மகாகவி பாரதி
5.
சபதச் சருக்கம்
61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்
இவ்வுரை
கேட்ட துச்சாதனன்
-- அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன். -- இவன்
செவ்வி சிறிது புகலுவோம். -- இவன்
தீமையில் அண்ணனை வென்றவன்; -- கல்வி
எவ்வளவேனும் இலாதவன்; -- கள்ளும்
ஈரக் கறியும் விரும்புவோன்; -- பிற
தெவ்வர் இவன் தனை அஞ்சுவார்; -- தன்னைச்
சேர்ந்தவர் பேயென்று ஒதுங்குவார்; 60
புத்தி விவேகம் இல்லாதவன்; -- புலி
போல உடல்வலி கொண்டவன்; -- கரை
தத்தி வழியும் செருக்கினால் -- கள்ளின்
சார்பின்றியே வெறி சான்றவன்; -- அவ
சக்தி வழிபற்றி நின்றவன்; -- சிவ
சக்தி நெறி உணராதவன்; -- இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன்; -- என்றும்
நல்லவர் கேண்மை விலக்கினோன்; 61
அண்ணன் ஒருவனை அன்றியே -- புவி
அத்தனைக்கும் தலையாயினோம் -- என்னும்
எண்ணம் தனதிடைக் கொண்டவன்; -- அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்திடான்; -- அருட்
கண்ணழிவு எய்திய பாதகன் -- ‘அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா’ என்று அவ்
அண்ணன் உரைத்திடல் கேட்டனன்; -- நல்ல
தாம் என்று உறுமி எழுந்தனன். 62
பாண்டவர் தேவியிருந்ததோர் -- மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்தனன்; -- அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் -- நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன்; -- அவள்
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள்; -- ‘அடி,
செல்வது எங்கே’யென்று உரைந்திட்டான். -- ‘இவன்
ஆண்டகை யற்ற புலையன் என்று -- அவள்
அச்சம் இலாது எதிர் நோக்கியே, 63
----------
62.
திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும்
சம்வாதம்
‘தேவர்
புவிமிசைப்
பாண்டவர்;
-- அவர்
தேவி, துருபதன் கன்னி நான்; -- இதை
யாவரும் இற்றை வரையினும், -- தம்பி,
என்முன் மறந்தவர் இல்லைகாண். -- தம்பி
காவல் இழந்த மதிகொண்டாய்; -- இங்குக்
கட்டுத் தவறி மொழிகிறாய். -- தம்பி,
நீவந்த செய்தி விரைவிலே -- சொல்லி
நீங்குக’ என்றனள் பெண்கொடி. 64
‘பாண்டவர்
தேவியும் அல்லை நீ;
-- புகழ்ப்
பாஞ்சாலத் தான் மகள் அல்லை நீ; -- புவி
ஆண்டருள் வேந்தர் தலைவனாம் -- எங்கள்
அண்ணனுக்கே அடிமைச்சி நீ. -- மன்னர்
நீண்ட சபைதனில் சூதிலே -- எங்கள்
நேசச் சகுனியோடு ஆடியங்கு -- உன்னைத்
தூண்டும் பணயம் என வைத்தான் -- இன்று
தோற்றுவிட்டான் தருமேந்திரன். 65
‘ஆடி
விலைப்பட்ட
தாதி
நீ;
-- உன்னை
ஆள்பவன் அண்ணன் சுயோதனன். -- “மன்னர்
கூடியிருக்கும் சபையிலே -- உன்னைக்
கூட்டி வருக என்று மன்னவன் -- சொல்ல
ஓடிவந்தேன் இது செய்திகாண். -- இனி
ஒன்றும் சொலாது என்னொடு ஏகுவாய். -- அந்தப்
பேடி மகனொரு பாகன்பாற் -- சொன்ன
பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே.’ 66
வேறு
துச்சாதனன் இதனைச் சொல்லினான். பாஞ்சாலி: --
‘அச்சா,
கேள்.
