற பூச்சிக்கொல்லி உரங்களைத் தெளிப்பதும், காடுகளை அழித்து நகரங்களை மேம்படுத்துதல், மணலைச் சுரண்டுதல் போன்றவை இயற்கை அழிவுக்கு முதன்மையான காரணியாக அமைந்துள்ளது.
                                    காடுகொன்று நாடாக்கி
                                    குளந்தொட்டு வளம்பெருக்கி
என்பன இன்றைய சூழலில் தேவையெனினும், அதற்கேற்றாற்போல் இயற்கை வளங்களைப் பெருக்கவும் வழிவகை செய்ய வேண்டியுள்ளது. இயற்கை அழிவு என்பது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிராக முடியும். சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம். சூழலியத்தைப் பேணிக்காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...