மாதவிலக்கு ஆதலால்
ஓராடை
தன்னில் இருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை அழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே,
சோதரர்தம் தேவிதனைச் சூதில் வசமாக்கி,
ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல்,
மன்னர் குலத்து மரபோ காண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுகநீ’ என்றிட்டாள்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தே அப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தான் இழுத்தான்.
‘ஐயகோ’
வென்றே
அலறி
உணர்வற்றுப்
பாண்டவர் தம் தேவியவள் பாதி உயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச்
சென்றான்.
வழிநெடுக,
மொய்த்தவராய்,
‘என்ன
கொடுமையிது’
என்று
பார்த்திருந்தார்.
ஊரவர்தம்
கீழ்மை
உரைக்கும்
தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னர் அறங்கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கே போய்க் ‘கோ’வென்று அலறினாள்.
---------------
63.
சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
விம்மியழுதாள்:
-- ‘விதியோ
கணவரே,
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டி எனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து,
பாதகர்முன் இந்நால் பரிசழிதல் காண்பீரோ?’
என்றாள். விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனும் மற்றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் புலம்புவாள்: -- ‘வான்சபையில்
கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்,
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்,
மேலோர் இருக்கின்றீர். வெஞ்சினம் ஏன் கொள்கிலரோ?
வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்.
இங்கிவர்மேல் குற்றம் இயம்ப வழியில்லை.
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்.
நின்னை எவரும் “நிறுத்தடா” என்பதிலர்.
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தாம்முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு்
‘தாதியடி
தாதி!’
எனத்
துச்சாதனன்
அவளைத்
தீதுரைகள் கூறினான். கர்ணன் சிரித்திட்டான்.
சகுனி புகழ்ந்தான். சபையினோர்? வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனும் சொல்கின்றான்: ‘தையலே,
----------
64.
வீட்டும
ஆசாரியன் சொல்வது
சூதாடி
நின்னை
உதிட்டிரனே
தோற்றுவிட்டான்.
வாதாடி நீ அவன் தன் செய்கை மறுக்கின்றாய்.
சூதிலே வல்லான் சகுனி. தொழில்வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.
மற்றிதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே
குற்றம் என்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதம் எனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை அடிமையென விற்றபின்னும் தருமன்
நின்னை அடிமை எனக் கொள்வதற்கு நீதியுண்டு.
செல்லு நெறி அறியார் செய்கை இங்குப் பார்த்திடிலோ,
கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும்,
செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்,
ஆங்கவையும் நின்சார்பிலாகா வகையுரைத்தேன்.
தீங்கு தடுக்கும் திறமிலேன்’ என்று அந்த
மேலோன் தலைகவிழ்ந்தான். மெல்லியளும் சொல்லுகிறாள்:
-----------------
65.
திரௌபதி சொல்வது
‘சால நன்கு
கூறினீர்
ஐயா,
தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
“தக்கதுநீர்
செய்தீர்;
தருமத்துக்கு
இச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாயம் உணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்!
பெண் பாவம் அன்றோ? பெரிய வசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.
வம்பு மலர்க்கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். 67
வேறு
ஆடை
குலைவுற்று
நிற்கிறாள்;
-- அவள்
ஆவென்று அழுது துடிக்கிறாள். -- வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் -- அவள்
மைக்குழல் பற்றி இழுக்கிறான். -- இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும், -- கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்; -- துயர்
கூடித் தருமனை நோக்கியே, -- அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டீரோ? 68
-------------
66.
வீமன் சொல்வது
வேறு
‘சூதர்
மனைகளிலே
-- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணயம் என்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.69
‘ஏது
கருதிவைத்தாய்?
-- அண்ணே,
யாரைப் பணயம் வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை. 70
‘பூமி
அரசரெல்லாம்
-- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். 71
‘அவன்
சுடர்மகளை,
-- அண்ணே,
ஆடி இழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமம் கொன்றுவிட்டாய். 72
‘சோரத்தில்
கொண்டதில்லை;
-- அண்ணே,
சூதில்
படைத்ததில்லை.
வீரத்தினால் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினால் படைத்தோம்; 73
‘சக்கரவர்த்தி
என்றே
-- மேலாந்
தன்மை படைத்திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய். 74
‘நாட்டைஎல்லாம்
தொலைத்தாய்;
-- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம். 75
‘துருபதன்
மகளைத்
-- திட்டத்
துய்நன் உடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க்கு அடிமையென்றாய்! 76
‘இதுபொறுப்பது
இல்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’ 77
-------------
67.
அர்ஜுனன் சொல்வது
வேறு
எனவீமன் சகதேவன் இடத்தே சொன்னான்.
இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச்
சொன்னாயோ?
வீமா!
என்ன
வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாரும் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய்;
சினமான தீ அறிவைப் புகைத்தலாலே,
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 78
‘“தருமத்தின்
வாழ்வதனைச்
சூது
கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலும் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான். 79
-----------
68.
விகர்ணன் சொல்வது
அண்ணனுக்குத்
திறல்வீமன்
வணங்கி
நின்றான்.
அப்போது விகர்ணன் எழுந்து அவைமுன் சொல்வான்:
‘பெண்ணரசி
கேள்விக்குப்
பாட்டன்
சொன்ன
பேச்சதனை நான் கொள்ளேன். பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவர் எண்ணி
ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன்.
வண்ணம் உயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவது இந்நெறி என்றான்; வழுவே சொன்னான். 80
‘எந்தையர்தாம்
மனைவியரை
விற்பது உண்டோ?
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோ? விலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
சொல்லளவே தானாலும், வழக்கம் தன்னில்
இந்தவிதம் செய்வதில்லை; சூதர் வீட்டில்
ஏவற்பெண் பணயமில்லை என்றும் கேட்டோம். 81
“தன்னை
இவன் இழந்து அடிமையான
பின்னர்த்
தாரமெது? வீடேது? தாத னான
பின்னையும் ஓர் உடைமை உண்டோ?” என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே, களிப்பதுதான் சூதென்றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவம்
தன்னை இரு விழிபார்க்க வாய் பேசீரோ?
தாத்தனே, நீதி இது தகுமோ?’ என்றான். 82
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்சல் இட்டார்;
‘ஒவ்வாது
சகுனிசெயும்
கொடுமை’
என்பார்;
‘ஒருநாளும் உலகிதனை மறக்காது’ என்பார்;
‘எவ்வாறு
புகைந்தாலும்
புகைந்து
போவீர்;
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா.
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழியிஃது’ என்பார். 83
------------
69.
கர்ணன் பதில்
வேறு
விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்: --
‘தகுமடா,
சிறியாய்,
நின்சொல்.
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன்று எண்ணி
வாய்புதைத்து இருந்தார், நீதான்
மிகும் உரை சொல்லிவிட்டாய்.
விரகிலாய்! புலனும் இல்லாய்! 84
பெண்ணிவள் தூண்டல் எண்ணிப்
பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலாது உரைக்கல் உற்றாய்;
இவளைநாம் வென்றதாலே
நண்ணிடும் பாவம் என்றாய்,
நாணிலாய்! பொறையும் இல்லாய்!
கண்ணிய நிலைமையோராய்;
நீதி நீ காண்பது உண்டோ? 85
மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கம் கீழடியார்க்கு இல்லை.
சீரிய மகளும் அல்லள்;
ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பில் ஏந்தும்
சீரையும் களைவாய்; தையல்
சேலையும் களைவாய்’ என்றான். 86
இவ்வுரை கேட்டார் ஐவர்;
பணிமக்கள் ஏவா முன்னம்
தெவ்வர் கண்டு அஞ்சு மார்பைத்
திறந்தனர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞானசுந்தரி பாஞ்சாலி
‘எவ்வழி
உய்வோம்’
என்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 87
-------------
70.
திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிராத்தனை
வேறு
துச்சாதனன் எழுந்தே -- அன்னை
துகிலினை மன்றிடை உரிதலுற்றான்.
‘அச்சோ
தேவர்களே!’
-- என்று
அலறி அவ்விதுரனும் தரைசாய்ந்தான்.
பிச்சேறியவனைப் போல் -- அந்தப்
பேயனும் துகிலினை உரிகையிலே,
உட்சோதியில் கலந்தாள்; -- அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88
‘ஹரி,
ஹரி,
ஹரிஎன்றாள்;
-- கண்ணா!
அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்.
கரியினுக்கு அருள்புரிந்தே
-- அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிறம் உடையாய், -- அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89
‘சக்கரம்
ஏந்திநின்றாய், -- கண்ணா!
சார்ங்கம் என்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90
‘வானத்துள்
வானாவாய்;
-- தீ
மண் நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
கமலம் என் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91
‘ஆதியில்
ஆதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண்ணகப் பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டு அருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92
‘“கம்பத்தில்
உள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை உறுமி அத்தூண் உதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் இரணியன் உடல்பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;
-- என்னை
நாணழியாது இங்குக் காத்தருள்வாய். 93
‘வாக்கினுக்கு
ஈசனையும் -- நின்றன்
வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
அன்புடை எந்தை, என் அருட்கடலே,
நோக்கினில் கதிருடையாய், -- இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்கு நல் வானமுதே! -- இங்கு
சிற்றிடை யாச்சியில் வெண்ணெய் உண்டாய்! 94
‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர் தம் துயரினைப்போல், -- நல்ல
புண்ணியவாணர் தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத்து எறிந்திடும் அலைகளைப்போல், 95
பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்,
கண்ணபிரான் அருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தில் அடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96
பொன்னிழை பட்டிழையும் -- பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியில் கைகுவித்தாள் -- அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
மூளும் நற்பயன் உலகறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
தொழும்பன் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97
தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோடு எழுந்துநின்று -- முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
கடி அரவுடையவன் தலைகவிழ்ந்தான். 98
-------------
71.
வீமன் செய்த சபதம்
வேறு
வீமன் எழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
விண்ணவர் ஆணை, பராசக்தி ஆணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத் தா(ஆ)ணை;
காமனைக் கண்ணழலாலே -- சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில் 99
‘ஆணையிட்டு
இஃது உரை செய்வேன்:
-- இந்த
ஆண்மையிலாத் துரியோதனன் தன்னை,
பேணும் பெருங்கனல் ஒத்தாள் -- எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
நாய்மகனாம் துரியோதனன் தன்னை,
மாணற்ற மன்னர் கண் முன்னே, -- என்றன்
வன்மையினால் யுத்த அரங்கத்தின் கண்ணே, 100
‘தொடையைப்
பிளந்து உயிர்
மாய்ப்பேன்
-- தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
கள்ளென ஊறும் இரத்தம் குடிப்பேன்.
நடைபெறும் காண்பிர் உலகீர்! -- இது
நான்சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான். 101
--------------
72.
அர்ஜுனன் சபதம்
பார்த்தன் எழுந்துரை
செய்வான்:
-- ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை;
கார்த்தடம் கண்ணி எந்தேவி -- அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான். 102
-------------
73.
பாஞ்சாலி சபதம்
தேவி
திரௌபதி
சொல்வாள்
-- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டும் கலந்து -- குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான்;
-- இது
செய்யுமுன்னே முடியேன்’ என்று உரைத்தாள். 103
ஓமென்று உரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி அதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்.
நாமும் கதையை முடித்தோம். -- இந்த
நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க. 104
-------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன